Election bannerElection banner
Published:Updated:

என் ஊர்!

உமறுதேவரும் உமறாம்மாளும்!

##~##

மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், நாவலாசிரியர், பாரதி ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல துறைகளில் தடம் பதித்துவரும் இளசை மணியன், தன் ஊரான எட்டயபுரம் குறித்து மனம் திறக்கிறார்.

 '' 'பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை’ என்பதுபோல, எட்டயபுரத்துக்கு அறிமுகம் தேவை இல்லை. மகா கவிஞன் பாரதியார் பிறந்த ஊர்.  நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த ஊரும் இதுவே. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட எட்டப்ப ஜமீன்தார் பெயரால் 'எட்டயபுரம்’ என்று பெயர் பெற்றது. தலைசிறந்த இஸ்லாமியத் தமிழ்க் கவிஞர் உமறுப்புலவர் மறைந்த இடம் இதுவே. இங்கே இருக்கும் உமறுப்புலவரின் தர்காவில், திருமணமான தம்பதிகள் குழந்தை வேண்டி 'பாத்தியா’ ஓதுவார்கள். நினைத்தபடி ஆண் குழந்தை பிறந்தால் 'உமறுதேவர்’ என்றும், பெண் எனில் 'உமறாம்மாள்’

என் ஊர்!

என்றும் பெயர் சூட்டுவார்கள்.

எட்டயபுரமும் அதனைச் சுற்றி இருந்த பல கிராமங்களும் எட்டயபுரம் ஜமீனை நம்பித்தான் இருந்தன. ஜமீனுக்குச்சொந்த மான நிலங்களில் வேலை செய்தும், அரண் மனையில் வேலை செய்தும் தங்கள் வாழ்க்கையை ஓட்டினர். நடுவர்பட்டியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம். நடுவர் பட்டிக்குச் சென்றாலே இரவும் பகலும் தறி ஓசை கேட்கும்.

நான் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பள்ளிக்கு எதிரே  ஏழை மாணவர்கள் தங்கி கல்வி பயிலவும், உணவு உண்ணவும் சத்திரம் ஒன்றைக் கட்டியிருந்தார் ஜமீன்தார். பல ஊர்களில் இருந் தும் வரும் ஏழை மாணவர்கள், இங்கே தங்கி கல்வி பயின்று சென்றுள்ளனர். பள்ளி நேரம் போக, மீதி நேரத்தில் பரந்த மைதானத்தில் ஃபுட்பால், பேட்மிட்டன் விளையாடுவோம்.  

அப்போது பாரதமாதா டாக்கீஸில் படம் போடுவதற்கு முன்னர் 'வந்தே மாதரம்’ பாடல் போடுவார்கள். அந்தப் பாடலைக் கேட்பதற் காகவே நான் பல முறை டாக்கீஸுக்குச் சென்று இருக்கிறேன். இந்தத் திரை அரங்கில்தான், காங்கிரஸ் கட்சியின் பல மாநாடுகள் நடை பெற்றன.

என் ஊர்!

மாட வீதியில் உள்ளது பாரதியாரின் வீடு. இது பாரதியாரின் தாய்வழி வீடு. மாமன் மகளை மணந்ததால் மாமனார் வீட்டிலேயே குடியேறினார் பாரதியார். சிவன், பெருமாள் கோயில் படித்துறையிலும், தெப்பக்குளப் படிகளிலும் வீட்டு மாடியிலும் அமர்ந்துதான் கவிதைகளை எழுதுவாராம்.

என் ஊர்!

பாரதியாரின் வீட்டில் 20 வருடங்கள் காப்பா ளராகப் பணிபுரிந்தேன். இதைப் பெருமைக்குரிய பணியாகக் கருதி பணியாற்றி, தற்போதுதான் ஓய்வு பெற்றேன். இந்தியாவிலேயே ஒரு கவிஞனுக்குப் பொதுமக்கள் கொடுத்த நன்கொடையால் எழுப்பப்பட்ட நினைவு மண்டபம் எட்டயபுரத் தில்தான் இருக்கிறது. அந்தப் பெருமை பாரதிக்கு மட்டும்தான்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் சிறந்து விளங்கிய ஊர் இது. பல கவிஞர்கள், நடிகர்கள், நாடக ஆசிரியர்கள், இசைவாணர்கள், நாட்டியத் தாரகைகள் பிறந்து வாழ்ந்து பெருமை சேர்த்த ஒரு பண்பாட்டுப் பீடம் எட்டயபுரம். இத்தகைய பெருமைகள் பல பெற்ற இவ்வூரில் நான் பிறக்க என்ன தவம் செய்தேனோ?''

-இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு