Published:Updated:

'பொய் சொன்ன கயவன் எங்கே... வாள் இங்கே... அவன் நாக்கெங்கே?’ கருணாநிதியின் மொழி ஆளுமை

'பொய் சொன்ன கயவன் எங்கே... வாள் இங்கே... அவன் நாக்கெங்கே?’ கருணாநிதியின் மொழி ஆளுமை

கருணாநிதி புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்குப் படைத்துத் தந்தவர்.

'பொய் சொன்ன கயவன் எங்கே... வாள் இங்கே... அவன் நாக்கெங்கே?’ கருணாநிதியின் மொழி ஆளுமை

கருணாநிதி புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்குப் படைத்துத் தந்தவர்.

Published:Updated:
'பொய் சொன்ன கயவன் எங்கே... வாள் இங்கே... அவன் நாக்கெங்கே?’ கருணாநிதியின் மொழி ஆளுமை

‘‘கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்குப் படைத்துத் தந்தவர்’’ என்றவர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி. பன்முக ஆற்றல் பெற்றிருந்த கலைஞர் மு.கருணாநிதியின் படைப்புகள் அனைத்தும் ஓர் அதிசயம்... அந்த வகையில், அவர் இயற்றி... அனைவரையும் கவர்ந்திழுத்த சில நூல்களைப் பார்ப்போம்...   

‘சங்கத்தமிழ்’!

முத்தமிழுக்குள் மூழ்கி... முத்தெடுத்த கருணாநிதி, சங்கத்தமிழ் இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் நன்கு பயிற்சி பெற்றவர். அதுகுறித்து நிறைய எழுதியிருக்கிறார்; பேசியிருக்கிறார். மேலும், சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களை முழுமையாகவும், தனித்தனி அடிகளாகவும் குறியிட்டுக் காட்டுவதில் சிறந்தவர். சங்கத்தமிழ் நூல்களின்மீது அவர், தணியாத காதல் கொண்டிருந்ததால்தான், அவரால் ‘சங்கத் தமிழை’ப் படைக்க முடிந்தது. இந்த நூல், ஓர் இலக்கியப் பெட்டகம்; இலக்கியக் கருவூலம். எக்காலத்தவரும் உணர்ந்துகொள்ளும் விதத்தில் சங்கத் தமிழின் உரை, ஒளிவீசுகிறது. குறிஞ்சியை, கபிலர் மட்டும் வர்ணிக்கவில்லை... கருணாநிதியும், குறிஞ்சிப் பாட்டு பற்றிய பாடல்களை விளக்கி எழுதியுள்ளார். இதுதவிர, காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற் புலவர், வீரத் தாய் பற்றி பாடிய புறநானூற்றுப் பாடலை இளைய தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில், தன்னுடைய கவிதை நடையில் எழுதியவர் கருணாநிதி. ‘உன் மகன், முதுகில் ஈட்டி பாய்ந்து இறந்துகிடக்கிறான்’ என்று சொன்னவுடன் உடனே... போர்க்களத்துக்குப் புறப்படுகிறாள் அந்த வீரத் தாய். அங்கு, ஈட்டிக்கு மார்பு காட்டி இறந்துகிடப்பதைக் கண்டு இதயம் குளிர்கிறாள். இதை,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை...
என் மகன் வீரனாய் இறந்தான் என்றாள்!
அறுத்தெறிய இருந்தேன்... 
அவன் குடித்த மார்பை - அடடா!
கருத்தெரியப் பொய் சொன்ன கயவன் எங்கே?
வாள் இங்கே... அவன் நாக்கெங்கே?’

- என்று தன்னுடைய ‘சங்கத் தமிழ்’ நூலில் சுவைபடச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. சங்கத் தமிழ், ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

‘குறளோவியம்!’

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால் மூலம் வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்துக் காட்டியது திருக்குறள். இந்த நூலுக்கு பல அறிஞர்கள் விளக்கவுரை எழுதியிருக்கின்றனர் என்றபோதிலும், கருணாநிதி தீட்டிய உரை ஓவியம் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று. திருக்குறள், கருணாநிதியின் அருமருந்து என்றால் அது மிகையாகாது. அதன்மீது பெருமதிப்பும், பேரிடுபாடும் கொண்டிருந்ததால்தான் அதனைக் குறளோவியமாகத் தீட்டினார். ‘‘உரைநடையில் குறட்பாக்களை மலர் உரைத்தோர் உளர்! சுருக்கமாகச் சுவையாகக் குறளுக்குப் பொழிப்புரை புகன்றோர் உளர்! இசைத் தமிழால் இனிய குறளைச் செவி வழி பாயச் செய்து சிந்தை குளிர்விப்போர் உளர்! இவற்றுக்கிடையே என் பங்காக நிகழ்ச்சிகளைக் காட்சியாக்கி நிழல் தரும் குளிர் தருக்கள் அடர்ந்த நீரோடைத் தமிழிலும், நெஞ்சில் கனலேற்றும் முழவோசைத் தமிழிலும், நீள் விழியில் நதி தோன்றத் தூண்டும் உருக்கமிகு உணர்ச்சித் தமிழிலும் குறட்பாக்களை உங்கள் முன்னால் உலவவிட்டிருக்கிறேன்’’ என்று குறளோவியத்துக்குக் குறிப்பு வழங்கினார் கருணாநிதி. 

‘புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து’
 

- என்கிற குறளுக்குத்தான் கருணாநிதி, முதலில் சொல்லோவியம் தீட்டினார். ‘தமைக்காத்த தலைவன், தமக்காகக் கண்ணீர் சிந்தும் அளவுக்கு ஏற்படுகிற களச்சாவினை வீரர்கள், யாசித்தாவது பெறவேண்டும்’ - என்பதே அதன் பொருளாகும். இதற்கு கருணாநிதி சொன்ன விளக்கம் நம்மை இன்னும் ஆச்சர்யமூட்டும். ‘‘களம்பட்டுத் தியாகியாக நான், மாண்டுக் கிடக்க... என் உடல்மீது என் தலைவர் அண்ணா, கண்ணீர் சிந்தும் பேறு பெறவேண்டும் என்ற அவா மிகுதியால் எழுதப்பட்ட முதல் குறளோவியம் இது. ஆனால் நான் நினைத்தற்கு மாறாக நடந்துவிட்டதே! என் அன்புத் தலைவர் எனக்கு முன் மறைந்துவிட்டாரே!’’ என்பதே அது. குறளோவியம், ‘தினமணி கதிர்’, ‘குங்குமம்’ போன்ற இதழ்களில் வெளிவந்து பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

‘தொல்காப்பியப் பூங்கா!’

தமிழின் மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம். இதற்கு உரை எழுதியவர்கள் பலர் என்றாலும், இன்றைய காலத்தில் பலரும் புரிந்துகொள்ளும்படி மிகவும் எளிய வகையில், பலாச் சுளை போன்ற கருத்துகளைத் தந்தவர் கருணாநிதி மட்டுமே. இலக்கண வகையில்... மரபு வழியில் மலைக்குன்றுபோல் இருந்த தொல்காப்பியத்தை, தன் எழுத்து உளியால் உடைத்து... அதில், கருத்தாழமிக்கக் குறிப்புகளைப் பயிரிட்டு... பூங்காவாக மாற்றியவர் கருணாநிதி. 

இந்த நூலின் நோக்கம் பற்றி கருணாநிதி, ‘‘இலக்கணம் பற்றி மட்டுமே கூறுவது என் நோக்கமில்லை என்பதாலும், இலக்கணத்தில் முக்கியமான சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்வதற்காக எடுக்கும் முயற்சி’’ என்றார். மெய்யெழுத்துகள் எத்தனை என்று... எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வதற்கு கருணாநிதி சொல்லும் வரலாற்றுக் குறிப்பு மிகவும் வித்தியாசமானது. வகுப்பு ஆசிரியரிடம்... ஒரு மாணவி, ‘‘சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுப்பதற்காக... அதற்கான கல்லைக் கொண்டு வருவதற்காக... குயிலாலுவம் என்ற இடத்தில் கனகவியாசர் என்ற மன்னனுடன் போரிட்டார். அதில் வெற்றிபெற்று, அவர்கள் தலையில் கல்லேற்றச் செய்து, ‘தேவாசுரப் போர் 18 ஆண்டுகள் நடைபெற்றன; ராமாயணப் போர் 18 மாதங்கள் நடைபெற்றன; பாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றன; இமயம் வந்து இந்தச் செங்குட்டுவன் நடத்திய போர், 18 நாழிகையில் முடிந்துவிட்டது’ என்று வீரமுழக்கமிடுகிறார் சேரன் செங்குட்டுவன். இந்த உரையை நான் நினைவில் வைத்திருப்பதால்... மெய் எழுத்துகள் 18 என்பதையும் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது’’ என்கிறாள் அவள். 

‘நெஞ்சுக்கு நீதி!’

கருணாநிதியின் சுய வரலாற்று நூலே நெஞ்சுக்கு நீதி. இது, ஆறு பாகங்களைக் கொண்டது. அவருடைய ஒவ்வொரு காலகட்டத்தையும் தாங்கிய பகுதிகள், அந்த நூலின் பாகங்களாக வெளிவந்திருக்கின்றன. ‘‘இனிமேல் என் ஒவ்வோர் அடியும் என்னுடைய கல்லறையை நோக்கியே எடுத்துவைக்கப்படும். என் ஒவ்வோர் அசைவும் என் இனத்தின் முன்னேற்றத்துக்காகவே அமையும். ஒவ்வொரு துளி வியர்வையும் என் நசுக்கப்பட்ட இனத்தின் பெருமையை வளப்படுத்தும். என் கண்ணீர், ரத்தம், மூச்சுக் காற்று, எலும்பு, தசை அனைத்தும் இந்த இனத்தின் முன்னேற்றத்துக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்படும்’’ என்று தன், ‘நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதையில் எழுதியிருப்பார் கருணாநிதி. 

‘ரோமாபுரி பாண்டியன்!’

வரலாற்றுப் புதினங்கள் எழுதி தமிழுக்கு வளமூட்டியவர்கள் பலர். தன்னுடைய அழகு நடையால், ‘ரோமாபுரி பாண்டியனை’ அழகாக்கியவர் கருணாநிதி. இந்த வரலாற்றுப் புதினம் உலகில் தன்னிகரற்ற தனித்தன்மையோடு இன்றும் திகழ்கிறது. இந்த நூல் பற்றி ‘அறிஞர்கள் பார்வையில் கலைஞர்’ என்கிற நூலில், ‘‘பொதுவாக, வரலாற்றுப் புதினங்களை... வாசகர்களை மகிழ்விப்பதற்காகவே எழுதுவர். கலைஞர், வாசகர்களை இன்புறுத்தவும், அறிவுறுத்தவும் இதனை எழுதியுள்ளார்’’ என்கிறார் டாக்டர் இராகு.நாகு. ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசரின்பால் பாண்டிய மன்னன் தூது அனுப்பியதாக இலக்கியங்களும், வரலாற்றுக் குறிப்புகளும் கூறுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டே கருணாநிதி ரோமாபுரி பாண்டியனைப் படைத்துள்ளார். இந்தக் கதை சீரியலாக அமையப்பெற்று கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்பானது.

‘தாய்க்காவியம்!’

ரஷ்ய தொழிலாளர்களின் பிரச்னையை மையமாகவைத்து எழுதப்பட்டதுதான் ‘தாய்’ என்கிற நாவல். இதை, அந்த நாட்டுப் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதினார். இந்தக் கதையை, தன்னுடைய வசன கவிதை நடையில் ‘தாய்க்காவியமா’கப் படைத்தார் கருணாநிதி. இதுகுறித்து அவர், ‘‘இந்தக் காவியம், உரைநடை ஓவியமாகச் சிலரால் தீட்டப்பட்டுள்ளது; மொழிபெயர்க்கப்பட்டு உலகின் மூல பலமான பாட்டாளி வர்க்கத்துக்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது; பகுத்தறிவு மணம் பரப்பியிருக்கிறது. இந்தக் காரணங்கள்தான் இதனைக் கவிதை நடையில் காவியம் ஆக்கிட வேண்டும் என்று எனக்கு எழுந்த ஆசைக்கு அடித்தளமாயிற்று’’ என்றார். இதை, புதுக்கவிதை நடையில் படைத்துள்ளார் கருணாநிதி. இதன் ஒவ்வோர் அத்தியாயமும் சிறந்த கதைப் போக்கைக் கொண்டிருக்கும். இந்தக் கதைகூடத் திரைப்படமாக உருவானது.

`தென்பாண்டிச் சிங்கம்', `பொன்னர் சங்கர்' போன்ற நூல்களோடு, பிற நூல்களையும் எழுதி... தன் எழுத்துப் பயணத்தில் முத்திரை பதித்தவர் கருணாநிதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism