Published:Updated:

கோஃபி அன்னான் எனும் `நோபல் பரிசுக்காரர்'.. சில சர்ச்சைகளும்.. பெரும் சாதனைகளும்! #RipKofiAnnan

1997-2006-ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த இவர், அந்த இடத்தினை அலங்கரித்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

கோஃபி அன்னான் எனும் `நோபல் பரிசுக்காரர்'.. சில சர்ச்சைகளும்.. பெரும் சாதனைகளும்! #RipKofiAnnan
கோஃபி அன்னான் எனும் `நோபல் பரிசுக்காரர்'.. சில சர்ச்சைகளும்.. பெரும் சாதனைகளும்! #RipKofiAnnan

``நீங்கள் வாழும் வாழ்க்கை என்பது நீங்கள் தேர்ந்தெடுப்பதில்தான் உள்ளது. ஆனால், நன்றாகத் தேர்ந்தெடுப்பதற்கு நீங்கள் யாரென்று நீங்கள் உணர வேண்டும்; நீங்கள் யாருக்காக நிற்கிறீர்கள், எங்கு பயணப்படப் போகிறீர்கள், எதற்காக அங்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”... இவை மறைந்த ஐ.நா பொதுச் செயலாளர் கோஃபி அன்னானின் வரிகள்!

ஐ.நா.வின் புத்தாயிரம் ஆண்டுக்கான இலக்குகளாக (Millennium Development Goals), கடுமையான வறுமையினை ஒழித்தல், அனைவருக்கும் தொடக்கக் கல்வி பயிற்றுவித்தல், பாலின சம உரிமை அளித்தல், பெண்கள் முன்னேற்றம், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பது, பேறுகால நல்வாழ்வினை மேம்படுத்துதல், எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்களுக்கு எதிராகப் போராடுதல், சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற இலக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. உலக அளவில் பல்வேறு நாடுகளில், கடந்த இரு தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட பல நல்வாழ்வுத்திட்டங்கள், இந்த இலக்குகளின் சாராம்சத்தைக் கொண்டிருந்தன. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கோஃபி அன்னான்.

1997-2006-ம் ஆண்டுவரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த இவர், அந்த இடத்தினை அலங்கரித்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையையும் பெற்றவர். ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள கானா நாட்டில், ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தில் கடந்த 1938 ம் ஆண்டு பிறந்தவர் கோஃபி அன்னான். பொருளாதாரமும், நிர்வாகவியலும் படித்த இவர், தன்னுடைய 24 வது வயதிலேயே `உலகச் சுகாதார நிறுவன'த்தில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிய அவர், 1997-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பொதுச் செயலாளராகப் பணியாற்றிய ஆண்டுகளில், புத்தாயிரமாவது ஆண்டுக்கான இலக்குகள் மட்டும் அல்லாமல், உலகளாவிய வணிகத்தை மேம்படுத்துதல், எய்ட்ஸ் நோயைக் குறைக்க சர்வதேச நிதி திரட்டுதல், மனித உரிமைகள் மேம்பாடு போன்ற பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். 2001ம் ஆண்டு, இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2007-ம் ஆண்டு, தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றினைத் தொடங்கினார். ஓய்வுபெற்ற பிறகும்கூட, கென்யா நாட்டில் நிலவிய அரசியல் குழப்பங்கள் தீர்க்கவும், சிரியா நாட்டின் உள்நாட்டுப் போர் குறித்த விவகாரத்திலும், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரம் குறித்தும் தீவிரமாகச் செயலாற்றினார். இதில் சிரியா உள்நாட்டுப் போர் குறித்த விவகாரத்தில் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது. 

மிகச் சிறப்பான ஆளுமை கொண்ட ஒருவராக இருந்தாலும்கூட, சில குறைகளும், சர்ச்சைகளும் இருக்கத்தானே செய்யும். 1994-ம் ஆண்டு, ருவாண்டாவில் ஹுடு எனும் இனத்தவரால் டுட்சி இனமக்கள், கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள், அகதிகளாக வெளியேறினர். வரலாற்றில் மறக்க முடியாத இனப்படுகொலைகளில் ருவாண்டாவுக்கும் நிச்சயம் ஓர் இடம் உண்டு. அந்த இடத்தில் அவர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த மக்களுக்கு வழங்கவில்லை என்று அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதைப்போலவேதான் இராக், சதாம் உசேன் விவகாரத்திலும், அவர் முழுமையாகச் செயல்படவில்லை என்று கூறப்பட்டது.

மறைந்த தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் உலக அமைதிக்காகவும், மனித உரிமைகள் மேம்பாட்டுக்காகவும் உருவாக்கிய `THE ELDERS' அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார் கோஃபி அன்னான். கடந்த மாதம் நடைபெற்ற மண்டேலாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில்கூட கலந்துகொண்ட கோஃபி அன்னான், கடந்த சனிக்கிழமை(18.8.2018) அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மிகச்சிறந்த தலைவராகவும், நிர்வாகியாகவும் இருந்த அவருக்கு உலகெங்கும் புகழ் அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.