Published:Updated:

நம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்!

நம் ஊர் நம் கதைகள் - சென்னை-378,  நாட் அவுட்!
பிரீமியம் ஸ்டோரி
News
நம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்!

#Chennai378நிவேதிதா லூயிஸ்

ங்களில் யார் வயதில் பெரியவர் என்ற கேள்விக்கு வரிசையாகப் பதில்கள் வந்து கொண்டிருந்தன. 59 தொடங்கி, 77 வரை பலவகையான பதில்கள். 16 வயதான நந்தன் முதல் 77 வயதான எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் வரை ஒன்றுகூடி இருப்பதன் காரணம் தெரியுமா?

ஒரு நகரத்தின் பயணத்தையும்  (அதில் ஒளிந்துகொண்டிருக்கும் மர்ம மாளிகைகள் முதல் கோயில்கள் வரை) வரலாற்றுப் படிவங்களையும் அலசிக்கொண்டிருக்கிறது `மெட்ராஸ் லோக்கல் ஹிஸ்டரி' குரூப். முகநூலில் செயல்படும் இக்குழுவில் 15 ஆயிரத்துச் சொச்சம் பேர் இருக்கிறார்கள். 2015-ம் ஆண்டின் இறுதியில் நாவலாசிரியர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் தொடங்கிய இந்தக் குழு, வரலாற்று ஆர்வலர் பலரால் சிறப்பாக வழி நடத்தப்படுகிறது.

1639 ஆகஸ்ட் 22 அன்று ஃப்ரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயரும், தாமரல வெங்கடாதிரி என்ற வணிகரும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கூவம் மற்றும் எழும்பூர் ஆறுகளின் முகத்துவாரங்களுக்கு இடையே இருந்த நரிமேடு என்ற தீவு ஆங்கிலேயருக்கு வழங்கப்பட்டது. தாமரல வெங்கடாதிரியின் தந்தையான சென்னப்பநாயக்கின் பெயரைத்தான் இன்று தாங்கி நிற்கிறது சென்னை நகரம். இந்த அடிப்படையிலேயே ஆகஸ்டு 22 அன்று `மெட்ராஸ் டே' அல்லது `சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது.

நம் ஊர் நம் கதைகள் - சென்னை-378,  நாட் அவுட்!

சென்னையின் தொன்மை வாய்ந்த இடம் எது? இன்றைய சென்னையை விட பழைமையான இடங்கள் சாந்தோம், செயின்ட் தாமஸ் மவுன்ட் மற்றும் மெல்லியாப்பூர் என்று அழைக்கப்பட்ட மயிலாப்பூர். மயிலை சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது. மயிலையை விடவும் தொன்மை வாய்ந்த இடம் சென்னையில் உண்டு. எத்தனை ஆண்டுகள்? 15 லட்சம் ஆண்டுகள்!

1863-ல் ராபர்ட் புருஸ் ஃபூட் என்ற ஆங்கிலேயர் பல்லாவரத்தில் கண்டெடுத்தது பழங்கற்கால கோடரி. துரதிர்ஷ்டவசமாக, 1600-க்கு முந்தைய சென்னையின் வரலாறோ ஆதாரங்களோ நம்மிடம் இல்லை. ஐரோப்பியரின் வருகைக்குப் பின்னே  உள்ள தகவல்களே காணக்கிடைக்கின்றன. இதுபோன்ற தகவல்களைப் புகைப்படங்களாக, கட்டுரைகளாக, ஆவணங்களாக அலசிக்கொண்டும், அசைபோட்டுக் கொண்டும் இருக்கிறது இந்த முகநூல் குழு.

மீனாட்சி அம்மாள் எழுதிய `சமைத்துப் பார்' புத்தகம் குறித்து இக்குழுவில் குறிப்பிடுகிறார் மயிலை ஸ்ரீமதி மோகன். அதற்குள் ஐந்தாறு பேர், தங்கள் முதல் சமையலை அந்தப் புத்தகமே வழி நடத்தியது என்று சொல்கிறார்கள். தான் பிறந்த வருடத்தில் அந்தப் புத்தகம் வெளியானதாக ஆச்சர்யப்படுகிறார் வெளிநாட்டவரான லார்ஸ் ஃப்ரெட்ரிக்சன். அதைவிடப் பழைமையான, டி.கே.ராமசந்திரராவ் எழுதிய `இந்து பாகசாஸ்திரம்' நூலின் படத்தைப் பகிர்கிறேன் நான். 1900-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பின் வலை சுட்டியைப் பின்னூட்டத்தில் பகிர்கிறார் சேலம் ஜோன்ஸ். அதில் உள்ள ‘சமேலி குஷ்கா’ என்ற ஜாதிமல்லி கொண்டு செய்யப்படும் குஷ்கா செய்முறையைப் படித்துச் சிலாகிக்கிறார் சிவசங்கர் பாபு.

இந்தக் குழுவில் அதிகம் ஆராயப்பட்டு, அலசப்பட்ட ஒரு விஷயம் - மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள சிங்காரவேலர் சந்நிதியின் வெளிப்பிராகாரத்தில் உள்ள CEV.NA.ERA D6463 என்கிற கல்வெட்டு. வரலாற்று ஆர்வலர் ஷாஷ்வத், `ஆன்டிக்விட்டீஸ் ஆஃப்  மயிலாப்பூர்'  புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டி, `போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட அந்தக் கல்வெட்டு ஒரு கல்லறைக்கல்' என்கிறார். CEV.NA.ERA என்பது போர்த்துகீசிய மொழியில், `மரித்த வருடம்' என்பதையும்,

D என்பது தேதியையும், 6463 என்பது 643/646 என்று இரண்டு ஆண்டுகளையும் குறிக்கிறது என்று விளக்குகிறார்.

மயிலை தெப்பக்குளத்தின் கரையில் உள்ள மூன்று கால் மண்டபம், அரசி விக்டோரியாவின் வைர விழாவைக் கொண்டாட பி.சிவசுவாமி ஐயரால் கட்டித் தரப்பட்டது என்கிற தகவலைப் படத்துடன் பகிர்கிறார் பரந்தராமி மணி. 1956-ம் ஆண்டு பிரசித்திபெற்ற `வோக்' பத்திரிகையில் ஐரோப்பிய மாடல்களுடன் இடம்பெற்றிருக்கிறது மயிலையின் குளம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நம் ஊர் நம் கதைகள் - சென்னை-378,  நாட் அவுட்!

இந்தக் குழுவினர் இணைந்து நடத்திய மயிலைக் கோயில் மரபுநடை ஒன்றில், ஓர் அதிசயத்தை நான் காண நேர்ந்தது. 1939-ம் ஆண்டு காட்டுப்பள்ளி பையூர் கே.என்.சண்முக முதலியாரால் கட்டப்பட்ட கோயிலின் துவஜரோகண மண்டபத்தில், யானைமீது சாய்ந்தபடிச் சிற்பமாகச் சிரிக்கிறார் பாரத மாதா. கோயிலில் பாரத மாதா சிற்பத்தைத் தூணில் நாங்கள் கண்டது அதுவே முதன்முறை. நாக்பூர் சிட்டி பிரஸ்ஸின் காலண்டர் படம் ஒன்றை மாதிரியாக வைத்தே இந்தப் பாரத மாதா சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய நேரம், சத்தமின்றி  ஆங்கிலேயரின் கண்காணிப்பையும் தாண்டி பாரத மாதாவின் சிற்பம் கோயிலுக்குள் நுழைந்திருப்பது, அந்தச் சிற்பியின் தேசப்பற்றை இன்றும் வெளிக்காட்டுகிறது.

பங்குனித் திருவிழா நேரத்தில் பத்து தினங்களுக்கு மட்டுமே திறந்திருக்கும் மயிலையின் `பொம்மை சத்திரம்' குறித்த தகவலைப் படங்களுடன் பகிர்ந்திருக்கிறார், தஞ்சையின் இளவரசர் பிரதாப் சின்ஹா ராஜெபோன்ஸ்லே. `கான்ட்ரிப்யூஷன் ஆஃப் தஞ்சாவூர் மராத்தா கிங்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் இந்தக் குட்டி இளவரசர். சென்னையின் இறுதி ஆர்மீனியர் என்று அறியப்பட்ட மைக் ஸ்டெஃப்ஃபான், சதெனிக் பட்வகான்-தூஃபானியன் என்று ஆர்மீனியர் சிலரும் இக்குழுவில் உண்டு.

இந்தியாவின் முதல் டிரைவ் இன் திரை அரங்கமான பிரார்த்தனாவை நிறுவிய டாக்டர் தேவநாதன், தன்னுடன் பாராட்டிய நட்பு குறித்தும், அந்தத் திரை அரங்கில் வாகனங்கள் நிறுத்த சிறப்பு ரேம்ப்கள் வடிவமைத்த விதம் குறித்தும் விளக்கியிருக்கிறார் கட்டட வல்லுநர் மோகன் ஹரிஹரன். வெறுமனே படங்கள் பகிர்தல் என்று இல்லாமல், தங்கள் வாழ்க்கையில் சென்னை எத்தகைய தாக்கத்தை விட்டுச்சென்றுள்ளது என்று அவரவர் விவரிப்பதை வாசிக்க அத்தனை அழகு.

1914-ல் இந்தியாவின் முதல் பென்ஸ் காரை பி.சி.முத்து செட்டியார் வாங்கியதாக மெட்ராஸ் மோகன்தாஸ் பகிர்ந்திருந்த படத்தின் கீழ், சென்னையைச் சேர்ந்த `டீம்சிஎஸ்ஏ' அதைச் சரி செய்து புனரமைத்திருப்பதாகத் தகவல் பதிந்து இருக்கிறார் ரமேஷ்குமார். சென்னையைச் சேர்ந்த எஸ்.எஸ்.ரஜுலா என்ற சொகுசுக்கப்பலில், 1960-களில் சென்னை-நாகப்பட்டினம்-பினாங்கு-சிங்கப்பூர் எனத் தமிழர்கள் பயணித்த தகவலும், `புதிய பறவை' படத்தின் `உன்னை ஒன்று கேட்பேன்' பாடல் இந்தக் கப்பலில்தான் படம்பிடிக்கப்பட்டது என்கிற கொசுறுத் தகவலும் இங்குதான் கிடைத்தது.

ஆந்திரப் பிரதேசம் தனிமாநிலமாக உருவாக விதை விழுந்த இடம் - மயிலாப்பூர். அமிர்தாஞ்சன் வலிநிவாரணியை அறிமுகப்படுத்திய நாகேஸ்வர ராவ்வின் வீடான ஸ்ரீபாக்கில் கையெழுத்தான ஸ்ரீபாக் ஒப்பந்தம்தான் தனி ஆந்திரா பிறக்கக் காரணம். 1930-களில் சென்னை நகரைக் கைப்பற்ற, தமிழ் மற்றும் ஆந்திர மக்களிடையே நடந்த போராட்டம் இன்றைய இளையோர் அறியாதது. பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்துக்குப் பின்னும் சென்னையை எவருக்கும் விட்டுத் தராமல் போராடிய தலைவர்களில், `தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர்களில் ம.பொ.சி. தலையாயவர். அவர் குறித்து மேலதிகத் தகவல்களை அவரது பேத்தி பரமேசுவரி திருநாவுக்கரசு பகிர்ந்திருக்கிறார்.

ஆசியாவின் முதல் விமானத்தை வடிவமைத்து ஓட்டிய இடம், நம் தீவுத்திடலே. இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் கியகாமோ டி ஆஞ்செலிஸ் என்ற ஐரோப்பியர்.

அன்றைய மதராஸின் முக்கிய அடையாளமாக இருந்த மவுன்ட் ரோடின் டி ஆஞ்சலிஸ் ஹோட்டலே சென்னையின் முதல் சொகுசு ஹோட்டல். 1910-களில் மின்சார லிஃப்ட், கார்டன் ரெஸ்டாரன்ட் என்று கலக்கிய ஆஞ்சலிஸ் ஹோட்டலின் உரிமையாளரான டி ஆஞ்சலிஸ், 1910 மார்ச் 10 அன்று பாரதியாரின் நண்பராகிய பி.ஆர்.எஸ்.வாசன் என்பவருடன் விண்ணில் பறந்திருக்கிறார். இந்த அரிய தகவல்களைப் படங்களுடன் பகிர்ந்துகொண்டிருப்பவர் சிலி நாட்டில் வாழும் டி ஆஞ்சலிஸின் வழித்தோன்றலான ஜெஃப்ஃபெரிஸ்.

வரலாற்று ஆர்வலர் `இந்தியன் கொலம்பஸ்' டி.கே.கிருஷ்ணகுமார், சென்னையின் மிகப்பழைமையான துளசி மாடம், சௌகார்பேட்டையின் பைராகி மட திருவேங்கமுடையான் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் உள்ளது என்ற அரிய தகவலைப் பகிர்ந்திருக்கிறார். இஸ்லாமியப் பெண் ஒருவரின் உதவியால், பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த பைராகி தொண்டர் ஒருவரால் கட்டப்பட்ட இந்தக் கோயில் குறித்த குறிப்புகள், 1700-களிலேயே இருந்திருக்கின்றன.

நம் ஊர் நம் கதைகள் - சென்னை-378,  நாட் அவுட்!

அன்றைய மதராஸின் டிராம்கள்மீது யாருக்குத்தான் காதல் இல்லை? எழுத்தாளர் வேத் சர்வோத்தம் தன் தந்தை உபயோகித்த 1953-ம் வருடத்து ட்ராம் புகைப்படத்தைப் பகிர்ந்தது அத்துணை மகிழ்வு. ராயபுரம் முதல் ஹாமில்டன் பாலம் வரை பயணிக்க உதவிய அந்த சீசன் டிக்கெட் (டிராம் பாஸ்) ஒரு பொக்கிஷம்.

கே.பி.சுந்தராம்பாளின் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார், கண்ணன் பழனி. காசுமாலை அணிந்த அந்தப் புகைப்படம் கிட்டப்பாவின் மரணத்துக்கு முன் எடுக்கப்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு பவுன் எடையுள்ள காசு மாலையை அணிந்து அழகுடன் சிரிக்கிறார் கே.பி.எஸ்.

எம்.எல்.சி. (சட்ட மேலவை உறுப்பினர்) ஆக இருந்த முதல் நடிகை இவரே என்கிற கூடுதல் தகவல் தருகிறார் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்.

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் 1856-ல் திறக்கப்பட்டு, முதல் பயணிகள் ரயில் அங்கிருந்து ஆற்காடு வரை ஜூலை 1, 1856 அன்று 300 பயணிகளுடன் இயங்கியது என்ற தகவலை ஆர்வலர் வெங்கட்ராமன் பிரபாகர் பகிர்ந்து இருக்கிறார்.

ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் வெறும் பொழுதுபோக்குதான் என்று நினைக்காமல், ஆய்வுக்கும் ஆசைக்கும் இத்தனை பேர் உபயோகித்துக்கொண்டிருப்பது ஓர் அதிசயமே.

இனிய 378-வது பிறந்த நாள் வாழ்த்துகள் சென்னை!

படங்கள் உதவி: லெய்னா, டி.கே.கிருஷ்ணகுமார், வேத் சர்வோத்தம், கண்ணன் பழனி, ஜெஃப்ஃபெரிஸ் டி'ஆஞ்சலிஸ், ஹார்வர்டு மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகங்களின் ஆவணங்கள்