Published:Updated:

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இந்த யூஸ்டு பெர்ஃபாமன்ஸ் கார்களை வாங்கலாம்!

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இந்த யூஸ்டு பெர்ஃபாமன்ஸ் கார்களை வாங்கலாம்!
ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இந்த யூஸ்டு பெர்ஃபாமன்ஸ் கார்களை வாங்கலாம்!

தற்போது ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, கூபே, கேப்ரியாலே என வித்தியாசமான டிசைன்களில் வகை வகையாகக் கார்கள் அணிவகுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

அது ஒரு காலம்... இந்துஸ்தான் அம்பாசிடர் மற்றும் கான்டெசா, மாருதி 800 மற்றும் ஆம்னி, ப்ரீமியர் பத்மினி, ஸ்டாண்டர்டு 2000 எனப் புதிதாக கார் வாங்குபவர்களுக்கு மிகக் குறைவான ஆப்ஷன்கள் இருந்தன. ஆனால் தற்போது, ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி, கூபே, கேப்ரியாலே என வித்தியாசமான டிசைன்களில் வகைவகையாக கார்கள் அணிவகுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் வெளிப்பாடாக, பர்ஃபாமன்ஸ் யூஸ்டு கார்களுக்கு என ஒரு கூட்டம் உருவாகியிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. 

ஆனால், அதற்கு ஒருவர் கொடுக்கக்கூடிய விலை என்பது பெரும்பாலும் அதிகமாகவே இருக்கும். எனவே, 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், ஓட்டுநருக்கு முகத்தில் புன்சிரிப்பையும் மனநிறைவையும் ஒருசேர வழங்கக்கூடிய யூஸ்டு பர்ஃபாமன்ஸ் கார்களை இங்கே பார்ப்போம்.

இவற்றில் பல இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கார்கள் என்பதால், உதிரிபாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர் கிடைப்பதில் பெரிய சிக்கல் எழாது என நம்பலாம். 

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (E90)

அகரவரிசையின்படி கார்களை இங்கே வரிசைப்படுத்தினாலும் சரி, பர்ஃபாமன்ஸ் விஷயத்திலும் சரி, இங்கு இருக்கும் கார்களில் ரியர் வீல் டிரைவ் அமைப்பைக்கொண்டிருக்கும் ஒரே ஃபேமிலி செடான் கார் இதுதான்! இந்த E90 சீரிஸ் மாடலில் ஹைட்ராலிக் ஸ்டீயரிங் அமைப்பு இருப்பதால், இதைக் கையாள்வது சுகானுபவமாக இருக்கும். இந்தியாவில்  2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்த கார், 2008-ம் ஆண்டில் முதல் பேஸ்லிஃப்ட்டைப் பெற்றது. LCI என அழைக்கப்பட்ட இதில், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருந்தன.

தினசரி பயன்பாட்டுக்கு டீசல் சரியான சாய்ஸாக இருந்தாலும், கார் ஆர்வலர்களின் தேர்வாக இருப்பது பெட்ரோல்தான். அதுவும் 268bhp பவர் மற்றும் 32kgm டார்க்கை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர், 6 சிலிண்டர், இன்லைன் இன்ஜினைக்கொண்டிருக்கும் 330i மாடல் கிடைத்தால் செம! இந்த Naturally Aspirated இன்ஜின், பிஎம்டபிள்யூ-வின் பக்காவான சேஸியுடன் சேரும்போது, இந்த E90 3 சீரிஸ் கொடுக்கும் ஓட்டுதல் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஃபியட் புன்ட்டோ அபார்த்

இந்தியாவைப் பொறுத்தவரை, `சிட்டி கார்களாக இருக்கவே ஹேட்ச்பேக் சரியானவை' என்கிற கருத்து பலரிடம் நிலவிவருகிறது. ஆனால், அதை அடித்து நொறுக்கிய பெருமை இந்த ஃபியட் காரையே சேரும்! ஆம், அன்றாடப் பயன்பாட்டுக்குக் கூடுதல் பர்ஃபாமன்ஸை வாரி வழங்கும் இந்த கார், தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. 

இதே நிறுவனத்தின் பேலியோ 1.6, பட்ஜெட் பர்ஃபாமன்ஸ் விரும்பிகளின் சாய்ஸாக இருக்கிறது. ஃபோக்ஸ்வாகன் GTi இன்னும் பவர்ஃபுல்லாக இருந்தாலும், அதன் விலை மிகவும் அதிகம். 145bhp பவர் மற்றும் 21kgm டார்க்கை வெளிப்படுத்தும் ஃபியட் அபார்த் புன்ட்டோ, கார் டியூனர்களிடம் சென்றால் வேற லெவலில் அதன் உரிமையாளரிடம் திரும்பி வரும். என்ன... அது கொஞ்சம் காஸ்ட்லி விளையாட்டு!

ஹோண்டா சிட்டி (Gen - 1: 1.5 i-VTec)

இது ஜப்பானிய நிறுவனத்தின் காராக இருந்தாலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதே முதல் அங்கிகாரம். இந்திய கார் சந்தை, நல்ல மைலேஜ் தரக்கூடிய கார்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில், தனது இருப்பை அதிரடியாகத் தெரிவித்த கார் `சிட்டி'தான். ஆம், இது வெளிப்படுத்தியது வெறும் 110bhp பவர் மற்றும் 14kgm டார்க்தான் என்றாலும், இந்த 1.5 லிட்டர் i-VTec இன்ஜினின் ஆக்ஸிலரேட்டரில் பலத்தைக் காட்டும்போது அதன் மகத்துவம் தெரியும். 

அதாவது ஒரு மாஸ் மார்க்கெட் கார், 7,000 ஆர்பிஎம்-மைத் தாண்டிப் பறந்தால் எப்படி இருக்கும்? இதனாலேயே ரேஸ் டிராக்கிலும் கொடிகட்டிப் பறந்தது சிட்டி. வெறும் இன்டேக், சஸ்பென்ஷன், பிரேக்ஸ், எக்ஸாஸ்ட் ஆகியவற்றில் மாடிஃபிகேஷன் செய்தாலே, இந்த மாணிக்கத்தின் பாட்ஷா முகம் தெரியவரும்! 2 லட்சம் ரூபாயிலேயே இந்த காரை வாங்கிவிடலாம் என்பது பெரிய ப்ளஸ். என்றாலும், உதிரிபாகங்கள் விஷயத்தில் பீ கேர்ஃபுல்! இது சிவிக் காருக்கும் பொருந்தும்.

ஸ்கோடா ஆக்டேவியா RS

என்னடா நம் ஊரில் ஏற்கெனவே ஆக்டேவியா vRS விற்பனையில் இருக்கிறதே, அது என்ன RS என்கிறீர்களா? அது காஸ்ட்லி என்பவர்களுக்கு, யூஸ்டு கார் சந்தையில் கிடைக்கும் பட்ஜெட் ஆப்ஷன்தான் இது. அதாவது, புதிய ஆக்டேவியா vRS காரின் 1/4 அல்லது 1/8 விலையிலேயே, ஏறக்குறைய அதே அனுபவத்தைத் தரக்கூடிய ஆக்டேவியா RS காரை வாங்கிவிட முடியும். இதில் இருப்பது 150bhp பவர் மற்றும் 21kgm டார்க்கை வெளிப்படுத்தும் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் என்றாலும், புதுமையான 5 வால்வ் அமைப்பைக்கொண்டிருந்ததுதான் அதன் சிறப்பம்சம். எனவே, அளவில் பெரிய டர்போ சார்ஜரைப் பொருத்தினாலே, காரின் பர்ஃபாமன்ஸில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். 

தவிர, ஸ்போர்ட்டியான ஓட்டுதலுக்குக் கைகொடுக்கும்விதத்தில் ஸ்டீயரிங் - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ் - வீல்கள் - இன்ஜின் ஆகியவை டியூன் செய்யப்பட்டிருப்பதால், செம ஃபன் அனுபவம் உறுதி! ஒருவேளை இந்த கார் உங்களுக்குக் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால், இதைவிட மார்டனான லாரா RS காரையும் பார்க்கலாம். இதில் இருப்பதும் அதே இன்ஜின்தான் என்றாலும், கூடுதலாக 10bhp பவர் - 4kgm டார்க் - 1 கியர் ஆகியவை உண்டு. எனவே, எந்த காராக இருப்பினும், அது மஞ்சள் நிறத்தில் கிடைத்தால் கூடுதல் போனஸ்! 

மாருதி சுஸூகி ஜென் கார்பன்/ஸ்டீல்

இங்கு இருக்கும் கார்களிலேயே இன்ஜின், அளவுகள், விலையில் சிறிய கார் இதுதான். தற்போதைய மாருதி சுஸூகி நிறுவனம், `மாருதி உத்யோக்' என்ற பெயரில் இயங்கிவந்த காலகட்டம் அது. அப்போது மிகவும் பிராக்டிக்கலான மற்றும் டல் தோற்றத்துடன்கூடிய கார்களைத் தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரை அவர்கள் பெற்றிருந்தார்கள். `எங்களால், ஸ்டைலான அதே சமயம் ஸ்போர்ட்டியான கார்களையும் தயாரிக்க முடியும்' என மக்களுக்கு மாருதி உணர்த்தியது இந்த 2 டோர் காரினால்தான்! விதை இது என்றால், வழித்தோன்றல் பெலினோ செடான் எனலாம். 

ஏற்கெனவே ஓட்டுதல் அனுபவத்தில் சிறந்து விளங்கிய ஜென் காரை அடிப்படையாகக்கொண்டு தயாரித்ததால், மாடிஃபிகேஷன் செய்பவர்களின் ஏகோபித்த வரவேற்பையும் இது பெற்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இதில் சிலர், எஸ்டீம் மற்றும் முதல் தலைமுறை ஸ்விஃப்ட்டில் இருந்த 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பொருத்திய கதைகளும் இங்கே ஏராளம்! அங்கே 85bhp என்றால், இங்கே 100bhp பவர் கிடைக்கும்படி இன்ஜினை ரீ-டியூன் செய்திருப்பார்கள் (உபயம்: High Lift Cams). இது 765 கிலோ எடையுள்ள காரில் சேரும்போது, சாலையில் மொத்த வித்தையும் இறக்க முடியும்! 

ஃபோர்டு ஃபியஸ்டா S

ஒரு பிஎம்டபிள்யூ செடானின் ஓட்டுதல் அனுபவத்துடன்கூடிய கார், அனைவராலும் வாங்கக்கூடிய விலை மற்றும் ஃப்ரென்ட் வீல் டிரைவ் அமைப்புடன் வந்தால் எப்படி இருக்கும்? அதற்கான பதில்தான் 2008-ம் ஆண்டு ஃபோர்டு அறிமுகப்படுத்திய ஃபியஸ்டா 1.6S. அகலமான Low Profile  டயர்கள் - பெரிய 15 இன்ச் அலாய் வீல்கள் - குறைக்கப்பட்ட உயரம் - இறுக்கமான சஸ்பென்ஷன் செட் அப் - எடை அதிகரிக்கப்பட்ட ஸ்டீயரிங் அமைப்பு - சிறப்பான சேஸி - ஷார்ப் பிரேக்ஸ் - ஸ்போர்டியான பாடிகிட் - சொகுசான இருக்கைகள் என 325i போன்ற ஸ்போர்ட்டியான பிஎம்டபிள்யூ செடான்களில் காணக்கிடைக்கும் விஷயங்கள், இங்கே கிடைத்தது பெரிய போனஸ். எனவே, நம் ஊர் கரடுமுரடான சாலைகளில் இந்த காரில் நீங்கள் பயணிக்க நேரிட்டால், குலுக்கல் உறுதி! ஆனால், 80 முதல் 90 கிமீ வேகத்தில் செல்லும்போது, கார் ஸ்டெடியாகச் செல்லத் தொடங்கிவிடுகிறது. 

இதில் இருப்பது 100bhp பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர், 4 சிலிண்டர், DuraTec பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணிதான்! எனவே, ஆரம்பகட்ட வேகங்களில் கொஞ்சம் சுணக்கம் காட்டினாலும் 4,000 முதல் 7,000 ஆர்பிஎம் வரை அதிரடிக்கிறது பர்ஃபாமன்ஸ்!

க்ரெட்டா சைஸில் இந்த கார் இருப்பதால், நகரத்தில் ஃபியஸ்டா S காரை ஓட்டுவது சுலபமாக இருக்கிறது. போதுமான மைலேஜ் கிடைப்பது எக்ஸ்ட்ரா போனஸ். இதனாலேயே கார் ஆர்வலர்களின் தினசரி மற்றும் வார இறுதிப் பயன்பாட்டுக்கான சாய்ஸாக இது இருப்பதில் வியப்பில்லை.

நேரான சாலை, திருப்பங்களுடன்கூடிய மலைச்சாலை என எதுவாக இருந்தாலும், காரின் கையாளுமை மற்றும் நிலைத்தன்மை அசத்தல் ரகம்! அதுவும் கேபினில் இருக்கும் அந்த இரட்டை டயல்கள், ஸ்டீயரிங் வீல், சிறந்த ஆடியோ சிஸ்டம் ஆகியவை, பயணத்தை ரசிக்கும்படி மாற்றுகின்றன. இப்படிப்பட்ட காரை விற்பதற்கு யார் முன்வருவர்? எனவே, யூஸ்டு கார் மார்க்கெட்டில் இந்த காரைக் கண்டுபிடிப்பது கடினம்தான்!

அடுத்த கட்டுரைக்கு