Published:Updated:

என் ஊர்!

பெரம்பூர் ஆன பிரம்பூர்!

என் ஊர்!

பெரம்பூர் ஆன பிரம்பூர்!

Published:Updated:
##~##

''பிரம்பு தயாரிக்கப் பயன்படும் செடி கொடிகள் நிறைந்தப் பகுதி என்பதால்தான் பெரம்பூர்! நகரத்தின் வசதி, கிராமத்துச் சூழல் இரண்டும் இணைந்து இருந்தது இந்தப் பகுதியின் சிறப்பு. மயிலாப்பூர், பாரிமுனை, தியாகராய நகர் போல வசதி, வாய்ப்புகள் இருந்தும் எந்த விதப் பரபரப்பும் இல்லாமல் இருந்தது 50 ஆண்டுகளுக்கு முந்தைய பெரம்பூரின் தனித்தன்மை!'' - பெரம்பூர் பற்றி உற்சாகமாகத் தொடங்குகிறார் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர், தமிழருவி மணியன்.

 ''கதவு எண் 25, சபாபதி முதலித் தெரு. இதுதான் பெரம்பூர் செம்பியம் பகுதியில் நாங்கள் குடியிருந்த வீட்டின் முகவரி. பல ஆண்டுகள் குடியிருந்த நானே தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு இந்தப் பகுதி இப்போது மாறி இருக்கிறது. கடவுள் பக்தியை எப்போதும் நினைவுக்குக் கொண்டுவரும் செம்பியத்தம்மன் கோயில்தான் இப்போதும் என் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. இந்தக்

என் ஊர்!

கோயிலின் கூரை மாற்றப்பட்டு இருக்கிறது என்பதைத் தவிர, எந்த வித்தியாசமும் இல்லாமல் கோயிலின் பாரம்பரியம் தொடர்கிறது. அரச மரத்தின் கீழ் அம்மிக் கல் அளவில் சுயம்புவாக உருவானதுதான் இந்த செம்பியத்தம்மன். இதைச் சுற்றி வளர்ந்து நிற்கும் அரச மர வேரே அம்மனுக்கான கர்ப்பக்கிரகமாகவும் தனி அறையாகவும், நுழை வாயிலாகவும் அமைந்து உள்ளது. எனக்குத் தெரிந்து சென்னையில் மரம் தாங்கி நிற்கும் கோயில் இது மட்டுமே. மர வேருக்குள் கோயில் இருப்பதால் கும்மி ருட்டாக இருக்கும். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.

பெரம்பூரிலேயே சிறப்பு வாய்ந்த பள்ளி, இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி உயர்நிலைப் பள்ளி. இங்குதான் ஆறாம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு வரை படித்து முடித்தேன். நுழைவுத் தேர்வுவைத்து தான் மாணவர்களைச் சேர்ப்பார்கள். இந்தப் பள்ளிக்கு எதிரே இப்போது அமைந்து இருக்கும் பூங்கா, அப்போது ஏரிக் கரை மைதானமாக இருந்தது.  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவா, மூதறிஞர் ராஜாஜி, சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத், கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், கவியரசு கண்ணதாசன் எனப் பெரும்பாலான அரசியல் தலைவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய மைதானம் இது.  

என் ஊர்!

இதை ஒட்டினாற்போல் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொளத்தூர் வரைக்கும் நீளும் பேப்பர் மில்ஸ் சாலைதான் இந்தப் பகுதியின் ஒரே பிரதான சாலை. இன்று மேம்பாலம் போடும் அளவுக்கு நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியில், அன்று ஆட்கள் நடமாட்டமே இருக்காது. வெயில் காலத்தில் காற்று வாங்க இந்தச் சாலையில் ஊரே பாய் போட்டு உறங்கும். எப்போதாவது வரும் 59-ம் எண் பேருந்தைத் தவிர பெரிய போக்குவரத்து ஒன்றும் இருக் காது.

என் ஊர்!

இன்று வீனஸ் காம்ப்ளக்ஸாக உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டடம்தான் அன்றைய ஒரே பொழுதுபோக்குத் தளமான வீனஸ் தியேட்டர். நாலே முக்கால் அணாவுக்கு நுழைவுச் சீட்டு  வாங்கி, காலணாவுக்குத் தேங்காய் பிஸ்கட் வாங்கித் தின்றபடி படம் பார்த்தது இப்போதும் நினைவில் உள்ளது. இந்த பாகவதர் காலத்து திரையரங்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் இடித்து வணிக வளாகமாக மாற்றினார்கள்.

இந்தப் பகுதியில் உள்ள 100 வருடங்களுக்கு மேலான லூர்துமேரி ஆலயத்தை ஒட்டி ஆங்கிலோ-இந்தியர்கள் பலர் குடியிருந்தனர். வெள்ளைக்காரர் தோரணையில் சினிமாவில் நடிக்க ஆள் தேவை என்றால், இங்கு இருந்துதான் அழைத்துச்செல்வார்கள்.

இந்தியாவின் மிக முக்கிய நெசவுத் தொழிற்சாலைகளில் ஒன்றான பின்னி தொழிற்சாலை பெரம்பூரில்தான் இருந்தது. பள்ளிச் சீருடைகள்  முதல் பண்டிகைத் துணி வரை அன்று எல்லாமே பின்னி துணிகள்தான். இன்று மூடிக்கிடக்கும் இந்தத் தொழிற்சாலை படப்பிடிப்புகள் நடத்தத்தான் பயன்படுகிறது.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ரயில் பெட்டித் தொழிற்சாலையும் பெரம்பூரில்தான் உள்ளது. உலகின் பல பகுதிகளுக்கு இங்கு இருந்துதான் ரயில் பெட்டிகள் தயாரித்து ஏற்றுமதி செய்யப் படுகின்றன. ரயில் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் லோகோ ஒர்க் ஷாப், கேரேஜ் ஒர்க் ஷாப் ஆகியவை அடுத்தடுத்து அமைந்து உள்ளன. இங்கேயே ஒரு ரயில் அருங்காட்சியகமும் உண்டு. பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இப்போ தைய ரயில் பெட்டிகள், அவை இயங்கும் முறை என ரயிலைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம். இதுதவிர சிறுவர் களை மகிழ்விக்க ஒரு குட்டி ரயிலும் ஓடுகிறது. இப்படி பாரம்பரியமும் வணிகமும் இணைந்த பகுதிதான் பெரம்பூர்!''

- லெனின்ஷா, படங்கள்: ப.சரவணகுமார்