Published:Updated:

இலை தழை பூக்களால் நூறு நாள் ஓவியம்! - ’இன்ஸ்டாகிராம்’ சுபாஷினி

இலை தழை பூக்களால் நூறு நாள் ஓவியம்! - ’இன்ஸ்டாகிராம்’ சுபாஷினி
இலை தழை பூக்களால் நூறு நாள் ஓவியம்! - ’இன்ஸ்டாகிராம்’ சுபாஷினி

ன்றொரு நாள் சுபாஷினி தன் வீட்டின் வெளியே உள்ள தோட்டத்தில் அமர்ந்து ஓவியம் வரைந்துகொண்டிருந்தார். ஓவியம் வரைவதிலும் புகைப்படம் எடுப்பதிலும் அவருக்கு அலாதியான ஆர்வம். அன்றும், எங்கோ பார்த்திருந்த ஒரு பெண்ணின் உருவத்தை வரைந்துகொண்டிருந்தார். ஏனோ ஓவியம் முழுமை பெற்ற உணர்வைத் தரவில்லை. கண்கள், காது மடல்கள், மூக்கு எனக் கவனித்துக்கொண்டே வரும்போது, அந்த வெறுமையை உணர்ந்துவிட்டார். ஆம்! மூக்குத்தி சூடினால் இந்த ஓவியம் முழுமை பெற்றுவிடும் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், அந்தச் சித்திரத்துக்கு சுபாஷினி வரைந்த எந்த மூக்குத்தியும் பொருந்தவில்லை. அந்தச் சித்திரம், தனக்கான மூக்குத்தியை வேறெங்கோ தேடிக்கொண்டிருந்தது. 

மூக்குத்தியைச் சூடாமல் ஓவியத்தைப் பாதியிலேயே நிறுத்தவும் சுபாஷினிக்கு மனம் வரவில்லை. தோட்டத்தில் உலாவியவாறு பூக்களை கவனிக்கிறார். அங்கிருந்த ஒரு மலரைப் பார்த்ததும் உற்சாகம். தன் ஓவியத்தால் வரையமுடியாத ஒரு மூக்குத்தியைத் தோட்டத்திலிருந்த மலர் ஒன்று, அவருக்குக் கொடுத்தது. அதைப்பறித்து மூக்குத்தியாகச் சூட்டுகிறார். மனதுக்குள் இனம்புரியாத ஈர்ப்பு. அது, இயற்கையின் தேடலுக்கான முதல் புள்ளியாக இருந்தது.

“அதுதான் பொழுதுபோக்குக்குப் புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவதிலிருந்து என்னை அடுத்த நகர்வுக்குக் கடத்தியது. என்னுடைய தேடலை விரிவுபடுத்தி கார்டன் ஆர்ட் மீதான ஈர்ப்பை உண்டாக்கியது. அந்த நிகழ்வு நடந்திருக்காவிட்டால், இப்போதுவரை ஒரு சாதாரண புகைப்படக் கலைஞராகவே இருந்திருப்பேன்” என்கிறார். பெங்களுரில் வசித்தாலும் சுபாஷினியின் தெளிந்த தமிழ் உச்சரிப்பு வசீகரிக்கிறது.

“சகோ, நான் திருமணத்திற்குப் பிறகுதான் பெங்களுரில் வசிக்க ஆரம்பித்தேன். பிறந்தது, வளர்ந்தது என எல்லாமே சென்னைதான். இங்கு வந்ததிலிருந்தே தமிழ் பேசக்கூடிய வாய்ப்பு சரியாக அமையவில்லை. யாராவது தமிழில் பேசினால் எனக்கும் தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடுகிறது. இனியும் தொடர்ந்து தமிழிலேயே பேசுவோமே” என்ற சிறு கோரிக்கையோடு சுபாஷினி தொடர்கிறார். 

“திருமணத்துக்குப் பிறகுதான் பெங்களுர் வாசம். பிறந்தது, வளர்ந்தது சென்னைதான். இங்கு வந்ததிலிருந்தே, யாராவது தமிழில் பேசினால் ஆர்வம் அதிகமாகிவிடும். பூக்கள் என்றாலே அழகுதான். மரங்களிலிருந்து காய்ந்து விழும் இலைகளும் என் பார்வையில் பேரழகாகத் தெரிகின்றன. என் ஓவியத்துக்குப் அழகுச் சேர்ப்பது பூக்களைவிடக் காய்ந்த இலைகளே. நம் தாத்தா, பாட்டிகளிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கும். அதுபோலத்தான் உதிரும் இலைகளைப் பார்க்கிறேன். அந்த இலைகளிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். அதிலிருந்தே பறவைகளின் உருவத்தை எடுக்கிறேன். படகைத் தயார்செய்கிறேன், மீன்களை வடிவமைக்கிறேன், அழகான உதடுகளைச் செதுக்குகிறேன். புன்னகை, அழுகை, துக்கம், சோர்வு, கவலை என உணர்வுகளைக் கடத்துகிறேன். இவை அனைத்தையும் இலைகள், பூக்கள், பச்சைப் புற்கள், தண்டுகள், வேர்கள் எனக்குப் பரிசாகக் கொடுப்பவை. நம்மில் சிலர் இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் முகம் தேடும் பழக்கம் இருக்கும். அதுபோலத்தான் நானும். எந்தப் பூவைப் பார்த்தாலும், இலையைப் பார்த்தாலும் அதில் ஏதாவது முகம் தெரிகிறதா என உற்றுப் பார்ப்பேன். எல்லாமே ஏதோ ஒரு வகையில் ஓர் உருவத்தைப் பரிசாகக் கொடுக்கின்றன. அது இயற்கையின் பெருங்கொடை” எனச் சிலிர்க்கிறார் சுபாஷினி.

உண்மைதான்! சுபாஷினி சொல்வதுபோல அவருடைய ஒவ்வொரு ஓவியமும் ஏதோ ஒரு வகையான உணர்வைக் கடத்துகின்றன. பூக்களின் மனம்போல நம் உள்ளுணர்வில் மென்மையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மரக்கிளை மீது பெண்ணொருத்தி அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கான ஆடையாக, செம்பருத்திப் பூவை அணிவித்திருக்கிறார். நீலத்திரைப் போர்த்திய கடலில், காய்ந்த இலையைப் படகாக்கி மிதக்கவிட்டிருக்கிறார். இஞ்சித் துண்டுகள் குருவிகளாக மாறி, நம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. இப்படி, இயற்கையில் கிடைப்பவற்றில் தன் கற்பனை ஓவியத்தையும் தீட்டி, புகைப்படங்களாக எடுத்து பார்வைக்குவைக்கும் விதத்தில் ஒவ்வொன்றும் மிளர்கின்றன. தற்போதைய இன்ஸ்ட்ராகிராம் உலகில் சுபாஷினியின் படைப்புகள் செம்ம வைரல். அதிலும் குறிப்பாக, நுறு நாள் சேலஞ்ச் ஒன்றையும் அறிமுகப்படுத்தி தினம் ஒரு படைப்பை உருவாக்கி அசத்தினார்.

“கார்டன் ஆர்ட் என்று வந்ததும், ஓவியம் வரைவதையும் புகைப்படம் எடுப்பதையும் விட்டுவிடவில்லை. அதற்குள்ளேயே இவை இரண்டையும் சேர்த்து புதுமையாகச் செய்ய முடிவெடுத்தேன். இலைகளையும் பூக்களையும் பார்த்ததுமே ஓர் உருவத்தை மனதுக்குள் கொண்டுவந்துவிடுவேன். சில நேரங்களில் மட்டுமே வரையும் ஓவியத்துக்குத் தகுந்த இலைகளைத் தேர்வுசெய்வேன். கார்டன் ஆர்ட் முடிந்ததும், அதை அப்படியே சேமித்துவைக்க முடியாது. அந்தப் படைப்புகளின் ஆயுள் குறைவு. எனவே, எடுக்கும் புகைப்படம்தான் நிரந்தரமாக அந்தப் படைப்பை பத்திரப்படுத்தும். காலையும் மாலையும் சூரியன் தங்க நிறத்தில் ஒளிரும். அதுதான் புகைப்படம் எடுப்பதற்கான சரியான நேரம். அப்போது புகைப்படம் எடுத்துவிட்டு, பிறகு அந்த ஓவியத்தை மண்ணில் புதைத்துவிடுவேன். இயற்கையின் விதிகளில் இதுவும் முக்கியமானதுதானே. மண்ணிலிருந்து வந்தவற்றை மண்ணுக்கே சொந்தமாக்குகிறேன். அதுதான் உண்மையான சமர்ப்பணம்” என நெகிழவைக்கிறார் சுபாஷினி. 

சுபாஷினியின் சித்திரம் தனக்கான மூக்குத்தியைத் தேடிக் கண்டடைந்தது. அதுபோலத்தான் இயற்கையும் சுபாஷினியைத் தேடிக் கண்டடைந்துள்ளது.