Published:Updated:

``கடல் கடந்துபோய் குறிசொல்லிட்டு வந்த பரம்பரை நாங்க"- மெரினாவில் குறி சொல்லும் செல்லம்மாள்!

``கடல் கடந்துபோய் குறிசொல்லிட்டு வந்த பரம்பரை நாங்க"- மெரினாவில் குறி சொல்லும் செல்லம்மாள்!
``கடல் கடந்துபோய் குறிசொல்லிட்டு வந்த பரம்பரை நாங்க"- மெரினாவில் குறி சொல்லும் செல்லம்மாள்!

அரசர்கள், போருக்குச் செல்வதற்கு முன்போ ஏதேனும் ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்போ `குறி' கேட்பதுண்டு

மிழர் வாழ்க்கையில், `குறி சொல்லுதல்' என்பது நம்பிக்கை சார்ந்த சுவாரஸ்யம். அரசர்கள், போருக்குச் செல்வதற்கு முன்போ ஏதேனும் ஒரு நற்காரியத்தைத் தொடங்கும் முன்போ `குறி' கேட்பதுண்டு. ஆனால், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் குறி கேட்பவர்களும் குறி சொல்பவர்களும் நம் தெருக்களில் நடந்துகொண்டிருக்கிறார்கள். 

குறி சொல்வதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. பெரும்பாலும் பெண்களே குறி சொல்லுகின்றனர். கைகளில் உள்ள ரேகைகளைக் கொண்டும், முகம் பார்த்தும் சம்பந்தப்பட்டவரின் பலன்களையும் பிரச்னைகளையும் விரிவாக எடுத்துக் கூறுகின்றனர். சென்னையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள், கோயில்கள், நடைமேடைகளில் இவர்களைக் காணலாம். 

மெரினா கடற்கரையில் இரவு -பகல் பார்க்காமல் குறி சொல்லும் சிலரைத் தேடிப் பிடித்துப் பேசினோம். 

``எனக்குப் பிறகு இந்தத் தொழிலைச் செய்ய ஆளில்ல... என் பிள்ளைங்க எல்லாம் வேற தொழிலைப் பார்க்கப் போயிடுச்சுங்க... என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் குறி சொல்லுவேன்” என்று ஆதங்கத்தோடு பேசும் அமுதாவுக்கு வயது அறுபதை நெருங்குகிறது. திருநெல்வேலியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர். தந்தையும் தாயும் செய்த தொழிலைப் பின்பற்றி வந்தவர். மெரினாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப்  பத்து வருடங்களாகக் குறி சொல்லிக்கொண்டிருக்கிறார். 

``எங்களோட பரம்பரைத் தொழிலே குறி பார்க்குறதுதான். ஒரு நாளைக்கு நாலு பேர்லருந்து அஞ்சு பேர் வரைக்கும் பார்ப்பாங்க. நாளு, கிழமை வந்துச்சுன்னா நிறைய பேரு பீச்சுக்கு வருவாங்க. அப்போ மட்டும் அதிகம் பேருக்கு குறி பார்த்துச் சொல்லுவேன். இது பரம்பரரைத் தொழிலுங்கிறதால நான் குறி சொன்னா, அது பலிக்கும். சொன்னது சொன்னபடியே நடக்கும். இந்த நம்பிக்கை பல பேருக்கிட்டே இருக்கு. அந்த மாதிரி நம்பிக்கையான மனுஷங்க இருக்கிறவரைக்கும் என் பொழைப்புக்குப் பிரச்னையில்ல. ஆனா, குறி கேட்குறதுல நம்பிக்கையில்லாதவங்க சில பேரு இருக்காங்க. அவங்களை தொந்தரவு பண்றதில்ல. தேடி வர்றவங்களுக்கு மட்டும்தான் குறி சொல்லுவேன்!” என்கிறார் அமுதா. 

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஜக்கம்மாவுக்கு, வயது இப்போது 64. `குறி சொல்வதில் வல்லவர்’ எனும் பெயரெடுத்தவர். மெரினாவில்தான் குறி பார்க்கிறார். நிறைய வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் ஜக்கம்மா, வாரத்தில் ஒரேயொரு நாள் மட்டும்தான் குறி சொல்லுவார். ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை பக்கம் ஒதுங்கினால், அவர், கம்பீரமாகக் குறி சொல்வதைக் கேட்கலாம். 

``எனக்குக் குறி சொல்றது பரம்பரைத் தொழில் இல்லீங்க. சின்ன வயசுலேயே பெத்தவங்கள இழந்துட்டேன். ஏதேதோ வேலை செஞ்சேன். எதிலும் ஈடுபாடே இல்ல. அப்பதான் என்னோட குருநாதர இந்த பீச்ல சந்திச்சேன். என்னோட பிரச்னைகளையெல்லாம் எடுத்துச் சொன்னேன். ``நீ குறி சொல்றதுக்காவே பிறந்திருக்க பொண்ணு... உனக்குக் கடவுளோட ஆசீர்வாதம் பரிபூர்ணமா இருக்கு. அதனால, அதையே செய்..."ன்னு சொல்லிட்டாரு. அவருக்கிட்டேயே குறி சொல்றதைக் கத்துக்கிட்டேன். அவரோட ஆசீர்வாதத்துல நிறைய பேர் என்கிட்ட குறி கேட்டுக்கிட்டு போறாங்க. யாரையும் தேடிப் போறதில்ல. பலரும் பல கதைகளைச் சொல்லுவாங்க. அதையெல்லாம் கேட்கத்தான் ஜக்கம்மா வடிவத்துல நானே வந்திருக்கிறதா நினைச்சுப்பேன். நம்பி வந்தவங்களை மனசு குளிர பேசித்தான் அனுப்புவேன். முன்னெல்லாம் தினம் இங்க வந்துடுவேன். இப்போ உடம்புக்குக் கொஞ்சம் முடியல. அதனால, வாரத்துல ஒரு நாள் மட்டும் வர்றேன். அதுவும் என்னைத் தேடி வர்றவங்களுக்காகத்தான்!” என்றார் ஜக்கம்மா. 

`குறி சொல்வதில் பல உபாசனைகள் இருக்கின்றன. அதில் அனுமன் உபாசனையே உயர்ந்தது. ஒருவரை கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமல்ல. அவருடைய எதிர்காலத்தைப் பற்றியும் துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால், அவர் அனுமன் உபாசனை அறிந்திருக்க வேண்டும். அதேபோன்று, ஒருவருடைய கைரேகை ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாறும். அப்படி மாறும்போது அவர்களுடைய நிலைகளும் மாறும்’ என்கிறார்கள் குறி சொல்லுபவர்கள். தான் குறி சொன்னபடி நடக்கவில்லை என்றால், வாங்கிய பணத்தை திருப்பித் தருபவர்களும் இருக்கிறார்கள். அந்த ரகத்தைச் சேர்ந்தவர்தான் 62 வயதைத் தொட்டிருக்கும் வள்ளி. 

``முன்னாடி இந்தத் தொழிலுக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சுங்க. ஆனா, இப்போ இருக்கிற தலைமுறையில சின்னப் பசங்கதான் எங்களை மதிக்கறதேயில்ல. `குறி கேட்கிறீங்களா'னு கேட்டாலே, அருவருப்பா பார்ப்பாங்க. அப்பதான், `ஏண்டா... இந்தத் தொழிலை இன்னும் செஞ்சிக்கிட்டு இருக்கோம்'னு தோணும். அந்தமாதிரி நேரத்துல, குறி கேட்டு பாராட்டியவங்களை நினைச்சு சந்தோஷப்பட்டுப்பேன். குறி சொல்லும்போது பெரும்பாலும் நல்லதை நேரிடையாகவும் கெட்டதை கொஞ்சம் மறைச்சும் சொல்லுவேன். ஒவ்வொருத்தரோட தலையெழுத்து அவரோ' கையிலதான் இருக்கு. அதை உறுதியா நம்பிக்கிட்டு குறி சொல்லிக்கிட்டு இருக்கேன். என்னையும் நம்பி நாலு பேரு வர்றாங்க.. அதுபோதும்!” என்றார் வள்ளி. 

 செல்லம்மாளுக்கு 65 வயது. மூன்றாவது தலைமுறையாகக் குறி சொல்லிக் கொண்டிருப்பவர். இவரது பாட்டி செவனியம்மாள்... `கடல் கடந்து போய் குறி சொல்லிவிட்டு வந்தவர்' என்ற புகழைப் பெற்றவர். 

``எங்களோட குலசாமி கருப்பசாமியும் ஜக்கம்மாவும்தான். இந்த பீச்சுல பத்து வருஷமா குறி சொல்லிக்கிட்டு இருக்கேன். `நீங்க சொன்ன குறி பலிச்சிடுச்சு' னு சொல்லி, சில பேரு வந்து வாழ்த்தி, பணம் கொடுத்துட்டு போவாங்க. இங்க இருக்குற ஒரு கடையில ஒரு தம்பி  வேலைப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. இப்போ, அதுக்குப் பெரிய இடத்துல வேலை கிடைச்சிடுச்சு. அதை வந்து சொல்லிட்டு, புடவை வாங்கிக் கொடுத்துட்டு போச்சு. சோழன் என்கிற தம்பி என்னை குறி சொல்ற ஆளா ஒரு சீரியல்ல காட்டியிருக்கு. அந்த சீரியல்ல என் பேரு பூங்கொடி!” என்று நெகிழ்கிறார் செல்லம்மாள். 

``குறி கேட்பதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது. உண்மையில், குறி கேட்பதால் பலன் உண்டா?" என்பதை, குறி கேட்டுவிட்டு நகர்ந்த ஆசிரியர் ஆறுமுத்திடம் கேட்டேன். 

``குறி கேட்பது மூடநம்பிக்கைனு தெரியும். இருந்தாலும், ஒரு மன ஆறுதலுக்காகத்தான் இங்கே வந்து குறி கேட்கிறேன். அவங்க நிறைய நல்ல விஷயங்களைத்தான் சொல்றாங்க. அதைக் கேட்கும்போது மனசுல அமைதி வருது. தினம் தினம் இவங்களை பார்த்துக்கிட்டு இருக்கேன். குறி சொல்றவங்களோட நிலைமை மோசமாத்தான் இருக்கு. அதனால, என்னால முடிஞ்ச உதவி, அவங்ககிட்ட குறி கேட்குறதுதான். அதுல ஒரு மனநிறைவு இருக்கு” என்கிறார் ஆறுமுகம். 

தொழில்நுட்ப வளர்ச்சியால் மானுட சமூகத்துக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், எதிர்காலம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துக்கு மட்டும் இன்னும் தொழில்நுட்பம் சாத்தியமாகவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட முயல்கிறார்கள் குறி சொல்பவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு