Published:Updated:

இது மாற்று கலைவிழா!

இது மாற்று கலைவிழா!

இது மாற்று கலைவிழா!

இது மாற்று கலைவிழா!

Published:Updated:
##~##

'கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது’, 'கரகோஷம் விண்ணைப் பிளந்தது’ என்று கலைவிழாக்கள் பற்றி எழுதுவது இயல்புதான். ஆனால், இப்படி எல்லாம் சிலாகிக்காவிட்டாலும் அந்த விழா சிறப்பானதுதான்!

 புதுவையில் பல்வேறு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற கலைவிழா அது. புதுச்சேரி நடன சங்கம் சார்பாக, கம்பன் கலைஅரங்கத்தில் கொண்டாடப்பட்டது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவால்களைச் சந்திக்கும் இவர்கள், 'நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல’ என்று தங்கள் தனித்திறமைகளால் மற்றவர்களுக்கு மௌனச் சவால் விட்டனர்.

முதல் நடனம் பூங்குழலியின் 'மார்கழித் திங்கள் அல்லவா...’.  அமைதியில் ஆழ்ந்த அரங்கம், கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சர்யத்தில் மூழ்கியது. ஒரு தேர்ந்த நடனக் கலைஞரைப் போல பாடலுக்கு உரிய முகபாவனைகளோடும் சரியான முத்திரைகளோடும் ஆடிய பூங்குழலி, பாடலின் இறுதியில் கையில் புல்லாங்குழலுடன் கண்ணனைப் போல நிற்க, குழலோசைக்கு மயங்கிய கோபியர்களைப் போல கூட்டம் தங்களை மறந்து கைதட்டல்களைக் குவித்தது!

இது மாற்று கலைவிழா!

அதைத் தொடர்ந்து மேடையேறிய ராணி 'அனல் மேலே பனித் துளி’ பாடல் பாட... ஈர இசை எல்லோரையும் நனைத்தது. தாளம், ஸ்ருதி, லயம் என அனைத்தும் கச்சிதமாக இருந்ததில் பலருக்கு வியப்பு. ரெயின்போ சிறப்புப் பள்ளி மாணவர்கள், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை நடனமான கரகாட்டம் ஆடினர். மாற்றுத் திறனாளி ஒருவர்  தலையில் கரகம் ஏந்தி ஆட, மற்றவர்கள் மாடு போல

இது மாற்று கலைவிழா!

வேடமிட்டு புஷ்பவனம் குப்புசாமியின் பாடலான 'தஞ்சாவூரு உருமி மேளம்’ பாடலுக்கு ஆடியது உற்சாக உருமி! சூரிய நமஸ்காரத்தில் துவங்கி பல வகையான யோகாசனங்களைச் செய்து அசத்தினார்கள் அதே பள்ளி மாணவர்கள்.  தொடர்ந்து  'ஆறுமுகனம்’ என்னும் வாத்தியக் கருவியை வாசித்தார்கள் அப்பள்ளி மாணவர்கள். வில் போல வளைந்த கட்டையில், ஆறு தபேலாக்கள் பொருத்தப்பட்டு இருக்க, ஒவ்வொன்றை இசைக்கும்போதும் வெவ்வேறு ஓசை எழுப்புவதுதான் ஆறுமுகனம். அதில் கல்வியின் அவசியத்தைப் பற்றி வில்லுப்பாட்டு பாடி அனைவரையும் கவர்ந்தனர்.

இறுதியாக மேடை ஏறிய பேபி சாரா பள்ளி மாற்றுத் திறனாளிகள் 'எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்’ பாடல் பாட, சூழல் புரிந்த நெகிழ்ச்சி பரவியது. மெள்ள அந்த நிசப்தத்தைக் குலைத்த 'ரோட்டுக் கடை ஓரத்திலே’ கிராமியப் பாடல், இறுதியில் 'வந்தே மாதரம்’ பாடல் என வெவ்வேறு உணர்வலைகள் உருவாகியது.  

''கடவுளோட கவனக் குறைவுதான் இந்தக் குழந்தைகள். தன் தப்பைத் திருத்திக்க, இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க சில நல்ல மனிதர்களையும் அனுப்பி இருக்கிறார் அதே கடவுள். அவர்கள் நடத்தும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் இந்த மாணவர்கள் முகத்தில் என்ன ஒரு மகிழ்ச்சி பாருங்கள். அடுத்த ஆண்டு இதைவிடப் பெரிசா... இதைவிட சிறப்பா விழா நடத்துவோம்!'' என்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பாலசுப்பிரமணி.

நல்லவர்கள் அதற்கு உங்களுக்கு உதவுவார்கள்!  

- ஜெ.முருகன், நா.இள.அறவாழி