Published:Updated:

வாழ்க்கை விட்ட சவால்... வாகை சூடிய இந்திரா!

வாழ்க்கை விட்ட சவால்... வாகை சூடிய இந்திரா!
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கை விட்ட சவால்... வாகை சூடிய இந்திரா!

தடைகள் தாண்டிய தமிழ்ப்பெண் கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

``அம்மா அப்பாதான் என்னோட உலகம். என் வாழ்க்கைக்கு என்னைவிட இவங்க எனக்காகப் பட்ட, படும் கஷ்டங்கள்தான் அதிகம்” - அம்மாவை அணைத்தபடி தன் மொழியில் இயல்பாகப் பேசுகிறார் இந்திரா பிரியதர்ஷினி. பிறவியிலேயே செவித்திறனை இழந்த இவர், பேச்சுத்திறன் மற்றும் பார்வைத்திறனிலும் குறைபாடுடையவர். ஆனாலும், தளராமல் படிப்பில் கவனம் செலுத்தி, குரூப் 2 தேர்வில் வென்று, இப்போது சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்திலுள்ள புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புற மேம்பாட்டு உதவியாளராகப் பணியாற்றுகிறார். உற்சாகமாகப் பேசும் இந்திராவின் வார்த்தைகள் நமக்குப் புரியாமல் போகும் இடங்களில் உதவுகிறார் அவரின் அம்மா சாந்தி.

“சேலம்தான் எங்களுக்குச் சொந்த ஊர். எனக்குப் பிறவியிலேயே செவித்திறன் இல்லை. எந்தச் சிகிச்சைக்கொடுத்தும் பலனில்லை. அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைச்சு சென்னைக்கு வந்தோம். என்னை சென்னையிலுள்ள காதுகேளாதோர் பள்ளி ஒன்றில் சேர்த்துவிட்டாங்க. அங்க படிக்கிற பிள்ளைங்களோட அம்மாக்கள், விருப்பம் இருந்தா அங்கேயே ஆசிரியையாக வேலை பார்க்கலாம். என்னைக் கவனிச்சுக்கிறதுக்காக எங்கம்மா அங்கே டீச்சரா சேர்ந்தாங்க. நான் நல்லா படிச்சதால, நார்மல் மாணவர்களுடன் சேர்ந்துப் படிச்சா இன்னும் முன்னேற்றம் கிடைக்கும்னு அந்தப் பள்ளியின் தாளாளரும் முதல்வரும் அறிவுரை கொடுக்க, பெற்றோர் என்னை வேறு பள்ளியில் சேர்த்தாங்க. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பிறகு `க்ளாஸ் டாப்பர்’ மாணவர்களுக்குப் போட்டியாகும் அளவுக்கு முன்னேறினேன். பத்தாம் வகுப்பில் 93%, ப்ளஸ் டூ-வில் 81% மார்க் எடுத்து ஜெயிச்சுக்காட்டினேன்’’ என இந்திரா சிரிக்க, நெகிழ்ச்சியாகத் தொடர்கிறார் சாந்தி...

வாழ்க்கை விட்ட சவால்... வாகை சூடிய இந்திரா!

“ஆரம்பத்துல நாங்க ரொம்ப உடைஞ்சுட்டாலும், ‘கடவுள் கொடுத்த இந்தக் குழந்தையை வெற்றியாளர் ஆக்கிக் காட்டுறதுதான் நம்ம பொறுப்பு’னு உறுதியெடுத்தோம். தொடர்ந்து இந்திராவுக்கு ஸ்பீச் தெரபி கொடுத்தோம். அதுக்கு ஓரளவுக்குப் பலன் கிடைச்சது. தன்னோட மூணு வயசுல ‘அம்மா’, ‘அப்பா’னு திக்கித் தடுமாறி அவ கூப்பிட்ட கணம் கண்ணீரை மட்டுமல்ல, நம்பிக்கையையும் கொடுத்துச்சு. அவளை வளர்க்கும் பொறுப்புக்காகவே ரெண்டு முறை எனக்குக் கிடைச்ச கவர்ன்மென்ட் டீச்சர் பணிவாய்ப்பை ஏத்துக்கலை. 

ஒருவழியா அவ காலேஜ் சேர்ந்தப்போ, நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம். ஆனா, எங்களை மறுபடியும் நிலைகுலைய வெச்சது இந்திராவுக்கு ஏற்பட்ட `ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா’ (Retinitis Pigmentosa) என்ற பார்வைக் குறைபாடு பிரச்னை. இந்தப் பாதிப்பால கண்ணுக்கு நேர்ல இருக்கிறதை மட்டும்தான் பார்க்க முடியும்; வலது, இடதுபுறங்களில் சரியா பார்க்க முடியாது. ‘இந்தப் பிரச்னை தொடர்ந்து வளர்ந்துட்டேதான் இருக்கும்’னு டாக்டர்ஸ் சொன்னாங்க. இப்போவரை தினமும் அதுக்காக மருந்து எடுத்துக்கிறா என் பொண்ணு. இருக்கிற பார்வையை வைத்தே சளைக்காம முன்னேறிட்டே இருக்கா’’ என்கிறவர் பெருமிதத்துடன் மகள் முகம் பார்க்கிறார்.

“என் நிழலாவே அம்மா இருக்கிறதாலதான் என்னோட சிரமங்கள் குறையுது’’ என அம்மாவின் தலையை வருடியபடியே தொடர்கிறார் இந்திரா... “எனக்குப் படிப்பு ரொம்பப் பிடிக்கும். அம்மாதான் ட்யூஷன் டீச்சர். டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.எஸ்ஸி மேத்ஸ் படிச்சேன். சேலம் அரசு ஆர்ட்ஸ் காலேஜ்ல எம்.எஸ்ஸி படிச்சேன். வீட்டில் இருந்தபடியே பேங்க் மற்றும் டிஎன்பிஎஸ்சி எக்ஸாம்ஸுக்குப் படிச்சேன். நிறைய தேர்வுகள் எழுதியும் வெற்றி கிடைக்கலை. ஆனாலும், `இந்தச் சமூகத்துல ஒரு மதிப்புமிக்க வேலையைச் செய்யணும்; என் சொந்தக்கால்ல நின்னு வாழணும்னு மனசுல ஒரு வைராக்கியத்தை வளர்த்துக்கிட்டேன். அதுதான் என்னைத் துவளாம போட்டித்தேர்வுகளை நோக்கி விரட்டிச்சு. அப்போதான் ஒரு மதிப்புமிக்க வெற்றியும், ஒரு தாங்கமுடியாத சோகமும் எனக்குக் கிடைச்சது’’ என்பவரின் குரல் மெலிகிறது...

“நான் போட்டித் தேர்வுக்குப் படிச்சுக்கிட்டு இருந்தபோது, வீட்டில் நிறைய வரன்  பார்த்தாங்க. ஆரம்பத்தில் எதுவும் சரியா அமையல. ஒருவழியா என் செவித்திறன், பார்வைத்திறன், பேச்சுத்திறன்னு என்னோட எல்லா பிரச்னைகளையும் எடுத்துச் சொல்லி, 2013-ல் எனக்குத் திருமணம் செஞ்சு வெச்சாங்க. 2014-ல் குரூப் 2 எக்ஸாம்ல தேர்வாகி, தூத்துக்குடியில ரூரல் டெவலப்மென்ட் அசிஸ்டென்ட் அதிகாரியா போஸ்ட்டிங் கிடைச்சுது. அதுவரை பல வலிகளையும் சவால்களையும் சந்திச்ச எனக்கு, அந்த வேலை மாமருந்தா இருந்தது. இனம்புரியாத மகிழ்ச்சி கிடைச்சது. இனி நம்ம உழைப்புல பயணிக்கப் போறோம்னு உற்சாகம். ஆனால்... இன்னொரு பக்கம், என்னோட கல்யாண வாழ்க்கை சரியா அமையலை...’’ - வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லும் இந்திரா, தூத்துக்குடியில் ஓராண்டு பணியாற்றிய நிலையில், அடுத்து சென்னைக்கு மாறுதலாகி வந்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாழ்க்கை விட்ட சவால்... வாகை சூடிய இந்திரா!

``அப்பாவும் எனக்காக வி.ஆர்.எஸ் வாங்கிவிட... மறுபடியும் நான், அப்பா, அம்மானு வாழ்க்கை ஆரம்பிச்சது. பல வலிகளைக் கடந்து வந்தவள் என்பதால, கடந்த ஆண்டு கிடைச்ச விவாகரத்து அதிர்ச்சியையும் கடக்கப் பழகினேன். என் வேலையில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து எனக்கு எளிதா புரொமோஷன் கிடைக்க உதவியா இருக்குமேனு, என்னோட ஏழு டிபார்ட்மென்டல் எக்ஸாம்களையும் எழுதி செலக்ட் ஆனேன்” என்பவர், தன் பணிச்சூழல் பற்றிச் சொன்னார்.

“ஃபீல்டு விசிட் இருக்காது. எனக்கு வரக்கூடிய கோப்புகளைச் சரிபார்த்து அதை மூவ் செய்றது, திட்ட அறிக்கையைத் தயார் செய்றதுதான் என்னோட வொர்க். மேலும், சத்துணவு, கிராமப்புற முன்னேற்றம், சமூக நலம் உள்ளிட்ட சமூக நலத்துறை தொடர்பான அலுவலகப் பணிகளைக் கவனிக்கிறேன். பல சோகங்கள் எனக்குள்ள இருந்தாலும், தினமும் பலதரப்பட்ட மக்களை பார்க்கிறப்போ, பழகுறப்போ அதெல்லாம் என்னைவிட்டுப் பறந்துபோயிடும். நண்பர்கள், சோஷியல் மீடியானு என்னை மகிழ்ச்சியா வெச்சுக்கிறேன். எனக்குக் கேட்கும் திறன் இல்லைன்னாலும், உலக நடப்புகளில் என்னை அப்டேட்டடா வெச்சுப்பேன். சவாலான வாழ்க்கைதான் என்றாலும், அதையும் முடிந்தவரை சுயமா வாழணும் என்பதில் உறுதியா இருக்கேன்’’ என்று உற்சாகமாகச் சொல்லும் இந்திராவைத் தொடர்கிறார் அவர் அம்மா...

“அரசு ஊழியரோட பெற்றோர் என்பதுல எங்களுக்குப் பெரிய பெருமை. நார்மல் குழந்தைகளை வளர்க்கவே நிறைய சவால்கள் இருக்கிற இந்தச் சமூகத்துல, இந்திரா மாதிரியான ஸ்பெஷல் குழந்தைகளை வளர்ப்பது, ஆளாக்குவது ரொம்பவே சிரமம்.   முன்பைவிட இப்போ சிறப்புக் குழந்தைகளைச் சமூகம் அணுகும் விதம் முன்னேறியிருக்கு. ஆனா, அது இன்னும் மேம்படணும். நம்மளைப்போல இவங்களாலயும் சிறப்பா செயல்பட முடியும். அதுக்கு எல்லோரும் வாய்ப்பும் ஆதரவும் கொடுக்கணும். ‘நான் நிறையப் படிக்கணும், வேலைக்குப் போய் உங்க ரெண்டு பேரையும் காப்பாத்தணும்’னு சொல்லிட்டே இருந்த என் மகளோட கனவு நனவாகியிருப்பதில், வழியெங்கும் எங்களுக்கு ஆங்காங்கே துணையா நின்ற நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்!” - கூப்பிய தன் தாயின் கைகளைப் பற்றிக்கொள்கிறார் இந்திரா பிரியதர்ஷினி.