Published:Updated:

கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது வேளாங்கண்ணித் திருத்தலத் திருவிழா!

கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது வேளாங்கண்ணித் திருத்தலத் திருவிழா!
கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது வேளாங்கண்ணித் திருத்தலத் திருவிழா!

புகழ்பெற்ற இந்தப் பேராலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ம் தேதி அன்னை மரியாவின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். மொத்தம் 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா நாளை (29.08.2018) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

`ஆரோக்கிய மாதாவே... உமது புகழ் பாடித் துதித்திடுவோம்... எந்நாளும் பாடித் துதித்திடுவோம்... அலைகள் மோதிடும் கடற்கரைதனிலே வசித்திட ஆசை வைத்தாயே...', `அன்னை நீ எனக்கொரு வரமருள்வாய்...' - 

கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் பெருமளவில் வாழும் பகுதியில் நாளை காலை முதல் இதுபோன்ற பாடல்கள் ஒலிப்பதைக் கேட்கலாம். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பெருவிழா நாளை காலை (29.08.2018) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி `கீழை நாடுகளின் லூர்து நகர்' எனப் பெருமையோடு அழைக்கப்படுகிறது. காரணம், அங்குள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள லூர்து மாதா தேவாலயம் போன்றே அமைந்திருக்கிறது, வேளாங்கண்ணி மாதா கோயில். துன்பக் கடலில் சிக்கித் தவிப்பவர்களைக் கைதூக்கி, அவர்களின் துயர் துடைப்பதால் ஆரோக்கிய மாதாவை அன்னையாக, தாயாகப் பார்க்கிறார்கள் மக்கள். 

பால் விற்கும் சிறுவனுக்குக் காட்சி தந்து அருள்புரிந்தது, தயிர் விற்ற முடவனின் காலை குணமாக்கியது, கடும் புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசிய மாலுமி கரை சேர உதவியது என்று 16-ம் நூற்றாண்டிலேயே அற்புதங்கள் பலவற்றை வேளாங்கண்ணி மாதா நிகழ்த்தினார் என்பது நம்பிக்கை.

இயேசு கிறிஸ்துவின் தாய் மரியன்னையின் பெயரால் அமைந்திருக்கும் இந்தப் பேராலயம், கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் மட்டுமன்றி அனைத்து மதங்களைச் சேர்ந்த பக்தர்களும் சென்று வழிபடும் ஆன்மிகத் தலமாக விளங்குகிறது. புகழ்பெற்ற இந்தப் பேராலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ம் தேதி அன்னை மரியாவின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். மொத்தம் 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, நாளை (29.08.2018) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, கடற்கரை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பிறகு, ஆலயத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 90 அடி உயரக் கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அந்தக் கொடியை ஏற்றிவைத்துத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார். 

இதைத் தொடர்ந்து ஆலயத்தில் தமிழில் திருப்பலியும், நோயுற்றவர்களுக்காக வேண்டுதல் செய்யும் நிகழ்வும் நடைபெறும். 31-ம் தேதி சிலுவைப் பாதை, செப்டம்பர் 1-ம் தேதி ஜெப மாலை, 7-ம் தேதி மாதாவின் திருவுருவத் தேர்ப் பவனி நடக்கும். 8-ம் தேதி அன்னையின் பிறந்த நாள் பெருவிழா கொண்டாடப்படும். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கொங்கணி, தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி என்று பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். மொத்தம் 11 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும்கூட ஏராளமானோர் கலந்துகொள்வார்கள். 

வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், பக்தர்களின் பாதயாத்திரை. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் காவியுடை உடுத்தி விரதமிருந்து நடைப்பயணமாக ஆலயத்துக்குச் செல்வார்கள். சில பக்தர்கள் மாதாவின் சொரூபத்தை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைத்து இழுத்துச் செல்வதும் உண்டு. இவ்வாறு கால் நடையாக நடந்தே ஆலயம் வந்தடையும் பக்தர்கள் ஆலய வளாகத்தில் உள்ள மணல் பாதையில் முழங்காலிட்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.  

வேளாங்கண்ணி ஆலயம் போலவே, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா கோயிலிலும் மரியன்னை பிறந்த நாள் திருவிழா செப்டம்பர் 8-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெறும். வேளாங்கண்ணி செல்ல இயலாத சென்னை பக்தர்கள் இந்த ஆரோக்கிய அன்னையின் ஆலயம் சென்று வழிபடுவார்கள்..! 

அடுத்த கட்டுரைக்கு