Published:Updated:

என் ஊர்!

வயல் பாட்டும்... வகுப்பறைப் பாட்டும்!

என் ஊர்!

வயல் பாட்டும்... வகுப்பறைப் பாட்டும்!

Published:Updated:
##~##

குத்தறிவு இயக்கத்துக்கு வருபவர்களுக்குப் பாலபாடம் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் எழுதிய புத்தகங்கள்தான். 'அர்த்தமற்ற இந்துமதம்’, 'தமிழா நீ ஓர் இந்துவா?’ போன்ற இவருடைய புத்தகங்கள் நாத்திகம், சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தன் ஊரான மஞ்சக்கொல்லை குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார் மஞ்சை வசந்தன்.

 ''சுற்றமும் நட்பும் சிறப்பாக இருந்தாலே ஒரு மனிதன் சிறப்பாக வாழ்வான் என்பதைப்போல, சிறப்பான இடங்களால் சூழப்பட்டதாலேயே பெருமை பெற்றது என் ஊர். எழுத்தாளர் கல்கியால் 'பொன்னியின் செல்வன்’ நாவலில் குறிப்பிடப்படும் வீரநாராயண ஏரி, 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

என் ஊர்!

வாடினேன்’ என்று மனம் நெகிழ்ந்த மாண்புமிக்க வள்ளலார் பிறந்த மருதூர், தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான வெள்ளாறு ஆகியவற்றால் சூழப்பட்டது மஞ்சக்கொல்லை.

மஞ்சள் விளைந்த பூமி என்பதால்தான் எங்கள் ஊர் மஞ்சக் கொல்லை ஆனது. அதேபோல் நெல்லி மரங்கள் அதிகம் விளைந்த நெல்லிக்கொல்லை, வாழைகள் அதிகமாக விளைந்த வாழைக்கொல்லை என எங்கள் பகுதியில் அனைத்து ஊர்களின் பெயருமே இயற்கை சார்ந்தவையே!  

நான்கு வீதிகள் அடங்கிய மஞ்சக் கொல்லையில், தெற்கு வீதியின் மையப் பகுதியில்தான் என் வீடு. எனது வீட்டில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தாலே நான் படித்த பள்ளி வந்துவிடும். ஆனால், நானும் எனது நண்பர்களும் நேராகப் பள்ளிக்குச் செல்வதும் இல்லை; வருவதும் இல்லை. காரணம், எங்கள் ஊரைச் சுற்றி அமைந்து உள்ள நீர் நிலைகள். பகல் பொழுதில் பள்ளிக்குச் செல்லும் நேரத்தைத் தவிர குளம், வாய்க்கால், கிணறு, தோப்புகளில்தான் விளையாடிக் கொண்டு இருப்போம். இயற்கை மருத்துவம் என்று தெரியாமலேயே நாங்கள் விளையாடிய விளையாட்டுதான் மண்குளியல். வாய்க்காலில் இருக்கும் களிமண்ணைத் தலையில் பூசிக்கொண்டு இரண்டு மணி நேரம் வரை வெயிலில் விளையாடிவிட்டு, பிறகு கிணற்றில் குளிப்போம்.  

என் ஊர்!

பசுமையான வயல்வரப்பின் ஓரம் கீற்றுக் கொட்டகையால் அமைந்தது எங்கள் பள்ளி. இப்போது இருப்பதுபோல பள்ளியில் அப்போது பெஞ்ச் கிடையாது. 10-ம் வகுப்பு வரை மண் தரையில்தான் அமர்ந்து படித்தோம். ப்ளஸ் ஒன்னில்தான் எங்களுக்கு அமர அன்பளிப்பாக பெஞ்ச் வழங்கப்பட்டது. வகுப்பறையில் இருக்கும்போது, வயலில் வேலை செய்து கொண்டே பாடும் பெண்களின் பாடல்கள் காற்றில் மிதந்துவரும். அதேபோல் தமிழ் ஆசிரியர் பத்மநாபன் ஐயா, இசையோடுதான் பாடங்களை நடத்துவார். வயல்பாட்டும் வகுப்பறைப் பாட்டும் ஒன்றோடு ஒன்று போட்டி போடும்.

இப்போது நாங்கள் படித்த உயர்நிலைப் பள்ளி மழலையர் பள்ளியாகச் சுருங்கிவிட்டது.  ஊருக்கு மத்தியில் பெரிய கரைகளுடன் அமைந்து உள்ள குளத்தில், நாங்கள் எகிறிக் குதித்து நீந்தி விளையாடுவோம். இப்போது அந்தக் கரைகளெல்லாம் வீடுகளாக மாறிவிட்டதால், குளம் சிறுத்துவிட்டது. வருடத்துக்கு ஒருமுறை வெள்ளாற்றங்கரையில் நடக்கும் திருவிழா, மிகவும் பிரசித்தம். அந்தத் திருவிழாவுக்குப் போய் ராட்டினத்தில் சுற்றுவதற்கும் குச்சி ஐஸ்  சாப்பிடுவதற்கும் எப்போதும் வீட்டில் பணம் வாங்குவது இல்லை. வேப்ப மரத்தில் இருந்து உதிரும் பழங்களின் கொட்டைகளைச் சேமித்து வெயிலில் காயவைத்து வியாபாரியிடம் விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு திருவிழாவுக்கும் சினிமாவுக்கும் செல்வோம்.

என் ஊர்!

மதியம் உச்சி வெயிலில் நடந்து சென்றால் கூட, வெயில் நம் மீது விழாது. அந்த அளவுக்கு அடர்த்தியான மரங்கள் சாலையின் இருபுறமும் இருக்கும். இப்போதோ சாலைகளை அகலப்படுத்தியிருக்கிறோம். ஆனால், மரங்களைத் தொலைத்துவிட்டோம்!''

-ஜெ.முருகன்