Published:Updated:

ரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT!

காரின் உதிரிபாகங்களை மட்டும் உள்நாட்டிலிருந்து பெற்றால் போதாது; காரின் டிசைனும் உள்நாட்டிலேயே செய்ய விரும்புகிறோம்'

ரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT!
ரெனோ - நிஸானின் புத்தாண்டு பரிசாக, இந்தியாவுக்கு வரும் கிக்ஸ் & கேப்ச்சர் AT!

ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ், ஹோண்டா BR-V ஆகிய கார்களுக்குப் போட்டியாக, கிக்ஸ் காரை ஜனவரி 2019-ல் களமிறக்கும் முடிவில் இருக்கிறது நிஸான். இதன் குழும நிறுவனங்களில் ஒன்றான ரெனோவின் டஸ்ட்டர் மற்றும் கேப்ச்சர் தயாரிக்கப்படும் அதே BO பிளாட்ஃபார்மில்தான் இந்த எஸ்யூவி தயாரிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. எனவே, எப்படி சர்வதேசச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் கேப்ச்சருக்கும், இந்தியாவில் தயாரிக்கப்படும் கேப்ச்சருக்கும் வித்தியாசம் இருக்கிறதோ, அதேதான் கிக்ஸ் விஷயத்திலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தவிர, இதுவும் கேப்ச்சர்போல இடவசதியிலும் டிசைனிலும் ஸ்கோர்செய்யும் என நம்பலாம். டஸ்ட்டர் மற்றும் கேப்ச்சரில் இருக்கும் அதே 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் கிக்ஸ் எஸ்யூவியிலும் இடம்பெறும். பின்னாளில் தேவைக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் (பெட்ரோல் - CVT; டீசல் - AMT) வழங்கப்படலாம். வசதிகள் மற்றும் கேபின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும்விதமாக இது லேட்டஸ்ட் அம்சங்களுடன் இருக்கும்.

சமீபத்தில் சென்னை வந்திருந்த நிஸான் நிறுவனத்தின் சர்வதேச டிசைன் பிரிவின் தலைவரான அல்ஃபோன்ஸோ அல்பைஸா (Alfonso Albaisa), தனது குழும நிறுவனங்களின் (டட்ஸன், நிஸான், ரெனோ) புதிய தயாரிப்புகளைப் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ``இந்தியாவில் எஸ்யூவி செக்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் பெரும் எழுச்சியைப் பெற்றிருக்கிறது. முன்பைவிட க்ராஸ் ஓவர்களுக்கும் வரவேற்பு கூடியிருக்கிறது. இதனால் கிக்ஸ் காரை இந்தியாவில் கொண்டுவருவதற்கு இதுதான் சரியான நேரம் எனக் கருதுகிறோம். இரண்டு கார்களின் பெயர் மட்டுமே ஒன்று.

மற்றபடி வெளிநாடுகளில் இருக்கும் கிக்ஸ் மற்றும் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. காரின் சைஸ், கேபின் இடவசதி, சிறப்பம்சங்கள் ஆகியவற்றை, இந்தியச் சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்க உள்ளோம். இது எல்லாமே எங்களின் இந்திய டிசைனர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவால் நிச்சயம் சாத்தியப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் நிஸானின் சந்தை மதிப்பை உயர்த்தக்கூடிய காராக கிக்ஸ் இருக்கும்'' என நம்பிக்கையுடன் பேசினார்.

கடந்த ஆண்டில் வெளிவந்த கேப்ச்சர், ஸ்டைலான கிராஸ் ஓவர் டிசைன் - LED ஹெட்லைட் மற்றும் லெதர் சீட்ஸ் போன்ற மாடர்ன் வசதிகள் - இடவசதிமிக்க கேபின் - சிறப்பான ஓட்டுதல் அனுபவம் மற்றும் பர்ஃபாமன்ஸ் என அசத்தியது. இதனாலேயே மோட்டார் விகடனின் `சிறந்த க்ராஸ் ஓவர் 2018' விருதை இது பெற்றது. இருப்பினும், ரெனோ நிறுவனம் எதிர்பார்த்த விற்பனை எண்ணிக்கையை கேப்ச்சர் பெறவில்லை. 2017-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மாடல்களில் 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகளை, இந்தியா முழுக்க இருக்கும் இந்நிறுவன டீலர்களில் வழங்கப்படுகின்றன.

தற்போது எஸ்யூவி செக்மென்ட்டில் புதிய போட்டியாளர்கள் மற்றும் பேஸ்லிஃப்ட் மாடல்களில் வரவால், இந்தியாவில் தனது விலை உயர்ந்த காரான கேப்ச்சருக்குப் புத்துணர்ச்சி அளிக்க முடிவுசெய்திருக்கிறது ரெனோ. இதன்படி அடுத்த ஆண்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த எஸ்யூவி களமிறங்கும் என நம்பப்படுகிறது. இவை ரெனோ டஸ்ட்டரிலிருத்து பெறப்படும் எனத் தெரிகிறது.

தற்போது இந்தியச் சந்தைக்கு எனப் பிரத்யேகமாக ஒரு டிசைன் ஸ்டுடியோவை, சென்னையில் கட்டமைத்துக்கொண்டிருக்குகிறது நிஸான். இங்கே ஒரு காரின் சேஸி - வெளிப்புறம் & உட்புறம் - கலர் ஆகியவற்றுடன் கான்செப்ட் கார்களையும் டிசைன் செய்யும் எண்ணத்தில் இருக்கிறது. இதைப் பற்றி அல்ஃபோன்ஸோ அல்பைஸாவிடம் கேட்டபோது, ``காரின் உதிரிபாகங்களை மட்டும் உள்நாட்டிலிருந்து பெற்றால் போதாது. காரின் டிசைனும் உள்நாட்டிலேயே செய்ய விரும்புகிறோம். இதனால் உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ற ஒரு காரைத் தயாரிப்பது சுலபம்'' என்றார்.