Published:Updated:

``சமூகத் தணிக்கை... நிர்பயா நிதி.. தமிழகச் சிறார் காப்பகங்கள் நிலை என்ன?”

``சமூகத் தணிக்கை... நிர்பயா நிதி.. தமிழகச் சிறார் காப்பகங்கள் நிலை என்ன?”
``சமூகத் தணிக்கை... நிர்பயா நிதி.. தமிழகச் சிறார் காப்பகங்கள் நிலை என்ன?”

``சமூகத் தணிக்கை... நிர்பயா நிதி.. தமிழகச் சிறார் காப்பகங்கள் நிலை என்ன?”

``இரவுகளில் நாங்கள் உறங்கமாட்டோம். காலைச் சூரியன் எங்கள் முகங்களில் எப்போதும் விழுந்ததில்லை. நாங்கள் மிகவும் தாமதமாகவே கண்விழிப்போம்'' என்கிறாள் அந்தச் சிறுமி. தன்னை விசாரித்த குழந்தைகள் நல அதிகாரியிடம் இதைக் கூறிய அவளுக்கு வயது 11 இருக்கலாம். கைகளைக் குவித்தபடி அப்பாவித்தனமாகப் பற்கள் தெரிய சிரித்தபடியே இப்படிச் சொன்னாள் அந்தச் சிறுமி. ஆம், குழந்தைகளை வேட்டையாடும் ஓநாய்களின் காட்டில் இரவுகளில் தூங்கும் சுதந்திரம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. 

இந்த விசாரணை நிகழ்ந்தது, பீகார் மாநிலம் மூசாஃபர்பூர் நகரில். `டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் ஸ்டடிஸ்’ நடத்திய ஆய்வு ஒன்றில், அங்கிருக்கும் பிரிஜேஷ் தாக்குர் என்பவருடைய சிறார் காப்பகத்தில், பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் நடைபெறுவதாகத் தெரியவந்தது. இதையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காப்பகத்திலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட பிள்ளைகளிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. மொத்தம் 44 பிள்ளைகள் விசாரிக்கப்பட்டனர். அனைவருமே 7 வயது முதல் 17 வயதுடையவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தாய்-தந்தையை இழந்தவர்கள். மீதமுள்ளவர்களோ

கடத்தப்பட்டவர்கள் அல்லது கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள். இந்தியாவின் மிக ஏழ்மையான மாநிலமான பீகாரிலும் அதையடுத்து உத்தரப்பிரதேசத்திலும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 46 விழுக்காட்டினராக உள்ளனர். இந்த இரு மாநிலங்களிலுமே இதுபோன்ற புகார் எழுந்ததுதான் மத்திய அரசு, சிறார் காப்பகங்களில் சமூகத் தணிக்கையைக் கட்டாயமாக்கக் காரணமாக அமைந்தது. ஆனால், பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி உட்பட ஒன்பது மாநிலங்கள் இன்னும் இந்தத் தணிக்கைக்குச் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற தணிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்திவரும் லயோலா கல்லூரி பேராசிரியரும், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக்கான `ஜீவஜோதி’ அமைப்பின் இயக்குநர்களில் ஒருவருமான அண்ட்ரியூ சேசுராஜிடம் பேசினோம்...

``சமூகத் தணிக்கை (Social Audit) என்றால் என்ன. தணிக்கைக்கு என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்?''

``சிறார் காப்பகங்கள் நல்ல முறையில் செயல்படுகின்றனவா. பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகள் அங்கே கிடைக்கின்றனவா... என்பதையெல்லாம் கண்டறியவே டாடா சமூக இயல் கல்வி நிறுவனம் இந்தச் சமூக தணிக்கையை முதலில் நடத்தியது. ஆனால், அங்கே இப்படியான புகார் எழுந்த நிலையில், பாலியல் குற்றங்களைப் புகார் அளிக்காமல் மறைப்பதும் குற்றம் என்று போக்ஸோ சட்டத்தின் பிரிவு(19) சொல்வதால் அவர்கள் அதுகுறித்துப் புகார் அளித்தார்கள். தமிழக அளவில், இந்தச் சமூகத் தணிக்கையை வேறு வகையில் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். அதாவது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களைப் பரிசோதிக்கும் கூடங்கள் இங்கே சென்னையில் இல்லை. அதனால் வழக்குகள் குறித்த பரிசோதனைகள் அத்தனையும் பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் வழக்கு விசாரணையும் காலதாமதமாகிறது. ஆனால், போக்ஸோ சட்டத்தின்படி 2 மாதங்களுக்குள் விசாரணையையும் 4 மாதங்களுக்குள் வழக்கையும் நடத்தி முடித்திருக்க வேண்டும். எனவே, போக்ஸோ சட்டம் சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றும் அளவுக்கு நம்மிடம் வசதிகளும் வழிமுறைகளும் இருக்கின்றனவா என்கிற தணிக்கையை இங்கே நாங்கள் நடத்திவருகிறோம்.''

``தணிக்கையை மேற்கொண்டு வரும் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் மொத்தம் 9,462 சிறார் காப்பகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் எத்தனை காப்பகங்கள் உள்ளன?''

``பதிவு செய்யப்பட்ட காப்பகங்கள் மட்டும் 1,300 இருக்கின்றன.''

``தேசிய அளவில் நடத்தப்பட்டுவரும் தணிக்கையில் நிர்பயா நிதி உபயோகம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் நிலை என்ன?''

``நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்ட சூழலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டது நிர்பயா நிதி ஆனால் அது எதையும் தமிழக அரசு உபயோகித்ததாகத் தெரியவில்லை.''

``நிர்பயா நிதி’ தமிழகத்துக்குத் தேவையா?''

``நிச்சயம். சமூக மேம்பாட்டுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும்போது அதை அவசியம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். உதாரணத்துக்குப் பாலியல் வன்புணர்வு தொடர்பாக விசாரிக்கப்படும் குழந்தைகளைத் தனியே வீடியோ கான்ஃபிரன்ஸிங் அறையில் விசாரணை செய்யவேண்டும் என்கிற சட்ட நடைமுறை இருக்கிறது. ஆனால், இங்கே தமிழகத்தில் அப்படியான நடைமுறைகள் இல்லை. அதனை நடைமுறைப்படுத்த இந்தப் பணத்தை உபயோகிக்கலாம். பாலியல் வன்புணர்வுக்கு ஆளான குழந்தைகள், பெண்கள் ஒரே இடத்தில் தங்களுக்குத் தேவையான மருத்துவ `கிட்’களை பெற்றுக்கொள்ளும் வகையில், ஹைதராபாத்தில் ஒரு முன்மாதிரி மருத்துவநிலையம் செயல்படுத்தப்பட்டது. அதைப்போல இங்கே தமிழகத்திலும் கொண்டுவருவதற்கான ஆயத்தங்களை நிர்பயா நிதியின் வழியாக மேற்கொள்ளலாம்.'' 

``இரண்டு மாதங்களுக்குள் தணிக்கையை முடிக்கச் சொல்லி குழந்தைகள் உரிமைப் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் சொல்லியிருக்கிறதே... அது சாத்தியமா?'' 

``இரண்டு மாதங்களுக்குள் முடிக்கச் சொல்லி கால வரையறையை நிர்ணயிப்பது இதுபோன்ற குற்றங்களை மூடிமறைக்கவே வழிவகை செய்யும். இதுபோன்ற தணிக்கைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தப்படாமல் காலப்போக்கில் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், இந்தத் தணிக்கை நடைபெறும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வேறு எங்கேனும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பியிருந்தால்கூட நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. காலக்கெடுவுக்குள்ளான தணிக்கைகளில் இதுபோன்றச் சிக்கல்கள் அடங்கியிருக்கின்றன.''

``இதுபோன்ற தணிக்கைகளே தவறு என்கிறீர்களா?''

``இல்லை தணிக்கைகள் தவறு இல்லை. ஆனால், அது செயல்படுத்தப்படும் விதம் தவறு. மாவட்ட அளவிலான அரசின் குழந்தைப் பாதுகாப்பு மையங்களைச் சேர்ந்த நபர்களே தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் மற்றும் சமூக நலனில் அக்கறையுள்ள தனிக் குழுக்களும் இதில் சேர்க்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற தணிக்கைகளுக்கு உதவியாகப் பயிற்சி பெறாத சில கார்ப்பரேட் குழுக்கள் இணைந்திருப்பதாகத் தெரிகிறது. அவர்களால் எந்த அளவுக்குத் தணிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்பது கேள்விக்குறி. இதுபோன்ற தணிக்கைகளை ஒவ்வொரு கிராம நிர்வாகங்களிடமும் ஒப்படைத்து `அவர்களின் குழந்தைக்கு அவர்கள்தான் பாதுகாப்பு' என்கிற அடிப்படையுடன் தணிக்கையை நிகழ்த்த வேண்டும். ஒவ்வொரு கிராமப்புறங்களிலும் இதுபோன்ற சமூகத் தணிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மையங்களிலிருந்து இவைச் செயல்படுத்தப்படுவது மட்டுமே இதற்கான வெற்றியாக இருக்க முடியும்!''

``இதுவரை நடத்தப்பட்ட தணிக்கைகளில் பிரச்னைகள் எதுவும் அறியப்பட்டிருக்கின்றனவா?''

``தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இல்லை.''

``இரண்டு மாதங்களுக்குள் தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், அதன்மீது மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''

``2007- ல் தமிழகத்தின் மகாபலிபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் நிகழ்ந்த பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்துதான் சிறார் காப்பகங்கள் பதிவு செய்யப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆண்கள் காப்பகங்களுக்குள்ளே இரவுகளில் தங்கக் கூடாது என்பது போன்ற சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. ஆனாலும் அது போதுமானதாக இல்லை. தற்போது இரண்டு மாதங்களுக்குள் மத்திய அரசு அறிக்கையைக் கேட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் மேனகா காந்தி மூன்று மாதங்களுக்கு முன்பு ‘இதுபோன்ற பாலியல் குற்ற விசாரணைக்கான சிறப்பு ஆய்வுக்கூடம் சென்னையில் நிறுவப்படும்’ என்று உறுதியளித்தார். அதுகுறித்தே எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆக, இந்த அறிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்தே கவனிக்க வேண்டும்.''

அடுத்த கட்டுரைக்கு