பிரீமியம் ஸ்டோரி

காஸ்மெட்டிக் உலகில் தினம்தோறும் தீபாவளிதான். காலம் காலமாகப் பயன்படுத்திவரும் ஃபவுண்டேஷன், கண் மை, லிப்ஸ்டிக் உட்பட சகலமும் கால மாற்றத்துக்கேற்ப புதுப்புது அவதாரங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. அப்படி ட்ரெண்டில் இருக்கும் சில புதுவரவு காஸ்மெட்டிக்ஸ் வகைகளை அறிமுகப்படுத்துகிறார், நேச்சுரல்ஸ் ஹேர் அண்ட் பியூட்டி சலூனின் உரிமையாளர் வீணா.  

புது கலெக்‌ஷன்!

மோஸ் ஃபவுண்டேஷன் (Mousse Foundation)

இந்த வகை ஃபவுண்டேஷன், சாதாரண சருமம் தொடங்கி எண்ணெய்ப்பசை சருமம் வரை அனைவருக்கும் பொருந்தக்கூடியது. இதில், நுண்ணிய காற்றுக்குமிழிகள் (micro-air-bubbles) இருப்பதால், முகத்தில் சரிசமமாகப் படரும்; திட்டு திட்டாகத் தெரியாது. முக்கியமாகச் சருமத்தின் மேல் ஃபவுண்டேஷன் தரும் தடிமனான உணர்வும் இதில் இருக்காது.

வாட்டர் பேஸ்டு  ஃபவுண்டேஷன் (Water based Foundation)

பொதுவாக ஃபவுண்டேஷனில் எண்ணெய் சேர்க்கப்படும். இதுவோ, முழுக்க முழுக்கத் தண்ணீர் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஃபவுண்டேஷன் வகை. எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கு இது சரியான சாய்ஸ். மேக்கப் போட்டதே தெரியாமல் இருக்க வேண்டுமானால், வாட்டர் பேஸ்டு ஃபவுண்டேஷனைத் தேர்வு செய்யலாம்.

ஸ்பிரே ஃபவுண்டேஷன் (Spray Foundation)

 பொதுவாக, எண்ணெய்ச் சருமம் கொண்டவர்களுக்கு எந்த வகை மேக்கப் போட்டாலும் சிறிது நேரத்திலேயே மேக்கப்பின் பொலிவு குறைந்துவிடும். இதைத் தவிர்க்க, ஸ்பிரே ஃபவுண்டேஷனைப்  பயன்படுத்தலாம். முகத்தில் பரவலாகவும் சுலபமாகவும் விரைவாகவும் அப்ளை செய்வதற்கேற்ற இந்த ஃபவுண்டேஷன் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைப்பதற்கும் பெரிதும் உதவும். விரைவாக மேக்கப் போடுவதற்கும் ஸ்பிரே ஃபவுண்டேஷன்தான் சிறந்தது.

ட்ரான்ஸ்ளூசென்ட் பவுடர் (Translucent Powder)

எல்லாவித சரும நிறங்களுக்கும் பொருந்தக்கூடிய பவுடர் இது. ஃபவுண்டேஷன் மற்றும் காம்பாக்ட் பவுடருக்குப் பிறகு, பிளஷர் பிரஷ்ஷினால் சிறிதளவு ட்ரான்ஸ்ளூசென்ட் பவுடரைத் தொட்டு கன்ன மேடுகள், மூக்கு, நெற்றி மற்றும் தாடைப் பகுதியில் பட்டும் படாமலும் அப்ளை செய்தாலே சரும ஜொலிப்பு அதிகரிக்கும். இன்றைய இளம்பெண்களின் விருப்பத் தேர்வு இது.

ஷிம்மர் பவுடர் (Shimmer Powder)


முகத்துக்குத் தனியாக, உடலுக்குத் தனியாக என இரு வகைகளில் ஷிம்மர் பவுடர் கிடைக்கிறது. பார்ட்டி போன்ற இரவு நேர நிகழ்வுகளுக்கு ஏற்றது. ஷிம்மர் பவுடரை முகம் முழுவதும் பூசாமல், கன்ன மேடுகளில் மட்டும் பூசினாலே போதும். அணியும் உடையைத் தாண்டி வெளிப்படும் சருமப்பகுதிகளில் - உதாரணமாக கை கால் மற்றும் இடுப்பு போன்ற இடங்களில் சிறிதளவு பட்டும் படாமலும் பூசினால் பளபளப்பாக ஜொலிக்கும். மாநிறச் சருமம் உள்ளவர்களுக்கு கோல்டன் நிற ஷிம்மர் பவுடரும், சிவந்த நிறமுடையவர்களுக்கு சில்வர் நிற ஷிம்மர் பவுடரும் பெஸ்ட் சாய்ஸ்.

பிரஸ் பவுடர் (Press Powder)

இது சற்றே திடமான பவுடர் ரகம். முகத்தில் தழும்புகள், அடையாளங்கள் ஏதேனும் இருந்தால் பிரஸ் பவுடர் மறைத்துவிடும். ஃபவுண்டேஷன் அப்ளை செய்துவிட்டு, பிரஸ் பவுடர் பயன்படுத்தினாலே போதும்... மேக்கப் ஃபினிஷுட்!

புது கலெக்‌ஷன்!ஜெல் ஐலைனர் (Gel Eyeliner)


அதிக நேரம் கலையாமல் இருக்கக்கூடிய ஜெல் டைப் ஐலைனர் தான் இப்போதைய ட்ரெண்டு. இளம்பெண்களை வசீகரிக்கும் வகையில் பச்சை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது. 

க்ரேயான்  ஐ ஷேடோ (Crayon Eye Shadow)

இதை ஐ ஷேடோ பவுடரைப் போல இமைகளுக்கு மேலே முழுவதுமாகப் பூசக் கூடாது. மேல் இமை ஓரத்தில் மட்டும் வரைந்து, பின்னர் அதை விரல் அல்லது பிரஷ்ஷினால் தொட்டவாறு இமையின் மேல் பகுதியில் பரவலாகப் பூச வேண்டும்.
 
மேட் லிப்ஸ்டிக் (Matte Lipstick)

உதடுகளுக்குக் கச்சிதமான வடிவத்தை அளிப்பதே இதன் சிறப்பு. மிகவும் பளபளப்பாக இருக்கும் லிப்ஸ்டிக்கை விட, மேட் ஃபினிஷ் லிப்ஸ்டிக் இதழுக்கு இயற்கையான அழகைத் தரும். காலை, மாலை, இரவு என எந்த நேர நிகழ்வுக்கும் பொருத்தமாக இருப்பதோடு, கல்லூரி, அலுவலகம் எனத் தினசரி பயன்பாட்டுக்கும் பொருத்தமானது.

க்ரேயான்ஸ் லிப்ஸ்டிக் (Crayons Lipstick)

லிப்ஸ்டிக் நீண்டநேரம் கலையாமல் இருப்பதற்கும், உதடுகள் உலர்ந்து போகாமல் இருப்பதற்கும் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு லிப் பாம் (moisturizing lip balm) அப்ளை செய்வோம். அதைத் தொடர்ந்து லிப்ஸ்டிக், லிப் க்ளாஸ் என இம்மூன்று முறைகளையும் தவிர்க்க, ஒரே தீர்வாக அறிமுகமாகி இருப்பதுதான்... க்ரேயான்ஸ் லிப்ஸ்டிக். ஹேண்ட் பர்ஸில் வைத்துக்கொள்ளும் வகையில் சிறியதாகவும் இருக்கும்.

-
எம்.ஆர்.ஷோபனா  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு