அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

"ஒரு நாள் எழுதலைனா, `இன்னைக்கு பொழுது வீணாயிடுச்சே’ என்பார்!” கருணாநிதியின் நிழல் சண்முகநாதன்

கருணாநிதி - சண்முகநாதன்
News
கருணாநிதி - சண்முகநாதன்

2017-ம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி அளித்து இருந்தார். சண்முகநாதன் காலமான இந்தச் சூழலில் அவர் அன்று அளித்த ‘தீபாவளி மலர்’ பேட்டியிலிருந்து...

‘கருணாநிதியின் நிழல்’ இதுதான் சண்முகநாதனின் அடையாளம். கடந்த 48 ஆண்டுகளாக கருணாநிதியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். அவர் இத்தனை ஆண்டுகள் உதவியாளராக இருந்தது எவ்வளவு பெரிய சாதனை என்பது கருணாநிதியை அறிந்தவர்களுக்கு புரியும். தன் பணி அனுபவம் குறித்து கடந்த ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு சண்முகநாதன் பேட்டி அளித்து இருந்தார். கருணாநிதி காலமான இந்தச்சூழலில் சண்முகநாதனின் அன்று அளித்த ‘தீபாவளி மலர்’ பேட்டியிலிருந்து...

“நான் தலைவரிடம் வேலைக்கு சேர்வதற்கு முன் 'தமிழ் சுருக்கெழுத்து நிருபராக’ தமிழகக் காவல்துறையில் பணியில் இருந்தேன். எதிர்க்கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் பேச்சை சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை அதிகாரிகளுக்கு தட்டச்சு செய்து அனுப்புவதுதான் வேலை. இந்தநிலையில் கலைஞர் 1967-ம் ஆண்டு அண்ணாவின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது நான் பார்த்துவந்த வேலைபற்றி அறிந்த கலைஞர், கல்கி இதழில் மேலாளராக இருந்த நண்பர் திரு.சண்முகவடிவேலு அவர்களின் மூலம் என்னைக் கூப்பிட்டனுப்பினார். ஆனால் அதற்கு முன்பே அவரிடம் திரு.நீலகண்டன், திரு.வெங்கட்ராமன் இருவரும் உதவியாளர்களாக சேர்ந்திருந்தனர். அதனால் நான் பார்த்துவந்த காவல்துறை வேலையிலிருந்து தமிழகச் சட்டமன்ற மேலவையில் தமிழ்ச் சுருக்கெழுத்தாளராக பணிமாற்றிக்கொண்டேன். 

காலம் கடந்தது, 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம்தேதி பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தார். அதே பிப்ரவரி 10-ம் தேதி தலைவர் கலைஞர் முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அந்தசமயம் நான் என் தங்கையின் திருமணத்துக்காக ஒரு மாத காலம் விடுமுறையில் சொந்தக் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னை கலைஞரின் உதவியாளராக நியமனம் செய்த தகவல் முதல்வர் அலுவலகத்தில் இருந்து தந்தி மூலமாக எனக்கு வந்தது. நான் விடுமுறையை ரத்து செய்துவிட்டு உடனடியாக சென்னை திரும்பினேன். 1969 பிப்ரவரி மாதத்தில் தலைவரிடம் உதவியாளராக சேர்ந்த நான் அன்றிலுந்து இன்றுவரை தொடர்ந்து 48 ஆண்டுகள் உதவியாளனாக பணியாற்றினேன். 

கிட்டத்தட்ட இந்த அரைநூற்றாண்டு காலத்தில் தலைவரிடம் நான் பெற்ற அனுபவம், என் பெற்றோர் செய்த நல்வினைகளின் பயனாக எனக்குக் கிடைத்தது. இந்த 48 ஆண்டுகள் நான் உதவியாளனாக ஊழியம் செய்தேன் என்பதைவிட, தலைவரிடம் சீடனாகக் கற்றுக் கொண்டவை ஏராளம், ஏராளம். உலககில் வேறு யாரையும்விட, அதிகப் பக்கங்கள் கைப்பட எழுதி எழுதியே இமயம் அளவுக்கு குவித்துப் படிப்படியாக புகழேணியின் உச்சத்திற்கு சென்றவர் ஒருவர் உண்டென்றால், அது தலைவர் கலைஞர் ஒருவராகத்தான் இருக்க முடியும். 

கருணாநிதி - சண்முகநாதன்
கருணாநிதி - சண்முகநாதன்

கலைஞர் உடல் நலத்தோடு இருந்தவரை அவர் எழுதாத நாட்களே இல்லை என்றே சொல்லலாம். என்றாவது ஒருநாள் எழுதமுடியாமல் போனால், ‘இன்னைக்கு வீண் பொழுதாப் போயிடுச்சே’ என்று வேதனைகொள்வார். அப்படி அவர் இதுவரை திரைப்படத் துறையில் கதை, திரைக்கதை, வசனம் என்று 75 திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். 15 நாவல்களை எழுதியிருக்கிறார். 20 நாடகங்களை உருவாக்கி இருக்கிறார். 15 சிறுகதைகளை எழுதியுள்ளார். 210 கவிதைகளை படைத்துள்ளார். ‘நெஞ்சுக்கு நீதி’ என்கிற தனது சுயசரிதையை 4165 பக்கங்களில் ஆறு பாகங்களாக வெளியிட்டுள்ளார். வெறும் பத்து நிமிடம் அமர்ந்து இவர் எழுதிய பாடலான 'பிறப்பொக்கும்...' என்கிற கோவை செம்மொழி மாநாட்டு அடையாளப் பாடலானது. 

பொதுவாக இவர் எழுதுவதில் அடித்தல், திருத்தல் என்பது இருக்கவே இருக்காது. அதுபோலவே ஒரே வேகத்தில் அழகு நடையில், எழுதியிருப்பதைப் பார்த்துப் படிப்பதைப்போல 'டிக்டேட்' செய்வார். வார்த்தைகளை அவ்வளவு வேகமாக மனதில் கட்டமைக்கும் அளவுக்கு மொழி வல்லமை கொண்டவர். ஆமாம், எவ்வளவு வேகமாக எழுதுகிறாரோ, அதேஅளவுக்கு தங்குதடையின்றி ஆற்றொழுக்காக 'டிக்டேட்' செய்வதிலும் வித்தகர். 

அப்படி அவர் டிக்கேட் செய்வதை குறிப்பெடுத்து அதை தட்டச்சு செய்து கொடுப்பேன். பிறகு அதை படித்துக்காட்ட என்னை அழைப்பார். அப்போது ஏதோ அவரிடம் இருந்து பரிசு பெறச் செல்லும் மகிழ்ச்சியோடுதான் செல்வேன். நான் படிப்பதை அமைதியாக கேட்பார். படித்து முடித்ததும், 'எப்படி இருக்கு' என்று கேட்பார். அவர் இருக்கும் உயரத்தில் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் என் விருப்பத்தையும் கேட்டு தெரிந்துகொள்வார். இதெல்லாம் என் வாழ்நாளில் பெற்ற அற்புதமான அனுபவங்கள். தலைவர் அவர்கள் 'நெஞ்சுக்கு நீதி'யின் இரண்டாம் பாகத்தில் இதைப்பற்றி விரிவாக எழுதியதையுன் நான்தான் தட்டச்சு செய்தேன். 

மேடைகளிலும் இவர்தான் நாயகன். இன்றைக்கு அரசியல் சூழலில் எந்தத் தலைவரும் கண்டிராத, பார்த்திடாத மேடைகளை கண்டவர் தலைவர். தி.மு.கழக மேடை, கூட்டணி கட்சிகளின் மேடை, இலக்கிய மேடை, திரையுலக விழாக்கள்... என்று இவரளவுக்கு மக்கள் மன்றத்தில் பேசியவர் வேறு யாருமிலர். ஒவ்வொரு கூட்ட மேடையிலும் பேச்சைத் தொடங்கும்போது 'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று உணர்ச்சிபொங்கச் சொல்லும்போது, தொண்டர்கள் மெய் மறந்து கைதட்டி ஆரவாரம் செய்யும் நிகழ்வுகளை என்னால் எப்போதும் மறக்க முடியாது. கலைஞரின் காந்தக் குரலும், கைதட்டலும், ஆரவாரமும் எனது செவிகளில் எப்போதும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. 

‘உங்களுக்கும் கலைஞருக்கும் கருத்துவேறுபாடுகள் வந்துள்ளனவா?’ என்று என்னிடம் சிலர் கேட்பதுண்டு. அவரிடம் செல்லச் சண்டைகள் போடுகிற அளவுக்கு எனக்கு எந்த அடிப்படைத் தகுதியும் இருப்பதாக நான் கனவில்கூட நினைத்தது இல்லை. தலைவர் ஒன்று சொல்லி விட்டார் என்றால் அதுதான் எனக்கு வேதவாக்கு. அவரது உதவியாளர் பணியிலிருந்து இரண்டு முறை விலகி என் சொந்த ஊருக்கே போனது உண்டு. ஆனால் அவரிடம் நான் எப்போதும் கோபித்துக்கொண்டதே இல்லை. 

சண்முகநாதன் குடும்பம்
சண்முகநாதன் குடும்பம்

ஆனால் வருத்தப்பட்டு அழுதிருக்கிறேன். ஒருமுறை ட்ரெயினில் செல்லும்போது அவர் என்னை மிகவும் கடிந்துகொண்டார். பிறகு என் இடத்துக்குச் சென்று தனிமையில் அமர்ந்து அழுதேன். அதன்பின், 'சண்முகநாதனை அதிகமா திட்டிட்டோமோ’ என்று அவருக்கு தோன்றியிருக்க வேண்டும். அதனால் அருகிலிருந்த அன்பில் தர்மலிங்கம் மாமாவை என்னை சமாதானப்படுத்த அனுப்பினார். ‘யோவ் மாப்ள, தலைவரே உன்னை சமாதானம் செய்யச்சொல்லி அனுப்பினார்டா' என்று அன்பில் மாமா சொன்ன அடுத்த நிமிடமே என் வருத்தமெல்லாம் மறைந்து விட்டது.  

மிசா நெருக்கடி நிலையில் அவர் வழக்கத்தைவிட தீவிரமா பணியாற்றினார். அப்போது தளபதி ஸ்டாலின் அவர்கள், அண்ணன் முரசொலி மாறன் உள்பட கழகத்தின் முன்னணியினரை சிறையில் அடைத்தனர். அப்போது சில நாட்கள் நான் தலைவரிடம் பணிக்குச் செல்லவில்லை. அந்தசமயத்தில் யோகலட்சுமி திருமண மண்டபத்தில் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தலைவரின் உரையை எழுதக் காத்திருந்தேன். மேடையில் இருந்த தலைவர் என்னைப் பார்த்து விட்டார். ‘யாருக்கும் தெரியாமல் சென்று தலைவரின் காருக்குள் அமரவும்’ என்று எனக்கு செய்தி வந்தது. பிறகு வந்தவர், என்னைப்பற்றி விசாரித்துவிட்டு, ‘இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. நாளையில் இருந்து பணிக்கு வரலாம்’ என்றார். 

எத்தனையெத்தனை தேர்தல் பிரசார கூட்டங்கள். அத்தனை சுவாரஸ்யங்களையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. 1971-ம் ஆண்டு பொதுத்தேர்தல் பற்றி மட்டும் சுருக்கமாகக் கூறுகிறேன். தி.மு.கழகத்துக்கு எதிரணியில் காமராஜர், நிஜலிங்கப்பா, ராஜாஜி, மொரார்ஜி தேசாய் போன்ற பெருந்தலைவர்கள் இருந்தார்கள். அந்த அணிதான் வெல்லும் என்று பத்திரிகைகளில் யூகங்களை வெளியிட்டார்கள். காங்கிரஸ் தலைவர்கள் சிலர், ‘தேர்தலுக்குப் பிறகு எங்களை கோட்டையில் வந்து சந்தியுங்கள்’ என்று நிருபர்களிடம் கூறினார்கள். 

தலைவர் சுமார் முப்பது நாட்கள் வேனிலேயே தமிழகம் முழுவதும் இரவு பகல் பாராது பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போதெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற விதிமுறை கிடையாது. அதனால் விடியவிடிய தலைவர்பிரச்சாரத்தில் ஈடுபடுவார். அப்படி தூத்துக்குடியில் பிரச்சாரத்திற்குச் சென்றபோது நேரம் காலை 6,30 மணி. தலைவர் தன் பேச்சின் இறுதியில், 'உதயசூரியன் உதித்துவிட்டான்;' அதோ பாருங்கள் உதயசூரியன், அந்த சின்னத்திற்கே வாக்களியுங்கள்' என்று கூறினார். 

சண்முகநாதன் திருமணம்
சண்முகநாதன் திருமணம்

பிரச்சாரத்துக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் வேனை நிறுத்திவிட்டு, அதற்குள்ளேயே அமர்ந்து சாம்பார், தயிர் சாதம் பொட்டலங்களை பிரித்து சாப்பிடுவார். அப்போது கலைஞருக்கு வயது 47-தான். பெரும்பாலும் வேனில் உடன் வரும் கழகத் தோழர்களுடனும், மாவட்டச் செயலாளர்களுடனும் பேசிக்கொண்டே வருவார். இப்படியே முப்பது நாட்கள்! இடைவிடாது பிரச்சாரம் செய்ததால் தலைவரின் கண்கள் வீங்கி விட்டன. உடம்பும் கறுத்து விட்டது. 

அப்போது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், 'இந்தத் தேர்தலில் வெற்றிகிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?' என்று செய்தியாளர் கேட்டார். 'வெற்றி வாய்ப்புகளைப்பற்றி ஆணவத்தோடு சொல்லிப் பழக்கப்பட்டவன் அல்ல. மிகச் சாதாரணமான எங்களை, சாமானிய மக்களின் பிரதிநிதிகளாக அமர்த்தியிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ஊழியம் புரியவேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் எங்களிடத்தில் மீண்டும் வேலைவாங்கத் தயங்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்’ என்றார். அதிகாரிகள் சிலர் வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாள் ராஜாஜியையும் காமராஜரையும் சந்தித்து ஆளுயர மாலை அணிவித்தார்கள். ஆனால் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தி.மு.க 184 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்தது. தி.மு.கழகம் 1971-ம் ஆண்டு பெற்ற அந்த மாபெரும்வெற்றியை அதற்கு முன்பும் பெறவில்லை. அதற்குப் பின்பும் பெற்றதே இல்லை. 

எம்.ஜி.ஆர். மறைந்தபோது, தலைவர் கலைஞருக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் வார்த்தைகளில் விவரிக்கமுடியாதவை. 1987ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி கலைஞர் பெரியார் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, நீலகிரி துரித ரெயில் மூலமாக மறுநாள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். சென்னை ரெயில் நிலையத்துக்கு வந்த ஆற்காடு வீராசாமி அவர்களும் டி.ஆர்.பாhலு அவர்களும் ‘எம்.ஜி.ஆர். அதிகாலை 3.45 மணிளவில் மறைந்துவிட்டார்’ என்ற செய்தியை தெரிவித்தார்கள். அந்த செய்தியை தலைவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரை ஆற்காட்டாரும் டி.ஆர். பாலுவும் கைத்தாங்கலாகத்தான் காருக்கு அழைத்துவந்தார்கள். 

கோவை சிங்காநல்லுhரில் கலைஞரும் எம்.ஜி.ஆரும் இளம் வயதிலேயே ஒட்டி உறவாடிப் பழகியவர்கள். அந்த நினைவுகளையெல்லாம் காரில் எங்களிடம் கூறிக்கொண்டே வந்தார். புகைவண்டி நிலையத்தில் இருந்தே நேராக எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டுக்குச் சென்றோம். எம்.ஜி.ஆர். இல்லத்தில் வாயிற்புறக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. தலைவர் வந்த செய்தி அறிந்ததும், அப்போது அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் செ.மாதவன் தலைவரை உள்ளே அழைத்துச் சென்றார். தலைவர் அந்தநேரத்தில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கா விட்டால், அன்று இரண்டு கட்சிகளுக்குமிடையே இருந்த பகையுணர்ச்சியில் கடைசிவரை எம்.ஜி.ஆர் உடலுக்கு கலைஞரால் அஞ்சலி செலுத்தவே முடியாமல் போயிருக்கும். 

தொண்டர்களிடையே இருந்த பகை உணர்வின் காரணமாக அண்ணா சாலையில் பெரியார் விருப்பப்படி திராவிடர் கழகத்தினரால் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் சிலையை சிலர் இடித்துத் தள்ளினர். அந்த செயலைக் காரணம்காட்டி கழகத் தோழர்கள் யாரும் எதிர் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு இரங்கல் செய்தி எழுதிக்கொடுத்தார். கழகத்தின் பொது நிகழ்ச்சிகளை ஒரு வார காலத்துக்கு ரத்து செய்யும்படியும், கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்றும் அறிக்கை விடுமாறு கூறினார். அதன்பிறகு தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து எம்.ஜி.ஆரின் இறுதிப் பயண நிகழ்ச்சிகளை கண்கள் குளமாகப் பார்த்துக்கொண்டே இருந்தார். 

கண்ணதாசன் உடனான நட்பும் குறிப்பிட்டு சொல்லக்கூடியது. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கவி.கா.மு.ஷெரீப்பும் தலைவர் கலைஞரும் மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தனர். அப்போது, அங்கே நிரந்தர நடிகராக இருந்தவர் எம்.ஜி.சக்கரபாணி. அவர்தான் கண்ணதாசனை கலைஞருக்கு அறிமுகப்படுத்திவைத்தார். இவருடன் பழகிய சில வாரங்களிலேயே கண்ணதாசனும் கட்சிக்காரரானார். அந்த நீண்ட நட்பில் இடையில் பிளவு ஏற்பட்டது. அப்போது கலைஞரை மிகமிக கடுமையாக விமர்சித்து கவிஞர் எழுதினார். பின்னர் தலைவரிடமே கவிஞர் வந்து விட்டார். கண்ணதாசன் மறைந்தபோது, ‘என் இனிய நண்பா/இளவேனிற் கவிதைகளால்/இதய சுகம் தந்தவனே! உன் இதயத் துடிப்பை, ஏன் நிறுத்திக் கொண்டாய்?’ என்று தொடங்கி தலைவர் எழுதிய கவிதை வரலாறானது. 

கனிமொழி, ராசாத்தியம்மாளுடன் சண்முகநாதன்
கனிமொழி, ராசாத்தியம்மாளுடன் சண்முகநாதன்

என்மீது தனிப்பட்ட முறையில் அன்பாக இருப்பார். ஒருமுறை திருவல்லிக்கேணியில் பொதுக் கூட்டத்தை முடித்துவிட்டு தலைவரின் பேச்சை டைப்செய்து முடித்துவிட்டு கோபாலபுரம்  வீட்டில் இருந்து புறப்பட இரவு ஒரு மணிக்கு மேலாகிவிட்டது. அப்போது என் வீடு அண்ணாநகரில் இருந்தது. அந்தநேரத்தில் ஸ்கூட்டரில்தான் வீட்டுக்கு செல்வேன். செல்போனும் அப்போது கிடையாது. வீட்டுக்குச் செல்லும்போது  பாதி வழியில் கடும்மழை. வீட்டுக்குள் சென்றதும், ‘தலைவர் இரண்டுமுறை போன் செய்து உங்களைக் கேட்டார்’ என்றார் என் மனைவி. ‘நான்  டைப் செய்து கொடுத்துவிட்டு வந்ததில்தான் ஏதோ தவறு நடந்துவிட்டது’ என்று எனக்கு உதறல் எடுத்து விட்டது. கோபாலபுரம் வீட்டுக்கு போன் செய்தேன். தலைவரோ, ‘பத்திரமா வீடு போய்ச்சேர்ந்துட்டியானு கேக்கத்தான்யா போன் பண்ணினேன்’ என்றார். அழுதேவிட்டேன். 

அதேபோல என் குடும்பத்தாரிடமும் அன்பாக இருப்பார். என் தந்தை மறைந்தபோது, தலைவர் வந்தது மட்டுமல்லாமல் சுடுகாடுவரை வந்து எனக்கு ஆறுதல் சொன்னார். என் வீட்டுக்கு  மூன்றுமுறை நேரில் வந்து எனக்கு ஆறுதல் கூறியதையும் என்னால் மறக்கவே முடியாதது. எனது திருமணம், என் தம்பி தங்கைகள் திருமணம், என் மகன்கள், மகள் திருமணம் என எங்கள் வீட்டில் நடந்த அனைத்து திருமணங்களையும் தலைமையேற்று தாலி எடுத்து கொடுத்து நடத்தியது தலைவர்தான். அந்தத் திருமணங்களில் அவர் ஆற்றிய உரைகள் இப்போது என் நெஞ்சில் இனிக்கின்றன. கடந்த ஆண்டு நடந்த என் 75வது பிறந்த நாளுக்கு தலைவரும் தளபதியும் நேரில் வந்து வாழ்த்தியது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும்பேறு. 

எத்தனைமுறை பிறவி எடுத்தாலும் இந்தப் பிறவியில் தலைவர் கலைஞரிடம் உதவியாளனாக பணியாற்றுவதற்கு ஈடு இணையாகுமா என்று எண்ணிக் கொள்வேன். அதற்கு வாய்ப்பளித்த தலைவருக்கு நன்றியுடையவனாக என்றும் இருப்பேன்” என்றார் சண்முகநாதன்.