Published:Updated:

சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், பெண்ணியவாதி.... பன்முக ஆளுமை சரளாதேவி #SaralaDeviMemories

சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், பெண்ணியவாதி.... பன்முக ஆளுமை சரளாதேவி #SaralaDeviMemories
சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், பெண்ணியவாதி.... பன்முக ஆளுமை சரளாதேவி #SaralaDeviMemories

பல்வேறு சிறப்புகளும் பன்முகத்தன்மையும் படைத்த ஆளுமையாக விளங்கிய சரளாதேவி, வரலாற்றின் பக்கங்களில் போதுமான அளவு கொண்டாடப்படவில்லை என்பது வேதனையான உண்மை.

டிசா மாநிலத்தின் சட்டமன்றத்துக்குத் தேர்வுசெய்யப்பட்ட முதல் பெண், சரளாதேவி. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஒடிசாவிலிருந்து சேர்ந்த முதல் பெண்; ஒடிசா சட்டமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர்; கட்டாக் கூட்டுறவு வங்கியின் முதல் பெண் இயக்குநர்; உட்கல் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் செனட் உறுப்பினர்... இப்படிப் பல பெருமைகளுடன் இந்திய வரலாற்றில் கம்பீரமாக நிற்பவர், சரளாதேவி.

உட்கல் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்தபோது, கல்வித் துறையில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் மகத்தானவை. இன்றைய தேதிவரை நம் தேசத்தில் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புஉணர்வு முழுமையாக ஏற்படவில்லை. தமிழகம் போன்ற நன்கு வளர்ந்த மாநிலங்களிலும் பெண்களைப் படிக்கவும் வேலைக்கு அனுப்பவும் மறுக்கும் குடும்பங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால், போன நூற்றாண்டிலேயே பெண்களின் கல்விக்காக யூஜிசி வரை சென்று போராடியவர் சரளாதேவி. அனைவருக்கும் கல்வி எனும் கோரிக்கையுடன் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் திடப்படுத்தும் கல்வி முறை தேவை என்பது அவருடைய கருத்து. அதில் தன்னால் முடிந்த பங்கை வாழ்நாள் முழுக்க ஆற்றிவிட்டுச் சென்றவர் சரளாதேவி.

``கடவுள் என்பவர் பெண்களுக்கானவர் அல்ல; அவர் முழுவதும் ஆண்களின் சொத்தாகவே இருந்துவருகிறார். அதனால்தான், மதமும் அதன் சம்பிரதாயங்களும் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டன” எனத் துணிச்சலுடன் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே சொன்னவர் சரளாதேவி. `என் புரட்சிகரமான வாழ்க்கை’ (The Story Of My Revolutionary Life) எனும் தலைப்பிலான கட்டுரையில், தன் பால்யம் குறித்து எழுதும்போது இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அன்றைய சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்ட பல செல்வ செழிப்பான தலைவர்கள்போல சரளாதேவி வசதியானவர் இல்லை. ஆனாலும், சிறு வயதிலிருந்தே கல்வி மீது தீராத காதலுடன், இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பெண்ணியச் செயற்பாட்டாளராக தன்னை வளர்த்துக்கொண்டார்.

இந்திய தேசிய காங்கிரஸின் 35-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டது அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனை. நாக்பூரில் நடந்த அந்த மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியதுமே தன் செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டார். அதன் தொடர்ச்சியாக, உட்கல் பிரதேச காங்கிரஸ் கமிட்டியைத் தொடங்குவதில் அளப்பரிய பங்காற்றினார். 1921-ம் ஆண்டு, மகாத்மா காந்தி முதல் முறையாக ஒடிசாவுக்கு வருகை தந்தபோது, அவருடன் உரையாடும் வாய்ப்பு சரளாதேவிக்குக் கிடைத்தது. அந்தச் சந்திப்புக்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்திலும், சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

சுதந்திரப் போராட்டங்களில் மட்டுமன்றி, மார்க்சிய செயல்பாடுகளிலும் குறிப்பிடதக்க வகையில் பங்காற்றியவர் சரளாதேவி. `சம்யவாதி கார்மி சங்கா’ எனும் இயக்கத்துடன் இணைந்து, விவசாயிகளை வஞ்சிக்கும் ஜமீன்தார்களுக்கு எதிராகப் போராடினார். இத்தனைக்கும் சரளாதேவியின் கணவரான பாகிரதி மகாபத்ரா, ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், பாகிரதி நாட்டுப்பற்றும் சமூக அக்கறையும் மிகுந்தவராக விளங்கி, சரளாதேவியின் செயல்பாடுகளுக்குத் துணையாக நின்றார்.

1936-ம் ஆண்டு, ஒடிசாவில் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. அதன் முதல் பெண் உறுப்பினராக சரளாதேவி தேர்வுசெய்யப்பட்டார். ஒடிசா சட்டமன்றத்தில் குழந்தைத் திருமணங்களுக்கும் வரதட்சணை கொடுமைகளுக்கும் எதிராகச் சட்டங்கள் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தார். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லவே அனுமதிக்கப்படாத காலகட்டத்தில், சட்டமன்றத்தில் பெண்களுக்கான குரலாக சரளாதேவியின் குரல் ஒலித்தது, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். சட்டமன்ற உறுப்பினராக இல்லாத காலத்திலும், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதையும் போராடுவதையும் நிறுத்தவே இல்லை.

பொதுத்தளத்தில் மட்டுமன்றி, இலக்கியத்திலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர், சரளாதேவி. அவருக்கு முன்பு எழுதிக்கொண்டிருந்த பெண் எழுத்தாளர்கள், ஆன்மிகம், காதல், இயற்கை போன்ற தலைப்புகளில்தாம் எழுதிவந்தனர். ஆனால், ஒடிசாவில் அரசியல் பார்வைகளை இலக்கியத்துக்குள் கொண்டுவந்த முதல் பெண் படைப்பாளி, சரளாதேவி. கவிதை, புனைவு, நாடகம் எனப் பரந்துபட்ட எழுத்துத் துறைகளில் ஆர்வம் செலுத்தினார். அவரது சிறந்த எழுத்தாற்றல் வெளிப்பட்டது, கட்டுரைகளில்தாம். எந்த வடிவத்தில் எழுதினாலும், ஆழமான பார்வையும் சமரசமற்ற கருத்துகளும் அவரது எழுத்தில் இருக்கும்.

இத்தனை சிறப்புகளும் பன்முகத்தன்மையும் படைத்த ஆளுமையாக விளங்கிய சரளாதேவி, வரலாற்றின் பக்கங்களில் போதுமான அளவு கொண்டாடப்படவில்லை என்பது வேதனையான உண்மை. இருபதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் வெளிப்பட்ட பெண்ணியத்துக்கான முக்கியக் குரலாக விளங்கிய சரளாதேவியை, அவரது பிறந்தநாளான இன்று (9.08.18) நினைவுகூர்வோம்!

அடுத்த கட்டுரைக்கு