Published:Updated:

``அப்பா ஜெயில்ல இருந்து வந்ததும், ஒரு போட்டோ எடுத்துக்கணும்!’’ - முகிலன் மகனின் ஆசை

``அப்பா ஜெயில்ல இருந்து வந்ததும், ஒரு போட்டோ எடுத்துக்கணும்!’’ - முகிலன் மகனின் ஆசை
``அப்பா ஜெயில்ல இருந்து வந்ததும், ஒரு போட்டோ எடுத்துக்கணும்!’’ - முகிலன் மகனின் ஆசை

விஜய் மல்லையாவின் தற்போதைய லண்டன் வாழ்க்கை, லலித் மோடி, நீரவ் மோடியின் வெளிநாட்டு வாழ்க்கை, எஸ்.வி. சேகரின் சுதந்திரம் மற்றும் விழாக்கள் பங்கேற்பு உள்ளிட்டவற்றை உணர்ந்தபடியே இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த அந்தச் சம்பவம்... அதன் காட்சிகள் அத்தனையும் அருவருப்பானவை. இனி வரும் வரலாற்றில் அது இந்த அரசின் அரசியல் அசிங்கங்களில் ஒன்றாக இருக்கும். 

நீதிமன்ற விசாரணையை முடித்துவிட்டு, கையில் தன் பைகளோடு வெளியே வந்த திருமுருகன் காந்தியைச் சுற்றி வளைத்து எந்தத் தகவல்களும் கொடுக்காமல் கைது செய்தது போலீஸ். ஐரோப்பாவிலிருந்து பெங்களூரு வந்திறங்கிய உடனேயே, பல நாள் தேடப்படும் ஒரு சர்வதேச தீவிரவாதியைப் பிடிப்பது போல் அவரைக் கைது செய்தது போலீஸ். திருமுருகன் காந்தி வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கவில்லை, அதற்குள் அவரை வேலூர் சிறைக்குக் கொண்டு போய்விட்டார்கள். 

எஸ்.வி.சேகர் வெளியே இருக்கிறார். திருமுருகன் காந்தி சிறையிலிருக்கிறார். 

ஒரு நிமிடம்... அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை ஓட்டத்திலிருந்து ஒரு நிமிடத்தைக் கடன் வாங்கி யோசித்துப் பார்த்தால் இந்த முரண்கள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன; கோபத்தை ஏற்படுத்துகின்றன; வருத்தத்தை ஏற்படுத்துகின்றன; வெறுப்பை ஏற்படுத்துகின்றன. 

விஜய் மல்லையாவின் தற்போதைய லண்டன் வாழ்க்கை, லலித் மோடி, நீரவ் மோடியின் வெளிநாட்டு வாழ்க்கை, எஸ்.வி. சேகரின் சுதந்திரம் மற்றும் விழாக்கள் பங்கேற்பு உள்ளிட்டவற்றை உணர்ந்தபடியே இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். 

முகிலன். தமிழகத்தின் மிக முக்கியச் சூழலியலாளர். தமிழகத்தில் நடக்கும் கொடூரமான மணல் கொள்ளைக்கான முழுமுதற் சாட்சி. கூடங்குளம் போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றியவர். இயற்கைச் சுரண்டல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். 
அவர் கடந்த 18-09-2017 அன்று மிகவும் மோசமான முறையில் கைது செய்யப்பட்டார். அது திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த சமயம். திருமுருகன் காந்தி விடுதலையானார், முகிலன் கைது செய்யப்பட்டார். (முகிலன் எந்தளவுக்கு மோசமான முறையில் கைது செய்யப்பட்டார் என்பதை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.)

அன்று தொடங்கி 11 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார் முகிலன். கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி திடீரென பாளையங்கோட்டை சிறையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பத்தாண்டுகளாகப் பூட்டிக் கிடந்த ஒரு பாழடைந்த கட்டடத்திலிருந்த அறையில் தனிமையில் சிறை வைக்கப்பட்டார். லட்சக்கணக்கான கொசுக்கள் படையெடுத்தன. ரணமான இரவு அது. மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கொசுக்கள் கடித்து தடித்துப் போயிருந்த தன் உடலையும், ரத்தக்களறியாக இருந்த தன் சட்டையையும் நீதிபதியிடம் காட்டினார். வெயில், மழை, பனி என வருடத்தின் அத்தனை காலங்களையும் கடந்து இன்னும் சிறையிலேயே வைக்கப்பட்டிருக்கிறார். இவர் யாரையும் கொலை செய்யவில்லை, கொள்ளையடிக்கவில்லை, கோடிக்கணக்கான பணத்தை வாரி சுருட்டிவிடவில்லை, சிலை திருடவில்லை, மேலதிகாரிகளோடு உடலைப் பகிர்ந்துக்கொண்டுதான் ஊடகங்களில் பெண்கள் முன்னேறுகிறார்கள் என்ற பத்திரிகையாளர்களை கொச்சைப்படுத்தவில்லை. இயற்கைச் சுரண்டல்களுக்கு எதிராக, மக்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். 

கைது செய்யப்பட்டு ஓராண்டாகப் போகும் நிலையில், முகிலனின் மகன் கார்முகிலைத் தொடர்புகொண்டோம். இந்தப் பேட்டியால் அவருக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பது குறித்து கேட்டபோது..." என்ன சார் பண்ணிடுவாங்க, மீறிப்போனா கொலை பண்ணுவாங்க. நாங்க எதுக்கும் பயப்படப் போறதில்ல... நியாயத்துக்காகப் பேசுன ஒரே காரணத்துக்காக எங்கப்பாவ இத்தனை நாள் ஜெயில்ல அடைச்சு வெச்சிருக்காங்க... " என்று தீர்க்கமாகத் தொடங்கினார்.

330 நாள்களை கடந்து அப்பா இன்னும் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்பா இல்லாத இந்த நாள்கள் குறித்து?

``அம்மா ஒரு விஷயம் சொல்லுவாங்க... அப்பா, அம்மாவுடையது காதல் திருமணம். காதலிச்ச காலத்திலேயே அப்பா, அம்மாவை கோவை மத்திய சிறைக்கிட்டக் கூட்டிப் போய் சொன்னாராம்...'எதிர்காலத்துல நீ என்னை இங்க வந்துதான் அதிகம் பார்க்குற மாதிரி இருக்கும். நான் மக்களுக்காகவும், இயற்கைகாகவும் போராடப் போறேன்'ன்னு சொன்னாராம். என்னோட சின்ன வயசுலருந்தே அப்பா எப்பவுமே போராட்டம், கைது சிறைன்னுதான் இருப்பாரு. சின்ன வயசுல எல்லாம் அப்பா மேல ரொம்ப கோபமா இருக்கும். ஆனால், இப்போ ரொம்பப் பெருமையா இருக்கு. அப்பா எப்பவுமே வீட்ல பெருசா இருந்தது இல்லை... இப்பவும் அவரு இல்லைங்கிறது பிரச்னையில்ல... ஆனா, வழக்கமா அவரு எங்கயாவது போராட்டத்துல இருப்பாரு. ஆனா, இப்போ இத்தனை நாள்கள் ஜெயில்ல...அதுவும் ரொம்ப மோசமான முறையில வைக்கப்பட்டிருக்காருங்குறதுதான் கொஞ்சம் வருத்தமா இருக்கு"

தொடர் கைதுகள், கொலை முயற்சிகள் என  அப்பா எப்பவும் ஒருவித அபாயத்திலேயே இருக்கிறாரே? 

``அப்பா எப்பவுமே ஒரு விஷயம் சொல்லுவார்... ' நிறைய அவதிகள் படும்போதுதான் சமூகத்துக்கு நிறைய செய்கிறோம் என்று அர்த்தம்'. அப்பா என்னை ரொம்ப தைரியசாலியாக வளர்த்திருக்கிறார். அப்பாவுக்கு ஏதும் ஆகிவிடும் என்கிற பயம் எனக்குக் கிடையாது. நான் அப்பாவை நினைத்துப் பெருமைப் படக்கூடிய விஷயங்களில் ஒன்று கூடங்குளம் போராட்டத்தில் அவருடைய பங்கு. அதில் மிகப் பெரிய அளவுக்கு அவர் போராடினார். அப்போதே இந்த அரசின் அத்தனை அடக்குமுறைகளையும் நாங்க பார்த்துட்டோம். மூன்று நாள் என் அப்பாவை எங்கயோ கடத்திட்டுப் போயிட்டாங்க. அவ்வளவு அடி, உதை, பலமுறை கொலை முயற்சிகள்ன்னு எல்லாத்தையும் கடந்து வந்துட்டோம். "

அப்பா இல்லாமல் இத்தனை நாள்கள் வருமானத்துக்கு என்ன செய்தீர்கள்?

``அப்பா பொதுப்பணித்துறையில் அரசு வேலையில் இருந்தவர். கறிக் கடை வைத்திருந்தார். இது எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான் போரட்டக் களத்துக்கு வந்தார். இப்போ, அம்மா ஊரிலேயே ஒரு சின்ன பிரின்டிங் பிரஸ் வைத்து நடத்துறாங்க. அந்த வருமானத்துலதான் குடும்பம் நடக்குது."

நீங்க என்ன செய்றீங்க?

``நான் கோவையில ஒரு தனியார் கல்லூரியில எம்.எஸ்.சி சூழலியல் படிக்கிறேன். சின்ன வயசிலிருந்தே இயற்கை மீதும், சூழலியல் மீதும் பெரிய ஈடுபாடு உண்டு."

பேசிமுடித்துவிட்டு போன் வைக்கும் போது கடைசியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று சொன்னார் கார்முகில்...

``எனக்குப் பல சமயங்கள்ல ஏன் நம்ம அப்பா மட்டும் இப்படி இருக்காரு, என்ற கேள்வி எழும். எதுக்கு இவ்வளவு கஷ்டங்கள், போராட்டங்கள்ன்னு சமயத்துல வெறுப்பா இருக்கும். ஒருமுறை இத அப்பாகிட்ட, ``நீ மட்டும் ஏம்ப்பா இப்படி இருக்க?'ன்னு கேட்டேன். அதற்கு அவர் மாவோ சொன்ன ஒரு விஷயத்தைச் சொன்னாரு...

`தனக்கென வாழும் வாழ்க்கை இறகைவிட லேசானது,
ஆனால், மக்களுக்காக வாழ்வது மலையைவிட கடினமானது' 

எங்கப்பா வாழ்றது மக்களுக்காக... இந்த இயற்கைக்காக. எங்க வாழ்க்கை கடினமானதுதான். `பொருளாதாரச் சுரண்டலுக்காக’ இயங்கும் இந்த அரசு இருக்கும்வரை எங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்" என்று விரக்தியோடு முடித்தார். 

இறுதியாக போன் வைக்கும் முன்னர்...``நீங்க உங்கப்பாவோடு இருக்கும் போட்டோ கொஞ்சம் அனுப்பிவிடுங்க" என்று கேட்டேன்.

``அப்பாவோட இருக்க மாதிரியா... (கொஞ்சம் யோசித்தவர்...) இப்பத்தான் தெரியுது...நான் இதுவரைக்கும் எங்கப்பாவோட சேர்ந்து போட்டோ எடுத்ததே இல்லை. அவரு ஜெயில்ல இருந்து ரிலீசாகி வந்தா முதல்ல அவரோட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கணும்..." என்று போனை வைத்தார்.

அடுத்த கட்டுரைக்கு