Published:Updated:

மகத்துவம் மிக்க மாண்புயர் நாளே பக்ரீத் பெருநாள்! #EidMubarak

மகத்துவம் மிக்க மாண்புயர் நாளே பக்ரீத் பெருநாள்! #EidMubarak
மகத்துவம் மிக்க மாண்புயர் நாளே பக்ரீத் பெருநாள்! #EidMubarak

மகத்துவம் மிக்க மாண்புயர் நாளே பக்ரீத் பெருநாள்! #EidMubarak

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்லாமிய சமுதாயத்துக்கு ஆண்டுக்கு இரண்டு பெருநாள்கள்.  ஒன்று, ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, பின்னர் கொண்டாடப்படும், 'ஈகைத் திருநாள்' என்றழைக்கப்படும் நோன்புப் பெருநாள். மற்றொன்று,  'தியாகத் திருநாள்' பக்ரீத் என்றழைக்கப்படும் ஹஜ்ஜுப் பெருநாள். 

இரண்டு பெருநாள்களும் இறைவனுக்கு அடிபணிதல், இறைக்கட்டளையை நிறைவேற்றுதல், எளியவர்களுக்குப் பணமும் பொருளும் வழங்குதல், சமத்துவம், ஒருமைப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மகிழ்ச்சிகரமான நாள்கள். 

இறைவனின் கட்டளைப்படி, இறைத்தூதரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பெருநாள்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஹஜ்ஜுப் பெருநாளில் புத்தாடை அணிந்து தொழுகையை நிறைவேற்றிய பின்னர், ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஏதேனும் ஒன்றை இறைவனுக்காக பலியிட்டு உறவினர்கள், ஏழைகளுக்குப் பங்கிடுவர் 

உடல் நலமும் பொருள் பலமும் நிரம்பியவர் தன் ஆயுளில் ஒருமுறை மெக்காவிலுள்ள 'கஃபா' என்னும் இறை ஆலயத்துக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுவர். 

இறைவன் இவ்வுலகத்தைப் படைத்தான். படைத்ததோடு அவன் பணி முடிந்துவிடவில்லை. இறைவனே வழிகாட்டுகிறான்; காக்கின்றான்; உணவளிக்கின்றான்; மரணமடையச் செய்கின்றான்; மீண்டும் உயிர்ப்பிக்கின்றான்; விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குகின்றான். 

சர்வ வல்லமை படைத்த இறைவன் மனிதகுலத்துக்கு வழிகாட்டுவதற்காக வேதங்களையும், தூதர்களையும் அருளினான். ஆதம் நபி தொடங்கி, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை லட்சத்துக்கும் அதிகமான தூதர்களை இறைவன் அனுப்பினான். அந்தத் தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வோடு தொடர்புகொண்ட திருநாள்தான் இந்தத் தியாகப் பெருநாள். 

இப்ராஹீம் நபியின் தந்தை ஆஜர் தலைமைப் பூசாரி. சிலைகளை வடித்து அவற்றுக்குப் பூஜை செய்வது அவரது தொழில். மகன் இப்ராஹீமுக்கு இதில் உடன்பாடில்லை. தந்தை - மகனுக்குமிடையேயான கருத்து வேறுபாடு கொள்கை மோதலாக முடிகிறது. அருமைத் தந்தை, சொந்த பந்தம், ஊர் உறவு, உயரிய பதவி, சொத்து சுகம் யாவும் துறந்து சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் மேற்கொள்கிறார் இப்ராஹீம் நபி. 

ஓரிறைக் கொள்கையேந்திய போராளியாக அவர்களின் நெடும்பயணம் தொடர்கிறது. பகுத்தறிவுப் பிரசாரம் வீறுகொண்டு பரவுகிறது. எதிர்ப்பலைகள் ஓயாது உயர்ந்தெழுகின்றன. எதிர்ப்பின் உச்சமாக நம்ரூத் மன்னனின் முன் நிறுத்தப்படுகிறார் இப்ராஹீம் நபி.

‘இப்ராஹீமே..! நான்தான் வல்லமை மிக்கவனாக இருக்கின்றேனே... என்னை விடுத்து நீ யாரை இறைவன் எனக் கூறுகின்றாய்..?’ - கர்ஜித்தான் மன்னன் நம்ரூத். 

‘நீயாவது..இறைவனாவது... இறைவன் ஏகன்; தனித்தவன்; தூயவன்; இணை துணையற்றவன்; யாதொரு தேவையுமற்றவன்; அவனை ஒப்பாரும் அவனுக்கு மிக்காரும் எவருமிலர். எனது இறைவன்தான் படைக்கின்றான்; அவனே அழிக்கின்றான்.’- நெஞ்சுயர்த்தி ஏகத்துவம் முழங்கினார் இப்ராஹீம் நபியவர்கள். 

‘என் பிடியிலுள்ள மரணத் தண்டனைக் கைதியை விடுதலையளித்து வாழ்வளிப்பதும், அவனைக் கொலை செய்வதும் எனது கரத்திலேதான் உள்ளது...இப்போது சொல் நான்தானே இறைவன்..!’பெருமிதமாய்ச் சொன்னான் நம்ரூத். 

‘முட்டாள் நம்ரூதே..! என் இறைவன் கிழக்கிலே சூரியனை உதிக்கச் செய்து மேற்கிலே மறையச் செய்கிறான். நாளை ஒரு நாள் மட்டும் சூரியனை மேற்கில் உதிக்கச் செய்து கிழக்கில் மறையச் செய்யேன் பார்க்கலாம்..!’ இப்ராஹீம் நபி அவர்களின் விவேக வினாவினால் வாயடைத்த நம்ரூத் திகைத்து நின்றான். 

இப்ராஹீம் நபி அவர்களின் ஏகத்துவப் பிரசாரம் வீரியம் கொள்கிறது. இதனைப் பொறுக்க இயலாத நம்ரூத், ஒரு கட்டத்தில் கொதித்தெழுந்து நெருப்புக் குண்டத்தைத் தயார் செய்து, அதில் ‘இப்ராஹீமை வீசி எறியுங்கள்’எனக் கட்டளையிடுகின்றான், 

துளியும் அஞ்சவில்லை.கொள்கையில் பின்வாங்கவில்லை இப்ராஹீம் நபி. நெருப்பில் தூக்கி வீசப்பட்டார். இப்ராஹீம் நபிக்காக இறைவன் நெருப்பைக் குளிர்ந்து போகும்படி கட்டளையிடுகின்றான். தணல் தருவாய் மாறி மலர்வனமாய்ப் பூத்து நின்றது. 

இப்ராஹீம் நபி அவர்களின் போராட்டப் பயணம் தொடர்ந்தது. ஈராக்கிலிருந்து தொடங்கிய  பயணம் சிரியா, எகிப்து, சவூதி அரேபியா, பாலஸ்தீனம் எனப் பரந்து விரிந்தது. 

இறைவன் அருளினால் முதிர்ந்த வயதில் இஸ்மாயீல் என்னும் மகன் பிறக்கின்றார். இறைவன் தன் தூதர் இப்ராஹீமை சோதிக்க நாடுகிறான். இப்ராஹீம் நபி அவர்களுடைய மனைவியையும் குழந்தை இஸ்மாயீலையும் மனித சஞ்சாரமே இல்லாத பாலைப் பெருவெளியில் தனித்து விட்டுவிட்டு வரும்படி இறைவன் கட்டளையிடுகின்றான். 'ஏன் எதற்கு?' என்ற கேள்வி இப்ராஹீம் நபியிடமோ அவர்களுடைய மனைவியிடமிருந்தோ எழவில்லை. 

தனித்துவிடப்பட்ட தாயும், தனயனும் பசியால், தாகத்தால் தவிக்கின்றனர். பாலைப் பெருவெளியில் 'ஜம் ஜம்' என்னும் நீரூற்று பொங்கிற்று. இறை உதவியோடு இறைச் சோதனைகள் நபி இப்ராஹீம் அவர்களைத் தொடர்கிறது. மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட இறைக்கட்டளை வருகிறது. தயங்கவில்லை இருவரும். மகன் கழுத்தை நீட்டினார். தந்தை கத்தியைத் தீட்டினார். இறுதி மணித்துளியில் மகனுக்குப் பதில் ஆட்டை அறுக்கச் செய்து இறைவன் அருள்பாலிக்கிறான். 

இப்ராஹீம் (அலை) அவர்களின் கொள்கை உறுதிக்கு இறைவனே சான்றளிக்கின்றான்; 

''இப்ராஹீமை அவருடைய அதிபதி சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். அவர் அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்து விட்டார்.(அப்பொழுது) அவன் கூறினான்; ‘நான் நிச்சயமாக உம்மை மனித குலத்துக்குத் தலைவராக்கப் போகின்றேன்.''(திருக்குர்ஆன் 2:124) 

உலகின் முதல் இறையில்லமான கஅஃபத்துல்லாஹ் என்னும் ஆலயத்தைப் புதுப்பிக்குமாறு இப்ராஹீம் நபிக்கும் அவர்களது மகன் இஸ்மாயீல் நபிக்கும் இறைவன் கட்டளையிடுகின்றான். இறைக்கட்டளை செயல் வடிவத்தில் கஅஃபாவாக மிளிர்ந்தது. உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் கட்டளையிடுகின்றான். ‘இப்ராஹீம் (வணக்கத்துக்காக நின்ற) இடத்தைத் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள்’ (திருக்குர்ஆன் 2:125) ‘உங்களுக்கு இப்ராஹீமிடத்திலும் அவருடைய தோழர்களிடத்திலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.’ (திருக்குர்ஆன் 60:4) 

இறைவனின் கட்டளைப்படி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அழைப்புக்குப் பதிலளிக்கும் முகமாக, கோடான கோடி முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றார்கள். இப்ராஹீம் நபி அவர்களை அழகிய முன்மாதிரியாகக் கொண்டு அவர்கள் புதுப்பித்த கஅஃபா என்னும் தொன்மையான இறை ஆலயத்தை வலம் வருகின்றனர். 

அவர்கள் நின்று வணங்கிய இடத்தில் இறைவனை வணங்குகின்றனர். அவர்களுடைய மனைவி இரு மலைக்குன்றுகளைக்கிடையே தாகத்தால் ஓடிய ஓட்டத்தை நினைவுகூரும் வண்ணம் ஹாஜிகள் என்னும் புனிதப் பயணிகள் அதே இடத்தில் குதியோட்டம் ஒடுகிறார்கள். அவர்களுடைய மனைவியும் மகனும் அள்ளிப் பருகிய 'ஜம்ஜம்' என்னும் நீரைப் பருகுகின்றார்கள். அவர்கள் தம் மகனை அறுத்து பலியிட முன்வந்த தியாகத்தின் அடையாளமாக உலக முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றில் ஏதேனும் ஒன்றை பலியிடுகின்றனர். 

இப்ராஹீம் நபியின் வாழ்வினூடாகக் கொண்டாடப்படும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள், 'ஓரிறைக் கொள்கைப் பிரகடன நாளா'க ஏகத்துவத் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.

உலகத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஏழை பணக்காரன் பாகுபாடின்றி, இனம், நிறம், குலம் வேறுபாடின்றி, தேசம், கலாசாரம் மறந்து ஒரே நேர்க்கோட்டில் தோளோடு தோள் உரசி வலம் வரும் சர்வதேச ஆன்மிக மாநாடாகக் கொண்டாடப்படுகின்றது.

 'இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யத் தயார்' என்று தியாகத் திருநாளாகப் பின்பற்றப்படுகின்றது. ஏழை எளியவருக்குப் பங்கிட்டுத் தரும் பண்பாட்டு நாளாக ஹஜ்ஜுப் பெருநாள் மகிமை பெறுகின்றது. 

சடங்கு சம்பிரதாயங்களால் நிறைந்த கேளிக்கை, கூத்துக் கும்மாளம் என்றில்லாமல் ஏற்றத்தாழ்வின்றி எல்லாரும் கொண்டாடும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் மகத்துவம் மிக்க மாண்புயர் நாளாக இன்பம் பெருகும் பெருநாளாக இன்று முகிழ்த்துள்ளது.

எல்லாருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு