Published:Updated:

``டீச்சர்னு பொய் சொல்லி சமூக சேவை பண்ணிட்டு இருந்தேன்” மாநில இளைஞர் விருது பெற்ற அஷ்வீதா

``டீச்சர்னு பொய் சொல்லி சமூக சேவை பண்ணிட்டு இருந்தேன்” மாநில இளைஞர் விருது பெற்ற அஷ்வீதா
``டீச்சர்னு பொய் சொல்லி சமூக சேவை பண்ணிட்டு இருந்தேன்” மாநில இளைஞர் விருது பெற்ற அஷ்வீதா

சுதந்திர தினம் அன்னிக்கு மாநில முதல்வர் கையால இந்த விருது வாங்கின அந்த நிமிஷத்தை என்னால வார்த்தைகளால சொல்லிட முடியலை. சின்ன வயசுல அம்மாகூட சேர்ந்து பீடி சுத்தும்போது இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுக்கூட பாத்ததில்ல.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``மூக சேவைதான் எனக்கான களம்னு முடிவுபண்ணின சில நிமிடங்களிலேயே சமாளிக்க முடியாத பல தடைகள் எனக்கு முன்னாடி இருந்துச்சு. முதல்ல, வீட்டின் பொருளாதார சூழலைச் சரிசெய்யணும். அடுத்ததா, 'பொம்பளைப் புள்ளை டெல்லி வரை போய் படிக்கிறது நம்ம குடும்பத்துக்கு சரிவருமா, காலம் கெட்டுப்போய் கெடக்குது'னு பேச ஆரம்பிச்ச உறவினர்களைச் சமாளிக்கணும். பிறந்து வளர்ந்த கிராமத்தையே தாண்டாத நான், எந்த சப்போர்ட்டும் இல்லாம டெல்லியில் தனியாளா தாக்குப் புடிக்கணும். இப்படிப் பல யோசனைகள், சிக்கல்கள். ஆனா, இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு, ஊருல அம்மாவோடு சேர்ந்து பீடி சுத்தி வாழ்க்கையை ஓட்டவும் துளிகூட விருப்பமில்லே. அதனால், அன்னிக்குத் துணிஞ்சு நம்பிக்கையோடு டெல்லிக்குப் போனேன். இன்னிக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் முதல்வர் கையால் விருது வாங்கியிருக்கேன்” - முகம் முழுவதும் பூரிப்பும் குரல் நிறைய பெருமிதத்துடனும் பேசுகிறார் அஷ்வீதா.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த 72-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, சிறந்த மாநில இளைஞருக்கான விருதை முதலமைச்சரிடமிருந்து பெற்றவர் அஷ்வீதா. ஆண்கள் பிரிவில் இருவர் பெற்ற விருதைப் பெண்கள் பிரிவில் இவர் ஒருவரே பெற்றிருந்தார்.

“திருநெல்வேலிக்குப் பக்கத்துல முக்கூடல்தான் என்னோட சொந்த ஊர். அப்பாவுக்கு பீடி கம்பெனியில் கணக்கு பாக்குற வேலை. இப்போவரை அம்மாவும் பீடி சுத்திட்டிருக்காங்க. எங்க ஊர் பக்கமெல்லாம் பொம்பளைப் புள்ளைகளைப் பள்ளிக்கூடம் பக்கமே அனுப்பாம இருந்தாங்க. இப்போதான் காலம் கொஞ்சம் மாறியிருக்கு. ஆனாலும், பன்னிரண்டாம் வகுப்பு தாண்டினதும் கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்க. என் அக்காவை அப்படித்தான் காலேஜ் படிக்கவிடாம குடும்ப வாழ்க்கையில் தள்ளிட்டாங்க. இப்போ அவள் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா. என் அண்ணா, டிப்ளோமா முடிச்சுட்டு எலக்ட்ரீஷனா இருக்கான். குடும்பம் கஷ்டத்தில் இருந்தாலும், ஒரே மூச்சா படிச்சுடணும்னு உறுதியா இருந்தேன். எத்தனையோ போராட்டத்துக்குப் பிறகுதான் கல்லூரிக்குப் போனேன். அரசுத் தேர்வுகளுக்கும் தயாராகிட்டிருந்த சமயத்துல, 'யங் இந்தியா ஃபெல்லோஷிப்' பற்றி தெரியவந்துச்சு. எதேச்சையா அப்ளை பண்ணி செலக்ட் ஆனேன். ஸ்காலர்ஷிப் மூலமா டெல்லி அசோகா யுனிவர்சிட்டியில் ஓராண்டு முதுநிலைப் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அது என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய கிஃப்ட்டுன்னுதான் சொல்லணும்” என்கிறார்.

டெல்லி சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தும், நேர்முகத் தேர்வுக்குச் செல்லவே பணம் இல்லாத சூழலில், அந்த வாய்ப்பை இழக்க வேதனையுடன் துணிந்திருக்கிறார் அஷ்வீதா. ஆனால், சூழலைப் புரிந்துகொண்ட அசோகா யுனிவர்சிட்டி, ஸ்கைப் மூலமாகப் பேசி தேர்வுசெய்திருக்கிறது.

``எல்லாமே நல்லபடியா முடிஞ்சு டெல்லிக்குக் கிளம்பணும். ஆனால், வீட்டுல யாருமே சப்போர்ட் பண்ணலை. நமக்குத்தான் ஸ்காலர்ஷிப் இருக்கே பாத்துக்கலாம்னு கிளம்பிட்டேன். 2012 முதல் 2013 வரை டெல்லி படிப்பு. அப்புறம், தஞ்சாவூர்ல சுகவாழ்வியல் கேர் ஆரோக்கிய நிலையம் மூலமா சோஷியல் ஆக்ட்டிவிட்டீஸ் பண்ணிட்டிருந்தேன். அப்போ வீட்டுல டீச்சர் வேலைக்குப் போறேன்னு பொய் சொல்லி சோஷியல் சர்வீஸ் பண்ணிட்டு இருந்தேன். ஒருகட்டத்துல வீட்டுக்குத் தெரிய ஆரம்பிச்சதும் 2015-ம் ஆண்டு, திரும்பவும் முக்கூடலுக்குப்போய் 'போதி ட்ரீ' என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். கிராமத்து மாணவர்களும் பெண்களும் தங்களோட வாழ்க்கை முறையைச் சிறப்பானதா தாங்களே வடிவமைச்சுக்கணும், செல்ஃப் மோட்டிவேஷனை வளர்க்கணும், நம் வாழ்க்கைக்கு என்ன தேவை? நம்மிடம் இருக்கும் திறமையை எப்படி வெளிப்படுத்தணும் என்கிற மாதிரியான பயிற்சிகளைச் சொல்லிக்கொடுக்கிறோம். இப்போதைக்கு ஆலங்குளம் பக்கத்தில் குறிப்பன்குளம், பேட்டைக்கு அருகேயுள்ள சீதபற்பநல்லூர் போன்ற இடங்களில் 'போதி ட்ரீ' இயங்கிட்டிருக்கு. என்னோட சேர்த்து 3 பேர் ஃபுல்டைமா பாத்துக்கிறோம். அதுபோக, டெல்லி மற்றும் சென்னையில் உள்ள நண்பர்களும் வந்து கிராம மக்களுக்கு அவேர்னஸ் புரோகிராம் நடத்திக்கொடுப்பாங்க. 'போதி ட்ரீ' ஆரம்பிச்ச மூணு வருஷத்துல 8,500 பேர் பயன்பெற்றிருக்காங்க. இன்னும் நிறைய மாணவர்களையும் பெண்களையும் நாங்க ரீச் பண்ணனும். ஒரு கிராமத்தை, அங்குள்ள இளைஞர்களே பாதுகாக்கணும் என்பதுதான் எங்க எண்ணம். அதற்கான பொறுப்பு உணர்வை அவங்ககிட்ட கொடுத்துட்டாளே போதும். இளைஞர்களிடம் தன்னம்பிக்கை வளர்ந்துடும்'' என நம்பிக்கையுடன் சொல்கிறார் அஷ்வீதா. 

தமிழக அரசின் சிறந்த மாநில விருதுக்குத் தேர்வானது பற்றிப் பேசுகையில் முகம் மேலும் மலர்கிறது. “நான் எதிர்பார்க்கவே இல்லை. அதோடு, எனக்குத் தமிழக அரசு இப்படியொரு விருது கொடுக்கிறாங்கன்னே தெரியாது. எங்க மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சார்தான் இந்த விருதுக்கு என்னை அப்ளை பண்ணச் சொல்லியிருந்தார். 'எனக்கு எப்படி சார் விருது கிடைக்கும். அதெல்லாம் வேணாம்'னு சொன்னேன். ஆனாலும், அவர் வற்புறுத்தவே அப்ளை பண்ணினேன். பத்து நாளைக்கு அப்புறம் போஸ்ட் ஆபீஸிலிருந்து போன் வந்துச்சு. அப்போவே நான் ஷாக் ஆகிட்டேன். மாநில முதல்வர் கையால் விருது வாங்கின அந்த நிமிஷத்தை வார்த்தைகளால் சொல்லிட முடியலை. சின்ன வயசுல அம்மாவோடு சேர்ந்து பீடி சுத்தும்போது, இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுக்கூட பாத்ததில்லே. நான் வாங்கியிருக்கும் முதல் அரசு விருது இதுதான். தலைமைச் செயலகத்திலிருந்து நேரா என் ஆசிரியர் வீட்டுக்குத்தான் போனேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். டிவியில் பார்த்துட்டு ஊரிலிருந்து நிறைய போன் கால்ஸ் வர ஆரம்பிச்சது. அப்பாவும் அம்மாவும் மனசு நிறைஞ்சு வாழ்த்தினாங்க. என் அக்கா போன் பேசும்போதே கண்ணீர்விட்டு அழுதுட்டா. அந்தக் கண்ணீருக்குப் பின்னாடி சொல்லமுடியாத பல கதைகள் இருக்கு. அப்போ முடிவுபண்ணினேன். இனி எந்த ஒரு பெண்ணும் படிக்க முடியலையேன்னு கண்ணீர்விடக் கூடாது. இதுதான் இன்னைக்கு நான் எடுத்துக்கிட்ட முடிவு. நிச்சயமா இந்த விருது அந்த முடிவைச் செயல்படுத்தும் ஊக்கத்தைக் கொடுக்கும்” எனத் தன்னம்பிக்கையோடு பேசுகிறார் அஷ்வீதா.

முக்கூடல் எனும் சிறு கிராமத்திலிருந்து வந்த 'போதி ட்ரீ' தன் கிளைகளை இந்தியா முழுவதும் பரப்பட்டும். ஆயிரமாயிரம் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் நிழல் தரட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு