Published:Updated:

கோலி, பன்ட், கோலமாவு கோகிலாவைப் பின்னுக்குத் தள்ளிய நிக்-பிரியங்கா! #GoogleTrends

கோலி, பன்ட், கோலமாவு கோகிலாவைப் பின்னுக்குத் தள்ளிய நிக்-பிரியங்கா! #GoogleTrends
கோலி, பன்ட், கோலமாவு கோகிலாவைப் பின்னுக்குத் தள்ளிய நிக்-பிரியங்கா! #GoogleTrends

இந்திய அளவில், ஒரு நபரைப் பற்றி மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான தேடல்கள் இடம்பெற்றிருந்தன.

கூகுளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/08/2018) அன்று இந்திய அளவில் ஒரு நபரைப் பற்றி மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான தேடல்கள் இடம்பெற்றிருந்தன. அந்த நபர், முதல் இன்னிங்ஸில், 3 ரன்களில் தன் 23 வது டெஸ்ட் சதத்தை இழந்த கோலி இல்லை, டெஸ்ட் போட்டிகளில் சிக்ஸர் அடித்து தன் ரன் கணக்கைத் தொடங்கிய ரிஷப் பன்ட் இல்லை, `கோலமாவு கோகிலா' நயன்தாராவும் இல்லை, மொத்தத்தில் அவர் இந்தியரே இல்லை. பெயர், நிக் ஜோனஸ். அவர் அதிகம் தேடப்பட்டதற்குக் காரணம், கடந்த சனிக்கிழமை இரவு அவருக்கும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வுதான். 

நிக் ஜோனஸ், அமெரிக்க பாப் இசைப் பாடகர். ஜூமாஞ்சி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவரும் பிரியங்கா சோப்ராவும் கடந்த ஆண்டு மே மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபேஷன் திருவிழா ஒன்றில் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தனர். அதன்பின், பிரியங்கா சோப்ரா கொடுத்த பேட்டியில் ``நானும், நிக்கும் Ralph Lauren (ஆடை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்) ஆடையை உடுத்தியிருந்ததால் ஒன்றாக போஸ் கொடுத்தோமே தவிர வேறொன்றுமில்லை" என்றார். அதைத் தொடர்ந்து, சில நாள்களில் அமெரிக்க வார இதழ் ஒன்று `பிரியங்கா மற்றும் நிக் இடையே காதல் மலர்ந்துள்ளது என்றும் இருவரும் டேட்டிங் செல்கிறார்கள்' என்றும் செய்தி வெளியிட்டது. இதன் பின்னர் இருவரும் சேர்ந்து இருக்கும் பல புகைப்படங்கள் உலக அளவில் ட்ரெண்டாகின. கடந்த ஆகஸ்ட் 17 ம் தேதி அமெரிக்காவிலிருந்து தன் பெற்றோருடன் இந்தியா வந்தடைந்தார் நிக் ஜோனஸ். 18ம் தேதி இரவு தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நிக்குடன் இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் பிரியங்கா. 

\

`நிக் ஜோனஸ்' என்ற பெயரை அதிகம் தேடியது அருணாசல பிரதேசத்தில்தான். அதையடுத்து, நாகாலாந்து, கோவா, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. பிரியங்கா சோப்ராவின் முதல் படமே தமிழில்தான். நடிகர் விஜய்யுடன் இணைந்து `தமிழன்' படத்தில் 2002-ம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும் அதன்பின் தமிழ்ப்படம் ஏதும் நடிக்காததால் தமிழகம் இந்தப் பட்டியலில் 27-வது இடத்தில்தான் உள்ளது. கூகுளில், நிக் ஜோனஸின் புகைப்படங்களை அதிகம் தேடியது டாமன் மற்றும் டையூ தீவுகள்தாம். அடுத்தடுத்த இடங்களில் நாகாலாந்து, கோவா, ஜார்கண்ட் மற்றும் உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. புகைப்படத் தேடலில் தமிழகத்துக்கு 31 வது இடம். தமிழகத்தில், வேலூர், காஞ்சிபுரம், நாகர்கோவில் ஆகிய ஊர்களில் நிக் ஜோனஸின் புகைப்படங்களை அதிகம் தேடியுள்ளனர். 

நடிகைக்குத் திருமணம் என்றாலே, நம் நெட்டிசன்கள் முதலில் தட்டுவது இருவருக்குமான வயது வித்தியாசம்தான். அதேபோல, பிரியங்கா மற்றும் நிக் இருவருக்குமான வயது வித்தியாசத்தை கூகுளில் தட்டிப் பார்த்த நம்மவர்களுக்குக் கிடைத்த விடை சற்று அதிர்ச்சியானதுதான். பிரியங்காவைவிட நிக் 11 வயது இளையவர். `ரோகா' (ROKA), என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்றும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். ரோகா என்பது பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்கு முன்பு ஒன்றுகூடிக் கொண்டாடும் நிச்சயதார்த்த நிகழ்வாகும். `பிரியங்கா சோப்ரா ரோகா' என்று அனைத்துச் செய்திகளிலும் குறிப்பிடப்பட்டிருந்ததே இந்தத் தேடலுக்குக் காரணம். `நிக் சொத்து மதிப்பு', நிக் ஜோனஸ் தந்தை `கெவின் ஜோனஸ்', `நிக் ஜோனஸ் பயோகிராஃபி', `பிரியங்கா நிச்சயதார்த்தம்' ஆகியவற்றைக் குறித்தும் அதிகம் தேடியுள்ளனர்.

கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை சென்ற மிக முக்கியமான நடிகை பிரியங்கா என்பதால் அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூகுளைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பிரியங்கா, நிக் மார்பில் நிச்சயதார்த்த மோதிரம் தெரியும்படி கைவைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை ``என் இதயம் மற்றும் ஆன்மாவுடன்" என்ற வாக்கியத்தோடு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் பிரியங்கா. அந்தப் புகைப்படத்துக்குத் தற்போது வரை 45 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன. அதே புகைப்படத்தை ``எதிர்கால Mrs. ஜோனஸ், என் இதயம்... என் காதல்." என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் ஜோனஸ். அந்தப் புகைப்படத்தைச் சுமார் 38 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ட்விட்டரில், பிரியங்கா நிக் வெட்டிங் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இன்னும் சில நாள்களில் இவர்களது திருமணப் புகைப்படங்களும் சோஷியல் மீடியாவை அலங்கரிக்கக் காத்திருக்கின்றன. 

வாழ்த்துகள் பிரியங்கா & நிக்!   

அடுத்த கட்டுரைக்கு