Published:Updated:

``சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது!'' - பைபிள் #Bible

``சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது!'' -  பைபிள் #Bible
``சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது!'' - பைபிள் #Bible

``சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது!'' - பைபிள் #Bible

ப்ரூஸ்ரிட்டர் என்பவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் குருவாக இருந்தார். ஒருநாள் நள்ளிரவில் அவர் வசிக்கும் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுவனும் சிறுமியும் பரிதாபமான கோலத்தில் நின்றார்கள். நள்ளிரவு நேரம் என்பதால், அவர்களிடம் பெரிதாக எதுவும் பேசாமல்  தங்குவதற்கு இடமளித்துவிட்டு அவர் தூங்கச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் அவர் கண்விழித்துப் பார்த்தபோது, அங்குள்ள அறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டார். அதுமட்டுமல்லாமல், அவருக்கான காலை உணவும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.

இவை எல்லாவற்றையும் பார்த்து ஆச்சர்யப்பட்ட ப்ரூஸ்ரிட்டர், அந்த சிறுவனையும் சிறுமியையும் அழைத்து, `நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், ஏன் இப்படி நள்ளிரவில் தனியாக வந்தீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், `நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது பெற்றோர் எங்களை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்' என்று சொல்லி கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டனர். அவர்களது நிலைமையைப் புரிந்துகொண்ட ப்ரூஸ்ரிட்டர் என்ற அந்த குருவானவர், அந்தக் குழந்தைகளிடம், ``நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு நான் எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன்'' என்று சொன்னார். இதைக்கேட்டு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அங்கே தங்கினார்கள்.

இதற்கிடையே சிலர் ப்ரூஸ்ரிட்டரிடம், ``முன்பின் தெரியாத குழந்தைகளை உங்களோடு வைத்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. இது பிற்காலத்தில் பெரிய பிரச்னையில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் அவர்களை துரத்திவிடுங்கள்'' என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் சொல்வது எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அந்தக் குழந்தைகளைத் தன்னுடன் வைத்துப் பராமரித்து வந்தார். சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு யோசனை வந்தது. `நாம் ஏன் பெற்றோரால் துரத்தப்பட்ட இதுபோன்ற குழந்தைகளுக்காக ஓர் இல்லம் தொடங்கக்கூடாது...' என்பதே அவரது யோசனை. உடனே,  அவர் தன்னுடன் இருந்த அந்த இரண்டு குழந்தைகளையும் கொண்டு `உடன்படிக்கையின் இல்லம்' என்ற ஒரு இல்லத்தை அமைத்தார்.  ஊர்மக்கள் சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் ஏழைகள்,கைவிடப்பட்ட மற்றும் அநாதைக் குழந்தைகளுக்காக அவர் ஏற்படுத்திய இல்லத்தில் ஏராளமான குழந்தைகள் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.

இது வரலாற்று நிகழ்வு. இங்கே விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வையும் நாம் உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

இயேசு கிறிஸ்து சிறுபிள்ளைகளை தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு ஆசி வழங்குகிறார். ஆனால், இயேசுவின் சீடர்களோ, குழந்தைகள்மீது அவருக்குள்ள அன்பினைப் புரிந்துகொள்ளாமல் அவரிடம் குழந்தைகளைக் கொண்டு வந்த பெற்றோரைத் தடுக்கின்றார்கள். இதைக்கண்ட இயேசு சீடர்களைக் கடிந்தபடி தன்னிடம் அழைத்துவரப்பட்ட குழந்தைகளைக் கூப்பிட்டு, அவர்களை ஆசீர்வதிக்கிறார். இந்த நிகழ்வு நமக்கு ஒரு சில உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளைப் பெரியவர்கள் ஆசீர்வதிக்கும் பழக்கம் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. யாக்கோபு, யோசேப்பின் இரு புதல்வர்களான மனாசேயையும் எப்ராயிமையும் ஆசீர்வதித்ததாக விவிலியம் நமக்குச் சான்று பகர்கிறது. இந்தப் பின்னணியில்தான் தங்களது குழந்தைகளை இயேசு ஆசீர்வதிக்க வேண்டும் என்று அதன் பெற்றோர் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இயேசுவும் அந்தக் குழந்தைகளை ஆசீர்வதிக்க முன்வருகின்றார். ஆனால், சீடர்கள் இயேசுவைக் காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு, குழந்தைகளின் பெற்றோரைத் தடுக்கிறார்கள். அதனால் இயேசு சீடர்களைக் கடிந்துகொள்கின்றார்.

இந்த நிகழ்வின் கடைசியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தனது சீடர்களைப் பார்த்து, ``சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது'' என்று கூறுகிறார். இதை நாம் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும். 'இயேசு குழந்தைகளைத் தன்னிடம் அழைப்பதற்குக் காரணம் அவர்கள் இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கே' என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இயேசு கூறுவதுபோல கனிவும் மனத்தாழ்மையும் உடையவரான அவரிடம் குழந்தைகள் செல்லும்போது அவரிடத்தில் உள்ள அந்தப் பண்புகளை கற்றுக்கொள்ளலாம் என்பது உறுதி. மேலும், 'குழந்தையின் உள்ளத்தை யாரெல்லாம் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உரியது விண்ணரசு' என்பதை ஆண்டவராகிய இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

 ஆகவே, நாமெல்லாம் குழந்தைகளின் உள்ளம் கொண்டவர்களாக வாழ்வோம். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல், அவர்களின் வளர்ச்சிக்கும் காரணமாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு