Published:Updated:

6000 ஆண்டுக்கால மம்மிகள் பற்றிய புதிய ஆய்வு... எப்படி உடல்கள் பதப்படுத்தப்பட்டன?

முதன்முதலில், மம்மிக்களை பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கியபோது அவை அங்குள்ள அதீத சூடான, உலர்ந்த பகுதியின் தன்மையினால் இயற்கையாக மம்மியாக்கப்பட்டுள்ளன என்றே விஞ்ஞானிகள் நினைத்து வந்தனர்.

6000 ஆண்டுக்கால மம்மிகள் பற்றிய புதிய ஆய்வு... எப்படி உடல்கள் பதப்படுத்தப்பட்டன?
6000 ஆண்டுக்கால மம்மிகள் பற்றிய புதிய ஆய்வு... எப்படி உடல்கள் பதப்படுத்தப்பட்டன?

பெரிய தலைவர்கள், பிரபலங்கள் யாரேனும் மறைந்துவிட்டால், அவர்களின் உடலை அழுகிப் போகாமல் பாதுகாக்கப் பதப்படுத்தி வைக்கும் 'எம்பாமிங்' (Embalming) எனும் முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எகிப்தியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி பிரமிடில் வைத்துப் பாதுகாத்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். எத்தனை 'மம்மி' படம் பார்த்திருப்போம்? எகிப்தில் தற்பொழுது இறப்பவர்களின் உடலை பிரமிடில் வைக்கவில்லை என்றாலும், உடலைப் பதப்படுத்தி புதைக்கும் வழக்கத்தை  இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்கள். மம்மிக்கள் குறித்து சமீபத்தில் ஆய்வு செய்த ஸ்டீபன் பக்லி தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, பண்டைய கால மம்மிக்களை எந்தெந்தப் பொருள்களை வைத்து உருவாக்கினார்கள் என்ற பட்டியலை கண்டுபிடித்துள்ளார்கள்.

நாம் இதுவரை நினைத்து வந்ததைக்காட்டிலும் மம்மிஃபிகேஷனின் வயது அதிகமாம். கிட்டத்தட்ட கிறிஸ்துவுக்கு முன் 3700 முதல் 3500 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்திலிருந்தே மம்மிஃபிகேஷன் இருந்து வருகிறது. இந்தச் சோதனையில் உட்படுத்தப்பட்ட மம்மியானது எகிப்து கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. இத்தாலி நாட்டில் உள்ள டுரின் என்ற நகரில் உள்ள எகிப்து அருங்காட்சியகத்தில் 1901-ம் ஆண்டு முதல் இருந்துவரும் ஒரு மம்மியை மாதிரியாக எடுத்து ஆய்வு செய்துள்ளார்கள். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட பின் எவ்வகையிலும் கை வைக்காத மம்மி இது.

முதன்முதலில், மம்மிக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கியபோது அவை அங்குள்ள அதீத சூடான, உலர்ந்த பகுதியின் தன்மையினால் இயற்கையாக மம்மியாக்கப்பட்டுள்ளன என்றே விஞ்ஞானிகள் நினைத்து வந்தனர். பலகட்ட ஆராய்ச்சிக்குப் பின்பு, வேதியியல் ஆய்வு மூலம் அவை பதப்படுத்தப்பட்டுதான் புதைக்கப்படுகிறது என்பதை அறியமுடிந்தது.

டுரின் அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட மம்மியானது, 20 முதல் 30 வயது இருந்தபோது இறந்த ஓர் ஆண் உடல். ரேடியோகார்பன் டேட்டிங் மூலம் இந்த மம்மி கிறிஸ்து பிறப்பதற்கு 3600 ஆண்டுகளுக்கு முன்பான காலத்தைச் சேர்ந்தது. எகிப்தில் பேரரசு முறையே 3150 பி.சி.யில் தான் உருவானது என்கிறது ஆய்வு. பேரரசின் தலைமையை அதாவது அரசரை ஃபரோ என்றுதான் அழைப்பார்கள் அதன்படி ஃபரோனிக் காலத்திற்கும் மிகப் பழைமையானது 3600 பி.சி. வருடம். ஆனால் அதற்கு முன்பிருந்தே இறந்தவர் உடலைப் பதப்படுத்தி மம்மியாக்கும் முறை இருந்து வருகிறது என்பது உறுதியாகிறது. 

இறந்த உடலை எந்த மாதிரியான துணிபொருளைக் கொண்டு அதைப் பதப்படுத்துகிறார்கள் என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். டாக்டர் பக்லி மற்றும் அவரின் குழு முதன்முதலில் இங்கிலாந்து நாட்டின் போல்டன் அருங்காட்சியகத்தில் உள்ள எகிப்து நாட்டு பண்டைய கால பொருட்களிலிருந்து 'லினன்' போன்றதொரு சணல்நாறு வகைதுணியை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டது. அந்தச் சணல்நார் வகைத் துணியைக்கொண்டுதான் இறந்த உடலை மம்மியாக்கியிருக்கிறார்கள்.

இதே சணல்நார் போன்ற துணிவகைதான் டுரின் அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட மம்மியின் உடலிலும் காணப்படுகிறது. இது குறித்து பேசிய டாக்டர் பக்லி "பிரமிட் கட்டிய 2600 பி.சி வருடத்திலிருந்துதான் மம்மிஃபிகேஷன் நடைமுறையில் இருந்து வந்ததாக இதுவரையில் நடந்த ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால் தற்போது நடந்த இந்த ஆய்வின் முடிவில் மம்மிஃபிகேஷன் என்பது 4000 பி.சி வருடங்களின் போதே இருந்து வந்தவை என்பது தெரிகிறது

இறந்த உடலை மம்மியாக்கத் தேவையான அடிப்படை பொருள்கள் இவை: 

* தாவர எண்ணெய் - சீசேம் எண்ணெய்.

* பால்சம் தாவரம் அல்லது அவைபோன்ற தாவரத்தின் வேர்கள்.

* தாவரப் பசை - அகேசியா போன்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கையான பசை.

* கோனிஃபர் வகை மரங்களின் பிசின் - பெரும்பாலும் பைன் மரத்தின் பிசின்.

எண்ணெயும் பிசினும் சேர்கிற போது அவை உடல் அழுகிப்போகாமல் இருப்பதற்கான பண்புகள் அதிகமாகும். அதனால்தான் இன்று வரை வரலாற்றுக்கு முந்தைய மம்மி கூட அழுகிப்போகாமல் இருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய மம்மிக்கள் கூட கிட்டத்தட்ட மேலே சொல்லப்பட்ட பொருள்கள் மூலம் பதப்படுத்தப்பட்டன." என்கிறார் டாக்டர் பக்லி.