Published:Updated:

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

நிவேதிதா லூயிஸ், படங்கள்: லெய்னா

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

நிவேதிதா லூயிஸ், படங்கள்: லெய்னா

Published:Updated:
நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

நாசாவின் இன்றைய ராக்கெட் தொழில்நுட்பம், தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது... அது எந்த ஊர் தெரியுமா? விடை தெரிய என்னுடன் பயணியுங்கள்!

`சென்னை மாத'க் கொண்டாட்டத்தின் நிகழ்வாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் சந்தித்த போர்க்களங்களுக்குச் சுற்றுப்பயணம் செல்ல முடிவெடுத்தது, நாவலாசிரியர் வெங்கடேஷ் உள்ளடக்கிய ஆர்வலர் குழு. இன்றைய இந்திய ராணுவத்தின் வித்து சென்னை நகரின் அடையாற்றின் கரையில் ஊன்றப்பட்டது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

அக்டோபர் 24, 1746. முதலாம் கர்னாட்டிக் யுத்தம் நடந்துகொண்டிருந்த நேரம். செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து கைப்பற்றியது பிரெஞ்சுப் படை. ஆற்காடு நவாப், ஆங்கிலேயருக்கு உதவியாகத் தன் மகன் மஹ்ஃபூஸ் கானையும், 10,000 படை வீரர்களையும் அனுப்பினார். வெற்றிகரமாக சாந்தோம் கோட்டையைக் கைப்பற்றிய மஹ்ஃபூஸ் கான், குபிள் தீவின் அருகே அடையாற்றின் வடக்கே படைகளை நிறுத்தியிருந்தான். பிரெஞ்சுப்படைகள் புதுச்சேரியில் இருந்து முன்னேறுவதைத் தடுக்க இந்த ஏற்பாடு.

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

இருநூறு பிரெஞ்சு மற்றும் இந்திய வீரர்கள் கொண்ட சிறிய படையை வழிநடத்தி வந்தான் பிரெஞ்சு கேப்டன் பாரடிஸ். சரியாகப் பயிற்சி தரப்பட்ட அந்த வீரர்களின் துப்பாக்கிகளுக்கு அஞ்சி, சிதறி ஓடியது நவாப்பின் படை. காலையில் தொடங்கிய யுத்தம், அன்று மாலையே ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றியதும் நிறைவுற்றது. முறையான ஆயுதப்பயிற்சி பெற்ற சிறிய படையால், எத்தனை பெரிய படையையும் எதிர்கொள்ளமுடியும் என்பதை ஆங்கிலேயருக்கு உணர்த்தியது அடையாற்றின் போர். இதன் தாக்கமாகப் பத்தாண்டுகளுக்குள், கடலூரின் டேவிட் கோட்டையில் பிறந்தது மெட்ராஸ் ரெஜிமென்ட். இந்தியர்களை ராணுவத்தில் பணியமர்த்தத் தொடங்கியது அங்கிருந்துதான். அன்றைய மெட்ராஸ் ரெஜிமென்ட் வேரூன்றி வளர்ந்து, இன்று இந்திய ராணுவமாகத் தழைத்திருக்கிறது.

குபிள் தீவின் கல்லறைகள் அருகில் இந்த விவரணை முடிந்து, குழுவினர் சென்றது தூய ஜார்ஜ் கோட்டை. கோட்டையின் மதில் சுவர் அருகே நின்று, செப்டம்பர் 8, 1746 அன்று பிரெஞ்சுப் படைகள்வசம் ஜார்ஜ் கோட்டை வீழ்ந்த கதையை விவரிக்கிறார் வெங்கடேஷ்... ``அதன்பின் ஏறத்தாழ மூன்றாண்டுகள் பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டையும், மெட்ராஸ் நகரமும் `லா ஷேப்பல் ஒப்பந்த'த்தின்கீழ், லூயிஸ்பர்க் என்ற வட அமெரிக்க நகருக்கு மாற்றாக ஆங்கிலேயருக்குத் திருப்பித் தரப்பட்டது. அந்த ஒப்பந்தம் இல்லையெனில், பிரெஞ்சுப் படைகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கும் `மெட்ராஸ்'. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

வேடிக்கையாக, கடல்வழித் தாக்குதல் நடத்திய லா போர்தன்னைஸ் தலைமையிலான பிரெஞ்சுப் படைகளின் யோகம் அவர்களது குண்டுகள், கோட்டையில் இருந்த மதுக்கிடங்கை நாசமாக்கியது. ஆங்கிலேயப்படை வீரர்கள் தங்கள் போர்க்கருவிகளை அம்போவென விட்டுவிட்டு, வழிந்தோடிய மதுவைக் குடித்து மயங்கிக் கிடந்தனர். இந்தப் போரின் இன்னொரு மறைமுகத் தாக்கம், ராபர்ட் கிளைவ் என்ற மாவீரனை ஆங்கிலேயருக்கு அடையாளம் காட்டியது. ஜார்ஜ் கோட்டையில் இருந்து, சாதாரண குமாஸ்தாவான கிளைவ் வைத் தப்பிக்க விட்டுவிட்டனர் பிரெஞ்சுப் படையினர். முகமெங்கும் கரியைப் பூசிக் கொண்டு, இந்தியர்களோடு நடந்தே கடலூர் சென்றடைந்த கிளைவ், பின்னர் கவர்னராக மெட்ராஸ் திரும்பிக் கோலோச்சியது சரித்திரம்!''

குழுவின் அடுத்த நிறுத்தம்... எம்டன் கப்பல் தாக்கியதில் சேதம் அடைந்த ஹைகோர்ட்டின் சுற்றுச்சுவரில் உள்ள நினைவுச் சின்னம். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில், செப்டம்பர் 22, 1914 அன்று இரவு 9 மணிக்கு, மெட்ராஸின்மீது குண்டுமழை பொழிந்தது எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல். மெட்ராஸ் துறைமுகத்திலுள்ள பர்மா ஷெல் கம்பெனியின் மண்ணெண்ணெய் டாங்குகளைக் குறி வைத்துத் தாக்கியபின், நகரின்மீது தாக்குதல் நடத்தியது. நுங்கம்பாக்கம், சூளை, பூவிருந்தவல்லி சாலை என எங்கும் விழுந்தன குண்டுகள். ஏறத்தாழ 300 குண்டுகளைக் காலி செய்த எம்டன், அரைமணி நேரத்துக்குள் தன் ருத்ர தாண்டவத்தை நிகழ்த்திவிட்டு, சத்தமின்றி வங்கக்கடலில் விரைந்து மறைந்தது. சுதாரித்துக்கொண்ட ஆங்கிலப் படைகள் தேடத் தொடங்குவதற்குள் கம்பி நீட்டி விட்டது எம்டன். பெரும் குழப்பமும் பீதியும் மக்களிடையே கிளப்பிவிட்டது எம்டன். `எம்டன் கப்பலை குண்டாலடித்துத் துரத்திய வல்லமைச் சிந்து', `ஜெர்மனி குண்டால் பட்டணத்து ஜனங்கள் பரிதவிக்கும் சிந்து' என எம்டனை வைத்து முச்சந்தி இலக்கியம் உருவானது. `எம்டன் போட்ட குண்டு, எரிந்த டாங்கு ரெண்டு' என்று சிறுவர்கள் பாடும் அளவுக்கு எம்டன் புகழ் பரவியது. அத்தனை கண்காணிப்பையும் மீறி காரியம் சாதித்து விட்ட கப்பலின் பெயரே, இன்றளவும் சத்தமின்றி காரியம் செய்து முடிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

இன்றைய மாடிப்பூங்கா இருக்கும் சென்னையின் சுவர் பார்த்தபின், பயணம் பூந்தமல்லி தாண்டித் தொடர்ந்தது. செல்லும் வழியில் மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில் கோபுரத்தை மட்டும் பார்த்துச் செல்லலாம் என வைத்தியநாதன் ஐயா சொல்ல, மப்பேடு கோயிலை அடைந்தோம். கோபுரத்தில், `கிடந்த கோல'த்தில் அருள்பாலிக்கிறார் அரியநாத முதலியார். கடவுளர்களின் திருஉருவங்கள் அமைந்த கோபுரத்தில் இந்தத் தளவாய்க்கும் ஓரிடம் கிடைத்திருக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தைக் கட்டியவர் அரியநாதர். விஜயநகரப் பேரரசின் தளவாயாகக் கோலோச்சிய அரியநாதர் பிறந்த ஊர் மப்பேடு. விஜயநகர மன்னரின் தளவாயாக மதுரையில் செயல்பட்ட அரியநாதர்தாம், 72 பாளையங்களாக நிர்வாக வசதிக்கென பாண்டிய நாட்டைப் பிரித்துத் தந்தவர். கூவத்தின் தொடக்கப் புள்ளியான கேசவரம் அணைக்கட்டுக்குச் சென்ற குழுவினர், காய்ந்திருந்த கூவத்தை ரசிக்க முடியாமல் திரும்பினர். கூவம் நதிக் கரையில் மூன்று போர்கள் நிகழ்ந்திருக்கின்றன தக்கோலம், பெரம்பாக்கம், மற்றும் புள்ளளூர் போர்கள்.

அடுத்துச் சென்றது செஞ்சி கிராமத்தின் ஜென்மஜயேஸ்வரர் கோயில். மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு உண்டு என்றதும், `திரிபுவனச் சக்கரவர்த்தி' என்ற எழுத்துகளின் மீது விரல்களை வருடவிடும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. கிராமத்தின் ஓரமாகக் கேட்பாரற்று, சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது கோயில். அழகிய விமானம், முற்றிலும் கிரானைட் கல் கொண்டு கட்டப்பட்ட கோயிலில், எந்நேரமும் உத்திரம் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கிறார் விஜயேஸ்வரர். விஜயநகரக் கட்டடக் கலையும் சோழர் கட்டடக் கலையும் மிளிர்கிறது கோயிலில். அடுத்தமுறை, நிச்சயம் இதைக் காணப்போவதில்லை. இன்னும் எத்தனை எத்தனை சிதிலம் அடைந்த கோயில்களைக் காண்பது?

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

தக்கோலம் என்ற ஊர்ப் பெயர்ப் பலகையைப் பார்த்ததும் இனம் புரியாத உணர்வு. கி.பி 949-ல் நடந்த தக்கோலப்போரில் ராஷ்டிரகூடர்களால் தோல்வியுற்று, கொலையும் செய்யப்படுகிறான் ராசாதித்த சோழன். ராசாதித்தனின் மரணமும், ஆதித்த கரிகாலனின் கொலையுமே, ராசராசன் என்ற பெரும் வேந்தனை உலகுக்கு அடையாளம் காட்டிய நிகழ்வுகள். அடுத்து சென்றது புள்ளளூர். ஊருக்குள் நுழைந்ததுமே, கண்ணில்பட்டுவிட்டது சிதிலமடைந்த வரதராசப்பெருமாள் கோயில். சுற்றிலும் முட்புதர்கள், விமானத்தின் மேல் சப்பாத்திக்கள்ளி, அருகில் இறைந்திருக்கும் கல்வெட்டுகள், முழுக்க முழுக்க செங்கல் மற்றும் சுண்ணத்தால் கட்டப்பட்டு, காற்றில் கரைந்துவிட்ட ஓவியங்கள் சிலவற்றின் எச்சங் களுடன் கம்பீரமாக நிற்கிறது இந்தக் கோயில்.

முதல் புள்ளளூர் போர் கி.பி 618- 619 ஆண்டுகளில் சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனுக்கும் இடையே நடைபெற்றது. போரில் தாம் வெற்றி பெற்றதாக ஐஹோல் கல்வெட்டில் புலிகேசியும், காசுக்குடி பட்டயங்களில் புள்ளளூரைத் தாம் வெற்றி கொண்டதாக மகேந்திரவர்மனும் எழுதிக் கொண்டார்கள். `டிரா'வில் முடிவடைந்த முதல் புள்ளளூர் போர் இது.

1780-ல் கடப்பாவில் இருந்து பெயிலி தலைமையிலும் மதராஸில் இருந்து மன்ரோவின் தலைமையிலும் ஆங்கிலேயப்படைகள் காஞ்சியில் சந்தித்து, ஒன்றுசேர்ந்து ஹைதர் அலியைத் தாக்குவதாகத் திட்டம் வகுத்தனர். ஆனால், திப்புவின் படைகளால் வழிமறித்து ஓட ஓட விரட்டப்பட்ட கேப்டன் பெயிலியின் படைகள், கொரட்டலையாறு (கொசஸ்தலையாறு) நதியின் வெள்ளத்தால் பெரம்பாக்கம் அருகே திப்புவிடம் கடும் தோல்வியைச் சந்தித்தன. ஏறத்தாழ 200 ஐரோப்பியரைக் கைது செய்தார் திப்பு. காஞ்சியில் இருந்து மன்ரோவையும் விடாமல் துரத்திய திப்பு படையினர், அன்றைய மர்மலாங் (மாம்பலம் பகுதி) வரை விரட்டிச் சென்றனர்.

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

1781-ம் ஆண்டு நடைபெற்ற அடுத்த போரில் ஆங்கிலேயர் ஜெனரல் அயர் கூட் தலைமையில், புள்ளளூரில் ஹைதர் அலியின் படைகளுடன் மோதினர். இருபுறமும் சேதம் இருந்தாலும், திப்புவின் தலைமையில் காஞ்சியில் தஞ்சமடைந்த படைகளும், தளவாடங்கள் தேவைக்காகத் திருப்பாசூர் திரும்பிய ஆங்கிலேயப் படைகளும் தாமே வெற்றிகொண்டதாக அறிவித்துக்கொண்டன. புள்ளளூரில் நடைபெற்ற மூன்றில் இரண்டு போர்கள் `டிரா'வில் முடிவடைந்துவிட்டன.

வயல்களுக்கு நடுவே நின்றிருந்த இரண்டு ஸ்தூபிகளைத் தேடிப்போகிறோம். கோரிகள் என்று அழைக்கப்படும் இந்த ஸ்தூபிகள் 1781-ம் ஆண்டு போரில் மரித்த ஜேம்ஸ் ஹிஸ்லொப் மற்றும் ஜார்ஜ் பிரவுன் என்ற இரு ஆங்கிலேய வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ளது.

அங்கிருந்து கிளம்பி, பயணத்தின் இறுதிக் கட்டமான செயின்ட் தாமஸ் மவுன்ட் வந்தடைந்தோம். மலை மேல் இருந்து பார்க்கும் போது தெரிகிறது பச்சைப் பசேல் என்ற மைதானம். டிசம்பர் 10, 1758-ல் பிரெஞ்சுப் படைகள் லாலியின் தலைமையில் வண்டலூர் முதல் ஆங்கிலேயப் படைகளைத் துரத்தி மதராஸைக் கைப்பற்ற முயன்றன. ஸ்டிரஞ்சர் லாரன்ஸ் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள், இப்போதைய கால்ஃப் மைதானத்தில் எதிர்த்து நின்று, முன்னேற வழியின்றி ஜார்ஜ் கோட்டைக்குள் ஓடி தஞ்சம் புகுந்தன. ஆனால், டிசம்பர் 27 அன்று நவாப்பின் படை ஆங்கிலேயருடன் சேர்ந்துகொள்ள, லாலியின் படை பின்வாங்கிவிட்டது.

நம் ஊர் நம் கதைகள் - சென்னையின் போர்க்களங்களுக்கு ஒரு பயணம்!

1523-ல் கட்டப்பட்ட செயின்ட் தாமஸ் மவுன்ட் தேவாலயம், சென்னையின் பழைமை வாய்ந்த தேவாலயங்களுள் ஒன்று. யேசுநாதர் பேசிய அராமைக் மொழியில் இங்குள்ள சிலுவையில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மாதா, கர்ப்பவதியாக `சிசுவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அன்னை'யாகக் காட்சித்தருவது தனிச்சிறப்பு. தேவாலயத்தின் பின்புறம், `கிரேட் டிரிகொனொமெட்ரிக் சர்வே' என்ற இந்திய திரிகோணவியல் கணக்கெடுப்பின் தந்தையான வில்லியம் லாம்டனின் சிலை இருக்கிறது. இங்குதான் தொடங்கியது இந்தியாவின் திரிகோணவியல் கணக்கெடுப்பு. இந்தியாவின் எல்லைகளை, கனிமங்களை, இயற்பியல் அம்சங்களைக் கண்டெடுக்க உதவிய லாம்டனும், அவருக்குப் பின் கணக்கெடுத்த எவரெஸ்ட் மற்றும் வாஹ் ஆகியோரும் இல்லையெனில் இன்று எவரெஸ்ட் சிகரம், உலகின் உயரமான சிகரம் என்று நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கட்டுரையின் முதல் பத்தியில் கேட்கப்பட்ட கேள்விக்கான விடை, புள்ளளூர். இந்த இடத்தில்தான் முதன்முறையாக, மூங்கிலுக்குப் பதிலாக இரும்புக் குழாய்களைக்கொண்ட ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி ஆங்கிலேயரை சிதறடித்தார் திப்பு சுல்தான். அதுவரை மூங்கில் குழாய்களில் வெடிமருந்து நிரப்பிய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி வந்த ஆங்கிலேயர் 2 கி.மீ வரை சென்று தாக்கிய திப்புவின் ராக்கெட்டுகளால் நிலைகுலைந்தனர். திப்புவின் ராக்கெட்டுகளை மேலும் ஆராய்ந்து, `கான்கிரீவ் ராக்கெட்டு'களைக் கண்டுபிடித்தனர் ஆங்கிலேயர். இந்தக் கான்கிரீவ் ராக்கெட்டுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைத்தான் இன்றைய நாசா ராக்கெட்டுகள் பயன்படுத்துகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism