Published:Updated:

''நம் பேரன்கள் காலத்தில் கரகாட்டம் இல்லாமல் போகும்!’’ - மதுரை மலைச்சாமி

''நம் பேரன்கள் காலத்தில் கரகாட்டம் இல்லாமல் போகும்!’’ - மதுரை மலைச்சாமி
''நம் பேரன்கள் காலத்தில் கரகாட்டம் இல்லாமல் போகும்!’’ - மதுரை மலைச்சாமி

``கல்யாண வீட்லயும் வி.ஐ.பி-களின் வரவேற்புக்கும் கேரளத்துச் செண்டமேளங்களை அழைப்பதை கௌரவமா நினைக்கிறாங்க. அது அவங்க தனிப்பட்ட விருப்பமாக்கூட இருக்கலாம். ஆனா, அதன் காரணமா கிராமியக் கலைகள் அழிஞ்சுட்டு வருதுங்கிறதையும் நாம கவனிக்கணும்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``பல்வேறு வளர்ச்சியடைஞ்சுட்டதா சொல்லப்படுற இந்தக் காலத்துலயும், ஒவ்வொரு தடவை நாங்க கரகாட்டம் ஆட போகும்போதும், `டிரெஸ் மாத்தணும்... ரூம் இருந்தா குடுங்க'ன்னு கேட்கிறப்போல்லாம் எங்களுக்கு மாட்டுக்கொட்டகையையும், பாழடைஞ்ச கட்டடங்களையும்தான் காட்டுவாங்க. பெண் கலைஞர்களின் நிலைமை இன்னும் மோசம். உடல் அங்கங்களையும் குட்டைப் பாவாடையையும் ஆயிரம் கண்கள் மொய்க்கும். நூறு ரூபாய்க்குச் சில்லறையா நோட்டுகளை வாங்கி வெச்சிப்பாங்க. அப்படி வெச்சுக்கிட்டா, பத்துத் தடவ காசு குத்துற சாக்குல தீண்டலாமே. இப்படிச் சொல்லப்படாத அவர்களின் பாலியல் ரீதியான சீண்டல்களை மறைச்சுக்கிட்டுதான் உங்க முன்னாடி சிரிச்சுக்கிட்டே ஆடுறாங்க!" - ஆதங்கத்தோடு பேசினார், கரகாட்டக் கலையில் தனது சிறப்பான பங்களிப்புக்காக தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் `கலைச் சுடர்மணி' விருது பெற்ற மதுரை எஸ்.மலைச்சாமி. 

இவர், வெறும் கரகாட்டக்கலைஞர் மட்டுமல்ல; எம்.இ பட்டதாரியும்கூட! சேது பொறியியல் கல்லூரியின் கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுத் துறையின் இணைப் பேராசிரியர். கல்லூரியில் பணியாற்றினாலும் கலை மீதுகொண்ட தாகத்தினால் தலையில் கரகம் சுமந்துகொண்டிருக்கிறார். இணை பேராசிரியர், கரகாட்டக் கலைஞர், சிறுகதை எழுத்தாளர், நாட்டுப்புறப் பாடகர், ஹைக்கூ கவிஞர், குறும்பட இயக்குநர் எனப் பன்முகத் திறமைகொண்ட மலைச்சாமியுடன் பேசினோம்.

``கல்யாண வீட்லயும் வி.ஐ.பி-களின் வரவேற்புக்கும் கேரளத்துச் செண்டமேளங்களை அழைப்பதை கௌரவமா நினைக்கிறாங்க. அது அவங்க தனிப்பட்ட விருப்பமாக்கூட இருக்கலாம். ஆனா, அதன் காரணமா கிராமியக் கலைகள் அழிஞ்சுட்டு வருதுங்கிறதையும் நாம கவனிக்கணும். நாங்கள்லாம் படிக்கிறப்போ, தெருக்கூத்து பார்த்துதான் வளர்ந்தோம்.

இப்பெல்லாம் டி.ஆர்.பி-க்காக கிராமியக் கலாசாரம்னு சொல்லி டிவி ஷோக்களில் காட்டுறதை நம்ம புள்ளைங்க அதிசயித்துப் பார்க்கிறாங்க. கிராமியக் கலைகளான கரகாட்டமும், ஒயிலாட்டமும் மெட்ரோ சிட்டிகளில் `டிரெடிஷனல் ஈவன்ட்'களில் மட்டுமே தலைகாட்டிப் போகின்றன. இப்படியேவிட்டா, நாளைக்கு நம்ம பேரப் புள்ளைங்களுக்கு இந்தப் பாரம்பர்யமே இல்லாம மறைஞ்சுபோயிடும். திரையில் தப்பாட்டத்துக்கும், சூப்பர் சிங்கர் செந்திலுக்கும் `வாவ்' போட்ட வாய்கள்தான் எங்களை வசவு பாடவும் செய்யுது. இத்தனை வசவுகளையும் பொருட்படுத்தாமல், பேருந்துகூட செல்லாத குக்கிராமங்களுக்கும் நீண்ட தூரம் பயணித்து தெருவிலும்  திருவிழாக்களிலும் ஆடிக்காெண்டேதான் இருக்கு பலரோட கால்கள்" என்றவரின் குரலில் கோபமும் ஆற்றாமையும் ஒருசேர ஒலித்தன. 

16 வருடமாகக் கரகாட்டம் ஆடிவரும் மலைச்சாமி, தற்போது பகுதி நேரத்தில் பிஹெச்.டி படித்துவருகிறார். திருநங்கைகளுக்கும், அரசுப் பள்ளி மற்றும் காப்பகக் குழந்தைகளுக்கும் இலவசமாக ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் முதலான பயிற்சிகளையும் அளிக்கிறார். தன்னுடைய இரு மகன்களுக்கும் சிலம்பாட்டத்தை முறையாகப் பயிற்றுவித்து, தனது கலைப்பணியை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்கிறார். காசுக்காக இல்லாமல் கலை வளர்ச்சிக்காவும், கலை ஆர்வம் குறையாமல் 300-க்கும் மேற்பட்ட மேடைகளை அலங்கரித்திருக்கிறார் இந்த `கலை'ச்சாமி!

இவரைப்போன்று கலைக்காக மட்டுமே வாழ்ந்துவரும் கலைஞர்களை, விருதுகளும் திறமைக்கேற்ற அங்கீகாரங்களுமே ஊக்குவிக்கின்றன. தமிழ்க் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அக்கறை உடைய மலைச்சாமியின் ஆர்வமும் உழைப்பும் சமூகக் கலை மீதானதாகவே உள்ளன. இதுபோன்று தமிழ்க் கலைகள் மீது சற்றே அக்கறைகொண்டாலே, தமிழின் பாரம்பர்யமிக்கக் கலைகள் காக்கப்படும். நமது கலைகளை அயல்நாட்டவர்கள் விரும்பிப் பின்பற்றும் இந்தத் தருணத்தில், அவற்றை நாம் மறந்துபோனது ஏனோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு