Published:Updated:

செல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்! #GoodParenting

போன் வழியாக நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள். 

செல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்! #GoodParenting
செல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்! #GoodParenting

வீட்டுப்பாடம், டைம் டேபிள், எக்ஸாம் சார்ட் எல்லாமே இப்போது பள்ளியின் வாட்ஸ்அப் குரூப் வழியே வர ஆரம்பித்துவிட்டன. அதனால், 8-ம் வகுப்பு அல்லது 9-ம் வகுப்பிலேயே பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித்தருவது தவிர்க்க முடியாததாகி ஆகிவிட்டது. அப்படிக் கொடுத்துவிட்டு, 'எப்போ பாரு போனையே பார்த்துட்டிருக்கியே' எனத் திட்டுவதில் நியாயம் இல்லை. ஏனென்றால், முதல்முறையாக தனக்கென ஒரு போன் கிடைத்ததும் பிள்ளைகள் அதன்மீது பெரும் ஈடுபாட்டுடனே இருப்பார்கள். அதற்காக, எப்போதும் மொபைலுடன் இருப்பதை வேடிக்கையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பிள்ளைகள் போனில் என்ன செய்கிறார்கள் என்று கண்காணிக்க வேண்டும்; சமூக வலைத்தளங்கள் வழியாக என்னென்ன பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அவர்களிடம் எடுத்துச்சொல்லி அவர்களை நெறிப்படுத்த வேண்டும்; ஒருவேளை, எதிர்பாராத பிரச்னை ஒன்றில் பிள்ளைகள் மாட்டிக்கொண்டால், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சரி, இதையெல்லாம் எப்படிச் செய்வது? டிப்ஸ் தருகிறார், உளவியல் நிபுணர் ஜெயந்தினி. 

கண்காணியுங்கள்...

* பிள்ளைகளின் மொபைல்போனின் பேட்டர்ன் பற்றி நீங்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியம். 

    * உங்கள் பிள்ளைகள் வாட்ஸ்அப்பில் இருக்கிறார்கள் என்றால், அந்த ஸ்டேட்டஸைப் பாருங்கள். அவர்களுடைய தினசரி நடவடிக்கைகள், மன உணர்வுகள், நண்பர்கள், பப்பி லவ் என எல்லாவற்றையும் இதன்மூலம் அறியலாம். பிறகு, உங்கள் பிள்ளைகளின் இயல்பைப் பொறுத்து கண்டிப்பது, தண்டிப்பது, எடுத்துச்சொல்லித் திருத்துவது எனப் பொறுமையாக செயல்படுங்கள்.

   * அடுத்தது, முகநூல். ஸ்கூல் படிக்கும் காலத்தில் இது அவசியமில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். பிள்ளைகள் காது கொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிய வேண்டாம் என்று எடுத்துச் சொல்லுங்கள். 

   * கை தவறுதலாக ஏதோ ஒன்றை டச் செய்துவிட்டாலும், இணையதளத்திலிருந்து கடகடவென ஆபாச வீடியோக்கள் கொட்டிவிடுகின்றன. பிள்ளைகள் ஆர்வக்கோளாறில் அவற்றை ஓப்பன் செய்துவிடலாம். அதனால், வாரம் ஒருமுறையாவது பிள்ளைகளுடைய போன் ஹிஸ்டரியை செக் செய்வது நல்லது. 

பிரச்னைகளை எப்படி எடுத்துச் சொல்வது?

* முகநூலில் பதிவேற்றப்பட்ட படங்களின் முகத்தை மட்டும் எடுத்து, அதை எப்படி ஆபாசப் படமாக மாற்றி மிரட்டுகிறார்கள் என்பதை, இதுபோன்ற செய்திகளை இணையத்தில் தேடியெடுத்து அவர்களுக்குக் காட்டுங்கள். இதுபோன்ற குற்றங்களால் உயிரைவிட்ட இளம் பெண்களைப் பற்றிய செய்திகளையும் பிள்ளைகள் பார்வைக்குக் கொண்டு செல்லுங்கள்.

* முகநூலில் இருக்கிறதுபோது, அறிமுகம் இல்லாதவர்கள், இன்பாக்ஸில் வந்து ஹாய் சொன்னால், அதற்குப் பதில் அளிக்காமல் இருப்பதுதான் நாகரிகம், மரியாதை எனப் பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள்.

* முகநூலில் வரும் ஆபாச வீடியோக்களை ஓப்பன் செய்தால், அது நீ அனுப்பியதாக உன்னுடைய மற்ற முகநூல் நண்பர்களுக்குச் சென்றுவிடும் என்ற தகவலைச் சொல்லி, பிள்ளைகளை உஷார்படுத்துங்கள்.

மாட்டிக்கொண்ட பிள்ளைகளை எப்படி மீட்டெடுப்பது?

*  'உனக்குச் சமூக வலைத்தளங்களின் வழியாக ஏதாவது பிரச்னை வந்தால், அதை உடனே அம்மாவிடம் சொல். நான் உன்னைக் காப்பாற்றுவேன்' எனச் சொல்லி பிள்ளைகளின் மனதில் நம்பிக்கையைப் பதியவையுங்கள்.

* உங்கள் மகளின் முகத்தை வைத்து மார்பிங் செய்வது போன்ற பிரச்னை வந்தால், தைரியமாக சைபர் கிரைம் மூலம் தீர்வு காணுங்கள்.

கடைசியாக, ஸ்மார்ட்போன் வழியாக உலகத்தில் இருக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும், பிள்ளைகளுக்கு நீங்களே அறிமுகப்படுத்தி விடுங்கள். போன் வழியாக நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள்.