Published:Updated:

பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்

பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்

மிழ்நாட்டில் பரவலாக ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. ‘தமிழ்நாட்டில் ஆண்களுக்கு டாஸ்மாக்; பெண்களுக்கு தொலைக்காட்சி சீரியல்’ என்பதுதான் அது. எத்தனையோ மிகைப்படுத்தப்பட்ட கற்பிதங்களில் இதுவும் ஒன்று. குடிக்கின்ற பெண்களும் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சீரியல் பார்க்கின்ற ஆண்களும் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் அரசியல் விவாதங்களைக் கவனித்துக் கேட்டு, எதிர்வினையாற்றும் ஏராளமான இல்லத்தரசிகளைச் சந்தித்திருக்கிறேன்.  பெண்களின் உலகம் மாறிக்கொண்டி ருக்கிறது. அவர்களின் பொழுதுபோக்குகளும் ஈடுபாடுகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மாற்றங்கள் காரணமாக, பெண்களின் பொதுவெளி சார்ந்த பங்கேற்புகளும் பொழுதுபோக்குகளும் பெருமளவு மாறுதலடைந்து வருகின்றன. ஆனால், இந்த மாற்றங்களை நாம் சமூகம் தழுவிய ஒன்றாக இனம் காண முடியுமா? நம்முடைய சிறுநகரங்கள், கிராமங்கள், சாதிரீதியாக மத ரீதியாகப் பெண்களை ஒடுக்குகின்றன. பெண்கள் இன்னும் கூண்டுப்பறவைகளாக நீடிக்கிற அவலத்தையே பார்க்கிறோம். அப்படிப் பார்க்கிறபோது, பெண்களுக்கான பொதுவெளி இன்னும் பலதளங்களிலும் மறுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. தொலைக்காட்சி அலைவரிசைகளின் டி.ஆர்.பி என்று எடுத்துக்கொண்டால், பிரபலமான தொடர்களை ஒளிபரப்பும் சன் டி.வி போன்ற தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி-யின் அருகில்கூட செய்தி சேனல்களோ அல்லது சமூகவலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படும் நிகழ்ச்சிகளோ வருவதில்லை. இது எதைக் காட்டுகிறது?     

பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்

தொலைக்காட்சிகளில் பெண்களுடைய பொழுதுபோக்காகவும் கேளிக்கையாகவும் கட்டமைக்கப்படுபவை, குடும்பங்களில் நிறைந்திருக்கும் பெண்களுடைய துயரங்கள்தான் என்பது எவ்வளவு முரணானது. பெண்கள் அவர்களது அடக்கப்பட்ட கண்ணீரையே தொலைக்காட்சித் திரைகளில் தனக்கான கேளிக்கையாகக் காண்கிறார்கள். குடும்பங்களுக்குள் நிகழும் அதிகாரப் போட்டியும், பகையுணர்ச்சியும், மிகைப்படுத்தப்பட்ட வடிவங்களில் இந்தத் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பெண்களிடம் கொண்டுவரப்படுகின்றன. பெண்கள் இந்த மிகைப்படுத்தப்பட்டச் சித்திரங்களில் யதார்த்தத்தைக் காணாவிட்டாலும், அதன் சாயலைக் காண்கிறார்கள். துரோகம், வஞ்சகம், புறம்கூறுதல் முதலானவைதான் தொலைக்காட்சித் தொடர்கள் வழியே உருவாக்கப்படும் பெண் சித்திரங்களில் அடிப்படையாக இருக்கின்றன. இதற்காக நாம் தொலைக்காட்சித் தொடர்களை மட்டுமே குறைசொல்லி ஒதுங்கிவிட முடியுமா? இதன் வேர்களைக் குடும்ப அமைப்புகளின் பின்புலங்களில் காண வேண்டும்.

நம் குடும்ப அமைப்பு என்பது ஒருவிதத்தில் நம் அரசாங்க அமைப்பைப் போன்றதுதான். அதில் குடும்பத் தலைவர், கணவன் – மனைவி, சகோதரர்கள் – சகோதரிகள், நாத்தனார்கள் – மைத்துனர்கள், அத்தை – மாமா, சித்தப்பா எனப் பல்வேறு விதமான அதிகார மையங்கள் இருக்கின்றன. இந்த மையங்களுக்கிடையே ஜனநாயகப்பூர்வமான உணர்வுகள் இன்னும் உருவாகவில்லை என்பதுதான் உண்மை. நமது சாதி அமைப்புகளும், மத அமைப்புகளும், சமூகப் பாரம்பர்யங்களும் குடும்பத்திற்குள் வெவ்வேறு விதமான பாத்திரத்தையும் அதிகாரங்களையும் வழங்குகின்றன. சொத்துரிமை, மரபுரிமை, பெண்ணின் உடல்மீதான அதிகார உரிமை எனப் பல்வேறு களங்களில் நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், போராட்டங்களும் நிறைந்த ஒரு களமாகவே நம் குடும்பங்கள் இருக்கின்றன. இவை வெளிப்படையாகப் பேசப்படுவதற்கான வெளிகள் இன்னும் உருவாகிவிடவில்லை. பல சமயங்களில் ஒரு குடும்பத்திற்குப் புதிதாக உள்ளே வரும் ஒரு பெண், அந்தக் குடும்பத்தின் அதிகார மையங்களோடு பல்வேறு நிலைகளில் உறவுகளைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. பணிவு, கடமைகளைச் செய்தல், விட்டுக்கொடுத்தல் எனப் பல நிலைகளிலும் அவள் சமரசம் செய்துகொண்டாலும்கூட, அந்தக் குடும்பத்திற்குள் அவளோர் அந்நிய நபராகவே பார்க்கப்படுகிறாள் அல்லது அவளே ஒருநிலையில் தன்னைத்தானே அந்நிய நபராக உணர்கிறாள். இங்குதான் பந்தங்கள், சொத்து, பணம் சார்ந்த உரிமைப் போராட்டங்கள் தொடங்குகின்றன. இது, ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட வெவ்வேறு மிருகங்களுடைய உணர்ச்சிப் போராட்டமாகவும், அதிகார யுத்தமாகவும் மாறுகிறது. ஆனால், நம் குடும்ப அமைப்பைப் பிணைத்து வைத்திருக்கும் சமூக மரபுகள், ஒழுக்க நியதிகள், சாதிய மதக் கட்டுமானங்கள் இந்தப் பிரச்னைகளை நியாயமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாத வகையில் ஒரு புழுக்கத்திற்குள் வைத்திருக்கின்றன. ஆனால், நாம் பிரச்னையைத் தலைகீழாகப் புரிந்துகொள்கிறோம். இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் பெண்களிடம் பிரச்னைகளை மிகைப்படுத்தப்பட்ட அதீத வடிவில் முன்வைக்கிறது என்று நம்ப விரும்புகிறோம். ஆனால், நம்முடைய பெண்களை நாம் எத்தகைய நிலையில் நம் குடும்ப அமைப்பில் வைத்திருக்கிறோம் என்று எப்போதாவது வெளிப்படையாகப் பேசத் துணிந்திருக்கிறோமா? நமது அதிகார விளையாட்டுகளை நாம் மறுபரிசீலனை செய்ய முயன்றிருக்கிறோமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்ஒரு குடும்ப அமைப்பில் எந்தவொரு நியாயமான வாய்ப்பும், இந்தப் பிரச்னைகளை விவாதிக்க வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில்தான் தொலைக்காட்சித் தொடர்கள் இந்தப் பிரச்னைகளை ஒரு மிகைப்படுத்தப்பட்ட ‘மெலோ-டிராமா’வாக மாற்றி, வீட்டு வரவேற்பறைக்குள் கொண்டுவருகின்றன. இந்த நிகழ்ச்சிகளை வீட்டில் அமர்ந்து திரையில் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்கள், அதில்வரும் காட்சி பிம்பங்களுக்குள் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். தங்கள் அருகில் இருப்பவர்களைக் குறித்த சந்தேகங்களை உறுதிபடுத்திக்கொள்கிறார்கள். நிஜத்திற்கும் மாயைக்கும் இடையே ஒரு புனைவு யதார்த்தம் உருவாக்கப்படுகிறது. ஆனால், நாம் எப்போதும் ஒரு தொலைக்காட்சிப் பிம்பத்தைக் குறைகாண விரும்புகிறோமே யொழிய, அதன் அதீத இயல்புகள் நம் குடும்ப அமைப்புகளிலிருந்து கிளைத்து வருகின்றன என்பதை நம்ப மறுக்கிறோம். தொலைக்காட்சித் தொடர்கள் மட்டுமல்ல, நம் குடும்ப அமைப்புகளும் மனநோயை உருவாக்கக்கூடிய கதையாடல்களைக் கொண்டிருக்கின்றன.

சந்தேகமும், தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான சதிகளும், பழிவாங்குதல்களும் ஓர் ஊடகத்தால் வெளியே இருந்து புகுத்தப்படுவதல்ல. மாறாக, ஒரு குறுகலான இடத்தில் நமக்கான உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள நடக்கிற போராட்டங்களும்தான் இந்தத் தொலைக்காட்சிக் கதையாடல்களை உருவாக்குகின்றன.

இந்தத் தொடர்கள் அனைத்தும் ஏன் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டவையாக இருக்கின்றன; ஆண்கள் ஏன் இதில் பெரும்பாலும் உப கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். உண்மையில் ஒரு குடும்பத்தில் ஆண்தான் அதிகாரம் செலுத்துபவனாக இருந்தபோதிலும், ஒரு குடும்பத்தினுடைய உள்முரண்பாடுகளை அவனால் தீர்க்க முடிவதில்லை. அவன் முரண்படும் பல்வேறு உறவுசார் புள்ளிகளுக்கிடையே தற்காலிகமான சமரசங்களை உருவாக்கி, தனது நலன் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்கிறான். மற்றபடி, அவன் பெரும்பாலான சமயங்களில் ஒரு வெளியாளாகத்தான் இருக்கின்றான். ஆனால், பெண் என்னதான் படிப்பு, வேலை என ஆண்களுக்குரிய எல்லா இடங்களையும் நிரப்பியபோதும், அவள் திரும்பத் திரும்ப ஒரு வீட்டு விலங்காக இருக்கவே நிர்பந்திக்கப்படுகிறாள். வீடு என்பது பல சமயங்களில் பெண்களுடைய உணர்ச்சிக் களமாகவும், பெண்களுக்கு இடையேயான போராட்டங்களின் போராட்டக் களமாகவும் மாறிவிடுகிறது. ஒரு குடும்ப அமைப்பில் ஆண் அதிகாரமிக்கவனாக இருந்தபோதிலும்கூட, தொலைக்காட்சித் தொடர்களில் அவன் மங்கலாக்கப்பட்டு, பெண்களே அதன் உணர்ச்சிகரமான மையமாக்கப்படுகிறார்கள்.

இது தொலைக்காட்சித் தொடர்களுக்கு மட்டுமல்ல, பிரபலமான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளுக்கும், ரியாலிட்டி ஷோக்களுக்கும் மிகவும் பொருந்தும். இது தொலைக்காட்சித் தொடர்களின் அடுத்த வடிவம். இன்னும் சொல்லப்போனால் யதார்த்தத்தை யதார்த்தமாகவே கட்டமைக்கும் ஒரு புனைவு. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சித் தொடர் கதாபாத்திரங்கள்போல் இல்லாமல், ரத்தமும் சதையுமான அசல் மனிதர்களையே திரையில் கொண்டுவருகின்றன. துரோகம், வஞ்சகம், ஆண்கள் உறவு சார்ந்த பிறழ்வுகள் உக்கிரமான மோதலாக இந்த நிகழ்ச்சியில் வெடிக்கின்றன. பெண்களுடைய வாழ்வில் இருக்கும் கசப்புகளும், கண்ணீருமே இங்கு பண்டமாக்கப்படுகிறது. பெண்களுக்குப் பேசுவதற்கான வெளி இல்லாத இடத்தில் தங்களது பிரதிநிதிகள் சிலர், தங்கள் குரலைப் பொதுவெளியில் வைக்கிறபோது, பெண்களால் அந்தக் குரல் உற்றுக் கேட்கப்படுகிறது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நமது குடும்ப அமைப்பின் வன்முறைக் களங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவருகின்றன. பெரும்பாலும் இதில் பெண்கள் நியாயம் கேட்கிறார்கள்; முறையிடுகிறார்கள்; சிலசமயம் பழிவாங்குகிறார்கள். யாராலும் கேட்கப்படாத தங்களின் குரலை இந்த உலகம் கேட்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களும், இந்த நிகழ்ச்சியோடு எங்கோ உணர்ச்சிகரமாகப் பிணைக்கப்படுகிறார்கள். தனி மனிதர்களுடைய அந்தரங்கமான பிரச்னைகளை இந்த நிகழ்ச்சிகள் பகிரங்கப்படுத்துவதாக நான்கூடக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால், தனி மனிதனுடைய அந்தரங்கமான பிரச்னைகளுக்கு எந்த விதமான நியாயங்களும் கிடைக்காத குடும்ப அமைப்பிற்குள், பண்பாட்டு அமைப்பிற்குள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரவேற்பைப் பெறுவதைத் தவிர்க்க முடியாது. பெண்களுடைய ஜனநாயக உரிமையை, பேச்சுரிமையை உறுதிப்படுத்துகிற ஒரு சமூகத்தில்தான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற அதீத உணர்ச்சி நாடகங்களைக்கொண்ட நிகழ்ச்சிகள் செல்வாக்கை இழக்கும். இதுபோன்ற நிகழ்ச்சிகளினுடைய சற்றே மேம்படுத்தப்பட்ட அறிவுசார் தோற்றங்களைக்கொண்டே ‘நீயா நானா’ போன்ற நிகழ்ச்சிகள் அமைகின்றன. இதில் விவாதிக்கப்படும் பிரச்னைகளில் கணிசமானவை பெண்கள் தொடர்பான பிரத்யேகப் பிரச்னைகள் அல்லது பெண்களுடைய அந்தரங்க விருப்பங்கள் குறித்த விவாதங்களாகவும்  இருக்கின்றன. இதில் வரும் பெண்கள் சார்ந்த பிரச்னைகள் குடும்ப அமைப்பைச் சார்ந்தவை அல்ல, பொதுவெளிச் சார்ந்தவை.

பெண் ஏன் பிம்பமானாள்? - மனுஷ்ய புத்திரன்சமீபத்தில் பரவலாகக் கவனம்பெற்ற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் தொலைக்காட்சித் தொடர்கள் போன்றோ, ரியாலிட்டி ஷோக்கள் போன்றோ, பெண்களுக்கு இடையேயான முரண்பாடுகள்தாம் முதன்மைப்படுத்தப்படுகின்றன. இங்கும் அதிகாரப் போட்டியும், கவனஈர்ப்பும், சந்தேகமும், சதிகளும்தாம் முரண்பாடுகளை உருவாக்குகின்றன. நமது வீடுகளினுடைய, குடும்பங்களினுடைய மறுவார்ப்பாகவே ‘பிக்பாஸ்’ இல்லமும் இருக்கிறது. ஓவியா ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில், ஏன் இவ்வளவு பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றார்? ஆண்களுடைய பார்வையில் ஓவியா பாலியல் ஈர்ப்புக்கான ஒருவராகவும், அதே சமயத்தில் அவர்களது சொந்தக் குடும்பத்தில் காணக்கிடைக்காத சுதந்திர இயல்புகொண்ட பெண்ணாகவும் அடையாளம் பெறுகிறார். பெண்களை அடக்கி ஆள விரும்புகிற அதே ஆண்கள், ஒரு சுதந்திரமான பெண்ணைத் தங்கள் அந்தரங்க ரசனைக்குரியவராக மாற்றிக்கொள்கிறார்கள். இது தமிழ் மனதினுடைய முரண்பட்ட ஒரு நிலை. ஆண்களுக்கு ஓவியாவைப் பிடித்ததைவிட, பெண்களுக்கு அதிகமாகப் பிடித்திருந்ததை சமூகவலைதளங்களின் மூலம் அறிய முடிந்தது. அவர்கள் பார்வையில் ஓவியா தன்னுடைய விருப்பங்களையும் விருப்பமின்மைகளையும் வெளிப்படுத்துகிற, பிறருடைய நிர்பந்தங்களையும், அபிப்ராயங்களையும் பொருட்படுத்தாதவராக அடையாளம் காணப்படுகிறார். நமது குடும்ப அமைப்புகள், பெண்களுக்கு அப்படியோர் இடத்தைக் கொடுப்பது கிடையாது.

ஓவியா அந்த நிகழ்ச்சியில் அடைகிற காயங்களை, நம்முடைய பெண்கள் வாழ்க்கையில் ஏதோ ஓர் இடத்தில் அடைகிறவர்களாகவே இருக்கிறார்கள். இந்த இடத்தில் தங்கள் சுதந்திரத்தின் குறியீடாகவும், வேதனையின் குறியீடாகவும் ஓவியாவின் பிம்பம் மாறுகிறது. அது பெண்களின் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெறுகிறது.

தமிழ் சினிமாவில் வரும் பெண் பிம்பங்களைப் பற்றியும் நாம் கொஞ்சம் பேச வேண்டும். தொலைக்காட்சியினுடைய சந்தை பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பெண்களைச் சார்ந்திருப்பதனால், அதனுடைய உரையாடல்களும் கதையாடல்களும் பெண்களுடைய பிரச்னைகளைத் தங்களுடைய வர்த்தகத்திற்கான கச்சாப் பொருளாக்குகின்றன. ஆனால், திரைப்படங்கள் பெண்களை இன்னும் ஆண்களின் கற்பிதங்களினுடைய அடிப்படையிலேயே கட்டமைக்கின்றன. பெண்கள் குறித்த பார்வையில் தமிழ் சினிமா இன்னும் முன்னேறிவிடவில்லை என்பதைத்தான் நாம் தொடர்ந்து பார்க்கிறோம். இதில் விடுதலைபெற்ற, தனித்துவமாகக் காட்டப்படுகிற பெண்களைக்கூட ஒரு செயற்கையான, கேலிக்கூத்தான பிம்பமாகத்தான் தமிழ் சினிமா காட்டுகிறது. ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் தொடங்கி, ராமின் ‘தரமணி’ வரைக்கும் இந்தப் போக்குதான் தொடர்கிறது. இந்தப் பெண்கள் எப்போதும் ஒழுக்கப்பிறழ்வுகள் கொண்டவர்களாகவோ, மனப்பிறழ்வுகள் கொண்டவர்களாகவோ காட்டப்படுகிறார்கள். பெண்கள் இன்று சமூகவெளியில் அடைந்திருக்கும் சுதந்திரங்கள் சிறுமைப்படுத்தப்பட்டு, கொச்சைப்படுத்தப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகின்றன. அவை திரைப் பிம்பங்களாகவும் மாற்றப்படுகின்றன.  பாலியல் விருப்பங்களின்மேல் நமது பண்பாட்டு அமைப்புக்கொண்டிருக்கும் இறுக்கங்களில் சிறு நெகிழ்வு ஏற்பட்டால்கூட எல்லோருக்கும் மனம் பதற ஆரம்பித்துவிடுகிறது. இது தமிழ் சினிமா இன்னும் ஆண்களின் சினிமாவாகவே இருக்கிறது என்பதையே காட்டுகிறது. இவர்களுக்குப் பெண்களுடைய உலகமும் தெரியவில்லை. யதார்த்த உலகமும் தெரியவில்லை.

தொலைக்காட்சியாக இருக்கட்டும்; விளம்பரங்களாக இருக்கட்டும்; திரைப்படங்களாக இருக்கட்டும் - அவை யாவும் பெண்களுடைய ஆசாபாசங்களையும்,  உணர்ச்சிகளையும் பெண்களிடமே விற்கிறது. இன்னொருபுறம் பெண் உடலை ஆண்களிடம் ஒரு சந்தையாக மாற்றுகிறது. கேளிக்கையினுடைய மையமாகப் பெண்ணே இருக்கிறாள். இந்தக் கேளிக்கை கலாசாரத்திலிருந்து பெண்கள் விடுவிக்கப்படாதவரை, பெண்களின் உண்மையான பிரச்னைகளையோ, அதற்கான தீர்வுகளையோ நாம் நிர்மாணிக்க முடியாது. பெண்கள் பிம்பங்களால் ஆளப்படுகிறார்கள். பிம்பங்களாக நம்பவைக்கப்படுகிறார்கள். அது ‘பாகுபலி’ `தேவசேனா’வாக இருக்கலாம் அல்லது ‘பிக்பாஸ்’ ஓவியாவாக இருக்கலாம். பெண்களின் நிஜங்கள் இந்த நிழல்களில் ஒடுங்குகின்றன.