Published:Updated:

நடுநிசி நாயகர்கள்!

நடுநிசி நாயகர்கள்!

நடுநிசி நாயகர்கள்!

நடுநிசி நாயகர்கள்!

Published:Updated:
##~##

சென்னையில் ஐ.டி.கம்பெனி மற்றும் தொழிற்சாலைகளில் இரவுப் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்களின் நடுநிசி பணிச்சோர்வைப் போக்குவது சைக்கிள் டீக்கடைகள்தான். பிஸ்கட், சிகரெட், முறுக்கு என நள்ளிரவிலும் களைகட்டும் இந்த நடமாடும் டீக்கடைக்காரர்களின் வாழ்க்கையை அறிய நடுராத்திரி யில் சென்னையை வலம்வந்தோம்.

 இடம்: மெரினா பீச், கண்ணகி சிலை.                      
நேரம்: இரவு 11 மணி.

'பேரு குமரவேலு. சொந்த ஊரு ராமநாதபுரம். சென்னைக்கு வந்து 20 வருஷமாச்சுங்க. நைட் 10 மணிக்கு சைக்கிளை எடுத்தா அதிகாலை 5 மணிக்குத்தான் வீட்டுக்கே போவேன். மெரினா பீச்ல தொடங்கி எக்மோர் ரயில்வே ஸ்டேஷன், ஆஸ்பத்திரினு பூந்து புறப்படுவேன். இதை முடிச்சிட்டு காலைல 6 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ஹவுஸ் கீப்பிங் வேலை. தூக்கமெல்லாம் அப்புறம்தான். சிலபேர் குடிச்சிட்டு வந்து கெட்டகெட்ட வார்த்தையில திட்டுவாங்க. டீ குடிச்சிட்டு காசு தர மாட்டாங்க. எல்லாத் தையும் அனுசரிச்சு கோபப்படாம போனாத்தான் பிசினஸ் பண்ண முடியும். பீச்சுக்கு நைட்டு 1 மணி, 2 மணிக்கு எல்லாம் கூட பசங்க, பொண்ணுங்க கார்ல வருவாங்க. சத்தமாப் பாட்டு போட்டு உட்கார்ந்து பேசிட்டு இருப்பாங்க. போலீஸ் வந்து சத்தம் போட்டாலும் கிளம்ப மாட்டாங்க. இந்தக் கதை தினமும் நடக்குதுங்க!'' - அனுபவம் பேசுகிறார்.

நடுநிசி நாயகர்கள்!

இடம்: அரும்பாக்கம்-ஸ்கை வாக்.
நேரம்: 12.30 மணி

'கேரளா கொல்லம் சொந்த ஊரு. சென்னைக்கு வந்து 30 வருஷமாச்சு. அண்ணா நகர்ல குடும்பத்தோட தங்கியிருக்கேன். ரெண்டு குழந்தைங்க. அண்ணா நகர், கோயம்பேடு, அரும்பாக்கம்னு ரவுண்ட்டை முடிச்சிட்டு காலையில 5 மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன். பகல்ல தூங்குறது மட்டும்தான் வேலை. ஏதோ வாழ்க்கை போகுதுங்க'' என்பவர், ''ஒரு தடவை இங்க செகண்ட் ஷோ படம் பார்த்துட்டுப்போன ஒரு பொண் ணோட செயினை அறுத்துக்கிட்டு ஒருத்தன் ஓட்டமா ஓடுறான். அந்தப் பொண்ணோட புருஷன், நான், இன்னும் சில பேரு  சேர்ந்து துரத்திட்டுப் போய் அண்ணா ஆர்ச்ல வெச்சு அவனை மடக்கினோம். அந்தப் பொண்ணு அழுதுகிட்டே எங்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டது இன்னும் கண்ணுக்குள்ள நிக்குதுங்க!'' என்கிறார் குமார்.

    இடம்:  வடபழனி 100 அடி சாலை.
    நேரம்:  நள்ளிரவு 1.30. மணி

அருகருகே இரண்டு பேர் நின்று டீ விற்றுக்கொண்டு இருக்க, இருவரிடமும் கணிசமான கூட்டம். முதலில் தன் கதை சொன்னார் ஜானகிராமன். 'பொறந்து வளர்ந்தது எல்லாம் இங்கதான். ராத்திரியில இங்கேயும் பகல்ல கே.கே.நகர்லயும் டீ விப்பேன். ஒருநாள் விடியக்காலை 3 மணி இருக்கும். பஸ்ல இருந்து இறங்குன ஒரு பெரியவர் என்கிட்ட டீ வாங்கி குடிச்சுட்டுப் பேசிட்டே இருந்தாரு. திடீர்னு நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு அப்புடியே கீழே சரிஞ்சுட்டாரு. ஆம்புலன்ஸுக்குத் தகவல்கொடுத்தோம். ஆனா, ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள இறந்துட்டாரு. மனசுக்கு ரொம்பவே சங்கடமாப் போச்சு. இதுதாங்க வாழ்க்கை'' என்று தத்துவம் பேசியவரிடம், 'வருமானம் போதுமானதா இருக்கா?' என்று கேட்டேன். 'டீக்கடையிலேயே வேலை செஞ்சதால வேற வேலை எதுவும் தெரியாது. இனிமே புதுசா ஒரு வேலையைக் கத்துக்கிறதும் கஷ்டம்'' என்று சிரிக்கிறார்.

நடுநிசி நாயகர்கள்!

கலகலவென ஜோக் அடித்தபடி கேனில் இருந்து லாகவமாக டீ ஊற்றித்தருகிறார் முருகன். 'மதுரை மேலூர்தான் ஊரு. இங்க வந்து 24 வருஷம் ஆகுது. ஊர்ல ஒண்ணு, இங்க ஒண்ணுனு ரெண்டு பொண்டாட்டிங்க.  பகல்ல கொத்தனார் வேலை. வியாபாரம் நல்லா ஓடுனா ஒரு நாளைக்கு அதிகபட்சம் 750 ரூபா வரை கிடைக்கும். ஆனா, காலம் பூரா உழைக்கணும். என்ன பண்றது, ரெண்டு குடும்பத்தைக் காப்பாத்தியாகணுமே!' சோகத்துடன் சிரிக்கிறார்.

இடம்: கோயம்பேடு பேருந்து நிலையம்.
நேரம்: இரவு 2 மணி.

சைக்கிளை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் சேரில் ஹாயாக அமர்ந்திருக்கிறார் பாண்டியன். 'சொந்த ஊரு தூத்துக்குடி. சென்னைக்கு வந்து 10 வருஷமாச்சி. இப்ப எனக்கு 60 வயசு. வியாபாரத்தை முடிச்சிட்டு காலையில வீட்டுக்குப் போய் மகனோட மளிகைக் கடையை கொஞ்ச நேரம் பார்த்துப்பேன். எட்டு வருஷமா இப்படித்தான் பொழப்பு ஓடுது. முன்னெல்லாம் மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட்னு கோயம்பேடு பூரா சுத்துவேன். வயசாயிட்டதால இப்ப முன்ன மாதிரி அலைய முடியலை. வெளியூர் போறதுக்காக வர்றவங்க சமயத்தில் பஸ் கிடைக்காம ராத்திரி முழுக்க என்கூட உட்கார்ந்து சொந்தக் கதை பேசிட்டு இருப்பாங்க. இப்படிப் பேசிப் பேசியே ஏழெட்டுப் பேர் நண்பர்கள் ஆயிட்டாங்க.  பஸ் ஸ்டாண்ட் வந்தா போன் பண்ணி, பார்த்துப் பேசிட்டுத்தான் போவாங்க. இந்த இடத்தில் வியாபாரம் பார்க்கிறதில் அப்படி ஒரு நன்மை!'' என்கிறார் பாண்டியன்.

- சி.காவேரி மாணிக்கம்,
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்