Published:Updated:

கேரளாவை மீட்டெடுத்த நிஜ ஹீரோக்கள்...மனிதநேய கதைகள்!

கேரளாவை மீட்டெடுத்த நிஜ ஹீரோக்கள்...மனிதநேய கதைகள்!
கேரளாவை மீட்டெடுத்த நிஜ ஹீரோக்கள்...மனிதநேய கதைகள்!

கேரளாவை மீட்டெடுத்த நிஜ ஹீரோக்கள்...மனிதநேய கதைகள்!

யானைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், காடுகள், கொண்டாட்டங்கள் என இயற்கையின் தேசமாக இருந்த கேரளம், தற்போது அந்த இயற்கையாலேயே சூறையாடப்பட்டுள்ளது. ஒரே நாளில் பேய் மழையாகப் பெய்த 31 செ.மீ. மழை மற்றும் அம்மாநிலத்தில் உள்ள 35 அணைகளிலிருந்து திறக்கப்பட்ட வெள்ள நீரால் பாதிப்புக்கு உள்ளான 14 மாவட்டங்கள், எண்ணிக்கை 400-ஐத் தொட்டிருக்கும் மரணங்கள், வெள்ள நீரில் மூழ்கியுள்ள பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் எனக் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் பிரளயத்தைச் சந்தித்திருக்கிறது கேரளா. இத்தகைய கொடுமையான சூழலிலும் சில இந்துத்துவ அமைப்புகளும், நபர்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான சர்ச்சையால்தான், இந்த அளவுக்கு இழப்புகளைக் கேரளா சந்தித்து வருவதாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.

 ரணங்களுக்கு மத்தியிலும், பரவிடும் ஒளியாகக் கேரளத்தை நோக்கி மனிதர்களின் உதவிக் கரங்கள் தொடர்ந்து நீண்டுகொண்டிருப்பது மிகப்பெரிய ஆறுதலைத் தருகின்றன. கேரள அமைச்சர்கள், ஆட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், தனிநபர்கள் என அனைத்துத் தரப்பினரும் களமிறங்கி, இயற்கையின் சீற்றத்துக்கு எதிரான அரணாக மக்களைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

`ஆட்சியில் இருப்பவர்கள் இவர்களைப் போல இருக்க மாட்டார்களா?' என்று மற்ற மாநிலங்களின் மக்களை ஏங்க வைத்துக் கொண்டிருக்கின்றது கேரள அரசு. அம்மாநில அரசின் வரலாற்றில் முதன்முறையாகக் கேரள முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றிணைந்து சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளையும் மீட்பு நிவாரணங்களையும் பார்வையிட்டு வருகிறார்கள். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன்பு தனது சமூக வலைதளத்தில் இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் பதிவு செய்யவும் பாராட்டுகளும் வரவேற்புகளும் குவிந்தன. கடந்த மாதம்வரை வார்த்தைப் போர்களும், முட்டலும் மோதலுமாக இருந்த இருவரும் கேரள மக்களுக்காக ஒன்றிணைந்து களமிறங்கியதுதான் அதற்குக் காரணம். `கேரளா வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது அரசியல் சண்டை பிடிகளுக்கான நேரம் இதுவல்ல’ என்று கூறியிருக்கிறார் பினராயி விஜயனின் தனிச்செயலாளர். `இந்தப் பேரிடர் காலத்தில் நமக்குள் இருக்கும் வேற்றுமைகளைப் புறந்தள்ளிவிட்டு, மக்களுக்காக இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா.

இதுமட்டுமல்லாமல் கேரளத் தலைமைச்செயலகமே உதவி மற்றும் தேவைக்கான கட்டுப்பாட்டு அறையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் ஆலப்புழா தொகுதி எம்.எல்.ஏ-வும், கேரள நிதித் துறை அமைச்சருமான தாமஸ் ஐசக் மீட்புக் குழுவினருடன் தானும் களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். `இந்த வெள்ளம் கேரளாவை முற்றிலுமாக அழித்துவிட்டது. இது அத்தனையும் ஓய்ந்தபின், எங்கள் மாநிலத்தை மறுகட்டுமானம் செய்ய வேண்டும். அதற்கும் உங்கள் அனைவருடைய உதவியும் தேவை' என்று ட்வீட் செய்திருக்கும் அவர், மக்களை மீட்பது, முகாம்களில் தங்க வைப்பது, பாதுகாப்புப் படையினரை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட வேலைகளை முன் நின்று செய்து வருகிறார் அவர்.

`வொயிட் காலர்’ ஊழியர்களாகப் பார்க்கப்படும் அரசு அதிகாரிகளுக்கு நடுவே வயநாடு மாவட்ட ஆட்சியர் ராஜமாணிக்கமும், துணை ஆட்சியர் உமேசும் முற்றிலும் முரண். மீட்பு முகாம்களுக்கு வண்டிகளில் வந்திறங்கும் அரிசி மூட்டைகளை அநாயாசமாகத் தாங்களே தோள்பட்டையில் சுமந்து சென்று அடுக்கும் அவர்களின் புகைப்படங்கள் சோஷியல் ஊடகங்களில் வைரல்!.

போர்வைச் சுமைகளைத் தூக்கிக்கொண்டு, சாலைகளில் விற்பனை செய்யும் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி விஷ்ணு, முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைப் பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் தன்னிடம் இருந்த ஐம்பது போர்வைகளையும் கண்ணூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அந்த மக்களுக்காக ஒப்படைத்திருக்கிறார். ஒன்றுமில்லாதவர்களிடம்தான் கொடுப்பதற்கு இன்னும் இன்னுமாய் ஏதோ ஒன்று இருக்கிறது.

நீலநிற ரெயின்கோட் அணிந்த ஒரு நபர், கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, மிக வேகமாக அந்தப் பாலத்தைக் கடந்து ஓடிவருகிறார். அவர் கடந்து முடிக்கும் அடுத்த நொடி அந்தப் பாலத்தை மறைத்துக்கொண்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்குகிறது. ஹாலிவுட் படங்களில் விவரிக்கப்படும் காட்சிபோல, உங்களுக்கு இது தோன்றினால், இந்தச் சம்பவம் நடந்தது கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில். வெள்ளத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்டது மட்டுமல்லாமல் மிகுந்த காய்ச்சலுடன் இருந்த அந்தக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சைக்கும் அந்த நபரே அனுமதித்துள்ளார் தேசிய பேரிடர் மீட்புக் குழு காவலரான கண்ணையா குமார். அந்தக் குழந்தை தற்போது நலம்.

`டெக்னாலஜிதான் மனிதநேயத்தை மழுங்கடித்து விட்டது' என்று சொல்லப்படும் காலத்தில் ஒருபக்கம் டெக்னாலஜி பெருநிறுவனங்கள் ஒன்றிணைந்து கேரளத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன.

`Person finder' என்னும் புதிய `டூலை' உருவாக்கியுள்ள கூகுள் நிறுவனம் வெள்ளத்தில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் காப்பாற்ற வழிவகை செய்கிறது. மேலும் தனது `கூகுள் மேப்' பக்கத்தில் மீட்புப் பணிகள் நடைபெறும் இடங்கள், முகாம்கள் உள்ளிட்டவற்றின் லொகேஷன்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அறியாத நபர்களிடமிருந்து அழைப்பு வந்தால் அதைத் தெரிந்துகொள்ள மட்டுமே உபயோகமான `ட்ரூ-காலர்' தற்போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருப்பவர்கள் அழைத்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அமேசான் நிறுவனம், `தங்களது சேவையின் வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு வெள்ள நிவாரணப் பொருளையும் இலவசமாகக் கொண்டு சேர்க்கலாம்' என்று அறிவிப்பு செய்துள்ளது.

மீனவர்கள் இந்தத் தேசத்தை எப்போதும் கைவிடுவதில்லை. வெள்ளத்தில் சிக்கிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை இதுவரை கேரள மீனவர்கள் மட்டுமே மீட்டுள்ளதாக ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மீனவர்கள் ஆர்மிக்கு சல்யூட்!. 

கொச்சி விமான நிலையத்துக்கு அருகே இருந்த வீட்டின் மாடியில் ஒரு கர்ப்பிணி தனது பனிக்குடம் உடையத் தொடங்கியிருந்த நிலையில், ஆபத்தான கட்டத்தில் நீருக்கு நடுவே தத்தளித்துக்கொண்டிருந்தார். கடற்படை கமாண்டர் விஜய் வர்மாவுக்கு அந்தப் பெண்ணை ஹெலிக்காப்டர் கொண்டு மீட்க சுமார் அரைமணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது. ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரைப் பத்திரமாக மீட்கவேண்டும் என்பதற்காக அந்த 30 நிமிடங்களும் ஹெலிகாப்டர் ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார் விஜய். கடற்படை மருத்துவமனையில் தற்போது ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் அந்தப் பெண். தாயும் சேயும் நலம்.

கோழிக்கோட்டில் உள்ள பழைமையான ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் மதராஸா வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தற்போது தங்குமிடமாகி இருக்கிறது. தற்போது கேரளாவில் இயங்கிவரும் வெள்ள நிவாரண முகாம்களில் மிகப்பெரியதும் இதுதான். அங்கு வந்து தங்கியிருக்கும் மக்கள் அனைவருமே அருகில் இருக்கும் செருவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். வெள்ளத்துக்கு தங்கள் உடைமைகளையும் உறவுகளையும் இழந்தவர்கள். மக்கள் அங்கே தங்கியிருக்கும் இத்தனை நாள்களும் அவர்களின் உடைமை மற்றும் உணவுத் தேவைகளை அந்த மதராஸாவே கவனித்துக்கொள்கிறது. மனிதர்கள் ஒன்றாக இணைந்திருக்கும்போது மதங்கள் துச்சமாகின்றன.

பேரிடர்காலங்களில் பொதுவாக எக்ஸ்க்ளூசிவ் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதையே பிரதானமாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களுக்கு நடுவே, செய்திகளை அளிப்பதை இரண்டாவதாகத் தள்ளிவைத்துவிட்டு மக்களுக்காக உதவும் கட்டுப்பாட்டு அறையாக மாறியுள்ளன சில மலையாள தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், ஏசியாநெட் செய்தி ஊடக நிறுவனத்தின் செய்தி அறைகளிலிருந்து அண்மையில் இதைப் புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகத் தங்களது பொம்மை உண்டியலில் சேர்த்து வைத்த அத்தனை பணத்தையும் வெள்ளத்தால் தங்களது கல்வியை இழந்த சக பிள்ளைகளுக்காக் கொடுத்திருக்கிறார்கள் கல்லூரைச் சேர்ந்த சுட்டிகள் ஹாரூனும், தியாவும்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது வயதுக் குழந்தை அனுப்பிரியா, தான் சைக்கிள் வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த ரூ.9000/- பணத்தைக் கேரள வெள்ள நிவாரண நிதிக்காகக் கொடுத்திருக்கிறாள். `நான் நான்கு வருடங்களாக என்னுடைய உண்டியல்களில் பணம் சேமித்து வருகிறேன். தொலைக்காட்சியில் அவர்கள் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அதனால் எனது சேமிப்புகளை அவர்களுக்குக் கொடுக்க முடிவு செய்தேன்’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லிக் கடக்கிறாள். 

நீங்கள் சொல்வது போல தெய்வங்கள் அழிப்பதில்லை. ஏனென்றால் மனிதர்கள்தாம் தெய்வம்.

அடுத்த கட்டுரைக்கு