Published:Updated:

``கருணாநிதி கற்றுத்தந்த உழைப்பு... அது கொடுத்த ஆயுள்!" - 93 வயது லட்சுமிகாந்தன் பாரதி

எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் பதற்றப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் - 93 வயது இளைஞரான லட்சுமி காந்தன் பாரதி

``கருணாநிதி கற்றுத்தந்த உழைப்பு... அது கொடுத்த ஆயுள்!" - 93 வயது லட்சுமிகாந்தன் பாரதி
``கருணாநிதி கற்றுத்தந்த உழைப்பு... அது கொடுத்த ஆயுள்!" - 93 வயது லட்சுமிகாந்தன் பாரதி

`` ந்து மாதங்களுக்கு முன்னால அவரைப் பார்க்க அவர் வீட்டுக்குப்போனேன். ஒருமுறையாவது கரகரத்த கணீர் குரல்ல `பாரதி'னு கூப்பிட மாட்டாரான்னு அவருக்குப் பக்கத்திலேயே ரொம்ப நேரம் அமைதியா உட்கார்ந்திருந்தேன். கடைசிவரை அவர் என்னைக் கூப்பிடவே இல்ல. அவரால எதுவும் பேச முடியலே. உழைப்புக்கும் பேச்சுக்கும் எடுத்துக்காட்டான அவர் அப்படி இருக்கிறத பார்த்துட்டு மனசு கலங்கிப் போயிதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.`` 

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியை, கடைசியாகச் சந்தித்த தருணங்களைக் கவலையோடு பகிர்ந்துகொள்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று, பின்னர் சுதந்திர இந்தியாவின் நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியவர். வயது 93. இந்தி எதிர்ப்புப் போராளி, தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியின் பேரன். இந்திய சுதந்திரப் போராட்டங்களில் பங்குபெற்று பலமுறை சிறைசென்ற வழக்கறிஞர் கிருஷ்ணசாமி பாரதி - லட்சுமி பாரதி தம்பதியரின் புதல்வர். சிறு வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பலமுறை சிறை சென்றவர். மாவட்ட ஆட்சித்தலைவர். கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரின் தனிச் செயலாளர். மாநிலத் திட்டக்குழு உறுப்பினர். சித்த மருத்துவ ஆணையர்... இப்படி எண்ணற்ற அரசுப் பொறுப்புகளை வகித்தவர். இந்த 93 வயதிலும் தளராமல் சமூகப் பணிகளை ஆற்றிவருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் தன்னந்தனியாகச் சுற்றி வருகிறார். திருநெல்வேலியில் ஒரு பொதுக்கூட்டத்துக்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

`` என்னுடய சொந்த ஊர் தென்காசிக்குப் பக்கத்தில் உள்ள நயினாரகரம் .என் குடும்பத்தில் என் தாய், தந்தை, பெரியம்மா, சகோதரி, நான் என எல்லோரும் சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள். காந்தியடிகளைத் தூத்துக்குடிக்கு அழைத்து வந்தவர் எங்கள் தாத்தா நாவலர் சோமசுந்தர பாரதிதான். நான் கல்லூரியில் படிக்கும்போது, 'போராட்டங்களில் ஈடுபடுகிறேன்' எனச் சொல்லி கல்லூரியைவிட்டு நீக்கிவிட்டார்கள். என்னுடைய தாய், தந்தை இருவரும் சட்டமன்ற உறுப்பினர்கள். அவர்கள் அப்போதைய முதல்வர் ராஜாஜிக்கு கடிதம் எழுதியதால் மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார்கள். 

 1942-ல் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆரப்பாளையம் சிறைச்சாலையிலிருந்து மதுரை கலெக்டர் அலுவலகம் வரை என் கையில் விலங்கிட்டு சாலையில் அழைத்து வந்தார்கள். சரியாக 25 வருடம் கழித்து அதே கலெக்டர் அலுவலகத்துக்குக் கலெக்டராகப் போய் அமர்ந்தேன். மதுரை, கோவை, செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கலெக்டராகப் பணியாற்றியிருக்கிறேன். ஓய்வு பெறும்போது தமிழ்நாட்டின் சுகாதாரச் செயலாளராக இருந்தேன்.

`` கருணாநிதியிடம் வேலைபார்த்த அனுபவம் பற்றி?``

``அவரைப் போல் ஞாபகத்திறன் கொண்ட ஒருவரை நான் இன்றுவரை பார்த்ததில்லை. மிகச் சிறந்த உழைப்பாளி, நிர்வாகி அவர். நிதிநிலை அறிக்கைகளை எல்லாம் தானே உட்கார்ந்து எழுதுவார். எப்போதும் மக்களுக்கான திட்டங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பார். அவருக்குத் தனிச் செயலாளராக இருப்பது மிகவும் கஷ்டமான விஷயம். தினமும் காலையில் 5 மணிக்கெல்லாம் போனில் கூப்பிட்டு செய்தித்தாள்களில் வந்திருக்கும் புகார்கள் குறித்து விசாரிப்பார். நமது வீட்டுக்கு அப்போது செய்தித்தாளே வந்திருக்காது. ``ஐயா இனிமேல் காலையில் எழுந்ததும் தயவு செய்து எதிர்க்கட்சி பத்திரிகைகளை படிக்காதீங்க, ரொம்பக் கோபப்படுறீங்கன்னு' ஒருமுறை விளையாட்டாகச் சொன்னேன்` சரிய்யா, சரிய்யா'ன்னு சிரிச்சுக்கிட்டே தலையாட்டினார்.

 தன்மீதான விமர்சனங்கள் குறித்து சிறிதும் கலங்காதவர். அவர்தான் உழைக்கக் கற்றுத்தந்தார். குடிசை மாற்று வாரியம் குறித்து ஒருமுறை பேசும்போது, 'நாம் கட்டிக் கொடுக்கும் வீட்டுச் சுவர்களிலேயே கருணாநிதி ஒழிக என்று எழுதுவார்கள், நாம் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நம் கடமையைச் செய்ய வேண்டும்` என்று சொன்னார். நான் ஓய்வு பெற்ற பிறகும்கூட அவரால் பல முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டேன். ஐந்து மாதங்களுக்கு முன்புகூட வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்து வந்தேன். உழைப்பும் தீராத செயல்பாடும்தான் அவர் அடையாளம். அவரின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பு.``

``உங்கள் ஆரோக்கிய ரகசியம் பற்றிச் சொல்லுங்கள் ?``

``தினமும் காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். அரை மணிநேரம் வாக்கிங் போவேன். சிறிது நேரம் தியானம் செய்வேன். காலையில் இரண்டு இட்லி. பண்ணிரண்டு மணிக்கு ஒரு காபி. மதியம் சிறிதளவு சாதம், காய்கறிகள், இரவில் இரண்டு சப்பாத்தி, ஒரு காபி. மாலையில் நேரம் இருந்தால் மீண்டும் வாக்கிங். அவ்வளவுதான் உடல் ஆரோக்கியத்துக்காக எனத் தனியாக எந்தப் பயிற்சியும் செய்வதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்களுடன் அரசியல் குறித்து உரையாடுவேன். கூட்டங்களில் கலந்துகொள்வேன். மது, புகை, பழக்கம் எனக்கு இல்லை. சிறுவதில் இருந்தே அசைவ உணவுகளைச் சாப்பிடுவதில்லை. சுகர், பிரஷர் போன்ற எந்த உடல்நலப் பாதிப்பும் எனக்கு இல்லை. மருத்துவர்களிடம் செக்- அப்புக்கும் செல்வதில்லை. எப்போதும் உழைத்துக்கொண்டு மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாலே நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழமுடியும்`` 

``குடும்பம்?``

``எனக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். முதல் இரண்டு மகன்களும் மருத்துவர்கள். மூன்றாவது மகன் ராணுவத்தில் கர்னலாக இருந்து தற்போதுதான் ஓய்வு பெற்று இங்கே வந்திருக்கிறார். மகள்கள் இருவரும் என்னுடன்தான் இருக்கிறார்கள். எனக்கு மொத்தம் ஒன்பது பேரப்பிள்ளைகள். என் மனைவியின் பெயர் ஞானலெட்சுமி. அவருக்கு வயது 85.  

``தற்கால இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?``

``எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் பதற்றப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும். நன்றாக உழைத்தால் நீண்ட நாள்கள் உயிர்வாழலாம் என்பதற்கு நான் மட்டுமல்ல, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும்கூட சாட்சியாக இருக்கிறோம். தன் குடும்ப நலனை மட்டும் முன்னிறுத்தி வாழாமல் சமூகத்தின் மீதும் அக்கறையோடு இருக்க வேண்டும். இவற்றைச் செய்தாலே போதும்.``  

நிறைய ஐஸ் போடப்பட்ட சர்பத்தை உறிஞ்சிக்கொண்டே, நமது கேள்விகள் அனைத்துக்கும்  கூலாகப் பதிலளிக்கிறார் 93 வயது இளைஞரான லட்சுமி காந்தன் பாரதி.