Published:Updated:

போலி மின்னஞ்சல்... போலி மொபைல் எண்... எப்படி நடக்கிறது மோமோ சேலஞ்ச்? #MomoChallenge

போலி மின்னஞ்சல்... போலி மொபைல் எண்... எப்படி நடக்கிறது மோமோ சேலஞ்ச்? #MomoChallenge
போலி மின்னஞ்சல்... போலி மொபைல் எண்... எப்படி நடக்கிறது மோமோ சேலஞ்ச்? #MomoChallenge

இந்த மோமோ கேமின் சுவாரஸ்யமே, இதை விளையாடுபவர் விடும் பீலாக்கள்தாம். ஆனால், அதைக்கூட உயர்வாக விடுவதில்தான் இவர்களின் வெற்றியே இருக்கிறது.

ணையத்தையும் வைரலையும் பிரிக்கவே முடியாது; கங்ணம் ஸ்டைல் முதல் டெஸ்பாசிட்டோ ஆல்பம் வரை, ஐஸ் பக்கெட் சேலஞ்சிலிருந்து கிகி சேலஞ்ச் வரை, எல்லாமே உலகம் முழுக்க பேசப்படுவதற்கு காரணம், வைரல் என்ற இந்த ஒற்றைச்சொல்தான். இப்படி எத்தனையோ சின்னச் சின்ன நல்ல விஷயங்களைக் கூட உலகம் முழுக்க கொண்டுசேர்க்கும் இணையம், சில சமயம் சில தீய விஷயங்களையும் பரப்பிவிடுகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் `ப்ளூவேல் சேலஞ்ச்' என்ற விஷயம் உலகம் முழுவதும் வைரலானது. ஏதோ, அதை விளையாடினாலே மரணம் நிச்சயம் என்ற அளவுக்கு வதந்திகளும், ஊடகங்களில் செய்திகளும் பரப்பப்பட்டன. அந்த வரிசையில் தற்போது அடுத்ததாக வந்து இறங்கியிருக்கிறது மோமோ சேலஞ்ச். 

சில நாள்களுக்கு முன்பு அர்ஜென்டினாவில் 12 வயதுச் சிறுமி ஒருவர் இதனால் மரணமடைந்ததாகச் செய்தி வரவே, உடனே இதுதொடர்பான யூகங்களும், அச்சமும் உலகெங்கும் பரவத்தொடங்கிவிட்டன. இந்த அச்சத்துக்குச் காரணம், இவையெல்லாம் குறித்து நாம் முழுமையாக அறிந்துகொள்ளாததுதான். சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கி, இதுதொடர்பான செய்திகளை ஆழ்ந்து படித்தாலே, இதுதொடர்பான வதந்திகள் எல்லாம் எவ்வளவு மோசமாகக் கட்டமைக்கப்படுகின்றன அல்லது பரப்பப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற சேலஞ்ச்களை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

இதற்கு முன்பு பேசப்பட்ட ப்ளூவேலும் சரி; இப்போது பரவும் மோமோவும் சரி; இரண்டுமே ஏதோ ஒரு ஆப்போ, இணையதளமோ இல்லை. இவற்றைப் பரப்புவதும், ஒரு குறிப்பிட்ட தனிநபரோ அல்லது நிறுவனமோ அல்ல; நம்மிடையே வீணாக வந்து குவிந்துகொண்டிருக்கும் ஃபார்வர்டு மெசேஜ்களுக்கு ஒப்பானதுதான் இதுபோன்ற சேலஞ்ச்களும். யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பமுடியும். அவற்றை சீரியஸாக எடுத்துக்கொள்வதும், ஒன்றுக்குமே உதவாதது எனச் சட்டை செய்யாமல் இருப்பதும் அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. அதேதான் இந்த சேலஞ்ச்களுக்கும். மோமோ சேலஞ்சை வைத்து ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். 

இந்த மோமோ கேமின் சுவாரஸ்யமே, இதை விளையாடுபவர் விடும் பீலாக்கள்தாம். ஆனால், அதைக்கூட உயர்வாக விடுவதில்தான் இவர்களின் வெற்றியே இருக்கிறது. குறிப்பாக மோமோ அட்ரஸிலிருந்து மெசேஜ் அனுப்பும் எல்லாருமே விடும் மிரட்டல், உங்கள் போனை ஹேக் செய்துவிடுவேன் என்பதுதான். முதலில் ஒரு வெளிநாட்டு எண்ணிலிருந்து, ``ஹாய்...நான்தான் மோமோ!" என மெசேஜ் வரும். அடுத்து உங்களுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நபர் உரையாடத் தொடங்குவார். அதற்கு நீங்கள் தரும் பதில்களைப் பொறுத்து, உரையாடல் நீளும். ஹேக்கர் எனச் சொல்லிவிட்ட பாவத்துக்கு அவரும் இடைஇடையே உங்கள் ஃபேஸ்புக் புரொபைலிலிருந்து சிலபல புகைப்படங்களை எடுத்துத் தூவுவார்; உங்களைப் பற்றி கூகுளில் தேடித் தெரிந்துகொண்டு வந்து கொஞ்சம் உளறுவார். இவையெல்லாவற்றையும் நீங்கள் நம்பினால் அல்லது பயந்தால் மோமோவுக்கு நீங்கள் அடிமை; `அட... இவன் டுபாக்கூர்' எனக் கண்டறிந்துவிட்டால் மோமோ உங்களுக்கு அடிமை.

உங்களிடம் பேசுபவர் யார், அவரிடம் நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் மோமோ சேலஞ்சின் அபாயமும், ஜாலியும். அதனால்தான், நண்பர்களுக்கு வந்த மோமோ எண்ணைக் கூட தேடிப்போய், சாட் செய்து மீம்களாக சோஷியல் மீடியாக்களில் குவித்துக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என நம்புபவர்களுக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சிறுவர்களோ, சிறுமியர்களோ இப்படிப் பேசுபவர்களிடம் ஏமாற வாய்ப்பிருக்கிறது. அவர்களின் பேச்சைக் கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. அதுபோன்ற சமயங்களில்தான், கொஞ்சம் ஆபத்து. இப்படி நடக்கும் அசம்பாவிதங்களை வைத்துதான் மோமோ சேலஞ்சால் சிறுவன் பலி என்றெல்லாம் செய்திகளும் வருகின்றன. சரி... இப்படி மோமோவாக வருபவர்கள் எல்லாம் யார்?

உங்கள் நண்பர்கள்; அல்லது உங்களைப் பற்றித் தெரிந்தவர்கள். இவர்கள்தாம் மோமோவாக அவதாரம் எடுக்கிறார்கள். இருந்தும் இவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போக இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, இவர்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் ஏதோ உண்மை போலவே இருப்பது. இரண்டாவது, வெளிநாட்டு எண், மோமோ டிபி என முகமூடி மாட்டிக்கொண்டு வாட்ஸ்அப்பில் வருவது. முதலாவது எப்படி நடக்கிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நம்மைப் பற்றித் தெரிந்தவர்கள் என்பதால் எப்படியும் ஓரளவேனும் பெர்சனல் விஷயங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இரண்டாவது விஷயம், கொஞ்சம் டெக்னிக்கலான சமாசாரம். அதையும் பார்த்துவிடுவோம்.

வாட்ஸ்அப்பில் வெளிநாட்டு எண்ணிலிருந்து மெசேஜ் அனுப்பவேண்டும் என்றால், அதற்கு ஒரு சிம் கார்டு கூட தேவையில்லை என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது. இலவசமாக வெளிநாட்டு எண்களிலிருந்து கால் செய்யவும், மெசேஜ் செய்யவும் நிறைய ஆப்கள் ப்ளே ஸ்டோரிலேயே இருக்கின்றன. இவற்றை இன்ஸ்டால் செய்து, வாட்ஸ்அப் இயங்குவதற்கு தேவையான ஒரே ஒரு OTP மட்டும் பெற்றுவிட்டால் போதும். டூப்ளிகேட் வாட்ஸ்அப் ரெடி. இந்த அக்கவுன்ட்டை சோதனை செய்வதற்காக, ஒரே ஒரு தற்காலிக மின்னஞ்சல் முகவரி தேவைப்படும். அதையும் இலவசமாக இணையத்தில் உருவாக்கிக்கொள்ளலாம். அப்புறமென்ன, தற்போது வெளிநாட்டு எண்ணும் இருக்கிறது; வாட்ஸ்அப்பும் இருக்கிறது. இனி அடுத்து டிபியில் மோமோ போட்டோ வைத்து, பெயரை மோமோ என மாற்றிவிட்டால், `ஒரு மோமோ அக்கவுன்ட்' ரெடி. இந்த அக்கவுன்ட்டிலிருந்து எந்த வாட்ஸ்அப் கான்டாக்ட்டுக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம். அனுப்புவது நாம்தான் என்பது யாருக்குமே தெரியாது. கிட்டத்தட்ட `சாரா' ஆப்பில் சாட் செய்வது போலத்தான். யார் என்பதை டிராக் செய்வதும் கடினம். இதனை ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் செய்துவிட முடியும். இதைப் புரிந்துகொண்டாலே இதுதொடர்பாக வீண் வதந்திகள் பரப்பும் யூ-டியூப் வீடியோக்களையும், செய்திகளையும் எளிதாகப் புறந்தள்ளிவிட முடியும்.  

மோமோ சேலஞ்ச் வந்தாலே போன் ஹேக் ஆகிவிடும்; உடனே வாட்ஸ்அப்பை டெலிட் செய்துவிடுங்கள் என்றெல்லாம் பிறரிடம் சொல்வதை விடவும், அந்த சேலஞ்ச் எப்படி நடக்கிறது என்பதை விளக்கி சொல்லுங்கள்; இதுதொடர்பான செய்திகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அது அவர்களுக்கு புரியவைக்கும்!

அடுத்த கட்டுரைக்கு