Election bannerElection banner
Published:Updated:

’தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’, பெரிய மனதைக் கொண்டிருந்த சாதாரண மனிதர்களின் கதை..! - பகுதி 22

’தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’, பெரிய மனதைக் கொண்டிருந்த சாதாரண மனிதர்களின் கதை..! - பகுதி 22
’தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’, பெரிய மனதைக் கொண்டிருந்த சாதாரண மனிதர்களின் கதை..! - பகுதி 22

`மலையாள கிளாசிக்’ தொடரின் 22 வது பகுதி. ’தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படம் குறித்த விரிவான கட்டுரை.

`தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்', பிரசாத் ஒரு சாதாரண ஆள். கல்யாண வயது தாண்டி கட்டுவதற்கு ஒரு பெண் கூட கிடைக்காமல் லோல் பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் ஸ்ரீஜா என்கிற பெண்ணுடன் பிரச்னை வருகிறது. வளராமல் அது பற்றிக்கொள்ளும் தீ போல காதலாகவும் மாறி, வீடுகளை எல்லாம் கலந்துகொள்ளாமல் கல்யாணமும் செய்துகொள்கிறார்கள். நடுத்தரக் குடும்பங்களின் போலி கௌரவம் மற்றும் மடத்தனமான முரட்டுக் கொள்கைகளால் பிரசாத் சற்றே தள்ளி இருக்கிற ஒரு ஊருக்கு விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ள ஸ்ரீஜாவை அழைத்துச் செல்கிறான். அங்கே அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருக்கிறது. தண்ணீர்ப் பிரச்னை. ஒரு கிணறு தோண்டி விவசாயம் செய்து வாழ்வை சீர் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தார்கள் இல்லையா, அதில் ஸ்ரீஜாவின் கழுத்தில் இருக்கிற தாலிச்செயினை விற்பதாகவும் இருந்தது. பதினாறு கிராம், விற்றால் ஒரு தொகை கிடைக்கும். சமாளித்துக்கொள்ளலாம். பிரசாத்தும், ஸ்ரீஜாவும் அப்படிக் கிளம்பிப் போகும் போதுதான் ஒரு திருடன் அந்த செயினைக் களவாண்டு விடுகிறான்.

ஓடுகிற பேருந்து. ஸ்ரீஜா சற்றே தூக்கத்தில் இருந்தாள். திருடன் கட்டரால் செயினை வெட்டி முழுமையாய் இழுத்துக்கொள்ளுவதற்குள் ஸ்ரீஜா அதைப் பார்த்துவிட்டாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் அதை விழுங்கவும் செய்து விட்டான். விஷயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறது. படத்தின் கதை துவங்குவது இங்கேதான். திருடன் செயினை அறுத்து வாயில் போட்டதை ஸ்ரீஜாவைத் தவிர்த்து யாரும் பார்க்கவில்லை. திருடன் மிக உறுதியாய் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறான். கேஸை எடுத்துக் கொள்ளுவதே தேவையா என்ன தெரியவில்லை என்று போலீஸ் தலையைச் சொறிந்து அச்சமூட்டினாலும், திருடனுக்கு முழுச் சாப்பாடு கொடுத்து காலையில் அவனது வயிற்றிலிருந்து எடுத்து விடலாம் என்று மாற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இல்லை. இந்தக் கேசைப் பிடித்த விஷயத்தில் போலீஸாருக்கு வேறு சிக்கல்கள் இருக்கின்றன. திருடனைக் கொண்டு சென்று எக்ஸ்ரே எடுத்தபோது அதில் செயின் இருப்பது தெரிய வருகிறது.

இதுவரை நான் எடுக்கவேயில்லை என்று சாதித்த திருடன் வெகு ஈசியாக, `ஆமாம் அப்படி நடந்துவிட்டது’ என்கிறான். அவ்வப்போது செயினைப் பறிகொடுத்தவர்களை நோக்கி புன்னகைக்கவும் தவறவில்லை.

மறுபடியும் அவனை மலம் கழிக்க உட்கார வைத்து செயினை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கையில் இந்த முறை அவன் தப்பித்து ஓடுகிறான். போலீஸாரும் ஊர்க்காரர்களும் துரத்துகிறார்கள்தாம். ஆனால், பிரசாத்தான் இறுதி வரை துரத்துகிறான். பிடிக்கவும் செய்கிறான். அவனைத் தப்பித்துச் செல்ல விடாமல் செய்து, திருடன் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்படுகிறான். அடி, சரியான அடி, பின்னி எடுக்கிறார்கள். செயின் இல்லை. எங்கோ தவறி விட்டது. என்ன அடித்து உதைத்தும் அவனிடமிருந்து ஒன்றும் வரப் போவதில்லை. போலீஸாருக்கு முன்னமே இருந்தது போல வேறு பிரச்னைகள் நெருக்குகின்றன. அவர்கள் பறிமுதல் செய்யாவிட்டாலும் ஒரு செயினை வாங்கி அது கைப்பற்றப்பட்டதாய் கோர்ட்டில் ஒப்படைத்து திருடனைக் கடுமையான முறையில் தண்டிக்க வழி வகை செய்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க பிரசாத்திடமும், ஸ்ரீஜாவிடமும் சால்ஜாப்பு பேசுகிறார்கள்.

மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் திருமணம். ஆரம்பமே கோளாறு. இன்னும் சொல்லப் போனால் பிரசாத்துக்கும் ஸ்ரீஜாவுக்கும் நடுவே தொலைந்துபோன செயினால் மனக்கசப்பே வந்து விடுகிறது. ஸ்ரீஜாவின் அப்பா இவர்களுக்கு நடந்துவிட்ட அசம்பாவிதங்களைக் கேள்விப்பட்டு போனைப் போட்டு சொந்த மகளிடம் விஷம் கக்குகிறார். எல்லாம் தாண்டி அவர்கள் தங்களுடைய காதலை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இப்போது போலீஸ் திருடனின் கழுத்தை நெரிக்க உதவி கேட்கும் போது, வாங்கப்பட்ட செயின் இவர்களுக்கே கிடைக்கும் என்றிருந்தாலும்- ``என் செயின் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இனிமேல் அவனை அடிக்காதீர்கள் “ என்கிறாள் ஸ்ரீஜா. போலீஸும், புருஷனுமே கூட அவநம்பிக்கை காட்டும் போது அவன் திருடன்தான் என்று உறுதியோடிருந்து அவன் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று மோதியவாறு இருந்தவள் இந்த ஸ்ரீஜாதான்.

எல்லோருக்கும் தெரியும், இந்தப் படத்தில் திருடனாகப் பாத்திரமேற்றிருந்தவர் ஃபஹத். பிரசாத் மற்றும் ஸ்ரீஜாவின் கதையாக துவங்குகிற இந்தப் படத்தில் ஒரு பக்கவாட்டில் வந்து இறுதியாய்ப் படத்தை முடித்து வைக்கிறவர் அவர்தான். என்றாலுமே இந்தப் படம் அவருடையது அல்ல. அவர்களுடையது. இவரது திருட்டைக் காட்டிலும், திருட்டின் பல்வேறு சாத்தியங்களில் காண்பிக்கப்படுகிற சாகசங்களைக் காட்டிலும் படம் மையம் கொண்டிருந்தது நாதியற்றவர்களாய் இருக்கும்போதும் மன்னிக்கிற பெரிய மனதைக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களில்தான். அவர்கள் பிற மனிதர்களின் கஷ்டங்களை காது கொடுத்து கேட்கிறார்கள். அனுதாபப்படுகிறார்கள். உதவி செய்ய முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள். அவன் ஒரு திருடனாக இருந்தாலும்தான் என்ன.

இவன் பெயர் பிரசாத் என்பது போல திருடனின் பெயரும் பிரசாத்தான். ஆமாம், திருடர்கள் நம்மிலிருந்துதான் புறப்படுகிறார்களே தவிர்த்து, அவர்கள் வேற்று கிரகங்களிலிருந்து வந்து இறங்கியிருக்க முடியாதே. எப்போதோ அப்பா அம்மா மிஸ்ஸாகி யாருமில்லாத வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பல ஊர்களுக்குமாகச் சுற்றி வருகிறான். நிரந்தரமாய் ஒன்றில் நிலைக்க முடியவில்லை. அவன் யாரென்றே இல்லை. அடையாள அட்டை கூட இல்லாத ஒருவனை எதையுமே செய்து தொலைத்துக் கட்டிவிட நமது போலீஸ் மட்டுமே போதாதா. சிங்கிளாக உயிர்ப்பிழைப்பு நடத்தி பொருளற்ற வாழ்க்கை நடத்துகிறவன் பரோட்டா அடிப்பது, செயின் திருடுவது எல்லாம் ஒன்றுதான். `என்னடா, நல்ல பசியா, செயினை முழுங்கி விட்டிருக்கிறாய்’ என்கிற போலீஸாரின் நக்கல் கேள்விக்கு, `ஆமாம் சார், பசி தானே எல்லாம்’ என்று பதில் சொல்லுகிறான் அவன்.

அவனுக்கு மற்றவர்களைப் போல் நல்ல வாழ்க்கை ஒன்று அமைந்து வந்தால் அப்படி வாழ வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது. அவனும் சொந்த ஊருக்குச் சென்று எதையாவது செய்வதற்குதான் இந்த செயினைத் திருடினான். இறுதியில் அதை எங்கே போட்டான் என்பதையும் கூட சொல்லி உரியவரையே அதை எடுத்துக்கொள்ள சொல்லுகிறான். ஒரே ஒரு வேண்டுகோள், கோர்ட்டில் போலீஸாரால் ஒப்படைக்கப்படுகிற செயினை எங்களுடையது அல்ல என்று சொன்னால் போதும். எனது வாழ்நாளில் ஏழு வருடங்கள் வீணாகாது. ஒரு எளிய மனிதனாக அவர்களிடம் அவன் இறைஞ்சுவது அதைத்தான்.

அவர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்களா என்ன?

இப்படத்தின் கதையைச் சொல்ல முயன்று, சொல்லி முடித்தது சரியாக இப்படத்தின் முழுமையை அல்ல. அது வேறெங்கோ இருக்கிறது. யதார்த்தமும் புனைவும் பின்னிப் பிணைந்த மாயாஜாலத்தைப் படம் பார்த்துதான் உணர வேண்டும். தேர்ந்தெடுத்த கதையை நமக்குள் ஊடுருவி செலுத்த ஒவ்வொரு காட்சியையும் சிருஷ்டித்து அதற்கு சர்வ நிதானமாய் உழைத்திருக்கிறார்கள். திரைக்கதை சஞ்சீவ் பழூர். மிக அற்புதமான மனிதர்களைக் கொண்டு வந்து அவர்களுக்குள் உணர்ச்சிகரமான நாடகங்களை செய்து காட்டிய அவருக்கு நிறைய விருதுகள் இப்படத்திற்காக கிடைத்திருக்கின்றன. ஸ்ரீஜா என்கிற அந்த ஒரு பாத்திரத்தின் மனம் மட்டுமே போதும். அல்லது போலீஸாரின் முகங்களில் அவ்வப்போது வந்து போகிற திருட்டு முகங்கள் போதும்.

அப்புறம் அந்த நல்ல மனம் கொண்ட பெண்ணைக் கொண்டு வருவதற்கு ஒரு முகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் பாருங்கள், அதில் இருக்கிறது கலை. பிரசாத்தாக சுராஜை தேர்ந்துகொண்டதும் அப்படித்தான். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக வந்தவர். அறிவிப்பாளராக தொடர்ந்தவர். ஒரு நகைச்சுவை நடிகராகவே ஒரு முழு ஜென்மம் பாழ்படாமல் மலையாள சினிமா அவரைக் கண்டுபிடித்தவாறே இருக்கிறது.

அலேன்சியர் லே லோபஸ் தனது எல்லையைத் தொட்ட படம் இது. யாரையும் பேச்சினால் தனது வழிக்குக் கொண்டு வருகிற இரண்டு தருணங்கள் உண்டு. அதில் அவரது லஜ்ஜையில்லாத முகம் நூறு பாவனையில் சுழல்கிறது. 

ஃபஹத் பாசில் தனது பழகின தடங்களை கைவிட்டவாறு இருக்கிறவர். சட்டென்று வேறொன்றுக்கு லாகவமாய்த் தாவிவிடுகிற நுட்பம் அறிந்தவர். எல்லையற்று விரிந்தவாறு இருக்கிற விண்வெளி மாதிரி மனித குணங்கள் பெருகியவாறு இருப்பினும், அவற்றின் மீது ஆழ்ந்த ஆர்வமும் காதலும் இல்லாமல் ஒரு மனிதனுக்குள் புகுந்து அவனைச் செய்து காட்ட முடியாது. லாக்கப்பினுள் இருக்கிற கைதி ஒருவன் வாய் திறப்பதற்குள் அவனை போடா என்னும் போதே படத்தில் அவரது ஆட்டம் துவங்கி விடுகிறது. திருடனுக்கும் சராசரி மனிதனுக்கும் இடைப்பட்ட அந்தப் பாத்திரத்தில் இரண்டுமாக ஒளிர்ந்து விலகுவது எத்தனை முறை நடக்கிறது என்பது மட்டும் பாருங்கள்.

எஸ்.ஐ.யிலிருந்து கடைசியாக வருகிற அதிகாரி வரை மொத்த ஸ்டேஷனுமே ஒரு வியப்புதான். ஒரு கணமாவது திரும்பத் திரும்ப வருகிற முகங்கள் மீது நமக்குச் சலிப்பு வராத வண்ணம் பாத்திரத் தேர்வுகள் பொருத்தம் கொண்டிருந்தன. மிகக் குறைந்த லொகேசன்களிலும் எடுத்துக்கொண்ட கதையைத் திறம்படச் சொல்லுவது என்பது அதைச் சொல்லுகிறவர்களுக்கு சினிமா எவ்வளவு தெரியும் என்பதைப் பொறுத்தது. இக்கதையை காவியம் பண்ணினவர்களில், முதல் தர நாயகர்களில், முக்கியமானவர்களில் முக்கியமானவர் ராஜீவ் ரவி. எளிமையில் ஒளிந்திருக்கக் கூடிய பிரமாண்டம் பற்றி நானெல்லாம் பேசியவாறு இருந்திருக்கிறேன். எவ்வளவோ படங்களை சிலாகித்திருக்கிறேன். இந்தப் படம் அனைத்தையும் கடக்கிறது. ரவி சிரமமானவற்றையும்  நளினமாக்கியிருக்கிறார். அவரது குளோசப் முக சித்திரங்கள் நெடிய கவிதைகள் போன்றவை. படத்தில் புயல் வீசி பறப்பது போன்ற காட்சிகளும் உண்டு. ரவி பறந்திருக்கிறார். எங்கேனும் கடுகளவு இடறல் இருக்காது. வியந்து கொண்டேயிருக்கிறோம், அவர் அடுத்து அடுத்து என்று சென்று கொண்டேயிருக்கிறார்.

படத்தில் பல காட்சிகள் விரைகின்றன. பலவும் நிலைக்கின்றன. மூட் பாலன்ஸ் நீடித்தவாறு இருக்கிறது. கிரண் தாஸ் எடிட் செய்திருக்கிறார். பாடல்கள் வெறும் தொழில்நுட்ப பீத்தலில்லாமல், வெறும் ஸ்டைலில் ஒத்தைக் கால் தூக்காமல் நெஞ்சைத் தொடும் நோக்கம் கொண்டவையாய் இருந்தன. படம் ஒரு திசையில் சென்றுகொண்டிருக்கும் போது இசை கிண்டர் கார்டன் ரைம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிற அவலம் இல்லை. நல்ல முதிர்ச்சி. தெளிவு. பல இடங்களில் இசையே மனங்களைப் பேசியது. வாழ்த்துகள் பிஜிபால். படத்தில் ஷியாம் புஷ்கரனின் பெயரை கிரியேட்டிவ் டைரக்டர் என்று போட்டிருக்கிறார்கள். சரிதான், சரக்கு வலுவாய் இருக்கிற இடத்தில் தாழ்வு மனப்பான்மைகள் இருக்காது. யாருக்கு என்ன நாற்காலியோ அதைக் கொடுத்து விட வேண்டியதுதான். அடித்துப் பிடுங்கி நானே என்பதெல்லாம் நோயாளி மக்களின் திருவிழாவல்லவா.

திலேஷ் போத்தன் கலைப் படங்கள் செய்கிறவர் அல்ல. வெகுஜனப்படங்கள் செய்து அதிரடி காட்ட நினைப்பவர் அல்ல. தனது சினிமா இன்ன வகையைச் சேர்ந்தது என்று அடையாளம் காட்ட விருப்பப்படும் ஓர் ஆளாக கூட அவர் இருக்க மாட்டார். எனினும் தரமாகவும், மக்களை எட்டுவதாகவும் தனது சினிமா இருக்க வேண்டும் என்பதைக் கண்டிப்பாக நினைப்பார். அது எல்லா காலத்துக்குமான வெற்றி பார்முலா என்பதை விட நெஞ்சின் அடியாழத்திலிருந்து சினிமாவை, மக்களை, தனது நாட்டை நேசிக்கிற ஒருவருக்கே அது சாத்தியமாகும்.

சொல்லப் போனால், இது சொல்லி வந்தவற்றை எல்லாம் தாண்டி சர்வ வியாபகமான வாழ்வை நேசிக்கும் சினிமா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு