Published:Updated:

காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி

காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி
பிரீமியம் ஸ்டோரி
காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி

காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி

காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி

காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி

Published:Updated:
காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி
பிரீமியம் ஸ்டோரி
காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி

தொட்டிச் செடிகளில் கவனித்து வளர்க்கப்படுகிற தாவரங்களில் பூக்கிற பூக்கள், காடுகளில் கவனிப்பாரற்று செழித்திருக்கும் தாவரங்களில் பூத்திருக்கும் பூக்கள், வேளாண்நிலங்களில் வரப்போரங்களில் துளிர்த்திருக்கும் சிறிய பூக்கள், தரிசுநிலத்தில் சட்டெனக் கவனம் ஈர்க்காத பூக்கள் என எல்லா பூக்களையுமே எனக்குப் பிடிக்கும். பூக்களின் வாசனை, வண்ணம், வடிவம் என வகைப்பாடுகள் கடந்து அவற்றின் மலர்ச்சி என்னை எப்போதும் மகிழ்விக்கும். பூக்களைப்போலவே விதவிதமான பெண்களின் முகங்களைக் காண்பதும் எனக்குப் பிடிக்கும். வாழ்வின் சாரமும், உழைப்பின் உறுதியும் நிறைந்திருக்கும் முதிய பெண்களின் முகங்களில் தென்படுகிற சுருக்கங்களை வாசிக்க முடியுமானால், வாழ்வின் ரகசியங்கள் பலவற்றையும் அறிந்துகொண்டுவிட முடியும்.   

காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி

சிறுவயதில் என்னை மிகவும் கவர்ந்த ஓவியம் ஒன்று உண்டு. அது, தோடு, வளையாக மலர்களை அணிந்துகொண்டு, கழுத்தில் மலர் மாலையினைச் சூடிக்கொண்டிருக்கும் இளம் பெண்ணொருத்தி, மரங்கள் அடர்ந்த கானகத்தின் புல்வெளியில் தளர்ந்து படுத்திருப்பாள். அவளருகே இருக்கும் சிறிய பூக்கூடையில் அப்போதுதான் பறித்த பூக்கள் நிரம்பித் தரையில் வழிந்துகிடக்கும். இரண்டு தோழியர் அந்தப் பெண்ணையே பார்த்தபடி அமர்ந்திருப்பார்கள். எவ்விதமான அச்சமுமற்று மானொன்று அங்கே மேய்ந்தபடி இருக்கும்.

பூக்களைப் பிடிக்கும், பெண்களைப் பிடிக்கும், இரண்டும் ஒன்றாக இணைந்திருந்த அந்த ஓவியம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.  கனவின் வேறு உலகத்தில் மிதந்துகொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் ஓவியத்தினை அஞ்சல்தலையொன்றில்தான் முதன்முதலாகப் பார்த்ததாக நினைவு.

கனவுகளின் ஈரத்தில் மிதந்து கொண்டிருக்கும் சிறு பறவை ஒன்று நனைந்த தன் சிறகினைக் காற்றில் உலர்த்த விரும்பி, மெதுவாகச் சிறகசைத்துத்  தரை விட்டு வானம் ஏகுவதுபோன்ற பாவனையை உணர்த்துகிற அந்தப் பெண்ணின் ஓவியத்தை வரைந்தது ராஜா ரவிவர்மா எனத் தெரிந்துகொண்டபோது, அவ்வோவியம் சுட்டுகின்ற சகுந்தலையின் கதையினையும் அறிந்துகொண்டேன். 

துஷ்யந்தனால் கைவிடப்பட்ட சகுந்தலா அவனது நினைவில் கானகத்தில் காத்திருக்கிறாள். கருவுற்றிருக்கும் அவள், அவனைத் தேடி அரண்மனைக்குச் சென்று, அவனால் அடையாளம் கண்டறிய இயலாமல் காட்டுக்கே திரும்புகிறாள். காட்டில் அவளுக்கு ஆண் குழந்தை பிறக்க, அங்கேயே தனித்திருந்து வளர்த்தெடுக்கிறாள். இளைஞனாக, வலிமையானவனாக, போர்க்குணம் மிகுந்த வனாக தன்னுடைய மகனை உருவாக்குகிறாள். அதன் பிறகுதான் ஒருநாள் துஷ்யந்தன் அவளைத் தேடிவருகிறான் என்கிற கதையினைச் சொல்லும்  அந்த ஓவியத்தை அதன் பிறகு என்னால் ரசிக்க முடியவில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதிமதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் வசிக்கும் என்னுடைய தோழி ஒருவரின் வீட்டிற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். மாலை நான்கு மணியளவில்  தெருவில் வெங்காயம் விற்கிற பெண்மணி வெங்காயக்  கூடையுடன் தடையேதுமின்றி வீட்டிற்குள் வந்தார். யாரும் வாவென்றோ, உட்கார் என்றோ சொல்லத் தேவையில்லாத உரிமையுடன் ஹாலின் மையத்தில் தரையில் வந்தமர்ந்தார். என்னுடைய தோழியின் வீட்டிற்கு வாரம் ஒருமுறை வருகிற அந்தப் பெண்மணி,  தண்ணீரோ காப்பியோ வாங்கி அருந்தி, ஓய்வெடுத்துச் செல்லும் அளவிற்கு அவர்கள் இருவருக்கும் நெருக்கம் இருந்தது. உள்ளே நுழையும்போதே “420 சுகர் இருக்காமாம், வெயில்ல வந்தா தலை சுத்தி, கிறுகிறுன்னு வருது. அதனாலதான் ஏறுவெயில், தாங்க முடியாதுனு கால நேரத்தில வரல. இனிமே இந்த வெயில்காலம் முடியுமட்டும் இப்படி மூணு மணிக்கு மேல வந்திட்டுப் போறேன்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். சுகர் 420 இருப்பதைப் பற்றிய பிரக்ஞை அவருக்கு இருந்தாலும் அது குறித்த எந்த ஐயமும் அவரிடம் இல்லை. படித்த வசதியான பலரும் சர்க்கரை நோய் என்றாலே அஞ்சி நடுங்குவார்கள். இவருக்கு அது ஒரு எண் மட்டுமே என்பதுபோல வெகு இயல்பாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

தினந்தோறும் மதுரையின் நாகமலைப் புதுக்கோட்டையின் வீதிகளில் வெங்காயம் விற்றுப் பிழைப்பை நடத்துகிறார். மொத்தவிலைக்கடைகளில் வாங்கி வருகிற வெங்காயத்தைத் தெருக்களில் கூவி விற்கும் அந்தப் பெண்ணின் குரலில்கூட வெங்காய வாசம் அடிக்கக்கூடும் எனத் தோன்றியது. 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க அவரின் நூல்புடவைகூட வெங்காய வாசனையை ஊற்றியே நெய்தது போலிருந்தது. அந்த அளவிற்கு அவர் வெங்காயத்தின் தன்மைகளைப் பற்றிப் பேசத்தொடங்கினார். சமீபத்து நாட்களிலேயே அன்றைய நாள் கொண்டுவந்திருப்பதுதான் ‘பெருவட்டு’ எனவும், மழைக்கால வெங்காயம், கோடைக்கால வெங்காயம், புது வெங்காயம், பழைய வெங்காயம் என அதனதன் வேறுபாடுகளைப் பற்றிப் பேசிக்கொண்டே போனார். அப்போது, என்னுடைய தோழி, “இப்படித்தான் இந்தம்மா வந்தா எனக்குப் பொழுது போறதே தெரியாது. போறபோக்குல நாட்டுநடப்பா நிறைய விஷயங்களைப் பேசும். ஆனா, பாரு... இவ்வளோ நல்லா பேசுற, பண்பாப் பழகுற இந்தம்மாவை விட்டுட்டு இதோட வீட்டுக்காரர் வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டார். அவரு போனதுக்கப்புறம் வைராக்கியமா வாழ்ந்து ஒரே மகளையும் இன்ஜினீயரிங் படிக்க வெச்சு கவர்மென்ட் வேலையும் வாங்கிக் கொடுத்திருச்சு” என்றார்.

அதற்கு அந்தம்மா, “இது நடந்து 22 வருஷம் முடிஞ்சுபோச்சு. அந்தாளு வேற கல்யாணம் எல்லாம் பண்ணல, வேற பொம்பளையச் சேத்துக்கிட்டான். கோடிச் சொத்து எங்கப்பா வீட்டுல. பால் மாடும் காடும் கழனியுமா செல்வம் கொழிச்சுக் கெடந்துச்சு. இந்த நாகமலையில ஏக்கர் கணக்குல விவசாயம் பார்த்த குடும்பத்துல பெறந்தவள இப்படித் தெருவில வெங்காயம் விக்கிற நிலைமைக்கு அந்தாள் ஆக்கிட்டான். இவன் விட்டுட்டுப் போனதும் நான் எங்கப்பா வீட்டுக்குக்கூட போக மாட்டேன்னு பிடிவாதமாத் தனிச்சு நின்னுட்டேன். ஒண்டியா உழைச்சு இவ்வளோ தூரம் வந்துட்டேன். ஆனா, அவன் என்ன வேல பார்க்கிறான் தெரியுமா? போலீஸ் வேல. இதோ இங்கதான்... பக்கத்துல, மதுரைக்குள்ள பெரிய பதவியில இருக்கான். கட்டுனவள வெச்சுக் காப்பாத்த முடியல. இவனெல்லாம் என்னத்த காவ காக்குறானோ... இப்போ ரிட்டயர்டு ஆகப்போறான். பொஞ்சாதினு சொல்லி எனக்குத்தான் கடுதாசி வந்திருக்கு. அதுல ஒட்டியிருக்கிற பழைய போட்டோவுல இருக்கிற அந்த ஆள எனக்கு மறந்தேபோச்சு. கடைசிக் காலத்துல நெனவு மங்கிப்போனாக்கூட பிரியமானவங்க முகம் மறக்கக் கூடாது. எங்களுக்குத்தான் பிரியம்னு ஒண்ணும் நடுவில இல்லைல்ல. அவனை அடையாளம் மறந்தத விடும்மா... அந்தப் படத்துல இருந்த என்னையவே எனக்கு அடையாளம் தெரியல. நாந்தானா, நாந்தானான்னு நாலஞ்சு வாட்டி எம்மகக்கிட்ட கேட்டுக்கிட்டேன். பாரும்மா... அந்தாள் ரிட்டயர்டு ஆகிற அன்னிக்குப் போயி கையேந்திட்டு நிக்க மாட்டேம்மா. யாரோ எவரோ அந்தாள் பணத்த அனுபவிக்கட்டும், பொம்பளப் புள்ளையக் கட்டிக் கொடுக்கணுங்கிறதுக்காக அவனப் போயிப் பார்க்கச் சொல்லி எல்லோரும் சொல்றாங்க. பணமா பொம்பள வாழ்க்க” எனச் சொன்ன அந்தம்மா, அடுத்து செய்த காரியம் என்னுடைய கண்களைவிட்டு மறையவே இல்லை.       

காலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி

தரையில் உட்கார்ந்தால் மண்ணில் புரளும் தலைமுடியை அந்தக் காலத்தில் மூன்றாய் மடித்துப் போடுவாராம்.  சொல்லிக்கொண்டே, தலைமுடியை விரித்து  காற்றில் அலையவிட்டுக் காட்டினார். கணவன் கைவிட்டுச் சென்றதால் வெங்காயக்கூடை சுமந்து பொட்டலாகிக் கிடக்கிற உச்சந்தலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் சில முடிகளை விரித்துத்  தொட்டுக்காட்டி, “இதோ இதுக்குச் சமம் அவங்காசு” என்றார். அடர்ந்தெழுந்த மௌனத்திற்குள் மூவருமே அமிழ்ந்து விட்டோம்.

அந்த மௌனத்தின் அடர்த்தியைத் தாங்க முடியாத நிலையில் நான் அவரிடம் கேட்டேன், “உங்க பெயர் என்னம்மா?” அவர், “எம் பேரா... சகுந்தலா. இந்தப் பேர் மட்டும் பொம்பளப்புள்ளைக்கு வைக்கவே கூடாது” என்றார்.  நான் மெதுவாக, “ஏம்மா அந்தப் பேர் வைக்கக் கூடாது?” என்று ஒன்றும் தெரியாததுபோல கேட்டேன். அதற்கு, “சின்ன வயசுல கேட்ட கதையில வர்ற சகுந்தலாவை அவ புருஷனுக்கு அடையாளம் மறந்துபோச்சாம்,  அதுபோலத்தான் என் வாழ்க்கையும் ஆகிப்போச்சு. ராணி மாதிரி இருந்த எம் முகம் எனக்கே மறந்து போச்சு, அவனுக்கு மட்டும் இப்போ என்னைப் பார்த்தா அடையாளமா தெரியப்போகுது” என்று சொல்லியபடிப் படியிறங்கிப் போனார்.  சகுந்தலையின் கதையான கவி காளிதாசர் இயற்றிய ‘அபிக்ஞான சாகுந்தலம்’ என்ற சமஸ்கிருத நாடகத்தினைச் சிறந்ததாக இன்றளவும் கொண்டாடுகின்றனர். கி.மு.56-ல் வாழ்ந்த விக்கிரமாதித்தியன் என்கிற அரசனுடைய அவையில் கவியாகத் திகழ்ந்தவர் இவர். இந்த நாடகத்தில் உருவாக்கியுள்ள உவமைகளின் காரணமாக காளிதாசரை ‘சொல் ஓவியன்’ என்பர். இந்த நாடகத்தின் திரையாக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜி.என்.பாலசுப்ரமணியம்  நடித்திருப்பார்கள். இந்தத் திரைப்படம் வெளியான காலத்தில் கிராமத்துத் திரையரங்குகளில் பெண்களின் கூட்டம் அலைமோதியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். படம் பார்க்கிற பல பெண்கள் சகுந்தலையோடு சேர்ந்து காடுகளில் அலைந்து திரிந்து, கனவில் மிதந்து, பாடல் பாடி, மான்களைக் கொஞ்சி மகிழ்ந்தார்கள். கணவனைத் தேடி அரண்மனைக்குச் செல்லும்போது  தாவரங்களிடம் தாங்களும் விடைபெற்று சகுந்தலையாகவே வாழ்ந்து, அவளது துயரில் கண்கள் கலங்காத பெண்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவிற்குச் சகுந்தலை என்கிற கற்பனைப் பெண்ணின் துயரும் கண்ணீரும் இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் திரையரங்குகளில் அசைவாடிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு தெருவில் கண்ட ஏதோ ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் அல்ல இது. கணவனால் புறக்கணிக்கப்பட்ட இதுபோன்ற எத்தனையோ பெண்கள், வெங்காயக்கூடை, காய்கறிக்கூடை, தெருவோர இட்லிக்கடை, தையல் மெஷின் ஆகியவற்றின் அடையாளத்துடன் நம்மைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் விடுவதற்காகவோ, அழைத்துச் செல்வதற் காகவோ நம்மைக் கடந்து இருசக்கர வாகனத்தில் செல்கிற பல பெண்களில் யாரோ ஒருவர் தனது குழந்தைக்கு அப்பாவாகவும் இருப்பவரே. பெண் என்பவள் தகப்பன், கணவன், சகோதரன் என ஆண்களின் அரவணைப்பில்தான் வாழ்ந்தாக வேண்டும் என்கிற சமூக வரையறையை உடைத்த சகுந்தலைகள் அவர்கள். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism