Published:Updated:

``ஜனங்க என்னையே கேப்டனா நம்பி பேசும்போது கஷ்டமா இருக்கும்" - 'விஜயகாந்த்' நாராயணன்

``ஜனங்க என்னையே கேப்டனா நம்பி பேசும்போது கஷ்டமா இருக்கும்" - 'விஜயகாந்த்' நாராயணன்
``ஜனங்க என்னையே கேப்டனா நம்பி பேசும்போது கஷ்டமா இருக்கும்" - 'விஜயகாந்த்' நாராயணன்

``கேப்டனுக்குக் குழந்தை மனசுங்க. என்கிட்ட அவர் கோபப்பட்டதே இல்ல. ஒருதடவை, நெசவாளர்கள் நிலைமையை உணர்த்தும் விதமா நாடகம் போட்டுட்டு இருந்தோம். அதில் வந்த உருக்கமான சீன்களைப் பார்த்து கேப்டன் அண்ணனே கண் கலங்கிட்டாரு. கை, கால் சுகமில்லாதவங்க மேடை ஏறினா உடனே அதைப் பார்த்து துடிச்சுப் போய் உதவிக்கு ஆட்களை அனுப்புவாரு. நிஜ வாழ்க்கையில நடிக்கத் தெரியாத மனிதருங்க அவரு. அவரை வச்சு வரும் மீம்ஸ் பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கும்"- `விஜயகாந்த் கோபக்காரர்'ன்னு சொல்றாங்களே.. உங்கக்கிட்ட எப்படி நடந்துக்குவாரு?" என நாம் கேட்ட கேள்விக்கு மிகவும் நெகிழ்வாய் பதில் தருகிறார் `விஜயகாந்த்' நாராயணன். 

விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் அவரைப்போலவே வலம் வந்துகொண்டிருந்தார் நாராயணன். செய்கை, ஹேர்ஸ்டைல், சிவந்த கண்கள் என விஜயகாந்த்தின் நகலாகப் பலரையும் கவனிக்க வைத்தார். நெருங்கிச் சென்று பேச்சுக்கொடுத்தோம். விஜயகாந்தைப்போலவே இவரும் மதுரைக்காரர்.. மேடை நாடகக் கலைஞர்.. வாஞ்சையுடன் பேச ஆரம்பித்தவரின் வரிக்கு வரி வந்து விழுகிறார் விஜயகாந்த்.  

``சின்ன வயசுல இருந்தே நடிப்புமேல ஆர்வம் அதிகம்ங்க. 1985 ம் வருசம் மதுரை அபிநயா நாடகக் குழுவில் சேர்ந்தேன். அந்தக் காலத்தில் பிரபலமா இருந்த நடிகர்களை அப்படியே இமிடேட் பண்ணி நடிக்கிற பழக்கம் இருந்துச்சு. எனக்கு விஜயகாந்த் அண்ணன்னா ரொம்பப் பிடிக்கும். எப்பவுமே விஜயகாந்த் அண்ணன் கெட்டப்க்கு மக்கள்கிட்ட பயங்கர வரவேற்பு இருக்கும். திருமங்கலம் இடைத்தேர்தல் சமயத்தில்தான் நாடகம் போட்டு பிரசாரம் பண்றதுக்காகக் கட்சியிலிருந்து என்னைக் கூப்பிட்டாங்க. கேப்டனைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதான் எனக்குக் கிடைச்சது. பிறகு எந்தப் பொதுக்கூட்டம், மாநாடுன்னாலும் என் நிகழ்ச்சி நிச்சயமா இருக்கும். என் நிகழ்ச்சி நடக்கலைன்னா, `இன்னைக்கு நாராயணன் நிகழ்ச்சி இல்லையா'ன்னு கேப்டனே கேட்பாராம்" எனப் பூரிக்கிறார் நாராயணன்.

``இந்தத் தொழிலில் வேலைவாய்ப்பு, வருமானம் எப்படி இருக்கு?"
   
``சில வருசங்களுக்கு முன்னாடி, கோயில் திருவிழா சமயங்கள்ல நாலு மாசம் வேலை இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்கு அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பாங்க. எங்க நிகழ்ச்சியை இப்போ யாரும் பெருசா விரும்புறது இல்ல. எனக்கும் வேலைவாய்ப்பு குறைஞ்சு போச்சு. இப்போதைக்கு மாநாடு, பிரசாரம், பொதுக்கூட்டங்கள், பிறந்தநாள் விழான்னு வேலை பார்த்துட்டு இருக்கேன்."

``உங்களுக்குக் கிடைச்ச பாராட்டுகள்?"

``தனியார் டி.வி நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருது எனக்குக் கிடைச்சது. இயக்குநர் வசந்த் கையால் அந்த விருதை வாங்கினேன். ஒருதடவை  ராதாரவி சார் `விஜயகாந்த் சார் மாதிரி அப்படியே பண்றீங்க'ன்னு பாராட்டியிருக்கார். சரத்குமார் சார் என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுபிடிச்சு, `சின்ன கேப்டன்'னு கூப்பிடுவார். இதைவிட பெரிய பாராட்டு என்னங்க வேணும்?"

``அவர் மாதிரியே நடிப்பதால் ஏதாவது சிக்கல் வந்திருக்கிறதா?"
 
``நிறைய நடந்திருக்கு. கிராமங்களுக்குப் போய் நடிச்சு பிரசாரம் பண்ணும்போது கேப்டன்தான் வந்துட்டாருன்னு நினைச்சு, என்கிட்ட வந்து நிறைய ஜனங்க அவங்களோட பிரச்னைகளைச் சொல்லுவாங்க, உதவி கேட்பாங்க, மனு கொடுப்பாங்க. அந்த நேரத்துல அவங்களுக்கு பதில் சொல்ல முடியாதப்போ கஷ்டமா இருக்கும். இருந்தாலும், அவங்க பிரச்னைகளைக் கட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்திடுவேன்." 

``விஜயகாந்த்தைச் சந்திச்சப்போ நடந்த சுவாரஸ்யங்கள்?"
    

``கேப்டன் திருமணநாளுக்கு வாழ்த்து சொல்ல குடும்பமா சென்னைக்கு வந்து காத்துட்டிருந்தோம். கட்சிக்காரங்க, தலைவர்கள்னு நிறைய கூட்டம். என்ன பண்றதுன்னே தெரியல. ஆனா, கூட்டத்துல என்னையும், குடும்பத்தையும் அண்ணன் பார்த்துட்டார். அவ்வளோ கூட்டத்துலையும் என்னைக் குடும்பத்தோட கூப்பிட்டு பக்கத்துல உட்கார வச்சுக்கிட்டார். நிறைய விசாரிச்சார். திடீர்னு என் போனை வாங்கி பக்கத்துல இருந்தவர்கிட்ட கொடுத்து போட்டோ எடுக்கச் சொன்னார். நெகிழ்ந்துபோய் உட்கார்ந்திருந்தேன். கேப்டனின் மகன் சண்முகப் பாண்டியன் நடிச்ச `மதுரைவீரன்' படத்துல, அவருடைய சின்ன வயசு கதாபாத்திரமா என் மகனை நடிக்க வச்சார். பிரேமலதா அண்ணி கேப்டன்கிட்ட வந்து `உங்களுக்கு நாராயணன் எப்படியோ, அதே போல சண்முகப் பாண்டியனுக்கு அவரோட பையன் வந்துட்டான் பாருங்க'ன்னு சொன்னாங்க. விஜயகாந்த் அண்ணனைப் பொறுத்தவரைக்கும் நான் வேற மனுஷன் இல்லைங்க. அவருடைய சகோதரனா பார்க்குறாரு" என மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாகப் பேசி முடித்தார் நாராயணன்.