Published:Updated:

என் ஊர்!

காளிங்கராயன் பெருமையும்... காளை மாட்டுப் பழமையும்...

என் ஊர்!

காளிங்கராயன் பெருமையும்... காளை மாட்டுப் பழமையும்...

Published:Updated:
##~##

லைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடு ஆராய்ச்சியாளர் செ.ராசு, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு தொல்லியல் துறைத் தலைவராக 18 ஆண்டுகள் பணியாற்றியவர். தற்போது கொங்கு ஆய்வு மையத்தை நிறுவி, பல ஆய்வு நூல்களை வெளியிட்டுவருகிறார். இவர் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், வெள்ளோடு குறித்த நினைவுகளை இங்கே பகிர்கிறார்.

 ''கொங்கு நாடு, 24 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்துச்சு. அதில் ஒரு பிரிவான பூந்துறை நாட்டுல இருந்த 32 ஊர்களில், ஒண்ணு வெள்ளோடு. பூந்துறை நாட்டுக்கு பூந்துறைதான் தலைநகர். வெள்ளோடு அதன் நிர்வாகத் தலைநகர். வெண்மையான மணல் படிந்த ஓடைகள் இருந்ததால், வெண் மணல்

என் ஊர்!

ஓடைங்கிறது ஊரோட பெயர். அதுதான் மருவி வெள்ளோடுனு ஆகிருச்சு. எங்க ஊரில் முன்னோர்களின் நினைவாக நடப்பட்டு இருக்கும் நடுகற்கள்தான், எல்லோருக்கும் முதல் தெய்வம். வடபுற வெள்ளோடு மக்கள் பொன்னர் - சங்கரையும், தென்புற வெள்ளோடு மக்கள் ராஜா சாமியையும் வழி படுவாங்க. வெள்ளோட்டில் சர்வலிங்கேஸ்வரர் கோயில் இருக்கு. சர்வமும் அடங்கிய இந்த லிங்கத்தை வழிபட்டா, வேறு எந்த லிங்கத்தையும் வழிபட வேண்டியது இல்லை. தவிர, ஆதி நாராயணப் பெருமாள் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்னு பழமையான கோயில்களை வைணவர்கள் இன்னிக்கும் பராமரிச்சுட்டு வர்றாங்க.

இங்கே சின்னக் குளம், பெரிய குளம்னு ரெண்டு குளங்கள் இருக்கு. ஆரம்பத்தில் இந்தக் குளங்கள் வறண்டு இருந்தது. 1956-ல் கீழ் பவானி வாய்க்கால் உருவாக்கப்பட்டதுக்குப் பிறகுதான் குளங்கள் நிரம்பி இருக்கு. இந்தப் பகுதியில் விவசாயம் செழிப்பா இருக்கக் காரணமே இந்தக் குளங்களும் கீழ் பவானி வாய்க்காலும்தான். வெள்ளோடுவை கொங்கு நாட்டின் வேடந்தாங்கல்னு சொல்லலாம். தமிழகத்தில் இருக்கிற எட்டு பறவைகள் சரணாலயத்தில் இதுவும் ஒண்ணு. சீஸன் வந்துட்டா ஆயிரக்கணக்கான அரிய வகைப் பறவைகள் இங்கே முகாமிடும்.

காளிங்கராயனின் ஆட்சிக்காலமே இங்கே பொற்காலமா இருந்திருக்கு. தாழ்த்தப்பட்ட மக்கள், ஆதிக்கச் சாதியினர் வசிக்கிற தெருக்கள்ல நடக்கும்போது செருப்பு அணியக் கூடாது; காரை வீடு கட்டக் கூடாது; விசேஷங்கள்ல வாத்தியம் வாசிக்கக் கூடாதுனு பல தடைகள் இருந்துச்சு. காளிங்கராயன் ஆட்சிக்கு வந்ததும், அதை எல்லாம் நீக்கினார். அவர் தன்னோட சொத்துக்களை எல்லாம் வித்துதான் காளிங்கராயன் வாய்க்காலை வெட்டினார். இருந்தும் தன்னோட வாரிசுகள் வாய்க்காலை ஒருபோதும் சொந்தம் கொண்டாடி விடக் கூடாதுங்கிறதுக்காக, குடும்பத்தோட இடம்பெயர்ந்து விட்டார். அப்படி ஓர் அற்புதமான மனுஷனுக்கு, அரசு ஒரு நினைவிடம் கட்டினா நல்லா இருக்கும்.

என் ஊர்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துல ஆராய்ச்சிக்காகத் தோண்டும்போது காளை மாட்டின் தாடைப் பகுதி, கல்லாகக் கிடைச்சுது. இப்படி ஓர் உறுப்பு கல்லாக மாற, 15 லட்சம் ஆண்டுகள் ஆகும். அத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கே காளை மாடுகள் இருந்துள்ளன என்பதில் இருந்தே இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பைத் தெரிஞ்சுக்கலாம்.

நான் வெள்ளோட்டில் ரெண்டாம் வகுப்புல இருந்து நாலாம் வகுப்பு வரை படிச்சேன். ஒரு பையில் மணலையும் இன்னொரு பையில் புளியங்கொட்டையையும் எடுத்துக்கிட்டுப் பள்ளிக்கூடம் போவோம். மணலைக் கொட்டி அதுல 'அ’ன்னா 'ஆ’வன்னா எழுதி, அதுமேல புளியங்கொட்டையை வரிசையா அடுக்குவோம். இது ஒரு நல்ல எழுத்துப் பயிற்சி. வெள்ளோட்டுல ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அங்கே அம்மாவுடன் போய் மணல்ல உட்கார்ந்து 'நல்லதங்காள்’ படம் பார்த்ததை இன்னிக்கும் மறக்க முடியாது. சொந்த ஊரைப் பத்தி எதைத்தான் மறக்க முடியும்? சொல்லுங்க!''

என் ஊர்!

சந்திப்பு, படங்கள்: கி.ச.திலீபன்