Published:Updated:

``நவீனங்களுக்கு ஏற்ப மாறுவதே சென்னையின் சிறப்பு!’' - வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ் #MadrasDay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``நவீனங்களுக்கு ஏற்ப மாறுவதே சென்னையின் சிறப்பு!’' - வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ் #MadrasDay
``நவீனங்களுக்கு ஏற்ப மாறுவதே சென்னையின் சிறப்பு!’' - வரலாற்று ஆய்வாளர் நிவேதிதா லூயிஸ் #MadrasDay

சென்னையில் நாம் சந்திக்கும் யாரும் உண்மையில் சென்னையின் பூர்வ குடிகள் இல்லை. இடம்பெயர்ந்த தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களை உள்ளடக்கியதுதான் சென்னை. சென்னையின் சிறப்பே இதுதான்.

சென்னை என்றால் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், மெரினா பீச், காந்தி மண்டபம், ஸ்பென்சர் பிளாசா, ஜெமினி பாலம், கோயம்பேடு பேருந்து நிலையம் இவையே நினைவுவரும். இவைதான் `சென்னை' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி சென்னை பற்றித் தெரிந்துகொள்ள நிறைய இருக்கின்றன. `சென்னை தினம்’ கொண்டாடப்படும் இன்று, அதைப் பற்றித் தெரியாத இன்னும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம் என வரலாற்று ஆய்வாளர் நிவேதா லூயிஸிடம் பேசினேன்...

``சென்னையின் பாரம்பர்யம் என்றாலே மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி. அதாவது ஜார்ஜ்கோட்டை பகுதிக்கு தெற்கே இருக்கும் தென்சென்னை பகுதியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். `வடசென்னை' எனச் சொல்லப்படும் கறுப்பர் நகரத்தைப் பற்றியோ, மேற்கில் இருக்கும் பூந்தமல்லி பற்றிப் பேசுவதோ ஆவணப்படுத்துவதோ இல்லை. ஆனால், இவைதான் இந்த மாநகரின், பாரம்பர்யங்களின் ஹாட் ஸ்பாட்ஸ்.

சென்னை, 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல்பட்டுவரும் ஒரு நகரம். இதைக் கொண்டாட, அதற்கான சிறப்பான நாள் எதுவும் தேவையில்லை. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், இப்படி ஒரு நாளில் குறைந்தபட்சம் சென்னையைப் பற்றிப் பேசவோ எழுதவோ இந்த நாளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றளவில் இது ஓகே-தான்.

மிகப் பழைமையான நகரம் என்பதைத் தாண்டி, மிக முக்கியமான பல விஷயங்கள் இங்கு இருந்தே தொடங்கியிருக்கின்றன. மேரிஸ் கார்ட்லி என்கிற பெண்தான் முதல் மருத்துவர். அவர் மருத்துவம் படித்தது சென்னைதான். பெண்களுக்கான முதல் மருத்துவமனையான ரெயினி மருத்துவமனை, சென்னையில்தான் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பெண் இன்ஜினீயர் லலிதா, சட்டசபையில் முதன்முதலாக இருந்த பெண் முத்துலட்சுமி ரெட்டி, முதல் பெண் விமான ஓட்டி உஷா சுந்தரம் (இவர்தான் ப்ளூ க்ராஸை உருவாக்கியவர்) என இப்படிப் பலரையும் சொல்லலாம். 

கட்டடக் கலை எனப் பார்த்தால், இங்கு இருக்கும் சென்ட்ரல், விக்டோரியா கட்டடம் போன்ற இன்னும் சில கட்டடங்கள் சிவப்பு நிறக் கற்கள்கொண்டு கட்டப்பட்டவையே. இவை `இந்தோ சாரசெனிக்’ என்ற கட்டடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டவை. மெட்ராஸ் சென்ட்ரலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஜெனரல் மேனேஜர் கட்டடம் போர்பந்தரிலிருந்து கப்பல் மூலம் கற்களை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்து, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டுக் கட்டப்பட்ட கட்டடம். இந்தக் கட்டடத்தைக் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக வாரியா பிரதஸ் கட்டியுள்ளனர். ராயபுரம் ரயில்நிலையம்தான் தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையம். இது 1856-ல் கட்டப்பட்டது. இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மிகப் பழைமையான ரயில்நிலையமும் இதுதான். அதேபோல சென்னையின் அருங்காட்சியகமும்  கட்டடக்கலைக்கு மிகப்பெரிய சான்று. 

சென்னையில் இன்னொரு ஸ்பெஷல், பல்லாவரம் பகுதியில் கிடைக்கும் அடர்பச்சை நிறத்திலான கிரானைட். ஜார்ஜ் கோட்டை தூண், ஜெயின்ட் மேரிஸ் சர்ச், ஜெயின்ட் தாமஸ் மவுன்ட் சர்ச் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த கிரானைட்தான். இந்தியாவில்  செயல்படும் ரயில் டிக்கெட், டிக்கெட் பதிவுசெய்யும் ஃபார்ம் போன்றவை அச்சடிக்கும் இடமும் சென்னையில்தான் இருக்கிறது.

முதல் ரயில்வே தடம் தானாவிலிருந்து மும்பைக்கு 1853-ல் போடப்பட்டது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது தவறானது. முதல் ரயில்வே தடம் `ரெட் ஹில்ஸ் ரயில் ரோடு கம்பெனி’ என்ற கம்பெனியே இருந்திருக்கிறது. ரெட் ஹில்ஸிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை போடப்பட்ட ரயில்வே தடத்தைத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இது 1838-ல் போடப்பட்டுள்ளது. ரெட் ஹில்ஸ் பகுதியிலிருந்து  பெரிய பெரிய பாறைகளைக்கொண்டு போடப்பட்ட பாதைதான் இது. இப்படி எடுத்து வந்த பாறைகள் மூலம்தான் ஜார்ஜ் கோட்டையைப் பலப்படுத்தியிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், 20 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் ரயில் தடம் உருவாக்கப்பட்டுவிட்டதுதானே. சென்னை, இப்படிப் பல வரலாற்று நிகழ்வுகளுக்குச் சான்றாகத் திகழ்கிறது. 

200 ஆண்டுகள் பழைமையான மரிய மதலினா ஆலயம், பழநி கோயிலிலிருந்து கொண்டுவரப்படும் விபூதியைப் பிரசாதமாகவும் அலங்கரிக்க துளசியையும் பயன்படுத்தும் இஸ்லாமிய தர்காவான குனங்குடி மஸ்தான் ஆலயம், நெருப்புக் கோயில் என மத ஒற்றுமைக்கான இடமாகவும் இருக்கிறது.

கூவம், அடையாறு பக்கிங்காம் போன்ற நீர்நிலைகள் மூலம் ஒருகாலத்தில் சென்னை மிகவும் வளமான பகுதியாக இருந்துள்ளது. இவற்றைத்தாம் மக்கள் குடிநீருக்காகப் பயன்படுத்தியுள்ளனர். இவை மட்டுமல்லாமல் கர்நாடகா, தமிழ் இசைக்குச் சென்னையின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது. இசைக்கருவிகள் யாழ் மாதிரியான மிகவும் பழைமையான இசைக்கருவிகள் இன்னும் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்” என்று  பல விஷயங்களை கல்வெட்டு மற்றும் வரலாற்றுச் சான்றுகள் மூலம் அடுக்குகிறார்.

``சென்னையின் பூர்வகுடி, பழைமையான உணவாக எதைச் சொல்லலாம்?''

``சென்னையின் பூர்வக்குடிகளாக யாரையும் சொல்ல முடியாது. பழைமை உணவாகவும் எதையும் சொல்ல முடியாது. சென்னையின் சிறப்பே, எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டு நவீன மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டே வந்ததுதான்” என்றார்.

ஆம், அதுவும் உண்மைதான். இங்கு நாம் சந்திக்கும் யாரும் உண்மையில் சென்னையின் பூர்வகுடிகள் அல்லர். இடம்பெயர்ந்த தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களை உள்ளடக்கியதுதான் இந்த மாநகரம். இதுதான் மேலே சொன்னவற்றிலும்விட சென்னையை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. சென்னை நாளில் மட்டுமல்ல எல்லா நாளிலும் சென்னையைக் கொண்டாட பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லா நாளிலும் இல்லையென்றாலும் இன்றாவது சென்னையைக் கொண்டாடுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு