##~##

ந்த ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் ஆளுக்கு ஒரு வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் 60 டிகிரி கோணத்தில் விட்டத்தைப் பார்த்தபடி, ஒருவர் சுவரின் ஒரு மூலையைப் பார்த்தபடி, இன்னொருவரோ தரையைப் பார்த்தபடி. ஆனால், அனைவரின் கைகளும் நேர்த்தியாக வேலை செய்துகொண்டு இருக்கின்றன. திண்டுக்கல் தோமையார்புரத்தில் செயல்படும் 'புனித சூசையப்பர் பார்வையற்றோர் நலச் சங்க’த்தின் 'இருளும் ஒளியாகும்’ குழுவைச் சேர்ந்த விழித்திறன் அற்ற மாற்றுத் திறனாளிகள் அவர்கள்!  

 இந்தச் சங்கத்தின் செயலர் மச்சக்காளையும்  ஒரு மாற்றுத் திறனாளிதான். ''14 வயசில் திடீர்னு அம்மை போட்டு பார்வை போயிடுச்சு. நிறையக் கஷ்டப்பட்டேன். காந்திகிராமம் அறக்கட்டளையில் சோப்பு தயாரிக்கும் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தேன். எட்டு வருஷம் வேலை பார்த்து தொழில் நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன்.

இருளும் ஒளியாகும்!

எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளில் பலர் பிச்சை எடுப்பதைத்தான்தொழிலா வெச்சிருக்காங்க. அந்த நிலையை மாத்த ஆசை. ஆனா, தனியா என்னால் எதுவும் செய்ய முடியலை. சேர்ந்து செய்வோம்னு 1989-ல் பார்வையற்றோர் சங்கத்தை ஆரம் பிச்சோம். 20 பேர்ல ஆரம்பிச்சு இப்போ 60 பேர் உறுப்பினர்களா இருக்கோம்.

என் அனுபவத்தைவெச்சு சொந்தமா சோப் தயாரிக்க ஆரம்பிச்சோம். அப்புறம் துணி நெய்தோம்; வயர்  சேர் பின்னினோம்; ஊதுபத்தி தயாரிச்சோம். உறுப்பினர்களுக்கு மாசம்

இருளும் ஒளியாகும்!

500 சம்பளம். இந்தக் காலத்தில் இந்தச் சம்பளம் பத்தாதுதான். இருந்தாலும் அவ்வளவுதான் எங்களால கொடுக்க முடியுது.

இருளும் ஒளியாகும்!

உறுப்பினர்கள் ஒண்ணா சேர்ந்து 'இருளும்  ஒளியாகும்’ங்கிற பெயரில் ஆர்கெஸ்ட்ரா ட்ரூப் வெச்சிருக்காங்க. அப்பப்போ நிகழ்ச்சி பண்ணிட்டு வருவாங்க.

விடுமுறை நாட்களில் ஏதாவது பொருளை மொத்தமா வாங்கி விற்பாங்க. அதில் கொஞ்சம் வருமானம் கிடைக்கும். தினமும் காலையில் 9.45-க்கு உறுப்பினர்கள் வருவாங்க. பிரேயர் முடிஞ்சு 3 மணி வரைக்கும் வேலை பார்ப்பாங்க. அப்புறம் வீட்டுக்குக் கிளம்பிருவாங்க. ஞாயிற்றுக்கிழமை லீவு.

உறுப்பினர்களுக்குள்ளேயே திருமணமும் செய்துவைப்போம். அதில் காதல் கல்யாணமும் உண்டு. எங்களோட முயற்சிக்காக, 1993-ல் அப்போதைய ஜனாதிபதி சங்கர்தயாள் ஷர்மா கையால் தேசிய விருது வாங்கினோம். 1998-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி கையால் மாநில விருதும் வாங்கினோம்.

பார்வையற்றவர்களோட பொருளாதார நிலை உயரணும்கிறதுதான் என் கனவு. அது இப்போ கொஞ்சம் கொஞ்சமா நிறைவேறிக்கிட்டே இருக்கு. கூடிய சீக்கிரம் முழுசா நிறைவேறும்!'' அகக் கண்களில் நம்பிக்கை மின்னச் சிரிக்கிறார்.

- உ.அருண்குமார், படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு