Published:Updated:

தப்பி வந்த இளம் தளிர்கள்!

தப்பி வந்த இளம் தளிர்கள்!

தப்பி வந்த இளம் தளிர்கள்!

தப்பி வந்த இளம் தளிர்கள்!

Published:Updated:
தப்பி வந்த இளம் தளிர்கள்!
##~##
துரையில் இருந்து சற்றே தள்ளி கருமாத்தூர் அருகே ஒதுக்குப்புறமான ஒரு சிறு கிராமம் - அழகுசிறை. பஸ் ஸ்டாப்புக்கு அருகேயே சற்று உள்வாங்கினாற்போல் இருக்கிறது 'மெர்சி இல்லம்’.

 உள்ளே நுழையும்போதே, ''சிஸ்டர்... மலருக்கு முயல் பொம்மைதான் வேணுமாம்...'', ''சிஸ்டர்... ராஜிக்கு பிஸ்கட் குடுத்தாச்சா?'' என்று பலவிதமான குரல்கள்.

சிஸ்டர் தியானா,  வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அந்த அறை முழுக்க - குட்டிக் குட்டித் தொட்டில்களின் அணிவகுப்பு... அனைத்திலும் பெண் குழந்தைகள்.

உசிலம்பட்டியிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடக்கும் பெண் சிசுக் கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப் பிழைத்த தளிர்கள்தான் அந்தக் குழந்தைகள்.

அந்தச் சூழ்நிலைக்குப் புதியவர்களான நம்மைப் பார்த்ததும், தவழ்ந்து விளையாடிக்கொண்டு இருந்த ஒரு குழந்தை, தன் சின்னக் கண்களை மெள்ள உருட்டி மிரட்சியோடு பார்த்தது. அந்தக் குழந்தையை நோக்கி நாம் கைகளை நீட்ட... ஒரு கணம் தயங்கி, சிஸ்டர் தியானாவைப் பார்த்தது.

''போடா மலர்க் குட்டி... அண்ணாதான்...'' எனச் சொன்னதுதான் தாமதம்... நம் கைகளில் தாவிப் புன்னகைத்தது!

தப்பி வந்த இளம் தளிர்கள்!

''இந்தக் குழந்தையோட பேர் மலர். இதோட அம்மாவும் அப்பாவும், இந்தக் குழந்தை பிறந்த தும், பெண் குழந்தை வேண்டாம்னு  கொல்லப் பாத்திருக்காங்க. அப்போ அங்கே இருந்த தனலட்சுமிங்கிற ஒரு சமூகசேவகி அதைத் தடுத்து இருக்காங்க. ஆனா, அதோட அம்மா, 'இந்தக் குழந்தை என் கண் முன்னாலேயே இருக்கக் கூடாது. இருந்தா, கொன்னுடுவேன்’னு சொன்னதால அந்தக் குழந்தையை எடுத்துட்டுப் போயிருக்காங்க. அதை ராத்திரி பூராத் தன் வீட்லயே வெச்சிருந்து அடுத்த நாள் காலையில இங்கே கொண்டுவந்தாங்க. அப்போ கண்ணுகூட முழிக்காம இருந்த இந்தக் குட்டிக்கு இப்போ ஒரு வயசு...'' என்கிறார் தியானா.

அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது ஒரு குழந்தை. அதற்கு இப்போது வைக்கப்பட்டுள்ள பெயர் ஆன்சி.

''ஆன்சி பிறந்ததுமே, பொம்பளைப் புள்ளங்கிற ஒரே காரணத்துனால அதோட பெற்றோர் அங்கே ஆஸ்பத்திரியிலேயே கழுத்தைத் திருகிக் கொல்ல முயற்சி செஞ்சிருக்காங்க. நல்ல வேளையா அங்கே இருந்த டாக்டர் 'ஒரு உயிரைக் காப்பாத்துங்க’ன்னு எங்களுக்குத் தகவல் கொடுத்தார். உடனடியா நாங்க ஜீப்ல போயி அந்தக் குழந்தையைத் தூக்கிட்டு வந்தோம். இப்போ ஆன்சி, கடவுளோட செல்லக் குழந்தை'' என்று சிரிக்கிறார் சிஸ்டர் தியானா.

சின்ன பொம்மை ஒன்றோடு சிநேகமாகச் சிரித்து விளையாடிக்கொண்டு இருந்தது ஒரு குழந்தை... பெயர் - சாந்தி. ''இந்தக் குழந்தையை, 'பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை. நல்லபடியா வளர்க்கணும்’னு அதோட அம்மாவும் அப்பாவும் நெனைச்சாங்க. ஆனா சுத்தியிருந்த சொந்தக்காரங்க, 'நாலாவதும் பொட்டையா..? அது உயிரோடயே இருக்கக் கூடாது’ன்னு சொல்லிட்டாங்க. அப்படி ஒரு இக்கட்டான நிலைமையில இந்தக் குழந்தை எங்க கைக்குக் கிடைச்சது. தன்னோட குழந்தை இன்னும் இந்த உலகத்தில உயிரோடதான் இருக்குதுன்னு அந்தப் பெற்றோருக்குத் தெரியுமோ, தெரியாதோ..?'' என்றார் சிஸ்டர்.

தப்பி வந்த இளம் தளிர்கள்!

ஒரு சின்ன குழந்தை திடீரென்று எதற்கோ வீறிட்டு அழ... மற்றொரு குழந்தை மெள்ளத் தவழ்ந்து தவழ்ந்து சென்று அதன் கண்ணீரைத் துடைத்து முத்தமிட்டுக் கொஞ்சியது. அதன் பெயர் மெர்சி.

''மெர்சி அவங்க அம்மாவுக்குப் பிறந்த ரெட்டைக் குழந்தையில ஒண்ணு. அவங்க ஆண் குழந்தையை மட்டும் எடுத்துக்கிட்டு, பெண் குழந்தையை வேண்டாம்னு நிராகரிச்சுட்டாங்க. அவங்க 'குப்பை’ன்னு ஒதுக்கினதை நாங்க 'குழந்தைம்மா’னு சொல்லி எடுத்துவந்தோம்!'' என்ற கண்ணீர்க் கதை தெரிய வந்தது.

தப்பி வந்த இளம் தளிர்கள்!

''இங்க இருக்கிற குழந்தைகளுக்கு அம்மா - அப்பா கிடையாதுன்னு சொல்றதைவிட, அம்மா - அப்பான்னா என்னன்னே தெரியாது. அவங்களோட இந்தச் சின்ன உலகத்துல ஒரு குழந்தை மத்த குழந்தைகளோட இன்ப துன்பங்களை, பாசங்களைப் பகிர்ந்துகொள்வதைப் பாருங்க... அநாதைகளா இருந்து இப்போ ஆண்டவனோட செல்லக் குழந்தைகளா இருக்கற இவங்களோட ஒரே சொந்தம் இவங்க தாத்தாதான். அவர் ஃபாதர் பிரான்சிஸ். நீங்க அவரை அவசியம் சந்திக்கணும்'' என்றார் சிஸ்டர் தியானா.

75 வயதான ஃபாதர் பிரான்சிஸ் டிர்ன்பெர்கர், ஜெர்மனியைச் சேர்ந்தவர். இரண்டாம் உலகப் போரின் பரிதாப ஓலங்களும் பயங்கர மரணங்களும் அழிந்த சடலங்களும் இவரின் மனதை மாற்றி இருக்கின்றன. நிம்மதியைத் தேடி இந்தியா வந்து சாமியாரான இவரே... இந்த மெர்சி இல்லம் உருவானதற்கு முழுக் காரணம்!

1979-ல் நடந்த கார் விபத்து ஒன்றில் இவருடைய இடுப்பு எலும்பு உடைந்துபோனது. தள்ளாமையின் காரணமாக நோய்களும் சேர்ந்துகொள்ள, இப்போது சக்கர நாற்காலியில்தான் வெளியே வருகிறார்.

''மெர்சி இல்லம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?''

''கடவுளின் குழந்தைகளைக் கொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது... இவர்கள் யார், ஒன்றுமறியா சிசுக்களின் உயிரைப் பறிப்பதற்கு?

இந்த விஷயம் முதலில் 'ஜூனியர் விகடன்’ பத்திரிகையில் வந்ததாக எனக்குச் சொன்னார்கள். விஷயம் அறிந்தவுடன் துடிதுடித்துப் போனேன். இந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டுமே என்று யோசித்தபோது... மெர்சி இல்லம் அமைக்கும் கனவு வந்தது. என் கனவு கண் முன்னே நனவாகிக்கொண்டே இருக்கிறது. எனக்கு வேண்டிய உதவி எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.... குழந்தைகளைக் கொல்லாதீர்கள். என்னிடம் கொண்டுவாருங்கள். இல்லையேல் ஒரு குரல் கொடுங்கள். நானே ஓடி வருகிறேன்; ஏற்றுக்கொள்ள..!''

  - ரா.கண்ணன்
படங்கள்: கி.ஆனந்தன்