Published:Updated:

``காவிரில தண்ணி வந்தாலும் வரலைனாலும் பிரச்னை!" - விவசாயிகளின் புலம்பலுக்கு யார் காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``காவிரில தண்ணி வந்தாலும் வரலைனாலும் பிரச்னை!" - விவசாயிகளின் புலம்பலுக்கு யார் காரணம்?
``காவிரில தண்ணி வந்தாலும் வரலைனாலும் பிரச்னை!" - விவசாயிகளின் புலம்பலுக்கு யார் காரணம்?

கடந்த 8 வருஷமா காவிரியில் தண்ணீர் இல்லைன்னு கஷ்டப்பட்டோம். இப்போ அளவுக்கதிகமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுது. அரசு அதிகாரிகள் தங்கள் இஷ்டத்துக்குக் கணக்கில்லாமல், அளவுக்கதிகமாக திறந்துவிடுவதால் வயல்களில் தண்ணீர் புகுந்துடுச்சு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கர்நாடகாவில் பெய்துவரும் பலத்த மழையால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தினமும் மேட்டூர் அணையின் கொள்ளளவான 120 அடி நிரம்பி வழிகிறது. தற்போது அணையிலிருந்து உபரி நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால் காவிரி நீர், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் வருகிறது. இந்த நீர் முக்கொம்பிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிடப்படுகிறது. இதனால் திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் கரைகளைத் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் காவிரியில் திடீரென வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை, பொன்னுரங்கபுரம், பனையபுரம், உத்தமர்சீலி, நடுவெட்டி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில் பெருக்கெடுத்து ஓடும் காவிரித் தண்ணீர் கரையை விட்டு வெளியேறி படுகைகளில் உள்ள வாழைத்தோட்டங்கள், வெங்காய விளைநிலங்களில் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள், வெங்காயம் நீரில் மூழ்கின. வாழைப் பயிர்களில் சுமார் 4 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்து ஓடியதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இந்தக் கிராமங்களின் வடகரையில் கொள்ளிடமும், தென் கரையில் காவிரியும் செல்கின்றன. கொள்ளிடத்தை விடக் காவிரி ஆறு சற்று மேடான நிலையில் இருப்பதால், வெள்ளக் காலங்களில் காவிரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் இதற்காகவே அமைக்கப்பட்டுள்ள கிளிக்கூடு தரைப்பாலத்தின் வழியாகக் கொள்ளிடத்தில் கலப்பது வழக்கம். 15 வருடத்துக்குப் பிறகு கிளிக்கூடு தரைப்பாலத்திலும் தண்ணீர் வழிந்தோடியது.

தரைப்பாலத்தில் வழிந்தோடிய தண்ணீர் திருச்சி- கல்லணை சாலையில் சுமார் ஒன்றரை அடி அளவுக்குச் சென்றதால் அந்தச் சாலையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடியே செல்லும். தொடர்ந்து தண்ணீர் ஓடினால் சாலைகள் தாங்காது எனும் நிலை.  இதேபோல் உத்தமர்சீலி கிராமத்தில உள்ள முத்துக்கருப்பசாமி கோயில் தண்ணீரில் சூழ்ந்துள்ளது. அதேபோல், கொள்ளிடம் புதிய பாலம் அருகில் இருந்த குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசிப்பவர்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் குடியேறினர்.

கிளிக்கூடு அருகே கரைபுரண்டோடும் காவிரியால் பாதிக்கப்பட்ட வெங்காயத்தை அள்ளிக்கொண்டிருந்த பன்னீர் செல்வம்,

``கடந்த 8 வருஷமா காவிரியில் தண்ணீர் இல்லைன்னு கஷ்டப்பட்டோம். இப்போ அளவுக்கதிகமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுது. அரசு அதிகாரிகள் தங்கள் இஷ்டத்துக்குக் கணக்கில்லாமல், அளவுக்கதிகமாக திறந்துவிடுவதால் வயல்களில் தண்ணீர் புகுந்துடுச்சு. வாழைத்தோப்பெல்லாம் தண்ணீர் நிற்குது. இன்னும் சில தினங்கள் இப்படியே இருந்தால், எங்கள் பயிரெல்லாம் நாசமாகப் போகும். காவிரியில் குளிக்கக் கூடாது என்கிறார்கள் நியாயம்தான்.. எங்க பயிரைக் காப்பாற்ற எங்க ஊர் மக்கள் உயிரைப் பணையம் வைத்து, விளைச்சலைக் காப்பாற்றுகிறார்கள் பாருங்கள்” என்றார்.   

அவர் சொன்ன பகுதிகளில் கழுத்தளவு தண்ணீரில் வெங்காயத்தை அள்ளி கூடையைச் சுமந்தபடி  வந்த பெண்கள், ``எங்க வாழ்க்கை தண்ணி வந்தாலும், வரலண்ணாலும் பெரும்பாடு" என்றபடி நடந்தனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தமர்சீலி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி வெள்ளத்தில் மூழ்கிய வாழைத்தோப்பு மற்றும் பயிர்களை பார்வையிட்டதுடன், முக்கொம்பிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைக் குறைக்க உத்தரவிட்டார். அதனை அடுத்து முக்கொம்பிலிருந்து காவிரியில் வினாடிக்கு 33 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 70 ஆயிரம் கன அடி தண்ணீரும்  திறந்துவிடப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகக் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றவர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். எனவே, உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் காவிரி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாமென தடைவிதிக்கப்பட்டு இருந்தது தெரிந்தும், பொதுமக்கள் காவிரி ஆற்றில் தொடர்ந்து தடையை மீறிக் குளித்து வருகிறார்கள். திருச்சி காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், திருச்சி மாநகரையொட்டியுள்ள கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றில் யாரும் குளிக்கக் கூடாது என்றும், படித்துறைகளில் நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கக் கூடாது என்றும், தண்டோரா மற்றும் பிட் நோட்டிஸ் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றுப் படித்துறைகளில் தடுப்புக் கம்பிகளுக்குள் மட்டுமே குளிக்க  அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனையும் மீறி தடுப்புக்கம்பிகளுக்கு மேல் ஏறி, தில்லைநாயகம் படித்துறை, ஓடத்துறை உட்பட பல்வேறு இடங்களில் ஆற்றில் குதித்து விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்ட 8 பேர் மீது கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு