Published:Updated:

வேப்பம்பூ சூப், தானியக் கஞ்சி, பிரண்டைத் துவையல்... தொல் திருமாவளவனின் ஃபிட்னஸ் ரகசியம்! #HBDThirumavalavan

வேப்பம்பூ சூப், தானியக் கஞ்சி, பிரண்டைத் துவையல்... தொல் திருமாவளவனின் ஃபிட்னஸ் ரகசியம்! #HBDThirumavalavan
வேப்பம்பூ சூப், தானியக் கஞ்சி, பிரண்டைத் துவையல்... தொல் திருமாவளவனின் ஃபிட்னஸ் ரகசியம்! #HBDThirumavalavan

காலை உணவாக சிவப்பரிசிக் கஞ்சி, வரகுக் கஞ்சி, குதிரைவாலிக் கஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவார் திருமாவளவன்.

மிழக கிராமங்களில் அதிகம் கால் வைத்த தலைவர்களில் ஒருவர், தொல்.திருமாவளவன். இடைவிடாத பயணங்கள், போராட்டங்கள் எனத் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டேயிருக்கும் திருமாவளவன் ஃபிட்னஸ், டயட் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர்.   

திருமாவளவன், அரியலூர் மாவட்டம், அங்கனூர் என்ற கிராமத்தில் 1962-ம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர், தொல்காப்பியன் - பெரியம்மாள். சென்னை மாநிலக் கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டமும், குற்றவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சென்னைச் சட்டக்கல்லூரியில் சட்டமும் படித்திருக்கிறார்.

ஆரம்பத்தில், அரசு தடய அறிவியல் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். பின்னர் பணியிலிருந்து விலகி, தீவிர அரசியலில் இறங்கினார். இன்றோடு அவருக்கு 56 வயது முழுமையடைகிறது. தனது பிறந்தநாளை முன்னிட்டு, பனை விதைகளைச் சேகரிக்கச் சொல்லி தனது கட்சித் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

`அவர் எப்போது தூங்குகிறார், எப்போது எழுகிறார் என்று எங்களுக்கே தெரியாது, பார்க்கும்போதெல்லாம் ஏதாவது எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும்தான் இருக்கிறார் ' என உடனிருப்பவர்களே ஆச்சர்யப்படுமளவுக்குக் கடுமையாக உழைப்பவர் திருமாவளவன். அவரின் இந்த இடைவிடாத உழைப்புக்கு அவர் கடைப்பிடித்து வரும் உணவுப் பழக்கம் பெரிதும் உதவுகிறது. 

* இரவு எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார் திருமாவளவன்.  

* எழுந்ததும் தனது கட்சி அலுவலக மாடியில் சிறிதுநேரம் நடைப்பயிற்சி. செய்வார். பிறகு, கை, கால் தசைகளுக்கான சிறுசிறு உடற்பயிற்சிகளையும் செய்வார்.

* தொடர்ச்சியாக யோகா செய்வதும் உண்டு. சில மாதங்களாக அதை விட்டுவிட்டார். 

* பெரும்பாலும் இயற்கை உணவுதான். காலை உணவாக சிவப்பரிசிக் கஞ்சி, வரகுக் கஞ்சி, குதிரைவாலிக் கஞ்சி இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடுவார். கஞ்சியுடன் காய்கறிகளும், பிரண்டைத் துவையலும் கட்டாயம் இருக்கும். 

* கீரை இல்லாமல் அவர் மதிய உணவு சாப்பிடுவதே இல்லை. ஏதாவதொரு கீரைக் கண்டிப்பாக இருக்கவேண்டும். 

* சோளம், சிவப்பரிசி, வரகரிசி... இவற்றில் ஏதாவது ஒரு தானியத்தில் செய்யப்பட்ட சாதம், உடன், ஒரு காய்கறிக் கூட்டு. பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய் அவருக்கு மிகவும் பிடித்த காய்கறிகள். ஒரு கீரைப் பொரியல். முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவார். 

*முளைக்கட்டிய தானியங்கள், வேகவைக்கப்பட்ட பயறு வகைகள் போன்றவற்றை மாலை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வார். வெளியூர் பயணம் என்றால் சூப் அருந்துவார். 

* இரண்டு சப்பாத்தி, சிறிதளவு காய்கறிகள் மட்டுமே இரவு உணவு.

*அசைவ உணவுகளைத் தவிர்த்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. 

* ``புத்தகம்தான் என்னை மன அழுத்தத்திலிருந்து மீட்கிறது" என்கிறார் திருமாவளவன். தினமும் ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிடுவார்.  

*காபி அருந்தும் வழக்கமில்லை. எங்கேனும் செல்லும்போது, அங்குள்ளவர்கள் வற்புறுத்தினால் அரை கப் சாப்பிடுவார். அவருக்குப் பிடித்தது வேப்பம்பூ சூப். சில நேரங்களில் கொள்ளு சூப்பும் அருந்துவார். 

* சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எந்த உடல்நலப் பாதிப்புகளும் அவருக்கில்லை. தூங்கும் நேரம் மிகக்குறைவாக இருப்பதால் தூக்கமின்மை சார்ந்த பிரச்னைகள் மட்டும் இருக்கிறது.

* சில நாள்களுக்கு முன்பு, `கண்டிப்பாக எட்டு மணி நேரம் தூங்கவேண்டும்' என்று மருத்துவர்கள் அவரை வலியுறுத்தியுள்ளார்கள். ஆனாலும், அதைக் கடைப்பிடிக்கவில்லை திருமாவளவன். 

அடுத்த கட்டுரைக்கு