Published:Updated:

”குளித்தலை விவசாயிகளுக்கு அவர்தான் சாமி!” - கருணாநிதியை எம்.எல்.ஏ ஆக்கிய நங்கவரம் போராட்டம்

”குளித்தலை விவசாயிகளுக்கு அவர்தான் சாமி!” - கருணாநிதியை எம்.எல்.ஏ ஆக்கிய நங்கவரம் போராட்டம்
News
”குளித்தலை விவசாயிகளுக்கு அவர்தான் சாமி!” - கருணாநிதியை எம்.எல்.ஏ ஆக்கிய நங்கவரம் போராட்டம்

கலைஞரால் தங்களுக்குக் கிடைத்த நிலத்தில் விவசாயம் பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள் 20000 க்கும் மேற்பட்ட விவசாயிகள். கலைஞரின் இறப்புச் செய்தி கேட்டதிலிருந்து, இதயம் நொறுங்கி கிடக்கிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைந்து மெரினாவில் நிரந்தர நித்திரை கொள்கிறார். அவர் முதன்முதலில் 1957 ல் சட்டமன்ற தேர்தலில் நின்று வென்ற குளித்தலை தொகுதி மக்கள் சோகம் அப்பிய முகங்களுடன் இன்னமும் துக்கம் அனுஷ்டித்து வருகிறார்கள். அவர் 1957 ல் குளித்தலை தொகுதியில் நிற்பதற்குக் காரணம் அங்கு 1956 ம் ஆண்டு அவரது தலைமையில் நடந்த நங்கவரம் பண்ணையை எதிர்த்து நடத்திய விவசாய நில உரிமைப் போராட்டம்தான். ராமநாதய்யர், ரெங்கநாதய்யர் என்ற இரண்டு பண்ணையார்களின் 33412 ஏக்கர் நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து பல வருடங்கள் சாகுபடி செய்து வந்தார்கள். ஆனால், அப்போதைய காமராஜர் கொண்டு வந்த அறுபதுக்கு நாற்பது சட்டப்படி நாற்பது சதவிகித நிலங்களை விவசாயிகளுக்குத் தராமல் அவற்றை முழுவதும் பண்ணையார்கள் இருவரும் பிடுங்க முயன்றனர். இதனால் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தார்கள்.

அறிஞர் அண்ணாவின் உத்தரவை ஏற்று, 1956 ல் அந்தப் போராட்டத்தில் விவசாயிகளோடு கைகோத்தார்ருணாநிதி. நிலத்தில் பத்தாயிரம் விவசாயிகளோடு போய், ஏர் பூட்டி தானே உழும் போராட்டத்தை முன்னெடுத்தார். 'உழுதவனுக்கே நிலம் சொந்தம்', 'நாடு பாதி, நங்கவரம் பாதி' என்ற கோஷங்களோடு ஆறு நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினார். இதனால், பணிந்த பண்ணையார்கள் கலைஞரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்கு நிலங்களை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதனால் குளித்தலை தொகுதியில் உள்ள 50 கிராம விவசாயிகள் மத்தியில் கலைஞருக்கு பெரும் செல்வாக்கு உண்டானது. அதனாலே தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் நிற்காமல் குளித்தலையில் நின்று வெற்றி பெற்று முதன்முறையாக 1957 ல் சட்டமன்றத்தில் வலதுகாலை எடுத்து வைத்தார் கலைஞர்.

இப்போது கலைஞரால் தங்களுக்குக் கிடைத்த நிலத்தில் விவசாயம் பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள் 20000 க்கும் மேற்பட்ட விவசாயிகள். கலைஞரின் இறப்புச் செய்தி கேட்டதிலிருந்து, இதயம் நொறுங்கி கிடக்கிறார்கள். "நாங்க இன்னைக்கு மூணு வேளை சோறு திங்குறோம்ன்னா, அதுக்கு காரணம் அவர்தான். எங்க வீட்டுக் குடும்பத் தலைவனை இழந்த துக்கத்தில் ஈரக்குலை நடுங்கி கிடக்கோம்" என்று கண்ணீர் கசிகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோவிந்தனூரைச் சேர்ந்த பாப்பா, 

" 'கலைஞர் இறந்துட்டார்'ன்னு கேள்விப்பட்டதில் இருந்து எனக்கு நச்சொரணை இல்லை தம்பி. எங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலமிருக்கு. அது கலைஞர் போராடி நங்கவரம் பண்ணைகிட்ட இருந்து வாங்கி கொடுத்ததுன்னு என் கணவர் சொல்வார். என் மாமனார் காலத்துல நடந்த போராட்டம் அது. குத்தகைக்கு விட்டிருந்த அத்தனை நிலங்களையும் ரெண்டு பண்ணைகளும் வம்படியா பிடுங்க நினைச்சுருக்காங்க. அப்பதான் கலைஞரய்யா வந்து போராடி, எங்க மக்களுக்கு நிலங்களை மீட்டுத் தந்திருக்கார். அவர் மட்டும் போராடாம போயிருந்தா, நிலங்கள் அனைத்தையும் பிடிங்கிட்டு, ரெண்டு பண்ணைகளும் எங்களை ஊர விட்டு விரட்டியடிக்க நினைச்சுருக்காங்க. நிலம் கிடைக்கலன்னா, மக்கள் அனைவரும் சோத்துக்கே வழியில்லாம செத்துப் போயிருப்பாங்களாம். அதனால், என் கணவர் குடும்ப வம்சம் இப்போ வரைக்கும் வாழுது. ரெண்டு ஏக்கர் நிலத்துல காவிரித் தண்ணியில வெள்ளாமை பண்ணி, இன்னைக்கு மூணு வேளையும் வயிறார சாப்பிடுறோம்ன்னா நாங்க திங்குற ஒவ்வொரு சோத்துப் பருக்கையிலும் கலைஞரோடு பேர் இருக்கு. அவர் எங்களை அனாதையா விட்டுட்டு போனதைதான் தாங்க முடியலை. அவரை யார் வேணும்னாலும் மறக்கலாம். எங்க பகுதி 20000 விவசாயக் குடும்பங்களும் அவரை காலகாலத்துக்கும் மறக்கவே மாட்டோம்" என்றார் நெக்குருகிப்போய்.

அடுத்துப் பேசிய, அதே ஊரைச் சேர்ந்த வைரபெருமாள்,  "நான் அப்போ சின்னப்புள்ள. என் அப்பா கக்கலியன் விவசாயிகளோடு நிலம் கேட்டு போராடினார். மூணு வருஷம் நடந்த போராட்டத்தில் எங்களுக்கு நல்லது ஒண்ணும் நடக்கலை. ஆனா, கலைஞர் வந்து போராடியதும் ஆறே நாள்களில் பிரச்னை சுமூகமானது. பண்ணையார்கள் இருவரும் எங்க கோரிக்கையை ஏற்று, நிலங்களை எங்க பெயர்களில் எழுதி கொடுத்தாங்க. முதல்மடை வாய்க்கால் பாசனத்தில் உள்ள நிலங்களுக்கு ஏக்கர் 1000 ரூபாயும், நடுமடை வாய்க்கால் பாசன பகுதியில் உள்ள நிலங்களுக்கு ஏக்கர் 750 ரூபாயும், கடைமடை வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு ஏக்கருக்கு 500 என்று கொடுத்து, நிலத்தை எங்க பேர்ல எழுதி வாங்கினாங்க. எங்க நிலம் கடைமடை பகுதி என்பதால் ஏக்கர் ஒன்றுக்கு 500 வீதம் 1000 கொடுத்து இந்த இரண்டு ஏக்கர் நிலத்தைப் பண்ணையார்களிடம் எழுதி வாங்கினார். எங்க வம்சம் இன்னைக்கு யாரையும் சோத்துக்கு எதிர்பார்க்காம சொந்த கையை மட்டும் நம்பி இருக்குதுன்னா, அதுக்கு காரணம் கலைஞர்தான். அவரை எங்க வம்சம் காலகாலத்துக்கும் மறக்காது. எங்க வீட்டுல அவர் போட்டோவைதான் மாட்டி வச்சுருக்கோம். பல விவசாயிகள் வீடுகள்ல சாமிகள் போட்டோவுக்கு நடுவுல கலைஞர் போட்டோவைதான் மாட்டி வச்சு கும்பிடுறாங்க. அவரை இழந்ததை அவரது குடும்பம், தி.மு.க கட்சியினரைவிட நாங்கதான் பெரிய இழப்பா நினைக்கிறோம்" என்றார் சோகம் அப்பிப்போன குரலில்!.