Published:Updated:

நூற்றாண்டாக சுயமாக சுகப் பிரசவம் பார்த்துக்கொள்ளும் ஒக்கூர். எப்படி, ஏன்..?!

ஆவுடையார்கோயிலிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிற ஒக்கூர் கிராமத்தில்தான் இந்த அதிசயம்.  

நூற்றாண்டாக சுயமாக சுகப் பிரசவம் பார்த்துக்கொள்ளும் ஒக்கூர். எப்படி, ஏன்..?!
நூற்றாண்டாக சுயமாக சுகப் பிரசவம் பார்த்துக்கொள்ளும் ஒக்கூர். எப்படி, ஏன்..?!

`வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்த சர்ச்சைகள் தமிழகத்தை விவாதக்களமாக்கி வருகின்றன. `எந்த மருத்துவ முறையைத் தேர்வு செய்வதென்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை; அதில் அரசாங்கம் தலையிடக் கூடாது` என்று இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் சொல்கிறார்கள். ஆனால், `பிரசவம் என்பது மரணத்தின் வாசலுக்குச் சென்று திரும்பும் நிகழ்வு... வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்து... மருத்துவமனைக்குத்தான் வரவேண்டும்` என்று அலோபதி மருத்துவர்கள் சொல்கிறார்கள். இந்த விவாதம் ஒரு பக்கம் இருக்க, ஒரு கிராமமே கடந்த 5 ஆண்டுகள் வரை மருத்துவமனைக்கே செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொண்ட கதை வியப்பூட்டுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயிலிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிற ஒக்கூர் கிராமத்தில்தான் இந்த அதிசயம்.  

சுற்றிலும் பசுமை போர்த்திய வயல்கள். நடுவில் குடியிருப்பு. ஆழ்ந்த அமைதியில் உறைந்திருக்கிறது கிராமம். ஊருக்கு முகப்பிலேயே குளம். குளக்கரையில், பெரிய ஆலமரத்தின் கீழே அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் `பொய்யாளம்மன்'. 

``இதோ  இங்கே திரியுற எல்லாப் பயலுகளும் பொய்யாளம்மன் கோயிலுக்கு முன்னால பெறந்தவனுகதான். எங்க பொம்பளைகளுக்கு மருத்துவச்சி, இந்தப் பொய்யாளம்மாதான். இப்ப உள்ள புள்ளைகதான் ஆஸ்பத்திரி, டாக்டர்ன்னு போகுதுக... அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இங்கேதான் பிரசவம் நடக்கும். நானறிஞ்சு ஒரு உசுருக்கும் பங்கம் வந்ததில்ல. நாலு, அஞ்சுன்னு எல்லாம் இங்கேதான் பெத்துப்போட்டுச்சுக..."- கோயில் முன்பு அமர்ந்திருக்கும் பெரியவர் அலுப்பாகப் பேசுகிறார். 

பொய்யாளம்மன்தான் ஊரின் காவல் தெய்வம். காவல் தெய்வம் மட்டுமல்ல... பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியும் கூட. மக்கள் அம்மனை `பொய்யா’ என்றே அழைக்கின்றனர். `அம்மனை நம்பிய பிரசவங்கள் எதுவும் இதுவரை பொய்த்ததில்லை' என்பதாலேயே `பொய்யாளம்மன்' எனப் பெயர் வந்திருக்கிறது. 

`பொய்யாளம்மன் குழந்தைகள் மேல் தீவிர ஆர்வம் கொண்டவளாம். தன் தங்கையின் பிள்ளைகளைப் பார்க்கச் சென்றபோது, குழந்தையில்லாத அக்காவின் பார்வை படக்கூடாது என்பதற்காக மறைத்து வைத்துவிட்டாளாம். அதை உணர்ந்த பொய்யாளம்மன், மிகுந்த கோபமும் துயரமும் அடைந்து, இந்த இடத்தில் வந்து அமர்ந்துவிட்டதாக'ச் சொல்கிறார்கள் மக்கள். அம்மன் இங்கு வந்து அமர்ந்த காலம் முதல் பிரசவத்தில் இறப்பே நிகழ்ந்ததில்லை என்கிறார்கள். 

மருத்துவர் துணையின்றி, சுகப்பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த வள்ளி என்பவரிடம் பேசினோம். 

``எனக்குப் பொறந்த பிள்ளைங்க எல்லாமும் பொய்யாவோட அருளால சுகப்பிரசவமாத்தான் பொறந்துச்சு. கர்ப்பமானா மொதல்ல, பொய்யாவ பார்த்துக் கும்பிட்டுட்டு, விபூதியை எடுத்து, வயித்துல பூசிக்குவோம். நிமிஷத்துக்கு நிமிஷம் அவள் பேரையே சொல்லிக்கிட்டிருப்போம். வலி வந்துச்சுன்னா கோயிலுக்கு எதிர்த்தாப்ல இருக்குற கொல்லைப்பக்கம் போயிடுவோம். அங்கே தென்னை ஓலையால ஒரு தடுப்புக் கட்டி வெச்சிருப்பாக. ஒரு பூவரசு மரத்தோட கம்பு ஒண்ணைக் கைல கொடுத்துடுவாங்க. அதை எடுத்துக்கிட்டு உள்ளே போயிருவோம். யாரும் துணைக்கு வரமாட்டாங்க. தூரமா நின்னுக்குவாங்க. அதுக்கப்புறம் எல்லாத்தையும் பொய்யா பார்த்துப்பா... எவ்வளவு வலி வந்தாலும் `அய்யோ'ன்னு கத்த மாட்டோம். `பொய்யா...', 'பொய்யா'ன்னுதான் கத்துவோம். கம்பை ஊண்டிக்கிட்டு நாங்களே பிரசவம் பாத்துக்குவோம். பக்கத்துல யாரும் வரமாட்டாங்க. குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா, உறவுக்காரங்கல்லாம் வந்து தென்னை ஓலையில குடிசைப் போட்டு கொடுப்பாங்க. அதுலதான் 16 நாளும் தங்கியிருக்கணும். வீட்டுலேயிருந்து சாப்பாடு மட்டும் வரும். வெயில் அடிச்சாலும் மழை பேஞ்சாலும் குடிசையை விட்டு வெளியே வரமாட்டோம். குழந்தையைக் குளிப்பாட்டுறது, பால் கொடுக்கிறதுன்னு எல்லாத்தையும் நாங்களே செய்வோம். பதினாறு நாள் முடிஞ்சதும், குழந்தையைத் தூக்கிக்கிட்டு பொய்யாளம்மன் கோயிலுக்குப் போவோம். ஆத்தா முன்னாடி நின்னு, விபூதி பூசிக்கிட்டு வீட்டுக்குப் போயிருவோம். அவளோட அருளால என் புள்ளைங்க எல்லாம் நல்லா இருக்குதுங்க!” - அம்மன் இருக்கும் திசையைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார் வள்ளி.

பொய்யாளம்மனை வழிபட வந்த, கர்ப்பிணி ஒருவரைச் சந்தித்தோம். தனது வயிற்றின் மீது மெதுவாகக் கைவைத்து, குழந்தையின் அசைவை கவனித்தபடியே `தன்னுடைய பெயரை வெளியிடக் கூடாது' என்கிற வேண்டுகோளுடன் பேசினார். 

``எங்க ஊர்ல பதினைஞ்சு வயசுக்கு மேல இருக்கிற ஆம்பிளை, பொம்பிளை எல்லாருமே சுகப் பிரசவத்துல பொறந்தவங்கதான். முன்னாடி பொய்யா மேல நம்பிக்கை வைச்சு, அப்படி நடந்துக்கிட்டாங்க. இந்தக் காலத்துல இதையெல்லாம் இப்போ யாரும் நம்புறதில்ல. யாரும் இப்போ ஊர்லே பிரசவம் பார்க்கிறதில்ல. பக்கத்துல இருக்கிற அறந்தாங்கிக்கோ, புதுக்கோட்டைக்கோ போயிடுவாங்க. இங்கேயே ஒரு கவர்மென்ட் ஹாஸ்பிடல் இருக்கு. ஆனா, வாரத்துல ரெண்டு நாளைக்குதான் தெறந்திருக்கும். உடம்புக்கு முடியலன்னு போனாலும், யாரும் சரியா கவனிச்சுப் பார்க்க மாட்டாங்க. அதனால, டவுன்ல இருக்கிற பெரிய ஆஸ்பத்திரில காட்டுவோம். நான் கூட அங்கதான் குழந்தை பெத்துக்கப்போறேன்” என்றார். 

``மருத்துவரோ பயிற்சி பெற்ற செவிலியரோ இல்லாமல் பிரசவம் பார்ப்பது ஆபத்தில்லையா?” முதியவர் பிச்சை என்பவரிடம் கேட்டோம்.  

``இதுல பயப்படுறதுக்கு ஒண்ணுமேயில்ல கண்ணு. எல்லாத்தையும் பொய்யா பார்த்துக்குவா. இங்க எல்லாருக்கும் சுகப் பிரசவம்தான். இதுவரைக்கும் யாருக்கும் எந்தப் பாதகமும் ஆனதில்லை. எங்க பாட்டன், பூட்டன் காலத்துலருந்து இங்கே அப்படித்தான். ஏன்... நானே பொய்யாளுக்கு முன்னாடி பெறந்தவன்தான். இப்பவுள்ள புள்ளைக ஆஸ்பத்திரிக்குப் போயிருதுக. அதுக்குக் காரணம் இருக்கு. முன்னாடியெல்லாம் பொண்ணுங்க ஓடியாடி வேலைப் பார்த்ததுங்க. சத்தான சாப்பாடெல்லாம் கிடைச்சுது. அதனால சுகப் பிரசவம்ங்கிறது ஈஸியா இருந்துச்சு. இப்ப எல்லாமே மாறிடுச்சு. அதனால இந்தப் பழக்கமும் மாறிப்போச்சு. நாளு, நேரம் பாத்து வயித்தைக் கிழிச்சுக்குதுக. என்ன பண்ணச் சொல்றே...  வெளியூர்லேயிருந்து வாக்கப்பட்டு வந்த பொண்ணுகதான் ஆஸ்பத்திரிக்குப் போய் இந்த வழக்கத்தை மாத்துச்சுக. இப்போ அந்தப் பழக்கம் எல்லாருக்கிட்டேயும் வந்திடுச்சு. இப்ப உள்ள புள்ளைக பிரசவம்னாலே பயந்து நடுங்குதுங்க. வலி தாங்க தயாராயில்லே. அதனால, ஆஸ்பத்திரிக்குப் போய் குழந்தை பெத்துக்கிறதுக்கு, நாங்க தடையேதும் சொல்றதில்ல...” என்கிறார் அவர். 

சுகப்பிரசவத்தில் பிறந்த இளைஞர் ஜெயக்குமார் என்பவரிடம் பேசினோம். 

``முன்னல்லாம் பஸ் இருக்காது. எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகணும். அதனாலதான் ஊர்லயே பிரசவம் பாத்துக்கிட்டாங்க. இப்போ பஸ் வசதி வந்திருச்சு. அதனால, ஊருக்குள்ள நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. ஆனா, பொய்யாமேல இருக்கிற நம்பிக்கை மட்டும் குறையலே. எங்க ஊரு பொண்ணுங்க எல்லாரும் இப்போ கூட பொய்யாவத்தான் நம்புறாங்க. ஆஸ்பத்திரிக்கே போனாலும் பொய்யாவ கும்பிட்டுட்டு விபூதி பூசிக்கிட்டுத்தான் போவாங்க. பெரும்பாலும் இன்னைக்கும் சுகப்பிரசவம்தான் நடந்துக்கிட்டிருக்கு...” என்கிறார் ஜெயக்குமார். 

பொய்யாளம்மன் கோயில் பூசாரி ஏகனிடம் பேசினோம். 

``இப்போல்லாம் பெரும்பாலும் யாரும் ஊர் பிரசவம் பாக்குறதில்லை. ஆனா, குழந்தையில்லாதவங்க நிறையபேர் பொய்யாவை வந்து பாத்து கலங்கிட்டுப் போவாங்க. பொய்யா பல பேருக்குக் குழந்தை வரம் கொடுத்திருக்கா..." என்று கையெடுத்து அம்மனை வணங்குகிறார் ஏகன்.