Published:Updated:

ஆண், பெண் இருவரும் சமம்... சித்திரக் கூடத்தில் கவர்ந்த அந்த விசித்திர ஓவியம்!

ஆண், பெண் இருவரும் சமம்... சித்திரக் கூடத்தில் கவர்ந்த அந்த விசித்திர ஓவியம்!
ஆண், பெண் இருவரும் சமம்... சித்திரக் கூடத்தில் கவர்ந்த அந்த விசித்திர ஓவியம்!

ஃபாஸ்ட் ஃபார்வர்டு வாழ்க்கையில் மனநிம்மதியைத் தேடி மனிதன் எடுக்கும் முயற்சிகள் ஏராளம். சிலருக்கு, மென்மையான பாடல்கள் கேட்பது பிடிக்கும். சிலருக்கு, கடல் அலையில் கால் நினைப்பது மனநிம்மதியைத் தரும். பலருக்கு, புதிய உணவு வகைகளை ருசிப்பது அலாதி சந்தோஷத்தைக் கொடுக்கும். இப்படித்தான் இருந்தது இந்த ஓவியங்களின் படைப்பும். `தி ஆர்ட்' (The Art) எனும் புதிய கலைக்கூடம், சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரங்கன் ரோட்டில் புதிதாய்த் தொடங்கப்பட்டுள்ளது எனக் கேள்விப்பட்டதும் விரைந்தேன்.

அழகிய மாலைப்பொழுதில் பல வித்தியாசப் படைப்புகளைப் பார்ப்பதற்கு என்னுடன் சேர்ந்து மழையும் பயணித்தது. நீண்டநேர டிராஃபிக்கைக் கடந்து, மெல்லிய சாரலில் நனைந்துகொண்டே கலைக்கூடத்துக்குச் சென்றேன். `A New Beginning’ எனும் தலைப்பில் இந்தியா முழுவதுமிருந்து ஐந்து கலை நிபுணர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆயில் மற்றும் கேன்வாஸ் ஓவிங்கள், Ink-Pen ஓவியங்கள், உலோக வேலைப்பாடு என அறை முழுவதும் வண்ணங்களால் நிறைந்திருந்தது. அனைத்து வேலைப்பாடுகளையும் பார்த்துவிட்டு, மனதில் எழுந்த பல கேள்விகளுடன் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஜித்தா கார்த்திகேயனைச் சந்தித்தேன்.

``இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் என்ன?"

``வெளிநாடுகளிலெல்லாம் ஓவியங்களைப் போற்றிப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வெவ்வேறு ஓவியங்கள், சிற்பங்களுக்காகவே ஏகப்பட்ட மியூசியங்களில் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில், அப்படிச் சொல்லும் அளவுக்கு இல்லை. ஓர் ஓவியக்கலைஞராக எனக்கு அந்தக் குறை அதிகமாகவே இருக்கிறது. அதன் காரணமாகத்தான் என்னால் முடிந்த அளவுக்கு, இந்தியாவிலிருந்து ஐந்து கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் படைப்புகளை டிஸ்பிளே செய்திருக்கிறோம். சென்னை மக்களுக்கு நிச்சயம் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்."

`ஆண்-பெண் இருவரின் குணாதிசயங்களும் கலந்த உருவம்போல இருக்கிறதே, யார் இவர்கள்?' என, பார்த்ததும் பல கேள்விகள்

எழும்விதமாய் இருந்தன, கேரளாவைச் சேர்ந்த ஓவியர் சுனில் லால் வரைந்த அத்தனை ஓவியங்களும். என் சந்தேகத்தை அவரிடமே கேட்டேன்.

``நான் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன். நான் வளர்ந்த சூழ்நிலைகளைத்தான் இந்த ஓவியங்கள் சொல்லும். ஆனால், அந்தக் கதாபாத்திரங்கள் பார்ப்பதற்கு முழுதாக பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருக்காது. நான் எடுத்துக்கொண்ட தலைப்பு, பாதி ஆண் பாதி பெண் வடிவில் இருக்கும் `அர்த்தநாரீஸ்வரர்'. நம் எல்லோரிடமும் ஆண்-பெண் குணாதிசயங்கள் இருக்கின்றன. இதைப் புரிந்துகொள்ளாமல், `நான் பெருசா... நீ பெருசா..?' எனப் போட்டிபோட்டுகிறார்கள். ஆண், பெண் மட்டுமல்ல, திருநங்கை, திருநம்பி இப்படி இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களும் சமம் என்பதை என் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன்" என்றார் லால்.

கேள்விக்குரிய பதில் கிடைத்ததும், மீண்டும் ஒருமுறை ஓவியங்களை நோட்டமிட்டேன். ஓவியங்களின் மேஜிக் அப்போது தெளிவாகப் புரிந்தது.

பிறகு, சென்னையைச் சேர்ந்த வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான மெட்டல் ஆர்ட்டிஸ்ட் ரவிராம் கைவண்ணத்தில் உருவான உலோகச் சிற்பங்களைப் பார்த்தபடி அவரின் தாயிடம் பேசினேன். இவர் மாபெரும் சிற்பக் கலைஞர் P V ஜானகிராமனின் சகோதர மகன். 

``சின்ன வயசுல இருந்தே, அவரோட பெரியப்பாகிட்ட இருந்து சிற்பம் செதுக்கும் கலையைக் கத்துக்கிட்டார். நிறைய பிரசித்திபெற்ற சிற்பங்கள் செய்திருக்கிறார். அவரோட எல்லா உணர்வுகளையும் சிற்பங்கள் செதுக்கிறது மூலமா வெளிப்படுத்துவார். `காப்பர்' மெட்டல்ல, புராண தெய்வங்கள், பழங்குடி மக்கள், வெவ்வேறு மனிதனின் வடிவங்கள் இப்படி எல்லாத்துக்கும் வடிவம் கொடுத்துடுவார். மற்ற அருங்காட்சியங்களைவிட இங்கதான் அதிகப்படியான சிற்பங்களைக் காட்சிப்படுத்தியிருக்கார்" என்றதும் ரவிராமை வாழ்த்திவிட்டு நகர்ந்தேன்.

பிறகு, அறை முழுவதும் நிறைந்திருந்த பிரமாண்ட ஓவியங்களைப் பார்த்ததும் வியப்பின் உச்சிக்கே சென்றேன். ஆந்திராவைச் சேர்ந்த கோதண்ட ராவ் கைவண்ணத்தில் உருவான அந்த மாபெரும் ஓவியம், மக்கள் நிறைந்த கூட்டம். ஆயில்

கேன்வாஸில் வரையப்பட்டிருந்த அந்த ஓவியத்தின் நுணுக்கங்களைப் பற்றி கோதண்ட ராவ்விடம் கேட்டேன்.

``மனிதர்களின் தற்போதைய உளவியல் நிலைதான் இந்த ஓவியம். குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கையில், திசை தெரியாமல் திண்டாடும் கூட்டம். இதை வரைய நான்கு மாதம் ஆனது. எனக்கு ஓவியம்தான் மூச்சு. இது இல்லாமல் என்னால் வாழவே முடியாது" என்று பெரும்படைப்பை மிகவும் சுருக்கமாய்ச் சொல்லி முடித்தார் கோதண்ட ராவ்.