Published:Updated:

உணர்வுகளின் ஊர்வலம்!

விக்கிரவாண்டி சங்கமம்

உணர்வுகளின் ஊர்வலம்!

விக்கிரவாண்டி சங்கமம்

Published:Updated:
##~##

''வானோர்களும்
வந்து பணிந்திட
வல்லவர் என்றுமே
என்னைப் புகழ்ந்திட...
கதிரவன்
என்னைக் கண்டு வணங்கிட...
என்னையே
இரணியன் என்பாரேஏஏஏ!''

 - மேளங்கள் அதிர பெருங்குரலெடுத்துப் பாடும்போது, பேருந்தில் செல்பவர்களும் திரும்பிப் பார்க்கின்றனர். சுருக்கமாகச் சொல்வதென்றால்... அது 'உணர்வுகளின் ஊர்வலம்’!

'தமிழ் நாடகத் தந்தை’ தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, விக்கிரவாண்டியில் கூத்துக் கலைஞர்கள் இணைந்து நடத்திய ஊர்வலம் அது. 'சென்னை சங்கமம்’ இந்த ஆண்டு நடக்குமா என்பது சென்னைவாசிகளுக்குத் தெரியாது. ஆனால், விழாக்கோலம் பூண்டு நடந்து முடிந்தது 'விக்கிரவாண்டி சங்கமம்’!

உணர்வுகளின் ஊர்வலம்!

தாரைத் தப்பட்டைகள், நையாண்டி மேளம், உடுக்கை  ஒலிகளுக்கு நடுவே 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனமாடிக்கொண்டு அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாகக் கிளம்பினர். அனுமாரும் சிவபெருமானும் ஒன்றாகக் கைகோத்து நடனமாடிக் கொண்டே ஆசீர்வதித்தது வித்தியாசமான காட்சி என்றால், மறுபுறம் ராமரும் ராவணனும் சிரித்துப் பேசி சிநேகிதம் காட்டினர். கட்டியங்காரனின் சேட்டைகளுக்குப் பார்வையாளர்களிடையே அமோக ஆதரவு.  காவல் நிலையம் - அங்காளம்மன் கோயில் வழியாகச் சென்ற ஊர்வலம் ஹரிச்சந்திரா திருமண நிலையத்தில் முடிந்தது. அங்குதான் கூத்துக் கலைஞர்களின் வருடாந்திர கூட்டம் நடக்கும்.

மாவட்ட மேடை இசை நாடகக் கலைஞர் சங்கத்தின் உதவித் தலைவர் தண்டபாணியிடம் பேசினோம். ''எங்களை மாதிரி நாடகக் கலைஞர்களுக்கு எல்லாம் சங்கரதாஸ் ஐயாதான் அப்பா மாதிரி. அவர் இல்லைன்னா எங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைச்சிருக்காது. அதனாலதான் அவரோட நினைவு நாள் அன்னிக்கு எவ்வளவு முக்கியமான வேலைகள் இருந்தாலும் அதை எல்லாம் தள்ளிவெச்சுட்டு அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த வந்துடுறோம். எல்லாக் கலைஞர்களும் ஒண்ணா சந்திச்சு மனசுவிட்டுப் பேசறதுக்கும் இதுதான் சந்தர்ப்பம். முன்னாடி எல்லாம் பாண்டிச்சேரிக்குப் போய்தான் அப்பா சமாதிக்கு அஞ்சலி செய்வோம். எல்லாரும் அங்கே ஒரே நேரத்தில் கூடினால் நெரிசல் அதிகமாகுது. சுவாமிகளோட குருநாதர் தண்டபாணி சுவாமிகள் பிறந்தது விழுப்புரம் மாவட்டம்  திருவாமாத்தூர். அதனால விழாவை இங்கே நடத்துகிறோம்!'' என்றார்.

உணர்வுகளின் ஊர்வலம்!

''ஒவ்வொரு நடிகரின் ஒப்பனைச் செலவைவிட குறைந்த வருமானம்தான் எங்களுக்குக் கிடைக்குது. பெண் வேஷம் போடுறவர் கவரிங் நகை வாங்கறதுக்கே நாலாயிரம், ஐயாயிரம் செலவழிக்கணும். ஒரு ராத்திரி கூத்துல நாலு புடவை மாத்தணும். வருமானமே இல்லாம என்னதான் பண்ண முடியும்? மக்கள் நாடகம்னா டி.வி. பெட்டியில நடக்கிறதைத்தான் நினைக்கிறாங்க. ஆனாலும் ராமனா, அனுமனா, ராவணனா, இரணியனா மாறும்போது கிடைக்கிற சந்தோஷம்தான் எங்களுக்கு உசிரைத் துளிர்க்க வைக்கிற பெருமை!'' என்கிறார் பெருமையோடு மாவட்ட சங்கத் தலைவர் பழனி.

- ஜெ.முருகன், அ.அச்சனந்தி
படங்கள்: எஸ்.தேவராஜன்