Published:Updated:

``கிறிஸ்துவப் பாடல்கள் பாடுவதால் நான் கிறிஸ்துவன் ஆகிவிட மாட்டேன்!’’ - விமர்சனங்களால் கலங்கும் ஓ.எஸ்.அருண்

``கிறிஸ்துவப் பாடல்கள் பாடுவதால் நான் கிறிஸ்துவன் ஆகிவிட மாட்டேன்!’’ - விமர்சனங்களால் கலங்கும் ஓ.எஸ்.அருண்
News
``கிறிஸ்துவப் பாடல்கள் பாடுவதால் நான் கிறிஸ்துவன் ஆகிவிட மாட்டேன்!’’ - விமர்சனங்களால் கலங்கும் ஓ.எஸ்.அருண்

``நான் ஒரு இந்து. இதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல, இந்த மதத்துலதான் இந்த சங்கீதம் பாடணும்னு சொல்கிற உரிமையும் யாருக்கும் கிடையாது. சங்கீதம் தனித்தன்மை வாய்ந்தது."

புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண், கடந்த சில நாள்களாகக் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறார். வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி `இயேசுவின் சங்கம சங்கீதம்' எனும் கிறிஸ்துவ இசை கச்சேரியில் கலந்துகொண்டு பாடுவதாக அறிவித்திருந்தார் ஓ.எஸ் அருண். ஆனால், சமூகவலைதளங்களில் இக்கச்சேரிக்குக் கடும் எதிர்ப்புகளும், மற்ற கர்னாடக இசை கலைஞர்கள் மத்தியிலிருந்து விமர்சனங்களும் வர கச்சேரியை ரத்து செய்துவிட்டார். இதனால் கர்னாடக இசைக்லைஞர்கள் மற்ற மதப் பாடல்களை பாடலாமா, கூடாதா என சமூக வலைதளங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஓ.எஸ்.அருணைத் தொடர்புகொண்டு பேசினேன்.

``கிறிஸ்துவ இசை கச்சேரி சர்சை குறித்து சொல்லுங்கள்?"

``என்னுடைய நெருங்கிய கிறிஸ்துவ நண்பர் இசை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மாபெரும் இசை கலைஞர் லால்குடி ஜெயராம் அவர்களின் சிஷ்யர் அவர். கர்னாடக சங்கீதம் மேல் அளவுகடந்த பிரியம் அவருக்கு உண்டு. அதனால் அவர் நடத்தும் பள்ளியில் நிறைய குழந்தைகள் கிறிஸ்துவக் கீர்த்தனைகளைப் பாட பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில்தான் அவர்கள் ஒரு ஆண்டுவிழா  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்நிகழ்ச்சியில் கர்னாடக இசையில் கிறிஸ்துவப் பாடல் பாட என்னிடம் கேட்டிருந்தார்கள். நானும் ஓகே சொல்லிவிட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது; என்னைப் பொறுத்தவரை இசையும் மதமும் ஒன்றில்லை. ஆனால், இப்படிப் பாடப்போகிறேன் என்று கேள்விப்பட்டதுமே என்னுடைய உறவுக்காரர்கள், குருக்கள் என்று நிறைய பேர் என்னிடம் வருத்தப்பட்டார்கள். இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று என்னைச் சுற்றி இருந்தவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். இப்படி எமோஷனலாக எல்லோரும் பேசுகிறபோது நெருக்கடி அதிகமாகி, என்னால் ஆத்மார்த்தமாக இந்தக் கச்சேரியைப் பண்ணமுடியும் என்கிற நம்பிக்கை போய்விட்டது. கச்சேரி என்றால் சும்மா பண்ண முடியாது இல்லையா... பாடுகிறபோது மனதில் நிம்மதி இருக்க வேண்டும். அது இல்லாமல் பாடக் கூடாது என்பதால்தான் கச்சேரி வேண்டாம் என்று சொல்லிட்டேன்"

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``சில இயக்கங்கள் உங்களுக்கு  மிரட்டல் விடுத்ததால்தான், இந்தக் கச்சேரியை ரத்து செய்துவிட்டீர்கள் என்று சொல்கிறார்களே?"

``அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னுடைய குடும்பத்தில் யாருக்கும் திருப்தியில்லை. அதனால் மட்டும்தான் இதை கைவிட்டேன்."

``இசைக்கும், சாதி/மதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், இதை ஏன் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயற்சிகள் எடுக்கவில்லை?"

``புரிஞ்சிக்கணும்னு மத்தவங்க யாரும் நினைக்கலையே. அவங்களுக்கும், இசைக்கும் மதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு நல்லாவே தெரியும். ஆனாலும், நாம என்ன சொன்னாலும், ரெடியா ஒரு பதில் வெச்சிக்கிட்டுப் பேசுறவங்ககிட்ட என்ன சொல்றது. என்னுடைய 35 வருஷ இசை அனுபவத்துல இதுபோல நடக்குறது இதுதான் முதல்முறை. இதையெல்லாம் எதிர்கொள்றது எனக்குக் கொஞ்சம் கஷ்டமாவும், வருத்தமாவும் இருக்கு. அதான் அமைதியா விட்டுட்டேன்."

``இதற்கான தீர்வு என்னவாக இருக்கும்?"

``எவ்வளவு எதிர்ப்பு வருதோ, அவ்வளவு ஆதரவும் வருது. நாங்கெல்லாம் உங்ககூட இருக்கோம்னு நிறைய பேர் சொல்றாங்க. இந்த அளவுக்கு சப்போர்ட் இருக்குன்னா நிச்சயமா எல்லாமே ஒருநாள் மாறும்ங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு"

``T M கிருஷ்ணா இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்திருக்கிறார். இனி ஒவ்வொரு மாதமும் இயேசு அல்லது அல்லா குறித்து ஒரு கர்னாடக இசைப்பாடல் பாடப்போவதாக அறிவித்திருக்கிறாரே?"

``அவர் மிகவும் போல்டான கலைஞன். நல்லவர். என்னைப்போல அவரும் ஏகப்பட்ட எதிர்ப்புகளை சந்திச்சிட்டுத்தான் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கார். மிகச் சிறந்த அறிவாளி அவர். நல்லா பாடுவார், எழுதுவார், பேசுவார். அவருடைய வொர்க்ஸை நான் மதிக்கிறேன். அவரைப்போல் இருக்குற மற்ற எல்லா கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்"

``காசுக்காகத்தான் கர்னாடக இசைக்கலைஞர்கள் மற்ற மதப் பாடல்களைப் பாடுவதாக விமர்சிக்கிறார்களே!"

``அதுபோலலாம் எதுவும் இல்லை. எனக்கு சங்கீதம் மட்டும்தான் தெரியும். சங்கீத எழுத்துகள் `சப்தஸ்வரங்கள்'. வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானி, மெல்லிசை, கர்னாடகம்னு எல்லா சங்கீதமும் இந்த ஏழு ஸ்வரங்கள்லதாம் வந்தாகணும். இதுல இந்து, கிறிஸ்துவன், முஸ்லிம்னு எதுவும் இல்ல. நான் ஒரு இந்து. கிறிஸ்துவப் பாடல் பாடுவதால் நான் கிறிஸ்துவனா மாறப்போறதில்ல. எத்தனையோ இந்துக்கள் `கஸல்' இசை பாடுறாங்க. அவர்களையெல்லாம் முஸ்லிம்னு சொல்லிடலாமா?"

``எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு கச்சேரியை நடத்தும் எண்ணம் இருக்கிறதா?"

``நிச்சயம் பண்ணுவேன். நான் ஒரு இந்து. இதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல, இந்த மதத்துலதான் இந்த சங்கீதம் பாடணும்னு சொல்கிற உரிமையும் யாருக்கும் கிடையாது. சங்கீதம் தனித்தன்மை வாய்ந்தது."