Published:Updated:

சூர்யாவுக்குப் பிடித்த கவிஞன் நான்!

சூர்யாவுக்குப் பிடித்த கவிஞன் நான்!

சூர்யாவுக்குப் பிடித்த கவிஞன் நான்!

சூர்யாவுக்குப் பிடித்த கவிஞன் நான்!

Published:Updated:
##~##

விழித் திரைகளுக்கு அப்பாலும் கனவு காண முடியும் என்பதற்கான நடமாடும் உதாரணம்... ஜெயபால்!

 விழுப்புரம் மாவட்டம், மருவூரைச் சேர்ந்த ஜெயபால், தன் பெற்றோருக்கு ஐந்தாவது மகன். ரெட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டு இருக்கும்போது, பார்வை இழந்தார். பார்வை இழந்தாலும் கல்வியை இழக்காமல் இப்போது தான் படித்த அதே ரெட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

'பேருந்து வசதி இல்லாததால், நடந்துதான் நானும் நண்பர்களும் பள்ளிக்கு வருவோம். அப்படி வரும்போது தெருவில் விளையாடிக்கிட்டே வருவோம். அன்றைக்குத் துடைப்பக் குச்சியால் வில், அம்பு விளையாட்டு விளையாடிக்கிட்டு இருந்தோம். அப்போதுதான் ஒரு அம்புக் குச்சி பறந்து வந்து எனது ஒரு கண்ணில் குத்திடுச்சு. அதை எடுக்கும் போது, அந்தக் குச்சியின் முனை ஒடிந்து என் கண்ணுக்குள்ளயே தங்கிவிட்டது. அப்ப எல்லாம் உடனே  மருத்துவமனைக்குப் போகாமல் தங்களுக்குத் தெரிந்த கை வைத்தியம்தான் செய்வாங்க. அப்படி எனது  ஒரு கண்ணில்  மஞ்சளும் முருங்கைக் கீரையும் வெச்சுக் கட்டினார்கள். அப்புறம் தாய்ப்பால், கோழி ரத்தம், எருக்கம்பால், கள்ளிப்பால்னு பலவற்றை என் கண்ணில் விட்டனர்.

சூர்யாவுக்குப் பிடித்த கவிஞன் நான்!

முறையாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இப்படிச் செய்ததால் பாதிக்கப்படாமல் இருந்த இன்னொரு கண்ணும் பாதித்துவிட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டு கண்மணிகளும் வெளியே வந்துவிட்டன. அதன் பிறகுதான் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு இருந்த டாக்டர் எனது கண்ணை லேசாக அழுத்தினார். அதற்குள் கண்கள் அழுகி உடைந்துபோயிற்று!''  - சொல்லும்போதே குரல் உடைந்து ஈரம் கசிகிறது ஜெயபாலின் வார்த்தைகளில்.

சூர்யாவுக்குப் பிடித்த கவிஞன் நான்!

சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, ''ஆரம்பத்தில் உலகமே இருண்டு போனதைப் போன்ற உணர்வு. பிறகுதான் 'நம்மைப் போல எத்தனையோ பேர் வாழ்க்கையில் ஜெயித்து இருக்கிறார்கள்... நம்மால் ஏன் முடியாது?’னு எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். பார்வை பறிபோன நிலையில் என்னை பூந்தமல்லி பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தனர். அங்கு ப்ளஸ் டூ படித்துக்கொண்டு இருந்தபோது, பள்ளியில் நடக்கும் கவிதைப் போட்டிகளில்  கலந்துகொண்டு முதல் பரிசைத் தட்டிவிடுவேன்.

ஒருமுறை தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, எங்கள் பார்வையற்றோர் பள்ளிக்கு வந்திருந்தார் இயக்குநர் பாலா. அவருடன் நடிகர் சூர்யாவும் யுவன்ஷங்கர் ராஜாவும் வந்திருந்தனர். அப்போது பாலாவை வாழ்த்தி அ முதல் ஃ வரை ஆத்திசூடி வடிவத்தில் கவிதை எழுதிக் கொடுத்தேன். அந்தக் கவிதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. சூர்யா என்னுடைய மற்ற கவிதைகளையும் வாங்கிப் போனார்.

அதன் பிறகு புஷ்பவாசகன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'ஸ்ரீ’ படத்துக்கு 'ஆஹாஹா கார்த்திகைத் திருநாளே, அழகிய அழகிய தீபங்கள் திருநாளே’ என்ற பாடலை எழுதினேன்.  இந்தப் பாடலை பவதாரிணி பாடினார். தொடர்ந்து திரைப்படப் பாடல்கள் எழுதும் எண்ணம் உண்டு!'' என்றவர் தொடர்ந்தார்.

''இன்றைய இளைஞர்கள் ஒரு சிறு தோல்வியைக்கூடத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள். 'பார்வை இழந்துவிட்டோமே’ என்று நான் அன்று உடைந்து நொறுங்கி கலங்கிப்போயிருந்தால் இன்று, எனக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்களுடன் நான் சக ஆசிரியர் ஆகி இருக்க முடியாது!'' என்ற  ஜெயபாலின் முகத்தில் பரவசமும் பெருமிதமும் படர்கின்றன.

- அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்