Published:Updated:

நம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்!

நம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்!

நிவேதிதா லூயிஸ், லெய்னா

சிறிய இடை வெளிக்குப் பிந்தைய பயணங்கள் தரும் ஆனந்தமே தனி. சென்னையின் மிகப்பெரிய முனீசுவரர், பெரிய சிவலிங்கம், பல்லவர் கால குடைவரைக் கோயில்  ஆகியவற்றுக்கு ஒரு பயணம் செல்வோமா என்று `இந்தியன் கொலம்பஸ்' என்ற பெயர்கொண்ட கிருஷ்ணகுமார் கேள்வி எழுப்பியதும் முதல் ஆளாக `நானும் நானும்' என்று துள்ளிக் குதித்து கிளம்பியாகிவிட்டது. அனைவரும் மேட வாக்கத்தில் காலை ஏழு மணிக்குச் சந்திப்பதாக ஏற்பாடு. `ஒரு படை தன் வயிற்றால் நகர்கிறது' என்ற மாவீரன் நெப்போலியனின் கூற்றை அடிக்கடி நினைவு கூர்வது எங்கள் குழுவின் வழக்கம். ஆகவே, காலை சிற்றுண்டி முடித்ததும், முதலில் சென்றது ராஜ கீழ்ப்பாக்கம் ஸ்ரீ காஞ்சி காமகோடி வித்யா மந்திர் பள்ளி.

வரலாற்று ஆர்வலர் களுக்குப் பள்ளியில் என்ன வேலை? இந்தப் பள்ளியில்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றிய பிரத்யேகக் காட்சியகம் உள்ளது. உள்ளே நுழைந் ததும், பாரதி முதல் அப்துல் கலாம் வரை வரிசையாகச் சிலைகள். காஞ்சி கோயிலின் மாதிரி போன்றே ஒரு கோயில் அழகுடன் மிளிர்கிறது. அருங்காட்சியகத்தில் எம்.எஸ்ஸின் படங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. திருமணக்கோலத்தில் எம்.எஸ்., சுப்புலட்சுமிக்கு காந்தி தமிழில் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம், ஹெலன் கெல்லர், எலிசபெத் அரசி, காமராசர், உஸ்தாத் படே குலாம் அலிகான், சரோஜினி நாயுடு, எல்லைக்காந்தி கான் அப்துல் காஃபர் கான், மவுன்ட்பாட்டன் குடும்பம், இந்திரா என்று பிரபலங்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வரிசையாக அணிவகுக்கின்றன.

நம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்!

நடுநாயகமாக எம்.எஸ்ஸின் முழு உருவச் சிலை, கையில் தம்புராவுடன். காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, `காற்றினிலே வரும் கீதம்'. அடுத்த வரவேற்பறையில் ஒரு லட்சம் ருத்ராக்ஷங்களாலான லிங்கம் மனதைக் கவர்கிறது. அடுத்த அறை முழுக்க காஞ்சி சங்கராச்சாரியார் காட்சியகம். அவர் உபயோகித்த உடை, விசிறி, உணவுத் தட்டு, இன்னும் சில பொருள்களுடன், அவரது அரிய புகைப்படங்கள் அழகுற காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

அடுத்துச் சென்றது புகழ்பெற்ற மாடம் பாக்கம் தேனுகாம்பாள் உடனுறை தேனு புரீஸ்வரர் கோயில். இப்போது தொல்பொருள் ஆய்வுக்கழகம் வசம் இருக்கும் இந்தப் பழைமைவாய்ந்த கோயிலை ஒரு வரலாற்று அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். நுழைவாயிலிலேயே எங்களை வெகுநேரம் கட்டிப்போட்டது, சுவரில் செதுக்கப்பட்ட ஒன்பது கட்டங்களைக் கொண்ட விளையாட்டு ஒன்று. தமிழ் எண்கள் - 8-1-6, 3-5-7, 4-9-2 என்ற எண்கள் - மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், இடம்-வலம், வலம்-இடம், குறுக்கு என எப்படிக் கூட்டினாலும், அதன் கூட்டுத்தொகை 15 என்று விளக்கினார் கிருஷ்ணகுமார். பத்தாம் நூற்றாண்டில் சுந்தர சோழனாலும் அவரது பிரதான மந்திரி அனிருத்த பிரம்மராயராலும் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்!

பிற்கால நாயக்க மன்னர்களும் இதில் திருப்பணி மேற்கொண்டிருக்கிறார்கள். கோயிலின் சிறப்பு அம்சம் அதன் முகமண்டபம். மண்டபத்தில் சோழர் கால மற்றும் நாயக்கர் காலச் சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. ஒன்று, நான்கு மற்றும் ஐந்து முகங்களுடன் பிரம்மா, சரபேசுவரர், வீணையுடன் சிவன் மற்றும் விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், கஜசம்காரமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், மஹிஷாசுரமர்த்தினி, கையில் சேவல் ஏந்திய முருகர், வீரபத்திரர், ஜுரகேசுவரர், இந்திரன் அருளிய ஐராவதத்தின் மேல் அமர்ந்த சுப்பிரமணியர், கச்சாபேசர், வாமனமூர்த்தி,  ஸ்ரீலட்சுமி ஹயகிரீவர், அதிகார நந்தி என்று பல வித்தியாசமான சிற்பங்களைக் கண்டோம். இங்குள்ள  ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிமீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். மண்டபத்தைச் சுற்றி கல்வெட்டுகள் எதையும் தெளிவாகப் படிக்க இயலவில்லை. கஜபிருஷ்ட வடிவத்தில் கருவறை அமைந்துள்ளது. அதைச் சுற்றி கல்வெட்டுகள் தெளிவாகக் காணக் கிடைக்கின்றன. ஆறு இன்ச் உயரமும், மூன்றே விரல் விட்டமும்கொண்ட தேனுபுரீசுவரர் இந்தக் கோயிலின் சிறப்பு.

அடுத்துச் சென்றது ஒட்டியம்பாக்கம் ஒட்டீசுவரர் திருக்கோயில். சென்னையின் மிகப்பெரிய சிவலிங்கம் இந்த ஒட்டீசுவரர் என்றார் கிருஷ்ணகுமார். இந்தக் கோயிலின் வெளிச் சுற்றுச்சுவரில் புராதனமான புத்தர் சிலை ஒன்று உள்ளதாக வேலுச்சாமி ஐயா சொல்ல, வேகமாக அதைப் பார்க்க ஓடியது குழு. மழை வெயில் தாங்கி, பாவமாக ஒரு சுவரில் சாய்ந்து நிற்கிறார் புத்தர். சிலையின் காலம் தெரியவில்லை. பவுத்தம் தமிழகத்தில் சிறப்புற்றிருந்த காலத்துச் சிற்பமாக இருக்கலாம். சிற்பத்தைச் சுற்றிய பூ வேலைப்பாடு அத்துணை அழகு.

அடுத்த நிறுத்தம் மதிய உணவா, மாம்பாக்கம் முருகநாதீசுவரரா என்ற பட்டிமன்றத்தில் ஜெயித்தது, முருகநாதீசுவரர். போகும் வழியில் பொன்மார் கிராமத்தில் ஒரு பாழடைந்த பெருமாள் கோயில் இருப்பதாகவும், அதையும் பார்த்துச் செல்லலாம் எனவும் சொல்லப்பட, வண்டிகள் பொன்மார் நோக்கி விரைந்தன. அருகில் உள்ள சக்திபுரீசுவரர் ஆலயத்தின் சம கால கோயில் - நாங்கள் கண்ட சிதிலமடைந்த பெருமாள் கோயில் - சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். அதன் முகப்பில் இருந்த கருட சிற்பத்தைக் கொண்டே பெருமாள் கோயில் என்ற முடிவுக்கு வந்தோம். அர்த்த மண்டபமும் கருவறையும் கல்லால் ஆனவை. புதர் மண்டி, மரங்கள் சுற்றி வளைத்து, பார்க்கப் பரிதாபமாக, எந்நேரமும் இடிந்துவிழலாம் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறது கோயில். கனத்த மனதுடன் மாம்பாக்கம் அடைந்தோம்.

வெண்மையான சுண்ணம் மின்ன பளிச்சிடுகிறது மாம்பாக்கம் முருகநாதீசுவரர் கோயில். பாண்டியர் காலத்துக் கோயில் என்று சொல்லப்படும் இந்தக் கோயிலில் முதன்முதலில் முருகர் சந்நிதியே இருந்திருக்க வேண்டும். பின்னாளில் ஆதீசுவரரும் சேர்ந்துகொள்ள, முருகநாதீசுவரர் கோயில் எனப் பெயர் மாற்றம் அடைந்துவிட்டது. கோயிலின் பின்புறம் அழகிய குளம். ராஜகோபுரமோ, துவஜஸ் தம்பமோ இந்தக் கோயிலில் இல்லை. மூலவர் அறை சுற்றுச்சுவரில், 13 - 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது.  சண்டிகேசுவரர், வள்ளி தேவசேனை சமேத முருகர், விநாயகர், நவகிரக சந்நிதிகள் தனியாக உள்ளன. கோயிலைச் சுற்றி ராட்சத ஃப்ளாட்டுகளின் அணிவரிசை பயமுறுத்துகிறது.

மதிய உணவுக்குப் பின்னர் வயல்வெளிகளின் ஊடே பயணம் தொடர்ந்தது. பதுவஞ்சேரி கோனாட்சியம்மன் ஆலயம் அருகில் அறுவடை செய்யப்பட்ட காய்ந்த வயலில் தனியாக நின்றுகொண்டிருக்கிறார் முனீசுவரர். கையில் அரிவாள், முகத்தில் கோபம், கண்களில் கனலுடன் பயமுறுத்திக்கொண்டிருந்த அவர்முன் தானாகச் சாமி வந்ததாகச் சொல்லி ஆடிக்கொண்டிருந்தார் ஒரு பெண். உருமியும் மேளமும் முழங்க ஆடித் திருவிழா களைகட்டி இருந்தது.

அடுத்து சென்றது கோவிலாஞ்சேரி   ஸ்ரீதில்லிபாலாச்சியம்மன் தானிமரத்து முனீசுவரரைத் தேடி. ஐம்பத்தோரு அடி உயரத்தில் பிரமாண்டமாக அமர்ந்திருக்கிறார், பச்சை வண்ணத்தில் முனீசுவரர். அவர் காலடியில் குதிரைகள் பூட்டிய தேரில் அர்ச்சுனன். வலது கையில் மிகப்பெரிய அரிவாள். இடது கையில் தண்டாயுதம். அருகில் கருப்பண்ணசுவாமி. அதன் பின்னால் கோயில் குளம். ஆடி மாதக் கூழை யாரோ ஆர்வத்துடன் தர, வாங்கிக் கொண்டோம். லேசான சாரலும் சேர்ந்துகொள்ள முனீசுவரரை ரசித்தபடி நின்றோம். பல்லாவரத்தில் குடைவரைக் கோயில் ஒன்று இருப்பதாகப் படித்தது நினைவுக்குவர, அதைப் பார்த்தே தீர்வது என்று அங்கிருந்து கிளம்பினோம்.

நம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்!

1909-ம் ஆண்டு வெளிவந்த கல்வெட்டு ஆண்டு ஆய்வறிக்கையில் கிருஷ்ணசாஸ்திரி பஞ்ச பாண்டவ மலை என்ற பல்லாவர பல்லவர் காலக் குடைவரைக் கோயில் குறித்தும் அதில் உள்ள ஏழாம் நூற்றாண்டு மகேந்திரவர்மன் காலத்துக் கல்வெட்டு குறித்தும் எழுதி இருக்கிறார். `தென்னிந்திய கல்வெட்டுகள்' புத்தகம் பகுதி 12-ல், கல்வெட்டின் பிரதி உள்ளது. ஆனால், அப்போதே இசுலாமியர் தர்கா ஒன்று மலை மீது இருப்பதாகவும், குடைவரைக் கோயில் பராமரிக்கப்படவில்லை என்றும் கிருஷ்ணசாஸ்திரி பதிவு செய்திருக்கிறார். லாங்க்ஹர்ஸ்ட் என்பவரும் பஞ்ச பாண்டவர் என்ற பெயருக்கு இணங்க, அதன் ஐந்து பிரிவு குகை வரைபடம் வெளியிட்டு இருக்கிறார்.

நம் ஊர் நம் கதைகள் - தென்மேற்கு சென்னை - கொலம்பஸுடன் ஒரு பயணம்!

பல்லாவரம் தர்காவைத் தேடியபடி நாங்கள் வழி தவறிச் சென்ற இடம் ஹஸ்ரத் சையத் பத்ருதீன் ஷஹீத் தர்கா. பெயர் எங்கோ பொறி தட்ட, வரலாற்று ஆர்வலர் கோம்பை அன்வர் எழுதிய வீரன் பத்ருதீனின் கல்லறை அதுதான் என்று புரிந்துவிட்டது. 17-ம் நூற்றாண்டில் போர்த்துகீசியருக்கு எதிராக சாந்தோமில் போரிட்ட கோல்கொண்டா படையைச் சேர்ந்த பத்ருதீன் என்ற குதிரைப்படை வீரன், போர்த்துகீசியரை விரட்டிவிட்டு, கோல்கொண்டா கொடியை ஏற்றியபோது, பின்னால் இருந்து தாக்கிய போர்த்துகீசிய வீரன் ஒருவன், பத்ருதீனின் தலையைத் துண்டித்தான். துண்டித்த தலையுடன், குதிரையில் ஏறிய பத்ருதீன், விழுந்து மரித்த இடம் பத்ருதீனின் தர்கா. தொன்மையான கல்லறையைப் பார்வையிட்ட நாங்கள், அங்கிருந்து பல்லாவரம் குடைவரை தர்காவை வந்தடைந்தோம்.

சுற்றிலும் வீடுகளுடன், தர்கா சாலையின் கடைசியில் கம்பீரமாக நிற்கிறது ஆஸ்தான-ஏ-மவுலா அலி தர்கா. குடைவரைக் கோயில் அங்கே இருந்ததற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை. பெண்கள் சிலர் பாடி, தொழுது கொண்டிருந்தார்கள். அற்புதமான ஒரு பயணத்தை முடித்த களைப்புடன் வீடு திரும்பினோம். இன்னும் பயணிப்போம்!