Published:Updated:

``பட்டுப்புழு கூடுகள்ல நகை.. அதான் இப்ப ஃபேஷன்!'' - கிராஃப்ட் பிசினஸில் கலக்கும் கார்த்தீஸ்வரி

கிராஃப்ட்டில் ஒன்றைக் கற்றுக்கொண்டு அதில் பயிற்சி வகுப்புகள் எடுத்தால், நிறைய வெரைட்டி செய்யலாம்.

``பட்டுப்புழு கூடுகள்ல நகை.. அதான் இப்ப ஃபேஷன்!'' - கிராஃப்ட் பிசினஸில் கலக்கும் கார்த்தீஸ்வரி
``பட்டுப்புழு கூடுகள்ல நகை.. அதான் இப்ப ஃபேஷன்!'' - கிராஃப்ட் பிசினஸில் கலக்கும் கார்த்தீஸ்வரி

"கல்யாணத்துக்கு அப்புறம் குடும்பம், குழந்தைனு எனக்கான அடையாளமே இல்லாமல் போயிடுச்சு. என் கேரியரையே தொலைச்சுட்டேன்'' என நிறையப் பெண்கள் புலம்புவதைக் கேட்டிருப்போம். சமீபமாக, அதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே சிறு தொழில் செய்து, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில், ``நான் வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால் ஃபேஷன் நகை, கிராப்ட் மூலமாக மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். குழந்தை, குடும்பம் எனச் சரியாகப் பார்த்துக்கொள்ளவும் முடிகிறது" என மனநிறைவுடன் பேச ஆரம்பிக்கிறார் கார்த்தீஸ்வரி. ஆறு ஆண்டுகளாக கிராஃப்டில் கலக்குகிறார்.

``எனக்குத் திருநெல்வேலி சொந்த ஊர். அம்மா ஒரு கிராஃப்ட் டீச்சர். ஏதாவது கிராஃப்ட் வேலைப்பாடுகள் செய்து வீட்டை அலங்கரிச்சுட்டே இருப்பாங்க. அதைப் பார்த்து எனக்கும் ஆர்வம் வந்துச்சு. அம்மாவுக்குப் போட்டியா அச்சு எடுத்த மாதிரி செய்து அசத்துவேன். விளையாட்டாகச் செய்ய ஆரம்பிச்சதுதான் இன்னைக்கு என் பிசினஸா ஆகியிருக்கு. கிராஃப்ட் வேலைப்பாடு செய்ய ஆரம்பிச்சுட்டா பொழுது போறதே தெரியாது. நேர்த்தியும் திருப்தியும் வரும் வரை எத்தனை முறை வேணும்னாலும் செய்துட்டே பார்ப்பேன். கிராஃப்ட்டை பொறுத்தவரை, ஒருத்தரிடமிருந்து கற்றுக்கொள்வதைவிட, நுட்பமா செய்றதில்தான் இருக்கு வெற்றி.

நான் படிச்சது எலக்ட்ரிக் இன்ஜினீயரிங். காலேஜ் படிக்கும்போதும் ஃப்ரீ டைமில் கிராப்ட் செய்வேன். நிறையப் ஃபேஷன் நகைகள் செய்து ஃப்ரெண்ட்ஸுகளுக்குக் கொடுப்பேன். நானும் புதுப்புது டிரெண்டில் போட்டுவிட்டுப் போவேன். என் அக்ஸசரிஸ்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருந்தாங்க. படிச்சு முடிச்சதும் கல்யாணம். இங்கும் வீட்டில் இருக்கும் பொருளை வெச்சு கிராஃப்ட் செய்துட்டிருப்பேன். என் ஆர்வத்தைப் பார்த்த கணவர், என்னுடைய கிராஃப்ட்களை போட்டோ எடுத்து ஆன்லைனில் அப்லோடு செய்தார். எல்லோரும் சூப்பர்னு பாராட்டினதும் ஆர்வம் அதிகமாச்சு. இதை ஒரு பிசினஸா மாற்றலாம்னு முடிவுசெய்தேன். குறைந்த முதலீட்டில் ஆரம்பிச்சேன்.

கிராஃப்ட்டை பொறுத்தவரை அப்டேட் ரொம்ப முக்கியம். இப்போ என்ன டிரெண்டில் போயிட்டிருக்குன்னு கவனிச்சு, பயிற்சி வகுப்புகளுக்கும் போயிருக்கேன். இந்த பிசினஸை ஆரம்பிக்கும்போது முதலில் க்விலிங் கத்துக்கிட்டேன். அதில் பலரும் நகைகள்தான் பண்ணுவாங்க. நான், கிரிட்டிங் கார்ட்ஸ் செய்து விற்றேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. புதுப் புது டிசைனில் நான் உருவாக்கிய கிரிட்டிங் கார்ட்ஸ் எனக்குத் தனி அடையாளத்தைத் தேடிக் கொடுத்துச்சு. அப்புறம், சில்க் த்ரெட் நகைகள் டிரெண்டிங் ஆச்சு. அதிலும் கலர் செலக்‌ஷனில் வித்தியாசம் காட்டினேன். அதுக்கு காலேஜ் பெண்களிடம் ரீச் அதிகமாக இருந்துச்சு. தோழிகளுடன் சேர்ந்து கிராஃப்ட் வேலை செய்வதில் 2017-ம் ஆண்டு 3000 பெண்களுடன் இணைந்து 58,970 கைவேலைப்பாடுகள் ஒரு மாத்தில் செய்து கின்னஸ் பிரேக் செய்திருக்கேன். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறேன். ஃபேஷன் நகைகளைப் பொறுத்தவரை, இப்போ பட்டுப்புழுவின் கூட்டிலிருந்து செய்யும் கக்கூன் ஜூவல்லரி டிரெண்டில் இருக்கு அதற்கான பயிற்சி வகுப்புகளையும் எடுக்கிறேன். 

கிராஃப்ட்டில் ஒன்றைக் கற்றுக்கொண்டு அதில் பயிற்சி வகுப்புகள் எடுத்தால், நிறைய வெரைட்டி செய்யலாம். இப்ப பட்டுப்புழுக்கூடுதான் ஃபேஷன். குக்கூன் ஜூவல்லரிக்குப் பட்டுப்புழுக் கூடுகள், கிராஃப்ட் பொருள் தயாரிக்கும் கடைகளிலே ரெடிமேடாகக் கிடைக்கிறது. அதை வாங்கி பெயின்ட் செய்து, நகையாக உருவாக்குவதில்தான் நம் திறமையும் வெற்றியும் இருக்கு. குறைவான விலையில் நிறைய லாபமும் கிடைக்கும். இப்போது டிரெண்டில் இருப்பதால் குக்கூன் ஜூவல்லரி மேக்கிங் அடிப்படையைக் கற்று, கற்பனைத்திறனுக்கு ஏற்ப மாடல்கள் தயார்செய்து ஆன்லைனில் அப்லோடு செய்தால் போதும். பிசினஸ் சூடு பிடிக்கும். இந்த வகை நகை செய்பவர்களிடமிருந்து மொத்த விலைக்கு வாங்கி விற்பதன் மூலமும் லாபம் அள்ளலாம்" எனப் புன்னகைக்கிறார் கார்த்தீஸ்வரி.