Published:Updated:

`எங்கள் வலியைப் புரிந்து பயிற்சியளிக்கிறார்!’- மாற்றுத்திறனாளி வீரர்களை உருவாக்கும் கோச் ரஞ்சித்

`எங்கள் வலியைப் புரிந்து பயிற்சியளிக்கிறார்!’- மாற்றுத்திறனாளி வீரர்களை உருவாக்கும் கோச் ரஞ்சித்
`எங்கள் வலியைப் புரிந்து பயிற்சியளிக்கிறார்!’- மாற்றுத்திறனாளி வீரர்களை உருவாக்கும் கோச் ரஞ்சித்

மாற்றங்களை கொண்டுவந்த மாற்றுத்திறனாளி மதுரை கோச் !

``குறைபாடு என்பது உடலுக்குத்தான்... மனதுக்கில்லை'' என்று மார்தட்டுகிறார் மாற்றுத்திறனாளிகளின் கோச் ஜெ.ரஞ்சித் குமார். பல மாற்றுத்திறனாளி வீரர்களின் திறமையை உலகறியச் செய்து, விதியையும் வெல்வோம் என்ற சூத்திரத்தோடு போராடும் ஒரு புயல், மதுரையில் அமைதியாகச் சுழல்கிறது. மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டில், வாய்ப்பு கிடைத்து போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் வெல்வது என்பதே கடுமையான சவால். மாற்றுத்திறனாளிகளின் பயிற்சியாளராக இருப்பது உச்சகட்ட சவால். விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை சத்தமில்லாமல் செய்துவரும் ஜெ.ரஞ்சித் குமாரிடம் பேசினோம்...

``எனக்கு ஆரம்பத்திலிருந்தே இரண்டு கால்களும் செயல்படாது. இந்த நிலையிலேயே எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். மேற்கொண்டு படிக்க முடியாமல், குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் சென்றேன். டெலிபோன் பூத் , டிராவல் ஏஜென்சி என உட்கார்ந்தபடியே பல இடங்களில் வேலை செய்தேன். பிறகு, சின்ன ஒரு மாற்றத்துக்காகவும் வாழ்வில் ஒரு பிடித்தம் ஏற்படவும் மதுரையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினர்களின் யோசனையால் விளையாட்டுத் துறையில் டிப்ளோமா படித்தேன். அப்படியே விளையாட்டுத் துறைக்கு வந்தேன். கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டேன். எனது உடல்வாகு கருதி உட்கார்ந்தே விளையாடும் விளையாட்டுகளைக் கற்றுக்கொண்டேன். ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளில் இரவு-பகலாகப் பயிற்சி எடுத்தேன்.

2001-ம் ஆண்டில் இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசியப் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் வென்றேன். அப்போதுதான் இந்தியாவின் பார்வை என் மீது விழத் தொடங்கியது. அதைத் தொடர்ந்தே 2002-ம் ஆண்டில் சர்வதே அளவிலான எட்டாவது பசிபிக் கேம் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எஃப்-56 பிரிவில் மூன்று போட்டிகளிலும் பங்கேற்றேன். அதில் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வெல்ல முடிந்தது. பரிசு வழங்கும்போது நமது நாட்டின் தேசியக்கொடியை பல்லாயிரக்கணக்கான நபர்கள் மத்தியில் கம்பத்தில் ஏற்றினார்கள். அந்தச் சமயம் என் கண்களிலிருந்து ஆனந்தகண்ணீர் பெருகியதை என்னால் இன்னும் மறக்க முடியாது.

அதற்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளை அள்ளினேன். மொத்தம் 26 நாடுகளுக்குச் சென்று விளையாடிவந்தேன். 10 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தேன். 2002-ம் ஆண்டில் வாஜ்பாய் கரங்களால் பதக்கம் வாங்கினேன். 2006-ம் ஆண்டில் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் சார்பில் நான் மட்டும் வெண்கலம் வாங்கினேன். தமிழக அரசு அதற்காக 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியது. 2007-ம் ஆண்டில் எனக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு வேலையும் வழங்கியது. தற்போது மதுரையில் மாற்றுத்திறனாளிகளின் பயிற்சியாளராக வலம்வருகிறேன்.

திறமையும் அனுபவமும் இருந்தும் இன்னும் எனக்கு நிரந்தரப் பணியாளர் ஆணை வழங்கப்படவில்லை. அதனால் பல பொருளாதாரச் சிக்கலைச் சந்தித்துவருகிறேன். அரசு விரைவாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். 2013-ம் ஆண்டில்கூட பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் விருது வாங்கியுள்ளேன்'' என்றார்.

இவருடைய மாணவர்களில் ஒருவரான கணேசன் கூறுகையில், ``நான் உயரம் குறைந்தவர்களுக்கான விளையாட்டுகளில் பங்கேற்று, பல வெற்றிகளை இந்தியாவுக்குப் பெற்றுத்தந்துள்ளேன். இந்த வெற்றிகளுக்காகப் பல பயிற்சிகளை ரஞ்சித் சார் எனக்கு அளித்தார். கனடாவில் உயரம் குறைந்தவர்களுக்கான தடகளப் போட்டியில் மூன்று தங்கம் வென்றேன். அதனால் எனக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது. என் ஊரார் என்னைத் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். என்னைப்போல் 25-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உலக அளவிலும், 100-க்கும் மேற்பட்ட நபர்கள் தேசிய அளவிலும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்குப் பயிற்சிகள் கொடுத்து வெற்றிபெறவைத்துள்ளார். எங்களைப்போல் அவரும் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால், எங்களின் வலியை அவர் புரிந்துகொண்டு எங்களுக்கு ஏற்றார்போல் பயிற்சிகளை வழங்குகிறார். அவர் எடுத்த பயிற்சிகளின் அனுபவத்தை எங்களிடம் கொண்டுவந்து மாற்றுத்திறனாளி வீரர்களிடம் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்'' எனப் பெருமையுடன் தெரிவித்தார்.

`மாற்றுத்திறனாளிகளின் பயிற்சியாளர் ரஞ்சித்தின் பணியை நிரந்தரப்படுத்துவதன் மூலம் அவரும் அவரால் உருவாகவிருக்கும் பல வீரர்களும் மேம்படுவதோடு, விளையாட்டுத் துறையும் தன் சாதனைகளைத் தொடரும்' என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு