Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ஹாலிவுட்டுக்கும் டெக் உலகுக்கும் கலவையான உறவு தொடர்ந்து நீடிக் கும். அதீத அன்பு, கடும் வெறுப்பு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட கலவை அது. காரணம் இல்லாமல் இல்லை. தொடர்ந்து டிஜிட்டல், 3டி என்றெல்லாம் வளரும் தொழில்நுட்பங்களால் ஹாலிவுட்டுக்கு நன்மைதான். அவர்கள் தயாரிக் கும் திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் நுகரவைக்கப் பல விதங்களிலும்இந்தத் தொழில்நுட்பங்கள் உதவுவது ஒருபுறம் இருக்க, இதே தொழில்நுட்ப வளர்ச்சிதான் திருட்டு டி.வி.டி. போன்றபடைப்புத் திருட்டுகளுக்கும் அடித்தளமாக இருக்கிறது!  

 ஹாலிவுட் இதைப் பல வழிகளில் கையாண்டுவந்திருக்கிறது. டெக் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள் வது ஒரு வழி.  உதாரணமாக,  டெல் கணினிகளில் இருக்கும் டி.வி.டி. ரைட்ட ரைப் பயன்படுத்தி காப்புரிமை கொண்ட டி.வி.டி-களைப் பதிவெடுக்க முடியாது. காப்புரி மையை மீறப் பயன்படும் நிறுவனங்களின் மீதோ, சில தருணங்களில், அதைப் பயன்படுத்தும் பயனீட்டாளர் சிலரைக் குறிவைத்தோ வழக்கு தொடர்வது மற்றொரு வழி!

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

சில வருடங்களுக்கு முன்பு வரை ஓரளவுக்கு டெக் உலகை தனக்கு உதவும் நண்பனாகப் பயன்படுத்திவந்த ஹாலிவுட், இப்போது பரவலாக பொதுமக்கள் ஊடகமாக  ஆகிவிட்டிருக்கும் இணையத்தை வில்லனாகவே பார்க்கிறது. திரைப்படங்கள் உள்ளிட்ட படைப்புகளை உலகம் முழுவதும்  உடனடியாகக் காட்டிவிட முடிகிறஇணையத்தின் சாத்தியத்தை, ஹாலிவுட் ஸ்டுடியோக்களால் மாற்ற முடியாது என்பது வெளிப்படை. ரொம்பவே  யோசித்து ஹாலிவுட் தடாலடி முயற்சி ஒன்றை எடுக்க, அதை டெக் நிறுவனங்கள் முறியடிக்கும் பணியைத் தொடங்கி இருப்பது இந்த வாரத்தின் முக்கியமான நிகழ்வு.

அப்படி என்ன தடாலடி முயற்சி?

இணையத்தில் என்ன பதிவேற்றப்படுகி றது என்பதைக் கண்காணித்து அதைத் தடுக்க முடியாது என்பதால், ஹாலி வுட் ஸ்டுடியோக்கள் ஒன்றாக இணைந்து அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை சட்டமாக்க முயன்றுவருகிறார்கள். இந்த மசோதாவின் ஷரத்துபடி கூகுள், யாஹூ, பிங் போன்ற தேடல் இயந்திரங்கள், காப்புரிமை மீறப்பட்ட படைப்புகளைக் கொண்டு இருக்கும் தளங்களைத் தங்களது தேடல் பதிலியில் காட்டக் கூடாது  என நீதிமன்றம் உத்தரவிட முடியும். இணைய இணைப்பு கொடுக்கும் நிறுவனங்களை மேற்படி தளங்களுக்குப் பயனீட்டாளர்கள் போகவிடாமல் தடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியும். இத்தகைய தளங்களுக்குப் பணம் கொடுக்கும்போது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை நிறுத்தும்படி கிரெடிட் கார்டு நிறுவனங்களை வற்புறுத்த முடியும்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

''காப்புரிமை திருடப்படும் நிலைமைக்கு ஆதரவாக டெக் உலகம் வலுவாக எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே, மேற்கண்ட மசோதாவைச் சட்டமாக்கி உங்களைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரே வழி!’ என்பது ஹாலிவுட்டின் வாதம்.

இப்படி ஒரு சட்டம் ரொம்ப ஓவர் என்று கோரஸாக சொல்கின்றன டெக் நிறுவனங்கள். கூகுள், ஈபே, ஃபேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இந்த மசோதாவுக்கு எதிராகக் கொடுத்திருக்கும் பதிலின் சாராம்சம், 'இதுபோன்ற சட்டங்கள் புதிய ஆக்கங்களைக் (Innovation) கொன்றுவிட முயல்பவை. இதைச் சட்டமாக்குவது ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் எங்களை எளிதாக வழக்கில் சிக்கவைத்துக்கொண்டே இருக்க வழிவகுக்குமே தவிர வேறு எதுவும் நடக்காது!’

இந்தப் பதிலில்  நியாயம் இருக்கிறது. உதாரணத்துக்கு, சென்னையில் இருந்து கேபிள் சங்கர் என்ற புனைப்பெயரில் விறுவிறுப்பாக வலைப்பதிவுகள் செய்யும் சங்கர் நாராயண், தனது பதிவு ஒன்றில் தெரிந்தோ, தெரியாமலோ விவகாரமான வலைப்பக்கம் ஒன்றை லிங்க் செய்திருந்தால், அவரது

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இணைய முகவரியையே முடக்கும் அதிகாரம் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது!

இதைப் பற்றிய விவாதங்கள் இந்தக் கட்டுரை எழுதும் இந்த நாளில் நடந்தபடியே இருக்கிறது. மசோதா எழுதப்பட்டு இருக்கும் அதே விதத்தில் சட்டமாகாது என்பது எனது எண்ணம். பார்க்கலாம்.

சரி, ஃபேஸ்புக்கின் அலைபேசி சேவைகுறித்து கொஞ்சம் பேசலாம்...

'அலைபேசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டபோது எல்லாம் பட்டும்படாமலும் பதில் சொல்லிவந்த ஃபேஸ்புக்கின் அலை பேசி பூனைக்குட்டி பையைவிட்டு

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

வெளியே வந்தேவிட்டது. 'பஃபி’ (Buffy) என்று செல்லமாகப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த அலைபேசி சாதனத்தை தாய்வானின் புகழ்பெற்ற அலைபேசி நிறுவனம் பி.ஜி.சி. தயாரிக்கிறது. அலைபேசி சாதனங்களில் ஃபேஸ்புக் என்பது ஒரு மென்பொருள் சேவையாக இருக்கும்நிலையைத் தாண்டி தனக்கே சொந்தமான சாதனத்தை ஃபேஸ்புக் கொண்டுவந்ததில் அர்த்தம் இருக்கிறது. ஃபேஸ்புக் மென்பொருள் சேவையை 350 மில்லியன் பயனீட்டாளர்கள் அலைபேசியில் இருந்து பயன்படுத்துகிறார்கள் என்கிறது அவர்களது டிராஃபிக் கணக்கு. அலைபேசி என்பது தனிப்பட்ட மனிதர் ஒருவரின் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட இன்றைய நிலையில் சமூக வலை நிறுவனம் மிகவும் ஆழமாக அலைபேசித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது அவர்களது நீண்ட நாள் வெற் றிக்கு முக்கியம். ஃபேஸ்புக்கின் அலைபேசி முயற்சி பிரமாண்டமாக வளர்ந்து அலை பேசி உலகையே இடையீடு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அதேவேளையில் இது ஒரு காமெடி முயற்சியாக முளையிலேயே அழிக்கப்பட்டுவிடும் சாத்தியக்கூறுகளும் தெரிகிறது.

ஏன் அப்படி? அடுத்த வாரத்தில் ஆழமாகக் கதைப்போம்!

Log Off